பெண்கள் சந்திப்பு மலர் – 2004 -ஒரு பறவைப் பார்வை

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

அன்பாதவன்


இருளினைத் துடைத்தெறிந்து ஓளியாய் எழும்பும் பெண்களின் படைப்புலகம்

இந்த பெண்கள் சந்திப்பு மலர்கள். 1990ல் முதன் முதலாக ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்டது.

பெண்கள் சந்திப்பு மலர் 2004 இதுவரை வெளிவந்துள்ள எட்டாவது மலராகும்.

பெண்கள் சந்திப்பு மலர் மூலமாக பல்வேறு விஷயங்கள், படைப்பாற்றல் மூலமாக

விவாதிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் உலகின் பல்வேறு திசைகளிருந்தும்

பெண்களாலேயே எடுத்தாளப்பட்டும் விவாதிக்கப்பட்டிருப்பதும் மலரின் சிறப்பு.

தலித் பிரச்சனைகளை தலித்துகளே எழுதவேண்டுமென்ற school of thought

உண்டல்லவா! அதைப்போலவே பெண்ணியப் பிரச்சனைகளும் முழுக்க முழுக்கப்

பெண்களாலேயே கையாளப்படுவதும் அவசியம்தானே!

பெண்கள் சந்திப்பு மலர் 2004ல் கவிதை, சிறுகதை, கட்டுரை, ஓவியமென

பல்வேறு கலைவடிவங்கள் இடம்பெற்றிருந்தாலும் குறுநாவல் மற்றும் நாடகம் என்கிற

வடிவங்களில் படைப்புகள் இடம்பெறாதது ஒரு சிறு குறை.

கட்டுரைகள் மிக ஆணித்தரமாகவும் கூர்மையாகவும் துணிச்சலாகவும் தமது பிரச்சனைகளை

முன்வைக்கின்றன. ‘பெண்களின் படைப்புகள் குறுகிய வட்டத்திற்குட்பட்டு

இருக்குமானால் அவை தனிமைப்படுத்தப்பட்டு கால நீரோட்டத்தில் தீவுகளாகவே

இயங்க நேரிடும் ‘ என்கிற வைகைச்செல்வியின் ‘பெண்ணும் எழுத்தும் கண்ணெனத்

தகும் ‘ எச்சரிக்கை இன்றைக்கு எழுதும் மகளிர் உள்வாங்கி கொள்வது அவர்களின்

எழுத்தாற்றல் பல்வேறு திசைகளில் பயணம் மேற்கொள்ள உதவியாயிருக்கக்கூடும்.

‘என்று தணியும் எங்கள் சுதந்திரதாகம் ‘ என்கிற புதியமாதவியின் கட்டுரை

ஊடகங்களும் தனிமனித வாழ்க்கை முறைகளும் அரசியலும் இன்றைக்கு பெண்களை

எந்த நிலையில் (stage) வைத்துள்ளன என்பதை விரிவாக ஆய்கிறது.

அதிலும், ‘மணமகள் தேவை ‘ விளம்பரங்களில் அழகான, சிவப்பான பெண்ணாக

கேட்பவர்கள் ‘CASTE NO BAR EXCEPT SC என்று குறிப்பிடுவதைப் பார்த்திருக்கலாம்.

‘பறச்சி போகம் வேறு பனத்தி போகம் வேறா ‘ என்று கோபங்கொண்டு பொங்கின

சித்தன் எவனும் இப்போதில்லையே என்கிற ஆதங்கம் தோன்றவைக்கிறது.

அதேநேரம் ஊடகங்களில் விளம்பரங்களில் பொருத்தமில்லா விளம்பரங்களும்

பெண்களைப் பயன்படுத்திக் கொள்வது குறித்தும் ,உலக அழகி, அழகிப்போட்டி

குறித்தும் பெண்கள் மத்தியில் புதியவிவாதங்கள், சிந்தனைகள் தோன்றவேண்டியது

அவசியம்.

‘இன்று உலகமயமாதல் என்ற பெயரில் லாபம் தேடுவதற்காக எதையும் விற்கத்

தயாராக இருக்கிறார்கள். உணர்வுகள் குழப்பப்படுகின்றன. மனித உரிமை என்ற

பெயரில் தார்மீகமற்ற வழியில் பல பொழுது போக்குச்சாதனங்கள் சாதாரண

மக்களையடைகிறது. இதன் பலாபலன்களைத் தெரிந்துகொள்ள சமுதாயத்துடன்

இணைந்து செயற்படல் வேண்டும் ‘ என்கிற இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின்

எச்சரிக்கை கலந்த அறிவுரை படிக்காத பெண்கள் மட்டுமல்ல படித்தப் பெண்களும்

உணரவேண்டியது. ஏன், ஆண்களுக்குமான எச்சரிக்கை மணி இது!

