பி. ஜோதி
துள்ளித் திரி வயசுக்கு வா
அம்மாவுக்கு பயப்படு
அடிக்கின்ற காற்றுக்கு
தாவணியைச் சரி செய்
கனவு வளர்
விடலைத் தோழனின்
பிடி வாதத்துக்குப் பயந்து
ஒரே ஒரு கடிதம் எழுது
நீ ஆணாக இருந்தாலும்
அரை மணி நேரம்
இளம் பெண்ணாக இருந்து பார்
ஒரு பருவப் பெண்ணின் பெண்மை உனக்குப் புரியும்.
விழித்திரு வீரிட்டு அழு
தாலாட்டுக்கு ஏங்கு
உற்றாரும் பெற்றாரும்
இல்லை என்று உணர்
ஈ மொய்க்கக் கிட
கிடத்தப் பட்டிருப்பது
அரசுத் தொட்டில் என்று
அறியாமல்
அந்த வானம் பார்த்துச் சிரி
நீ ஆணாக இருந்தாலும்
அரை மணி நேரம்
பெண் குழந்தையாக இருந்து பார்.
(திருச்சி அறிவொளி இயக்கத்தின் ‘பொன்னி ‘ பத்திரிகையில்
வெளிவந்தது)