புலம் பெயர் வாழ்வு (6)

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

இளைய அப்துல்லாஹ்


ஐரோப்பிய நாடுகளுக்கு தமிழர்கள் புலம் பெயர்ந்த பொழுது அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே முதலில் புலம் பெயர்ந்தார்கள். பிறகு பொருளாதார காரணங்களுக்காக…. பிற்பாடு வேறு வேறு தேவைகளுக்காக அமொிக்கா, கனடா, லண்டன், ஐரோப்பிய நாடுகள், ஸ்கண்டிநேவிய நாடுகள் மலேசியா, இந்தியா என்று அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் போனார்கள்.

ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு போனவர்கள் அன்னிய மொழி, கலாச்சாரம் என்று புதிய விடயங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்கள், தமிழ் மொழி, கலாசாரம் என்ற எம்மவர் உணர்வுகளை பிரதிபலிக்கத் தொடங்கினர்.

அதிலிருந்து தான் சஞ்சிகைகள் தமிழில் வெளிவரத்தொடங்கின.

புலம் பெயர் நாடுகளில் இருக்கும் கணனி, போட்டோ கொப்பி மெசின் போன்ற வசதிகளை பன்படுத்தி சஞ்சிகைகள் வெளிவரத்தொடங்கின. மனிதம் (சுவிஸ்), உயிர்ப்பு (நோர்வே), சுவடுகள் (நோர்வே), கலப்பை (கனடா) காலம் (கனடா) தூண்டில் (ஜேர்மனி) அ.ஆ.இ (நெதர்லாந்து) எக்ஸில் (பிரான்ஸ்) உயிர்நிழல் (பிரான்ஸ்) பனிமலர் (லண்டன்) தமிழ் உலகம் (அவுஸ்ரேலியா) தமிழ் முரசு (லண்டன்) தேசம் (லண்டன்) உதயன் (லண்டன்) புதினம் (லண்டன்) தமிழர் தகவல் (கனடா) தமிழர் தகவல் (லண்டன்) பறை (டென்மார்க்) பூவரசு (ஜேர்மனி) வெளி (லண்டன்) என பல இலக்கிய சஞ்சிகைகளும் பேப்பர்களும் வெளிவந்தன. இன்னும் இருக்கின்றன.

அரசியல் காரணங்களாலும் பொருளாதார நெருக்கடியினாலும், வேலைப்பளுவினாலும் அனேகமான சஞ்சிகைகள் நின்று விட்டன. காலம் (கனடா) தேசம் (லண்டன்) போன்ற சீாிய சஞ்சிகைகளும் இன்னும் சில இலவச பேப்பர்களும் இப்பொழுதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

புலம் பெயர் நாடுகளில் இருந்து வெளிவந்த சஞ்சிகைகள், பத்திாிகைகள் ஏராளம். எனக்கு தொிந்த சிலவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளேன். இன்னும் தகவல்களை பெற விரும்புகிறேன் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பினால் நன்றி.

தமிழர்களின் இலக்கிய முயற்சிகள், பதிப்பித்த புத்தகங்கள் தொடர்பாக லண்டனில் வாழும், என் செல்வராஜா முன்னாள் நூலகவியலாளர் அவர் இப்பொழுதும் நூலகவியலாளர்தான். பல முயற்சிகளுக்கு மத்தியில் “நூல் தேட்டம்” என்ற நூல்களின் விபரக்கொத்தை திரட்டி வெளியிட்டு வருகின்றார். இப்பொழுது 2ம் பாகமும் வெளிவந்து விட்டது என நினைக்கிறேன். அதில் தமிழர்களுடைய நூல்களின் விபரம் கிடைக்கும். இலங்கையில் பூபால சிங்கத்தில் வாங்கலாம்.

—-

லண்டனுக்கு வந்த, இலங்கையில் பிரபலமா ஒலிபரப்பாளர் ஒருவர் இனவெறியர்களின் தாக்குதலுக்குள்ளானார் என்று கேள்விப்பட்ட போது அதிர்ந்தேன். அவர் நல்ல மனிதர். சோலி சுறட்டுக்கு போகாதவர். மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்தது. தமிழர் அதிகம் வாழும் ரூட்டிங் என்ற இடத்தில் வைத்து.

தமிழர்கள் லண்டனில் ஏனைய வெள்ளை, மற்றும் ஆபிாிக்கர்களால் தாக்கப்படுவது அதிகாித்து வருகிறது. ஒரு வருடத்துக்கு முன்பு எனது ஒளிபரப்பாள நண்பர் ஒருவரும் வெள்ளையர்களால் அல்லது ஆபிாிக்கர்களால் தாக்கப்பட்டார். இருட்டில் நடந்தது. அடையாளம் சாியாக தொியவில்லை என்றார் நண்பர்.

பொலிஸ் விசாரணை, கைவிரலடையாளம் தேடுதல், போட்டோ பார்த்து அடையாளம் என்று பல முறைகளில் லண்டன் பொலிஸார் தேடியும் யாரும் கிடைக்கவில்லை. இது நடந்தது ஹவுன்;ஸ்லோவில்.

ஜேர்மனியில் இருந்து வந்த எனது நண்பனும் கவிஞனுமான ஒருவர் வோல்தம்ஸ்ரோ பகுதியில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டார்

எங்கள் நாட்டில் எங்களுக்கே வேலை இல்லை அகதிகள் வந்து தமது வளங்களை சுரண்டுகிறார்கள் என்று வெள்ளைக்கார இளைஞர்கள் நினைக்கிறார்கள். அதனால் குரோதங்கள் வளர்கின்றன.

