பூச்சி மருந்து தெளித்துவிட்டுப் போனவர்

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

சிபிச்செல்வன்


ஒன்பது மணி. அலுவலகம் செல்வதற்காகக் கிளம்பி விட்டேன். இன்னும் ஐந்து நிமிடத்திற்குள் அலுவலகத் தோழர் வந்துவிடுவார். அவரது மோட்டார் சைக்கிளில் என்னை அழைத்துப்போவதாகச் சொல்லியிருக்கிறார்.

வாசல் வரை ஒருமுறை சென்று பார்த்துவிட்டுத் திரும்பினேன். என் வீட்டு வாசலில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். சுகுமாரனின் கவிதைத் தொகுப்பை விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன்.

காலடிச் சப்தம் கேட்கும்போதெல்லாம் ஆர்வத்துடன் திரும்பிப் பார்த்தேன். நண்பர் வருவதாகயில்லை. ஒன்பது பத்து. மறுபடியும் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். மறுபடியும் காலடியோசை.

திரும்பிப் பார்த்தேன். அலுவலக நண்பர் இல்லை. வந்தவர் வாரம் ஒருமுறை தவறாமல் வருகிறவர். கிணற்றில் தண்ணீரைச் சுத்திகரிக்கும் மருந்தைத் தெளித்துவிட்டுப் போகிறவர். இந்தக் குடியிருப்பிற்கு நான் வந்த இரண்டு வருடங்களாக அவர் வருவதையும், கிணற்றில் இரண்டு சொட்டு மருந்து ஊற்றிவிட்டுப் போவதையும் பார்த்திருக்கிறேன்.

அவருடன் இதுவரை நான் பேசியதில்லை. அவர் யாருடனும் பேசியும் நான் பார்த்ததில்லை. வேகமாக வருவார். அதே வேத்தில் தன் பணியை முடித்துத் திரும்பிப் போவார். நான் பார்க்காத தருணங்களில்கூட அவர் யாருடனும் பேசுவதற்கான வாய்ப்பிருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

தோழர் வருவதற்கான அறிகுறியே தென்படவில்லை. வழக்கமாகத் தாமதம் ஆகாது. அப்படி ஆனால் உடனே ஒரு போன் வந்துவிடும். இன்று போனும் வரவில்லை. நான் மீண்டும் நூலில் கவனம் செலுத்தினேன்.

மருந்து தெளிப்பவர் கிணற்றில் இரண்டு சொட்டு விட்டார். நான் கிணற்றை ஒட்டிதான் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். புத்தகத்தில் கவனமாக இருந்ததால் அவர் அழைத்ததைக் கேட்கவில்லை. என்னிடம் ஒரு நோட்டை நீட்டினார். உடனே எனக்குப் புரிந்துவிட்டது. ஏதோ நன்கொடை கேட்கிறார் போல. தீபாவளி பொங்கல் இப்போதுதானே போனது. அவர் நீட்டிய நோட்டை வாங்கினேன். அதில் ஒரு கையெழுத்துப் போடச் சொன்னார். எப்படியும் இருபது, முப்பது ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

அதற்குள் என் கையிலிருந்த புத்தகம் அவர் கவனத்தை ஈர்த்தது என்பதை அறிந்தேன். கொஞ்சம்கூடத் தயங்காமல் அந்தப் புத்தகத்தைக் கேட்டார். சிறிது அவநம்பிக்கையுடன் கொடுத்தேன். மாநகர ரயில், பேருந்து பயணங்களில் இப்படி அருகில் இருப்பவர்கள் நான் வாசிக்கிற நூலைக் கேட்டு வாங்குவார்கள். ஆர்வமாகக் கேட்கிறார்களே என்று கொடுத்தால், அதே வேகத்தில் புத்தகம் திரும்பி வரும். நெருப்பைத் தொட்டவர்கள் போல மாறியிருப்பார்கள்.

ஆனால் எத்தனை முறை இப்படி மோசமான அனுபவங்கள் ஏற்பட்டிருந்தாலும் புத்தகத்தை ஆர்வமாக யாராவது கேட்டால் உடனே கொடுத்துவிடுவேன். அதனால் மருந்து தெளிப்பவரிடமும் கையிலிருந்த நூலைக் கொடுத்தேன்.

அவர் கொடுத்த நோட்டில் கையெழுத்துப் போட்டேன். நோட்டையும் புத்தகத்தையும் கைமாற்றிக்கொள்வதற்காகக் காத்திருந்தேன்.

அவர் கவனிப்பதாகவே தெரியவில்லை. நூலில் மூழ்கிவிட்டிருந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு உங்களுக்குக் கதைப் புத்தகங்கள் படிக்கிற பழக்கம் இருக்கிறதா என்று கேட்டேன். நிறைய படிப்பேன் என்றார். இப்படிச் சொல்பவர்களிடம் என்னென்ன புத்தகங்கள் வாசிப்பீர்கள் என்று கேட்டால், உற்சாகமாகக் குமுதம், ஆனந்த விகடன், ராணி, மங்கையர் மலர். . . இப்படி அடுக்குவார்கள். இதுவும் அனுபவ ஞானம்தான்.

இவரும் அந்த வகைதான் போலும் என்று நினைத்தவாறே, கொஞ்சம் கேலியுடன் என்ன புத்தகங்கள் படிப்பீர்கள் என்று மீண்டும் கேட்டேன். அவரும் சலிக்காமல் எல்லா வகையான புத்தகங்களும் வாசிப்பேன் என்றார். பிடி கொடுக்காமல் பேசுகிறாரே என்ற எரிச்சல் வந்தது.

