பெண்கள் நுழைய மறந்த துறைகளும், மறுக்கும் துறைகளும்

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

மு. பழனியப்பன்



துறைதோறும் பெண்கள் இடம் பெற வேண்டும் என்ற சிந்தனை தற்போது ஏறக்குறைய நிறைவேறி வருகிறது. இராணுவம், ஆட்சித்துறை, அரசியல் எனப் பல போராட்டம் மிக்கத் துறைகளிலும் கூடப் பெண்கள் தற்போது தங்கள் பங்கை நிறைவேற்றி வருகிறார்கள். என்றாலும் அவர்கள் நுழைய வேண்டிய துறைகள் பல இன்னமும் உள்ளன.
தமிழ் இலக்கிய வகைமைப் பாட்டில் பெண்கள் பங்குபெற வேண்டிய துறைகள் பல உள்ளன. சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், நாவல், சிறுகதை, புதுக்கவிதை ஆகிய வகைகளில் பெண்களின் பங்களிப்பை ஓரளவிற்குக் காண முடிகிறது. ஆனால் இலக்கணம், அகராதி, கலைக்களஞ்சியம், வரலாறு, இலக்கிய வரலாறு, தத்துவம், தன்வரலாறு, பிறர்வரலாறு, உரைசெய்தல் போன்ற பல இலக்கிய வகைமமைகளில் அவர்களின் பங்கெடுப்பு இல்லை என்றே கூறிவிடலாம்.
குறிப்பாக இலக்கிய வரலாறுகள் பெரும்பாலும் ஆண்களாலேயே செய்யப்படுகின்றன. ஆண்படைப்பாளிகளை முன்னிறுத்துவனவாக ஆண்களின் இலக்கியவரலாறுகள் அமைகின்றன. பெண்களை முன்னிறுத்தும் பெண் படைக்கும் இலக்கிய வரலாறுகள் எழுதப்படவேண்டும். அப்படி எழுதப்படும் பெண் இலக்கிய வரலாறுகள் இதுவரை படைப்பைச் செய்துள்ள அனைத்துப் பெண்படைப்பாளிகளையும் விட்டுவிடாமல் வெளிப்படுத்தக் கூடியனவாக இருக்க வேண்டும்.
அடுத்து இலக்கணத் துறைகள். புதிய இலக்கணம் படைக்கவோ, இலக்கணத்தை மறுக்கவோ இன்றுவரை பெண்கள் முயலவில்லை என்றே கொள்ள வேண்டியுள்ளது. சிறுகாக்கைப் பாடினியம், காக்கைப் பாடினியம் ஆகியன இருந்த இடம் தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டன. அகராதித் துறைகள், கலைக்களஞ்சியங்கள் ஆகியன பெண்களுக்கு ஏற்ற நிலையில் தக்க இடம் தரப்பெற்று உருவாக்கப் பெண்கள் முன்வரவேண்டும்.
தத்துவத் துறை. பெண்களுக்கான இறைத் தத்தவங்கள் எவையும் இல்லை. பெண்களால் அவை எழுதப்படவும் இல்லை. பெரும்பாலும் தத்துவணங்களில் உயிர் என்ற நிலையில் ஆண் பெண் இருவருமே குறிக்கப் பெற்றாலும் தத்துவங்கள் தரும் செய்திகள் பெரும்பாலும் ஆண் மையம் மிக்கனவே. ஒளவையாரால் எழுதப்பெற்ற விநாயகர் அகவல் போன்றவற்றில் வரும் தத்துவங்கள் குண்டலினி யோகம் குறித்தனவே. குண்டலினி யோகம் என்பது ஆண்கள் முக்தி பெறும் யோக முறையாகும். அம்முறை கொண்டு பெண்கள் முக்தி பெற இயலாது என்பது இங்கு எண்ணத் தக்கது.
வரலாறு. இத்துறையிலும் பெண் ஆசிரியர்கள் இல்லை என்பதே ஏற்கக் கூடியக் கருத்தாகும். வரலாற்று நூல்கள், வரலாற்று நாவல்கள் பெண்களால் எழுதப்படுதல் என்பது மிகமிகக் குறைவே ஆகும்.
அதுபோல உரையாசிரியர்கள் என்ற நிலையில் பழம் பெரும் உரையாசிரியர்கள் அனைவரும் ஆண்கள் என்பது கருதத்தக்கது. திருக்குறளுக்குக் கூட பெண்கள் உரையெழுதவில்லை என்பது ஆச்சர்யப்படத்தக்கதாக உள்ளது. தேவகி முத்தையா எழுதிய அபிராமி அந்தாதி நூலுக்கான உரையே முதல் முதல் பெண் எழுதிய உரையாக விளங்குகிறது. (இதுவும் பெண் தன்மை வாய்ந்த உரையா என்பது ஆராயத்தக்கது)
