புலம்பெயர் வாழ்வு (1)

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

இளைய அப்துல்லாஹ்


“அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன். என்னாலை இனியும் வாழ முடியாது. அகதி அந்தஸ்தும் நிராகாிக்கப்பட்டுவிட்டது. எனக்கு பதினைந்து இலட்சம் கடன். வீட்டிலை இரண்டு தங்கச்சிமார். அவையளுக்கு உழைக்கத்தான் வந்தனான். ஆனால் இப்படி ஆயிட்டுதே”

திருகோணமலையைச் சேர்ந்த ஒருவர் நுயவழெ ர்ழரளந அகதிகள் கையெடுத்திடும் நிலையத்தில் வைத்து சொன்னார். லண்டனில் மனம் நொந்து போய் இருக்கும் அகதிகளின் கதைகள் ஏராளம். திருகோணமலையில் இருந்து லண்டன் வந்த கதையைச் சொன்னார்.

திருகோணமலையில் இருந்து நாங்கள் நான்கு பேரும் கொழும்புக்கு வந்தோம். நான் மீன்பிடித்தொழில் செய்து வந்தேன். வருமானம் போதாது. தங்கச்சிமாாின் சீதனம் தான் எனக்குள் இருந்த ஒரே கவலை. வெளிநாடு போனால் ஒரு வருஷம் கஷ்டப்பட்டால் என்ரை தங்கச்சிகளை கரை சேர்த்திடலாம் என நினைத்தேன்.

எனக்குத் தொிந்த ஒருவாிடம் வெளிநாடு போகும் யோசனையைச் சொன்னேன். அவர் ஒரு ஏஜன்டிடம் கொண்டு போனார். ஒரு கிழமைக்குள் காசைக் கட்டச் சொன்னார்கள். முதலில் அம்மாவின் நகை, தங்கச்சிமாாின் நகை, காணி ஒரு துண்டு என்று விற்று, ஆறு இலட்சம் சேர்த்தேன். அம்மா சொன்னா தாலிக் கொடியையும் விப்பம் என. நான் அந்நேரம் சம்மதிக்கவில்லை.

பாஸ் போட் எடுத்து முதலில் ஒரு திங்கட்கிழமை காலை ஸ்ரீலங்கன் ஏயார் லைனில் சிங்கப்பூர் போனோம். என்னோடு சேர்த்து ஏழு பங்களாதேஷ்காரர்கள் உடன் வந்தார்கள். பங்களாதேஷ்காரர்கள் இலங்கைக்கு 3 மாத விசாவுடன் வந்து இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏஜன்சிகளால் கடந்தப்படுகிறார்கள். அண்மையில் வெள்ளவத்தைக்கு போயிருந்த பொழுது ஒரு தமிழாின் லொட்ஜில் ஏழு பங்களாதேஷ் காரர்களைப் பார்த்தேன். அவர்களிடம் கதைத்த பொழுது சொன்னார்கள். தங்களை ஒருவர் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு வரச் சொன்னதாகவும் தலா 50,000 கொடுத்து விட்டதாகவும் இன்னும் அவர் தங்களை பணம் வாங்கிய பின்பு சந்திக்கவில்லையெனவும்….

இப்படி வெளிநாட்டுக்காரர் இங்கு வந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் இடைத்தங்கல் மையமாக இலங்கையை ஆள் கடத்தல் ாகரர்கள் பயன்படுத்துகிறார்கள்.

“சிங்கப்பூாில் ஒரு வீட்டில் தங்கவைத்தார்கள். நல்ல உணவு வெளியில் சுத்தி பார்த்தோம். விசா இருந்தது.”

சிங்கப்பூாில் விசா இல்லாமல் தங்குவது கண்டு பிடிக்கப்பட்டால் பின்புறத்தில் 10 கசையடிகள் கிடைக்கும் அதன் பின்பு சிங்கப்பூரை மனதும் உடலும் நினைத்துக் கூடப்பார்க்கமாட்டா.