மலரின் பல்வேறு படைப்புகளிலும் ஆங்காங்கே முகம்காட்டும் குடும்பவன்முறை

என்கிற பிரச்சனை குறித்தான சந்திரலேகாவின் கட்டுரை மிக விரிவானதும்

முக்கியமானதுமாகும்.

‘இணையத்தில் குடில் போடலாம் வாருங்கள் ‘ – மதியின் அழைப்பு மலரின்

இறுக்கத்திலிருந்து விலகி சற்றே மாறுபட்ட தொழில்நுட்பக்கட்டுரை. தமிழுக்கு

இது புதுவரவுங்கூட. இணையத்தை மிகத் திறமையாக பயன்படுத்த ஆலோசனையும்

வழிகளும் சொல்லும் மதிகந்தசாமி பாராட்டுக்குரியவர்.

சிறுகதைகளில் சுமதிரூபனின் ‘நாகதோஷம் ‘ முதலிடம் வகிக்கிறது. குறீயீட்டு

உத்தியுடன் மிகத்திறமையாக எழுதப்பட்ட இச்சிறுகதை வாசிப்பவரை உடனடியாய்

தன்னுள் இழுத்துக்கொள்ளும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

நாகதோஷம் கதைக்கு சற்று அருகாமையில் நிருபாவின் ‘மழை ஏன் வந்தது ? ‘

இச்சிறுகதையிலும் பாம்பும் கனவும் சர்ரியலாஸ்டிக் உத்திகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டையும் உடனடியாக வாசிக்கையில் கூறியதுகூறல் போன்ற அயர்ச்சி

தோன்றக்கூடும். ‘சிறகிழந்த பறவையாய் ‘ உறவுகளில் பெயரால் நிகழும்

வெளியில் சொல்ல இயலாத பாலியல் துன்புறுத்தல் குறித்து கதைக்கிறது.

பாமாவின் ‘அந்தி ‘ வழமையான அவரது கிராமத்து மொழியில் நெய்யப்பட்ட

கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கை குறித்த ஒரு சிறு பதிவாக அமைந்துள்ளது. மக்கள்

மொழியை திறமையாகக் கையாண்டிருப்பது மலரின் மற்ற படைப்புகளிலிருந்து

இச்சிறுகதையை தனியேக் காட்டுகிறது. புலம் பெயந்தோரின் எந்திர வாழ்வு

முறையை படம்பிடிப்பது ‘பனிமழையும் ஒரு சனிக்கிழமை மாலையும் ‘.

ஜெர்மனியில் வசிக்கும் (வாழ்வதாய் சொல்ல முடியுமா ?) சாந்தினி தாம் பிறந்த

யாழ்ப்பாண மண்ணின் குடும்பத்தின் நினைவுகளை சிறுகதையாக்கித் தர,

வாசிப்பவருக்கும் அவரது சோகம் தொற்றிக்கொள்ளும்! மண்ணைப் பிரிந்து

எங்கோ வாழ்வது! என்ன மாதிரியான வாழ்வு அது ? எந்த மாதிரியான இழப்பு அது!

வார்த்தைகளா வடுக்களை போக்கிவிடும் ?

‘குற்றமில்லை ‘ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் தன்னை, தன் மானத்தை காத்துக்கொள்ள

ஒரு பெண் செய்யும் கொலையும் கூட குற்றமில்லை என நிறுவுகிறது!

புதிய சிந்தனை! புதிய பதிவு.

‘தையல் ‘ சிறுகதை தையல் என்றும் பெண் என்றும் வேறு அர்த்தங்களைத் தந்து

நம் மனதில் நிற்கிறது. புரிதல் இல்லா கணவன் பொறுமையும் இல்லாமல் உறவுக்கு

வரும் இருட்டுகள் தானே பொதுவான பெண்களுக்கு விதித்தது. ஜெயந்திசங்கரின்

வெற்றி பெற்ற சிறுகதை இது.

கவிதைகள் மலருக்கு வேறுவேறு வாசல்களைத் தருகின்றன.

‘இகத்திலே உன்னைப்போல இன்னுமோர் பிறவியுண்டொ ?

இருளினைத்ட் துடைத்தெறிந்து ஒளியினாய் நீ எழும்பு ‘ என்கிற

பாரதியின் கவிதை ஊர்வனவற்றுக்கும் வீரத்தை விதைப்பது.

