சேதுபதி அருணாசலம்
பார்த்த விஷயங்களை நினைவணுக்களில் பதிவு செய்து, அதைக் கடிதமாகவோ, கட்டுரையாகவோ, நாட்குறிப்பாகவோ எழுதிவைப்பது எத்தனை உபயோகமாக இருக்கிறது, இருக்கப்போவது என்பது கண்டிப்பாக அதை எழுதுபவருக்கு, எழுதிய நாட்களில் தெரிந்திருக்க வேண்டுமென்று அவசியமில்லை. ஆனால் இவ்வாறு எழுதப்பட்ட நாட்குறிப்புகளும், கடிதங்களும் பிற்காலங்களில் வரலாற்று ரீதியாகவோ, சமூகரீதியாகவோ பெரும் மாற்றங்களை ஏற்படுத்தவல்லவை.
ஸ்விட்சர்லாந்தில் தங்கியிருந்த டாரதி ஹா. யூஸ்டிஸ் (Dorothy.H.Eustis) என்ற அமெரிக்கப் பெண்மணி ஜெர்மனியில் தான் பார்த்த கண் பார்வையற்றவர்களை வழி நடத்திச் செல்லும் நாய்களைப் பற்றி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட் (Saturday Evening Post) என்ற அமெரிக்கப் பத்திரிக்கையில் ஒரு கட்டுரையாக எழுதினார். அதைப் படித்த மோரிஸ் •ப்ராங்க் (Morris Frank) என்ற பார்வையற்ற அமெரிக்கர் இந்த வழித்துணை நாய்களை அமெரிக்காவில் முயற்சி செய்து பார்த்தார். அது மிகவும் வெற்றிகரமாக அமையவே டாரதி யூஸ்டிஸிடம் பத்தாயிரம் டாலர் உதவி பெற்று ஒரு வழித்துணை நாய்ப் பயிற்சிப் பள்ளியைத் துவக்கினார். 1929ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்தப் பள்ளி ‘பார்க்கும் கண்’ என்று அழைக்கப்பட்டது. •ப்ராங்க் “நான் ஐந்து செண்ட் செலவழித்து வாங்கிய பத்திரிக்கை எனக்கு மில்லியன் டாலருக்கும் மேலான மதிப்புடைய கட்டுரையைத் தந்தது. அந்தக் கட்டுரை என்னுடைய வாழ்வையே மாற்றி அமைத்தது!” என்று மிகவும் மகிழ்ந்து சொல்லியிருக்கிறார்.
இரண்டாம் உலகப்போரில் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் (Amsterdam) நகரில் ஒரு வீட்டின் நிலத்தடித் தளத்தில் பதுங்கியிருந்த ஆன்னி •ப்ராங்க் (Annie Frank) தான் பார்த்த நாஜிப்படையின் கொடூரங்களை நாட்குறிப்பாக எழுதிவைக்க பின்னாளில் இக்குறிப்புகள் உலகையே உலுக்கின. இரண்டாம் உலகப்போரில் யூதமக்கள் எவ்வாறு கொடூரமாக வதைத்து அழிக்கப்பட்டார்கள் என்பது உலகிற்குத் தெரியவந்தது. இந்நாட்குறிப்புகள் பிரபலமானதில் நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் நல்ல லாபம். ஆன்னி •ப்ராங்க் பதுங்கியிருந்த வீட்டை சுற்றுலாத்தலமாக்கி நிறைய காசு பார்த்து வருகிறது. ஆன்னி •ப்ராங்கின் நாட்குறிப்பும் வாழ்க்கைக் கதையும் இன்று அமெரிக்கப் பள்ளிகளில் பரவலாக போதிக்கப் படுகிறது. அமெரிக்க சமுதாயத்தின் இனவெறியை எதிர்க்கும் போராட்டத்தில் போரில் சிக்குண்டு இறந்து போன இப்பெண்ணின் நாட்குறிப்பு ஒரு முக்கியமான எதிர்ப்புக்காரணியாகச் செயல்படுகிறது. பள்ளிச் சிறுவர் சிறுமியர்களின் உள்ளத்தில் இனவெறி வேரூன்றி வளராமல் தடுக்க உதவுகிறது.