“மூன்று நாள் சிங்கப்பூாில் இருந்து விட்டு அங்கிருந்து வேறு பாஸ்போட்டில் அழைத்துக் கொண்டு ரஷ்யாவுக்கு போனார்கள். ரஷ்யா ஒரு வறுமை மிகுந்த நாடு. ரஷ்யாவில் ஒரு வீட்டில் ஒரு நாள் தங்கவைப்பட்டோம். அந்த வீட்டுக்கு போய் கொஞ்ச நேரத்தில் இன்னும் நான்கு தமிழர்களைக் கொண்டு வந்தார்கள். இப்பொழுது ஆறு தமிழர்களும் பிற நாட்டுக்காரர்களும் எங்களோடு இருந்தார்கள்”.

ரஷ்யா ஆட்கடத்தல் காரர்களுக்கு ஒரு தங்குமிடம். அங்கிருந்து தான் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்கள் பணத்துக்காக கடத்தபடுகின்றார்கள். இந்த வல்லமை பாதாள உலகக் குழுவுக்கு இருக்கிறது. பணம் எல்லாம் பணம்.

“றெக்ஸீன் சூழப்பட்ட ஒரு கென்டயினாில் அந்த வீட்டில் இருந்து நாங்கள் ஏற்றப்பட்டோம். வீதியில் பொலிஸ் செக் பண்ணும் என்பதனால் ரஷ்யாவில் இருந்து கென்டயினாில் பயணம் ஆரம்பமாகிறது. அங்கிருந்து 2 நாள் பயணத்தில் உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தோம்.

பனி… இப்படியொரு பனியைக் கண்டதில்லை நாங்கள். விறைத்து செத்தோம். விறைப்பு என்றால் ஐஸ் கோழிபோல…. எங்களை மூடி பனி பெய்யும். பஞ்சுப் பொதி போல பனி கொட்டும். உஸ்பெகிஸ்தானில் இருந்து எமக்கான துன்பகாலம் அரம்பமாகியது. ஒரு வீட்டுக்கு கொண்டு போகிறார்கள் என்று தான் நினைத்தோம். கொண்டுபோனார்கள் அது பன்றிகள் அடைக்கப்படும் இடம். மூன்று தட்டு கொண்ட பன்றிப்பட்டி. நிலத்தோடு கீழே வெள்ள பன்றிகள் அடைக்கப்பட்டிருந்தன. நடுதட்டில் ஒன்றுமில்லை. மேல் தட்டில் எங்களுக்கு ஓலை போன்ற ஏதோ காய்ந்த இலைகளைப் போட்டு இருக்கச் சொன்னார்கள். இப்பொழுது நாம் தமிழர்கள் மட்டும் ஒன்று சேர்ந்தோம்.

அந்த குடிலில் ஏற்கனவே பதினொரு பேர் இருந்தார்கள். எல்லோரும் தமிழர்கள் பெண்கள் நான்கு பேர். ஐரோப்பாவுக்கு திருமணம் முடிப்பதற்காக மூன்று பேரும் தன் கணவனுடன் சேருவதற்காக ஒருவருமாக பெண்கள்.

முதல் நாள் ஒரு பெட்சீட் வீதம் எல்லோருக்கும் தந்தார்கள். அந்தக் குளிருக்கு பெட்சீட் தாங்காது. நாங்கள் சாதாரண சப்பாத்து மட்டும் போட்டிருந்தோம். சொக்ஸ{க்குள்ளால் குத்தி குத்தி குளிர் உயிரைக்கொல்கிறது.

உஸ்பெகிஸ்தானில் தமிழர்கள்படும் துன்பம் சொல்லிமாளாது. ஒரு நாள் போய்விட்டது. வருவார்கள் வருவார்கள் எங்களைக்கொண்டு போவதற்கு என்று காத்து காத்து இருந்தோம். மாலையில் 2 ரஷ்யர்கள் தான் வந்தார்கள்.