‘என்னைச் சுற்றியெழுப்பட்ட

சுவர்களிலெல்லாம் எழுதுகிறேன்

என் பெருமைகளை

தன்னம்பிக்கைகளை

சுயமரியாதைகளை ‘ என்ற அனாரின் வரிகள் கட்டளை இடுவது என்ன!

பெண் எந்தச் சூழலிலும் தன் பெருமைகளை குறைக்கலாகாது, தன்னம்பிக்கையை

இழக்கலாகாது, சுயமரியாதையை விட்டுக்கொடுக்கக்கூடாது என்கிற பாலபாடங்களைத் தானே!

‘மாமிச சகதியில் அமிழ்ந்து கிடக்கும்

சூரியனை

யார் காலையில் விடுவிப்பது ? என்கிற மாலதி மைத்ரியின் கோபவினாக்களுக்கு

உலகநாடுகளின் சபையும் கையாலாகாத மவுனத்தையே பதிலாகத்தர முடியும்.

முகிழ்த்து வரும் நவீனப் பெண்களின் சிந்தனைப் பதிவாக முகைசிராவின்

‘நான் ‘ கவிதை.

‘உரிமைகளை இழப்பதுமில்லை

பொய் உறவுகளில் நாட்டமில்லை

சுய உணர்வுகளை விற்பதுமில்லை

எவர்க்கும் நான் அடிமையுமில்லை ‘ -பொங்கும் குரலில் பளிச்சென தெரிவது

விடுதலை வேட்கையன்றோ!

‘கருவிலே சுமந்தாரை போர்க்களத்திலும் தருபவளாக

அறிவியல் ஞானம் அதிகாரச்சட்டம் கையில்

இயல் இசை நாடகம் இத்தனையும் எடுத்தவளாக

இத்தனை வடிவங்களை கையிலே எழுத்திலே எழுதிடும் பெண்ணே

தீர்வினைத் தீட்ட இன்னும் திகைப்பது ஏனோ ? ‘

-என்று கோசல்யா எழுப்பும் பெருவினா மொழிகடந்து இனம் கடந்து

எல்லை கடந்து உலகளாவிய பெண்கள் முன்னால் நிற்பது.

சிந்திப்பதும் செயல்படுவதும் பெண்களிடம்தான் இருக்கிறது.

நளாயினியின் சோகஞ்சொல்லும் கவிதை, வேலைக்குப் போகும் பெண்கள்

யாவரும் அனுபவிப்பது. வார்த்தைகளால் சொல்லவொண்ணா வதையது.

‘நமக்கான நட்பை பூக்கச் செய்து அழகுபார்ப்போம் ‘ என நேசங்கொண்டு

அழைக்கிறது நளாயினியின் கவிதைக்குரல்.

நுட்பமான துளித்துளி உணர்வுகளை கவிதைகளாக்கி தந்திருக்கும் துர்க்காவின்

கவிமொழி மலருக்கு சிறப்பு சேர்ப்பது.

‘மனது உடைந்து

கண்கள் காயமாக

மறுபக்கங்களில் வேதனை

கிளர்ச்சிகள்

மீளவும் சந்தோஷங்கள் தேடுகையில்

பூவாகும் மனம் ‘

வாசிப்பவனை தம் கவியுலக்குக்குள் அழைத்து கொள்ளும் கவிமொழிப் பதிவுகள்.

மலரின் பல்வேறு பக்கங்களில் படைக்கப்பட்டுள்ள ஓவியங்கள் கதைகள்

பல சொல்பவை. அவைகளின் நுட்பங்கள், அந்த தூரிகைக் கரங்கள்

பாராட்டுக்குரியவை.

மிகச் சிரத்தையுடனும் கவனத்துடனும் தயாரிக்கப்பட்டுள்ள இந்தூலில்

பல்லிடுக்கில் அகப்பட்ட பாக்குத்துகள்களைப் போல ஏராளமான

எழுத்துப்பிழைகள் வாசிப்பை சிரமமாக்குகின்றன. எதிர்வரும் மலர்களில்

இதுபோன்ற குறைகளை தவிர்க்கலாம்.

பெண்களின் படைப்புலகத்துக்குள் புகுந்து வருகையில்

புதியபார்வை கிட்டுவதை வாசிப்பவர் உணர முடியும்.

பெண்கள் சந்திப்பு மலர் 8 – 2004

வெளியீடு: பெண்கள் சந்திப்பு குழு. penkalsanthippu@yahoo.com

இந்தியாவில் நூல்பெற: விடியல் பதிப்பகம், கோவை 641 015

vitiyal2000@eth.net

—-

jpashivammumbai@rediffmail.com

Series Navigation

அன்பாதவன்.

அன்பாதவன்.