பூச்சுக்கொல்லி மருந்துக்கு புதிய நம்பிக்கை

This entry is part [part not set] of 10 in the series 20001203_Issue


நிரந்தர தாவர கெடுப்பிகள் (Persistent Organic Pollutants (POPs)) என்னும் வேதிப்பொருட்களை தடை செய்ய வேண்டியும், உபயோகப்படுத்தினால் அவற்றை குறைவாக உபயோகப்படுத்தக்கோரியும் சுமார் 120 தேசங்கள் ஒரு ஒப்பந்தத்தை செய்ய முனைந்திருக்கின்றன.

இந்த வேதிப்பொருட்கள் புற்றுநோய், உயிர்களுக்கு (மனிதர்களும் சேர்த்திதான்) குழந்தையில்லாமல் போவது, குழந்தைகள் பிறப்பு குறைபாடுகளுடன் பிறப்பது போன்ற பலவிஷயங்களோடு சம்பந்தப்படுத்தப்படுவதால் பல தேச அரசாங்கங்கள் இந்த வேதிப்பொருட்களை தடை செய்திருக்கின்றன.

இந்த வேதிபொருட்களில் பல வேதிப்பொருட்கள், பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன.

ஐக்கியநாடுகள் சபை இந்த வேதிப்பொருட்களை உலகளாவிய முறையில் தடைசெய்யக்கோரியிருக்கிறது. இது சம்பந்தமாக, வரும்வாரம், தென்னாப்பிரிக்காவில் இருக்கும் ஜோஹன்னாஸ்பர்க்கில் ஒரு மாநாடு நடக்க இருக்கிறது.

இந்த குறிப்பிட்ட வேதிப்பொருட்கள் மற்ற கெடுப்பிகளிலிருந்து வேறுபட்டவை. முக்கியமாக இந்த வேதிப்பொருட்கள் எளிதில் உடைந்து வெவ்வேறு வேதிப்பொருட்களாக மாறுவதில்லை.

இவை வெகுகாலம் சுற்றுச்சூழலில் இருக்கும். இவை தாவரங்களாலும், மிருகங்களாலும் உட்கொள்ளப்பட்டு ரத்தத்திலும் கலக்கும்.

ஜோஹன்னாஸ்பர்க் மாநாடு இத்தகைய வேதிப்பொருட்களில் 12 வேதிப்பொருட்களை மட்டும் ஆராயப்போகின்றது. இவைகளை குறைவாக உபயோகப்படுத்த வழிமுறைகளை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சில வேதிப்பொருட்கள் தொழிற்சாலைகளில் கழிவுப்பொருட்களாக உற்பத்தியாகின்றது. மற்றவை மனிதர்கள் முனைந்து உருவாக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள். மரவேலைப்பாடுகளில் உபயோகப்படும் மரங்கள் பூச்சியால் கெட்டுப்போகாமல் இருக்க உபயோகப்படுத்தப்படுகின்றன. சில வேதிப்பொருட்கள் நேரடியாக பூச்சிகளை (உதாரணமாக கரப்பான் பூச்சி, எறும்புக்கொல்லிகள்) கொல்ல உபயோகப்படுத்தப்படுகின்றன.

இவைகளிலேயே மிகுந்த விவாதத்துக்குரியது , டி டி டி எனப்படும் பூச்சிக்கொல்லி மருந்து. இது மலேரியாவை எடுத்துச்செல்லும் கொசுக்களை கொல்ல பல நாடுகளில் உபயோகப்படுத்தப்படுகிறது.

இதன் உபயோகம் பெரும்பாலும் குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் உபயோகத்தால் பல விதமான மருத்துவப்பிரச்னைகள் வருவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

WWF என்னும் காட்டுவளத்தை தக்கவைக்க முயலும் தன்னார்வ நிறுவனத்தில் இருக்கும் டாக்டர் ரிச்சர்ட் லிரோஃப், டி டி டி போன்ற வேதிப்பொருட்கள் உலகத்தில் அதிகமாவதை கவலையுடன் பார்க்கிறார். முக்கியமாக இதன் உபவிளைவான வேதிப்பொருளான டி டி ஈ இன்னும் கவலைக்குரியது என்கிறார். ‘டிடிடியை பரிசோதனைச்சாலைகளில் இருக்கும் மிருகங்களிடம் உபயோகப்படுத்தினால் அவைகளின் மத்திய நரம்புமண்டலம் பாதிக்கப்படுகிறது என்பதை கண்டிருக்கிறோம். இவைகளின் நோய் எதிர்ப்புச் சக்தியும் போய்விடுகிறது. இவைகளின் பிறப்பு உறுப்புகளும் பாதிக்கப்பட்டு இவைகள் மலடுகளாக ஆவதும் காண்கிறோம் ‘

டிடிடி அதிகமாக உபயோகப்படுத்தப்பட்ட வடக்கு கரோலினா மாநிலத்திலும் மெக்ஸிகோவிலும் பெண்களின் தாய்ப்பாலில் டிடிடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல இவர்களது தாய்ப்பால் கொடுக்க இயலும் காலம் குறைவாகிவிடுவதும் காண்கிறோம்.

உலக சுகாதார நிறுவனம் World Health Organisation நிறுவிய அளவுகளுக்கு அதிகமாக டிடிடியும் டிடிஈயும் மெக்ஸிகோ குழந்தைகளின் உடலில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் சமீபத்தில் மலேரியா அதிகமாகி இருக்கிறது. டிடிடி குறைவாக உபயோகப்படுத்தப்படுவதே இதன் காரணம் என்பதும் உண்மை.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் டாக்டர் அமீர் அட்டாரன், ‘டிடிடி பிரச்னைகளுக்கு ஆதாரம் என்று சொல்வது தவறு ‘ என்கிறார்.

‘மிருகங்களில் டிடிடி அதிகமாக இருப்பது என்பது ஒரு பிரச்னையில்லை. ஒருவேளை அவைகளுக்கு டிடிடி துன்பம் ஏற்படுத்தலாம். ஆனால் மலேரியாவால் வரும் பிரச்னைக்கு அது குறைந்ததுதான் ‘ என்கிறார் அமீர்.

டிடிடி பற்றி எல்லோரும் அறிந்திருந்தாலும், டிடிடிக்கு மாற்றாக மலேரியாவுக்கு எதிரான ஒரு மருந்தை கண்டுபிடிக்கும் வரை டிடிடி உபயோகப்படுத்துவதை நிறுத்தமுடியாது என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

Series Navigation

செய்தி

செய்தி