எங்களை அழைத்து வந்த தமிழர்கள் போய் விட்டார்கள். இரண்டு தடித்த ரஷ்யர்களை கண்டவுடன் பயந்து போனோம். மொழி தொியாமல் சாப்பாடு தண்ணீம் சைகையால் கேட்டோம். போனவர்கள் தண்ணீருக்குப் பதிலாக வொட்கா VODKA என்ற சாரயமும் பொிய வட்டமான றொட்டிகளும் கொண்டு வந்தார்கள். வெள்ளை நிறமான (VODKA) சாரயத்தை பச்சையாக குடித்தோம். வேறு வழி தொியவில்லை. அவ்வளவிற்கு தாகம். தொண்டை கிழிந்து போனது ரொட்டியை மட்டும் தந்தார்கள். தொட்டுக்கொள்ள ஒன்றுமில்லை.

அந்த சாராயம் குளிருக்கு பாதுகாப்பாக இருந்தது. போதையில் இருந்தோம். பெண்கள் நான்கு பேரும் குடிக்கவில்லை. பழக்கமில்லாத ஒன்று அருவருத்தார்கள்.

இரண்டாம் நாள், மூன்றாம் நாள் ஒருவரும் வரவில்லை. நான்காம் நாள் பசிபசி…. எங்களைக் கவனிக்க யாரும் இல்லை.

உஸ்பெகிஸ்தானில் நட்டாற்றில் கைவிடப்பட்டோம். தமிழ் ஏஜன்டுகள் எங்களைக் கைவிட்டு விட்டார்கள். ரஷ்யர்கள் வந்தார்கள் நாலாம் நாள் முடிவில் தண்ணீர் கேட்டோம். மீண்டும் வொட்கா மீண்டும் அதே ரொட்டி பெண்களைக் குடிக்கச் சொன்னார்கள். அவர்களோடு சேட்டை செய்தார்கள். நாங்கள் பெண்களை எப்படிப் பாதுகாப்பது என்று சிந்திக்க முதல் எங்களுக்கு பொல்லுகளால் அடித்தார்கள். “வொட்கா” மயக்கத்தில் இருந்த எங்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பெண்களை அந்த இருவரும் கையில் பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள். எங்களால் தடுக்க திராணி இல்லை. பக்கத்தில் இருந்த ஒரு வீட்டில் வைத்து அவர்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

பசிக்களை, தாகம் இத்தனைக்கும் நடுவில் அவர்கள் செய்த அட்டூழியம் இது.

பெண்கள் நால்வரும் அழுது அழுது எங்களிடம் வந்து சொன்னார்கள். நம் பெண்கள் சீரழிந்து போனதை நோில் கண்டு அழுதோம். அழுது அழுது இருந்து விட்டு திருமணம் முடிக்க வந்தவாில் ஒருவர் தன்னிடம் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை உடைத்து தனது இரண்டு கைகளின் நரம்புகளையும் அறுத்தார். இரத்தம் ஒழுகிய போதுதான் எங்களுக்கு விபரீதம் பூிந்தது. இரத்தம் பெருகப் பெருக… மயக்கமாகிவிட்டார். கொஞ்ச நேரத்தில் அவாின் உயிர்பிாிந்தது எனது கண்களுக்கு முன்னால் தற்கொலை செய்து கொண்ட அவரைப் பார்த்து நானும் மற்றவர்களும் பிரமை பிடித்து நின்றோம்.

பன்றிகளுக்கு தவிர அழுகுரல்கள் யாருக்கும் கேட்கவில்லை. மனம் வெதும்பினோம். பொருளாதாரம் தேட ஏஜன்டிடம் பணம் கொடுத்து வரும் அவலத்தை நான் நேரடியாகக் கொண்டு துடித்துப் போனோம்.

உதவிக்கு யாருமில்லாத அந்த பனிக்காட்டில் அவாின் பிரேத்தை கொண்டு போய் வைத்தோம். கொஞ்ச நேரத்தில் அந்தப் பிரேதத்தை பனி மூடிக்கொண்டது அடையாளமே தொியவில்லை. எங்களை அவர்கள் இருவரும் போதையில் வைத்திருந்தார்கள்.

