புரியாத புதிது

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

சத்தி சக்திதாசன்


வருடம் தான் புதிது கண்மணியே
தப்பாக எண்ணாதே
மனிதர்கள் எல்லாம்
பழையவரே !

சட்டையைத்தான் புதிதாக
மாட்டிக்கொள்வார் – கண்மணியே
தாம் கொண்ட கருத்துக்களை
மாற்றிக்கொள்ளார் !

துவைக்கும் துணியில்
அழுக்கு கரைந்துவிடும் – கண்மணியே
மனத்தை வெளுக்கும்
மந்திரத்தை அறியார் !

வருடம் பிறந்ததும் பறந்திடுவார்
ஆலய வாசலுக்கு – கண்மணியே
கடவுளுக்கு மறுபெயர்
கருணையென்றறியார் !

புதுவருடக் கொண்டாட்டங்கள்
பலவும் நடத்திடுவார் – கண்மணியே
தின்பதற்கு உணவின்றி திண்டாடும்
கூட்டத்தை மறந்திடுவார் !

விசையோடு சுற்றும் இவ்வுலகில்
திசையறியாமல் போவர் – கண்மணியே
இலட்சியவாதிகளைத் தூக்கி
குப்பையிலே போடு என்பர் !

படித்துப்பட்டம் பெற்றவர் தான்
இவர்களெல்லாம் – கண்மணியே
சமையலறையில் காட்சிக்கு வைக்கும்
ஏட்டுச்சுரைக்காய் தான் இவர் கல்வி !

கண்களிலே வற்றாத நீரோடு
கைகளில் காலணா காசுக்கு வழியின்றி – கண்மணியே
தவித்திடும் மக்களும் இந்தப் பூமித்தாயின்
புதல்வர்தான் என எண்ண மறந்திடுவர் !

வீதியின் ஓரங்களிலே
விழிகளில் ஏக்கத்துடன் – கண்மணியே
அம்மணமாய் அல்லலுறும் ஏழைச்
சிறாரின் துன்பத்தை உணர்ந்திடார் !

புதுவருடமென்றவுடன்
திரையரங்குகள் நிறைந்துவிடும் – கண்மணியே
பசித்த வயிறுடன் தவிப்போரின்
சோற்றுப்பானைகளை நிறைப்பாரா !

ஆலயத்திற்கு செல்லாதீர்கள் என்பதல்ல
திரைப்படம் பார்க்காதீர்கள் என்பதுமல்ல – கண்மணியே
புதுவருட மகிழ்வுதன்னை சிறிது
பகிர்ந்து கொள்வாரா !

வருடம் தான் புதிது
தெருவோரத்தில் குழந்தைகள் தவிக்கும்வரை – கண்மணியே
சிரிப்பவர் சிலர் , அழுபவர் பலர் எனும் நிலை மாறும் வரை
மனிதர்கள் பழையவர்தான் மறந்திடாதே !
——————————————————–

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்