போன் அழைத்தது. ஒன்பது பதினைந்து. அலுவலக நண்பர்தான். இன்னும் பத்து நிமிடத்திற்குள் வீட்டிற்கு வந்துவிடுவதாகக் கூறினார். கொஞ்சம் நிம்மதி வந்தது. சொல்லுங்கள் என்ன மாதிரியான புத்தகங்கள் எல்லாம் படிப்பீர்கள் என்றேன். அவரும் சளைக்காமல் எல்லாப் புத்தகங்களும் படிப்பேன். என் வீட்டில் ஒரு குட்டி நூலகமே இருக்கிறது என்றார்.

இப்படிச் சொல்பவர்களைத் துருவித்துருவிக் கேட்டால் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, புஷ்பா தங்கதுரை, ரமணி சந்திரன், அம்புலிமாமா எழுத்தாளர்களின் பட்டியலை ஒப்பிப்பார்கள். நீங்கள் வாசிக்கிற படைப்பாளிகளின் பெயர்களைக் கூறினால், என்னிடம் அவர்களின் புத்தகங்கள் இருந்தால் கொடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்று சின்னதாக ஒரு தூண்டில் போட்டேன்.

நவீன எழுத்தாளர்களின் பெயர்களை வரிசையாக அடுக்கினார். தமிழில் முக்கியமான படைப்பாளிகள் அனைவரது பெயர்களையும் ஒப்பித்தார். இப்போது நான் கொஞ்சம் மிரண்டு போனேன்.

ஒரு நிமிடத்தில் அவர்மீது என் மதிப்பும் மரியாதையும் கூடிவிட்டது. என் மனைவியிடம் சொல்லி அவருக்கும் ஒரு நாற்காலி போடச் சொன்னேன். அமர்ந்தார். அவர் பெயரைக் கேட்டேன். சொன்னார்.

என் பெயரைச் சொன்னவுடன் அவர் முகம் பரவசமானது. உடனே கையை நீட்டி என் கையைப் பிடித்துக் குலுக்கினார். “நீங்கள் கறுப்பு நாய் சிபிச்செல்வனா ?” என்றார். ஆம் என்றேன். அவரால் நம்ப முடியவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக இந்த முகவரியைத் தேடிக்கொண்டிப்பதாகக் கூறினார்.

30, சம்பங்கி தெரு, அமுதம் பதிப்பகம் இதுதானா என்றார். நீங்கள் வாராவாரம் வருபவர்தானே என்றேன். இங்கே பலமுறை ‘அமுதம்’ பதிப்பகத்தை விசாரித்ததாகவும் இங்கே யாருக்கும் தெரியவில்லை என்றும் கடந்த ஒரு வருடமாகத் தொடர்ந்து தேடுவதாகவும் கூறினார்.

‘கறுப்பு நாய்’ கவிதைத் தொகுப்பு பிரதி ஒன்று தனக்கு வேண்டும் என்றார். என்னிடம் மிகக் குறைவான பிரதிகளே இருப்பதால், ஒரு பிரதியைத் தருகிறேன் படித்துவிட்டுத் திருப்பித் தாருங்கள் என்றேன். இதுபோன்ற நூல்களில் உங்களுக்குத் தேவையானவற்றைத் தருகிறேன், வாசித்துவிட்டுத் திருப்பிக் கொடுங்கள் என்றேன்.

அவருக்கு என்னைச் சந்தித்த பரவசம் இன்னும் தீரவில்லை. ‘கறுப்பு நாய்’ நூலைக் கையில் வாங்கியவுடன் பரபரப்பாகப் புரட்டினார். அவர் முகத்தில் திருப்தி தெரிந்தது. ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டினார். இல்லை. படித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்தால் போதும் என்றேன். இல்லை ஒரு பிரதி தனக்கே வேண்டும் என்றும் என் நூலகத்தில் இருக்க வேண்டிய புத்தகம் என்றும் கூறினார். பணத்தைக் கொடுப்பதிலும் பிடிவாதமாக இருந்தார்.

இவரை இரண்டு வருடங்களாகப் பார்த்துவருகிறேன். இதுவரை ஒரு சின்ன அறிமுகம்கூட நிகழ்ந்ததில்லை. சிறு புன்னகைகூட உதிர்த்ததில்லை. இப்போது பத்து நிமிடத்திற்குள் எனக்கும் அவருக்கும் ஒரு நெருக்கம், உறவு ஏற்பட்டிருந்ததை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது. இப்படி நான் சந்திக்கும் முதல் வாசகர் இவர்தான்.

என் பெயர் எப்படி உங்களுக்கு அறிமுகமானது என்றேன். ‘புத்தகம் பேசுது’ இதழில் ‘கறுப்பு நாய்’ விளம்பரம் படித்ததிலிருந்து தெரியும் என்றார்.

வாசல்வரை சென்று அவரை வழியனுப்பினேன். வீதியில் இறங்கி அவர் நடந்து போகும்போது கவனித்தேன். அவர் பாதங்கள் பூமியில் பதியவில்லை. அவர் வந்துபோனது கனவா, நிஜமா என்று நினைத்தபடியே என் கால்களைப் பார்த்தேன். பூமியிலிருந்து ஒரு அடி மேலேயிருந்த

**

sibichelvan2000@yahoo.co.in

Series Navigation

தமிழில்: சிபிச்செல்வன்

தமிழில்: சிபிச்செல்வன்