2 கிழமைகளாக குளிக்காத உடுப்பு, மாற்றாத உடல்களில் ஒருவகை பேன் போன்ற உண்ணிகள் பரவத் தொடங்கின. அந்த உண்ணிகள் மீது “வொட்காவை” ஊற்றினோம் சிலதுகள் கழன்றன.

உண்ணிக் கடியினால் உடல்கள் புண்ணாகிப் போயின. கொடுமை என்னவெனில், பெண்களுக்கு மாதவிடாய் வந்து மிகவும் துன்பப்பட்டார்கள். அப்படி ஒரு அவலம் என்ன செய்வது வழி தொியவில்லை. எமது பெனியனைக் கொடுத்து உதவினோம். இப்படி கஷ்டங்கள் வாிசை வாிசையாக வந்து கொண்டிருந்தன.

உஸ்பெகிஸ்தான் பன்றிக் குடிலில் எழுதப்பட்டிருந்த வாசகம் இது “தமிழர்களே இந்தக் குடிலில் இருந்து பதினாறு பேர் கஷ்டப்பட்டு பல துன்பங்களைச் சந்தித்தோம். உங்களுக்கும் துன்பங்கள் காத்திருக்கின்றன” யாரோ ஒரு தமிழன் எழுதிவைத்தது.

சாியாக இருபத்தோராவது நாள் றொட்டிகளோடு வந்த அந்த ரஷ்யர்கள் ஒரு இடத்துக்கு எங்களை ஒரு பொிய வாகனத்தில் கூட்டிக்கொண்டு போனார்கள். சாி நாங்கள் ஐரோப்பா போகப் போகிறோம் எமக்கு விமோசனம் கிடைத்து விட்டது என்று எண்ணினோம்.

நீண்ட நேர பிரயாணத்தின் பின்பு சொன்னார்கள் இது கிர்கிஸ்தான். இன்னும் ரஷ்யாவை விட்டு போக எத்தனை நாளாகும் என்று யாரும் சொல்லவில்லை. ஓரளவு வசதியான வீடொன்றுக்குள் எங்களை அழைத்துப் போனார்கள். இருபத்தொரு நாளைக்குப் பிறகு எங்களுக்கு விமோசனம் வந்துவிட்டதாய் ஒவ்வொருவரும் யோசித்தோம். போன உடன் இருக்கச் சொன்னார்கள்.

கொஞ் நேரத்தில் நான்கு தமிழர்கள் வந்தார்கள். பார்த்து குதூகலித்தோம். தமிழர்கள் எங்களைக் காப்பாற்றுவார்கள் என்று எண்ணினோம். சிாித்து பேசினார்ள். இப்பொழது எங்களின் மனதில் தைாியம் வந்துவிட்டது. முதலில் குளிக்க வேண்டும் என்று கேட்டோம். பொிய “பாத்ரூம்” நன்றாகக் குளித்தோம். உண்ணிகளை புடுங்கி வீசினோம். குளித்து முடிய புதிய ரவுஸர் ஷேட் தந்தார்கள். உடுத்தோம். ரவல், பெட்சீட் தந்தார்கள் எல்லாம் இலங்கைச் சாமான்.

ஒரு அற்புதமான தேத்தண்ணி… குடித்தோம். பசியாற சோறும் இறைச்சியும் தந்தார்கள். ஊாில் சாப்பிட்டது போலிருந்தது. கொஞ்ச நேரம் சாயவேண்டும் போல் இருந்தது. வீட்டிலன் ஹோலில் படுத்தோம் எழும்பிப் பார்த்தேன். பெண்கள் அழுது அழுது ஏஜன்டிடம் தங்களது கவலைகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

எல்லோரையும் பொியவர் வரட்டாம் என்று ஒருவர் சொன்னார் அறைக்குள் போனோம் விசாலமான அறை மேசையின் மீத போடப்பட்ட கண்ணாடிக்குள் தலைவர் பிரபாகரனின் படம் இருந்தது. கூடவே புலிக்கொடியும். நாங்கள் சாியான இடத்துக்கு வந்து விட்டோம் என்று சந்தோஷித்தோம். ஆனால் படத்தை வைத்தே பெரும் வியாபாரம் அங்கு நடக்கிறது என்பதை அறிந்து கொண்டோம். உண்மை, பொய் எமக்குத் தொியவில்லை.

