புழுக்களும், இலைகளும்

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

சேவியர்


0

புழுக்கள் கூட்டமாய் நடத்திய
பட்டிமன்றத்தில்
இலைகளுக்கு எதிராய்
ஏராளம் கூக்குரல்கள்.

இலைகள்
நடத்திய மாநாட்டில்
கையொப்பமானது
புழுக்களை
அழிப்பதற்கான ஏற்பாடு.

இலைகள்
இடைவிடாமல் முளைத்தன,
புழுக்களும்
புறமுதுகு காட்டாமல் முன்னேறின.

இலைகளும் புழுக்களும்
பகலிரவாய் சண்டையிட,
பூக்களின் பளபளப்பில்
பாதிக்குமேல் பாதிக்கப்பட்டது.

அதனால்
கூந்தல்கள் பூக்களை
மறுதலித்தன.

மகரந்த ஏற்றுமதியை
வண்டுகள் மறுத்தன.

கொழுத்துப் போன
புழுக்களும்,
உழுத்துப் போன இலைகளும்
பின்பொரு நாள்
தரையில் சந்தித்துக் கொண்டன.
யாருக்கு வெற்றி என்ற
விவாதத்தைத் துவங்கின.

புழுக்களுக்கும் இலைகளுக்கும்
இடையே நடந்த
பகிரங்கத் தாக்குதலில்,
தோற்றுப் போய்
மெளனமாய் நின்றது
இலைகளையும் புழுக்களையும்
கிளைகளில் தாங்கிய செடி.

0

சேவியர்
Xavier_Dasaian@efunds.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்