அகராதித் துறைகளில் கலைக்களஞ்சியப் பணிகளில் ஈடுபடும் பெண்களும் மிகக் குறைவானவர்களே. இராதா செல்லப்பன் போன்ற குறிக்கத் தக்க மிகக் குறைவானவர்களே அகராதித்துறையில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல அறிவியல் துறைகளில் பெண்கள் பங்களிப்பும் மிகக் குறைவே (இதில் ஆண்களும் குறைவு என்பதும் ஏற்கத்தக்கது)
தன்வரலாறு, வாழ்க்கை வரலாறு ஆகிய துறைகளில் பெண்கள் நுழைய மறுக்கின்றனர். ஏனெனில் சுய வாழ்வை எழுதுகையில் அதில் பலரைப் பற்றிய விமர்சனங்கள் செய்ய வேண்டிவரும் என்பது கருதியே பெண்கள் இதில் இறங்குவதில்லை போலும். இருப்பினும் ஒரு சிலப் பெண்கள் இத்துறையிலும் இறங்கி உள்ளனர். எழுத்தாளர் லட்சுமி, திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலியில் பணிபுரிந்த வீரம்மாள் ( இது என் வாழ்க்கைக் கதை ) ஆகியோர் இதனுள் குறிக்கத்தக்கவர்கள்.
இதுபோன்றே சிற்றிலக்கியங்கள்? காப்பியங்கள் ஆகியவற்றிலும் பெண் படைப்பாளிகளைக் காணமுடிவதில்லை. காந்தி புராணம் எழுதிய அசலாம்பிகை அம்மையார் மட்டுமே காப்பித்திற்கு எடுத்துக்காட்டப் படவேண்டியவராக உள்ளார்.
சிற்றிலக்கியப் பரப்பில் ஆண்டாள் (பாவைப்பாடல்), காரைக்காலம்மையார் (அந்தாதி) ஆகியோர் தவிர வேறு பெண்கள் இடம் பெறவில்லை என்பது குறிக்கத்தக்கது. அதுபோல் பதினெண் கீழ்க்கணக்கு நு}ல்களில் ஒரு பெண் கூட இடம் பெறவில்லை என்பதும் கருதத்தக்கது. பின்னாளில் ஒளவையாரின் நீதி நூல்கள் எழுதியுள்ளமையால் நீதி நூல்கள் எழுதும் நிலையைப் பெண்கள் பெற்றிருந்தனர் என்பது மிகப் பெரிய வலிமையாகும்.
இவ்வாறு பெண்கள் புக வேண்டிய துறைகள் பல தமிழ் இலக்கியப் பரப்பில் உள்ளன. இவை தவிர பெண்கள் தனக்கென தனித்த துறையாக உருவாக்கிக் கொண்ட கும்மி, தாலாட்டு முதலானவற்றை மீண்டும் படைத்துக் கொள்ள முயன்றால் இதன் வழி பெண்ணுலகம் பெருத்த எழுச்சியைப் பெறும்.
முடிவுகள்
� பெண்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு சில படைப்புக் களங்களில் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இடம் பெற வேண்டிய பல துறைகள் தமிழ் இலக்கியப் பரப்பில் உள்ளன.
� காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், சரித்திர நாவல்கள், தன் வரலாற்று நூல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், தத்துவங்கள், இலக்கணப் பகுதிகள் முதலான பலவற்றில் பெண்கள் நுழைந்து வளப்படுத்திக் கொள்ளவேண்டும்.
� பெண்கள் நுழைய மறுக்கும் பகுதியாக அமைவது சுய சரிதை பகுதியாகும். ஏனெனில் இதனுள் பல எதிர்ப்புகளை, விமர்சனங்கள் அவர்கள் எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்பதாகும்.

� பெண்களுக்கே உரிய இலக்கிய வகைகளான கும்மி, தாலாட்டு போன்றவற்றை அவர்கள் தமக்கான இலக்கியங்களாகக் கொண்டு அவற்றை மேம்படுத்தி பெண்ணுலகு செழிக்கச் செய்ய வேண்டும்.


muppalam2003@yahoo.co.in
manidal.blogspot.com

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்