பொியவர் சொன்னார் “ஆளாளுக்கு ஒரு இரண்டாயிரம் பச்சை எடுங்கோ அல்லது எடுப்பியுங்கோ. அப்பதான் இங்கையிருந்து போகலாம். இங்கை மூண்டு நாட்கள் மட்டும் தான் தங்கலாம்.

அவர் பச்சை என்றது டொலர் எடுங்கோ என்றது வைத்திருந்தால் தாங்கோ எடுப்பியுங்கோ என்றது ஊாில் இருந்து அழைப்பியுங்கோ அல்லது அவர்களின் ஏஜன்டிடம் கொடுங்கோ.

இப்போது தான் பூிந்தது. ஆட்டை மகிழ்வித்தது பலிக்கு. நாங்கள் வந்த இடம் போலியானது. எங்கள் மீது இரக்கப்பட்டல்ல புடுங்குவதற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்” ஏஜன்டுகள் எறும்புத் தொடர்போல எமது எல்லாக் கிராமங்களில் இருந்தும் ஐரோப்பா, அமொிக்கா வரை பரந்து போய் இருக்கிறார்கள்.

“எங்கள் வீடுகளுக்கு ரெலிபோன் பேசத் தந்தார்கள். பேசினோம். அம்மா அழுதா, தங்கச்சிமார்கள் அழுதார்கள். நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் என்று பொய் சொன்னோம்.

பணம் புரட்டி… அம்மா தாலிக்கொடிவித்தா. காணியின் இன்னொரு துண்டும் கடனும்பட்டு காசை இலங்கையில் ஏஜன்டிடம் கொடுத்தேன். மூன்று நாட்களுக்குள் எல்லோரும் ஏதோ ஒரு விதமாக காசு கட்டினோம்.

மூன்றாவது நாள் மாலை இரண்டு கார்களில் எங்களை அடைத்துக் கொண்டு போனார்கள். கொண்டு போகும் போது இடையில் பொலிஸ்காரர்கள் மறித்தார்கள் அவர்களுக்கு டொலர் கொடுத்தார்கள். கொண்டு போய் ஒரு இடத்தில் விட்டு விட்டு சொன்னார்கள் இதனைக் கடந்தால் போலந்து வரும். அதற்கு பின்பு ஈரோப்புக்கு போய் விடுவீர்கள்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளை வெளேரென்று பனிப்படலம். பனிப்பாறை. பனிமலை சொன்னதிசையை நோக்கி நடக்கிறோம். ஒருவரும் கதைக்கவில்லை. நடைப்பிணமாய் நடக்கிறோம். ஏற்கனவே சொல்லியிருந்தார்கள். இது பனி படர்ந்திருக்கும் ஆறு கீழே தண்ணீர் மேலே பனிக்கட்டி கூட்டமாக நடக்கக் கூடாது தனித்தனியே இடம் விட்டு இடம் விட்டு நடந்து கொண்டிருந்தோம். நாங்கள் பதினேழு பேர்.

கைகளும் உடலும் விறைத்து விட்டது. இரத்தம் உறைந்து விட்டது. மனத்துணிவில் மட்டும் நடக்கிறோம். இடையில் பனிக்கரடிகள் ஓடுகின்றன. அவை எம்மை ஒன்றும் செய்யவில்லை. ஆறு மணித்தியாலம் மட்டில் நடந்திருப்போம்.