சிலர் பணம் புடுங்குவதற்காக தாக்குகின்றனர். இங்கிலாந்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் வேலையற்ற சுதேசி இளைஞர்கள் தான் இந்தத் தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.

—-

லண்டனில் ஈஸ்டுஹம் பகுதியில் இருக்கும் தமிழர் தகவல் மையத்தில் ஒரு இலக்கிய கலந்துரையாடலுக்கு கனடாவில் இருந்து எழுத்தாளர் – திருச்செல்வம் வந்திருந்தார்.

கனடாவில் “சொதியும் இடியப்பமும்” ‘கோல்’ பண்ணினால் வீட்டுக்கு வரும் என்று பேசும் போது குறிப்பிட்டார்.

கனடாவில் மட்டுமல்ல லண்டன், ஜேர்மனி, ஹெலன்ட், பிரான்ஸ், டென்மார்க், நோர்வே என்று எங்கு கூப்பிட்டாலும் “இடியப்பமும் சொதியும்” வீட்டுக்கு வரும். கூடவே இலவச சம்பலும்.

“சொதி” எங்கு போனாலும் தமிழர் வாழ்வோடு இணைந்து விட்டதொன்று. சாப்பாடு எவ்வளவு தான் ருசியாக இருந்தாலும் “சொதி” விட்டு சாப்பாட்டை முடிக்காவிட்டால் இலங்கை தமிழர்களுக்கு அது திருப்தியே இராது.

கூழ் குடத்தடி, கஞ்சி கடப்படி, புட்டு பட்டணம், சோறு சொன்ன இடம், சொதி பந்தியெழுப்பி என்ற பழமொழியை எனது அம்மம்மா அடிக்கடி சொல்லுவா.

லண்டனில் 100 இடியப்பம் சொதி சம்பலுடன் பதினைந்து பவுண்ஸ்கள் “கோல்” பண்ணினால் வீட்டுக்கு வரும். இலங்கை ரூபாய்படி இன்று – 2850 ரூபா

—-

ஐரோப்பிய நாடுகளில் அகதிகள் பிரச்சனை தான் ஒரு பாாிய பிரச்சனை தலைவலி. உண்மையான அரசியல் அச்சம், கொலை அச்சம் இலங்கையில் உடையவருக்கு அகதி அந்தஸ்த்து கிடைக்காது. சும்மா ஒருவருக்கு கிடைத்துவிடும். அகதி அந்தஸ்த்தை எப்படி தீர்மானிக்கிறது அந்தந்த நாட்ட அரசுகள், என்று தமிழர்கள் குழம்பியே போய் விடுவார்கள்.

அண்மைக்காலமாக லண்டனில் பாாிய கெடுபிடி, அகதிகள் சைன் பண்ணப்போவது. நீண்ட தூரம் இருக்கும் தமிழர்கள் ஒரு நாள் செலவழிக்க வேண்டும் சைன் பண்ணப்போவதற்கு.

அகதிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக வதிவிட அனுமதியை, அகதி தமது கண்காணிப்பில் இருக்கிறார் என்பதனை உறுதி செய்வதற்கு அகதிகளை சைன் பண்ணும் அலுவலகங்களுக்கு உள்துறை அமைச்சு அழைக்கிறது.

சிலருக்கு 3 மாதத்துக்கு ஒரு தடவை, சிலருக்கு 2 மாதத்துக்கு ஒரு தடவை, சிலருக்கு ஒரு மாதத்துக்கு ஒரு தடவை, சிலருக்கு வாரத்தில் இரண்டு முறை, பொிய கொடுமை என்னவென்றால் சிலருக்கு ஒவ்வொரு நாளும் போகவேண்டும்.

அகதிகளுக்கு இப்படியான உளவியல் நெருக்கடிகளை கொடுத்தால் தாங்கமுடியாமல் நாட்டை விட்டு போய்விடுவார்களே என்ற எண்ணம் தான்.

அப்படி ஆய்க்கினை தாங்காமல் எத்தனையோ தமிழர்கள் திரும்பி இலங்கைக்கு வந்து விட்டார்கள். சிலர் வருடக்கணக்காக வாரம் ஒரு தடவை “சைன்” பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

அகதிகள் கொண்டு போகும் பேப்பாில் அடுத்த தவணை திகதி போட்டு அலுவலர் கொடுப்பார் அதற்கு “சைன்” பண்ணுவது என்று யாரோ தவறுதலாக பெயர் வைத்துவிட்டார்.

ஒவ்வொரு முறையும் “சைன்” பண்ணும் இடத்துக்கு போகும் போதும் திரும்பி வரும் வரை “ஈரல்குலை” கருகிப் போகும் அங்கு வைத்துத்தான் திருப்பி அனுப்புவது நாட்டுக்கு.

இலங்கை சமாதானமான நாடு என்று முடிவெடுத்ததன் பின்பு,

இங்கிலாந்தில் அகதி அந்தஸ்த்து கொடுக்கிறார்களில்லை, நிறுத்தியாகிவிட்டது என்று சொன்னாலும் இலங்கையிலுள்ள இளைஞர்கள் நம்புகிறார்களில்லை. ஏதோ நாங்கள் பொறாமையில் சொல்வது போல பார்க்கிறார்கள்.

இளைய அப்துல்லாஹ்

லண்டன்

anasnawas@yahoo.com

Series Navigation

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்