எனக்குப் பின்னால் ஒரு முனகல்…. எல்லோருமே களைத்துப் போய்விட்டோம். செத்து விடுவோமா என்ற பயத்தில் பார்த்தேன் எங்களோடு வந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ராசன் அண்ணா பனிப்படலம் உடைந்து விழுந்து இடுப்பளவும் பனி ஆற்றிலி மூழ்கிவிட்டது. “என்னை இப்பிடியே விட்டுப்போங்கோ… போங்கோ…” என்று கத்தினார். நான் கிட்டப் போனால் பனிப்படலம் இன்னும் உடையும் நானும் குளிர் தண்ணீாில் மூழ்கி சாக வேண்டியது தான். ராசன் அண்ணை எமது கண்களுக்கு முன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிவிறைத்து செத்துப்போனார்.

அவர் சாவகச்சோி என்று சொன்னார். இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றார். மனைவியின் நகை நட்டு மற்றும் கடனோடு வந்திருந்தார். “என்ரை பிள்ளைகள் என்ரை பிள்ளைகள்” என்று சாகும் போது புலம்பினார். அவரை அப்படியே விட்டுவிட்டு நடந்தோம்.

களைப்பாகவும் விறைப்பாகவும் இருந்தது. நான் ஒரு கட்டை போன்ற ஒன்றில் உட்கார்ந்தேன். ஒருவரும் கதைக்கவில்லை…. எழும்பிய போது காலால் தட்டிப் பார்த்தோம். நான் இருந்தது கட்டையல்ல… பனியில் விறைத்துச் சுருண்ட ஒரு மனிதன். ஐயகோ! அது ஒரு தமிழனா ?

சுற்றி வர ராடார் கருவிகளும். ஒளிபாச்சும் மின் விளக்குகளும் இருந்தன. பொிய வேலி போட்டு ரஷ்ய எல்லையில் இராணுவம் காவல்காக்கிறது. அந்த எல்லையைத் தாண்டித்தான் நாம் போக வேண்டும். இந்த பனிப்படலத்தில் கேட்டுக் கேள்வியில்லை கைது செய்வதில்லை. இராணுவம் சுட்டுத்தள்ளி விடும்.

ரஷய இராணுவத்தை விலத்திக் கொண்டு எல்லை கடந்தோம். பின்னரும் ஒரு நாள் நடந்தோம் இரண்டு நாட்கள் பனிமலையில் நடந்த பின்பு நகருக்கு வந்தோம். போலந்துக்கு வந்த பின்பு ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கே போய்விட்டோம். பின்னர் நான் போலிந்தில் இருந்து இத்தாலிக்கு ரயிலில் வந்து இத்தாலியில் எனது நண்பன் ஒருவனின் உதவியோடு பெல்ஜியம் வந்து அங்கிருந்து கொன்டயினாில் இலண்டன் வந்தேன்.

லண்டனில் அகதிகளாகப் பதிந்து எனது கதைகளைச் சொன்னேன். ஆனால் என்னை நிராகாித்து விட்டார்கள். இப்பொழுது நான் Eaton House இற்கு கிழமைக்கு கிழமை “சைன்” பண்ண வருகிறேன்

இது அவாின் கதை நுயவழெ ர்ழரளந லண்டனில் அகதிகள் அதிகமாகப் பயப்படும் இடம் அகதி அந்தஸ்து நிராகாிக்கப்பட்டவர்களை கையெழுத்திடவரச் சொல்லிவிட்டு நாட்டை விட்டு கடத்தும் இடங்களில் இதுவும் ஒன்று எனவே இங்கு வரும் அகதிகள் நம்பிக்கையில்லாமல் வருவார்கள்.

ஏஜன்சிகள் இப்படி எத்தனை பேரை சீரழிக்கின்றன. இவ்வளவு கஷ்டப்பட்டுப் போயும் தமிழர்கள் சாதித்துவிடப் போவது ஒன்றுமில்லை. ஏழைகள் மேலும் கடனாளியாகின்றனர். இவரைப் போன்ற எத்தனையோபேர் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர். ஆனாலும் லண்டன் மோகம் எமது இளைஞர்களை விட்டு விலகுவதில்லை.

இளைய அப்துல்லாஹ்

லண்டன்

Series Navigation

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்