இரண்டாம் உலகப்போர் என்றாலே இப்போதெல்லாம் நம் நினைவுக்கு வருவது நாஜிப்படையின் கொடூரங்கள். இதற்கு ஆன்னி •ப்ராங்கின் நாட்குறிப்புகள் மட்டுமல்லாமல், உயிர் தப்பிய யூதமக்கள் அளித்த வாக்குமூலங்கள், சிதையாமல் நின்ற சித்திரவதைக் கூடங்கள் (Concentration camps) ஆகியவையும் காரணமாகும். நாஜிப்படைகளின் கொடூரங்கள் பற்றி எழுதப்பட்ட எண்ணற்ற புத்தகங்களும், ‘ஷிண்ட்லரின் பட்டியல்’ (Schindler’s list) போன்ற பிரபலமான திரைப்படங்களும் இனவெறி எவ்வளவு கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உலகிற்குத் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால் நாஜிப்படைகள் மட்டுமல்ல அதே அளவுக்கு அதன் எதிர்த்தரப்பிலிருந்த ரஷ்யப்படைகளும் கொடூரமானவைதான் என்று உலகிற்குத் தெரியப்படுத்தியிருப்பவையும் ஒரு பெண்மணி எழுதிய நாட்குறிப்புகள்தான். “பெர்லினில் ஒரு பெண்மணி” (A woman in Berlin) என்ற பெயரில் வெளியான ஒரு பெயர் வெளியிடப்படாத பெண் நிருபர் எழுதிய நாட்குறிப்புகள்தான் அவை. 1959 இல் முதல் முறை வெளி வந்த இந்த நூல் முதலில் மக்கள் கவனத்தைப் பெறவில்லை. ஜெர்மன் மக்கள் தம் நாடும், தம் மக்களும், தம் பெண்களும் சந்தித்தப் பேரவல நிலைகளைப் பற்றி மறுபடி மறுபடி படிக்கும் மனநிலையில் இல்லை. மேலும் பெண்கள் சீரழிக்கப் படும் வர்ணிப்புகளை எந்த நாட்டு மக்களுமே படிக்க விரும்புவதில்லை. இத்தனைக்கும் அத்தகைய வருணிப்புகள் இப்புத்தகத்தில் மிக எளிமையாக எந்த அதீதமும் இல்லாமல்தான் எழுதப்பட்டிருந்தன. இப்புத்தகம் ஜெர்மனியிலும் யூரோப்பின் இதர நாடுகளிலும் ஓரளவு பிரபலமடைந்தது சமீபத்தில் 2003-இல்தான். என்ன செய்வது? மக்கள் உண்மையைச் சந்திக்கும் மனவலிமையை பெறுவதற்கு அத்தனை வருடங்கள் ஆகின்றன.
1945-இல் உலகப்போர் முடியும் தருவாயிலிருந்து ஆரம்பிக்கின்றன இக்குறிப்புகள். “பெர்லின் மக்கள் நாஜி அரசாங்கத்தால் விநியோகிக்கப்பட்ட சகிக்கமுடியாத உணவுப்பொருட்களுக்காக தெருவில் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது ரஷ்யப்படைகள் அத்தெருக்களில் குண்டுகளை வீசின. வீசிய குண்டுகள் மூன்று பேரைக் கொன்றன. அங்கிருந்த பெண்கள், ரேஷன் கூப்பனில் படிந்திருந்த ரத்தக்கறைகளை மேலாடையில் துடைத்துவிட்டு உணவுப்பொருட்களுக்காக மீண்டும் வரிசையில் நின்று கொள்ளும் அளவுக்கு போருக்குப் பழகிப் போயிருந்தார்கள். உணவுப்பொருட்களின் தட்டுப்பாடும் அத்தனை அதிகமாக இருந்தது. இந்த மார்க்கெட் தெருக்களில்தான் உலகப்போரின் கடைசி இரண்டு வாரங்களில் இரண்டு மில்லியன் குண்டுகளை ரஷ்யப்படைகள் வீசின என்பதும் குறிப்பிடத்தக்கது” – இவ்வாறு ஒருவித சுய விருப்பு வெறுப்பில்லாமல் எழுதப்பட்டிருக்கும் இக்குறிப்புகள் உலகப்போரைக்குறித்த மிக முக்கியமான ஆவணங்களாகின்றன.
முட்டாள்தனமான ஒரு செயலாக, தோற்றபின் தப்பியோடிய ஜெர்மானிய ஆண்கள் ரஷ்யப்படைகள் முன்னேறி வரும் வழியில் கடல் போல சாராயங்களை விட்டுவிட்டுப் போனார்கள். ஒருவேளை நிறையக் குடித்து போதை ஏறினால் அவர்கள் போர் திறம் குறைந்து போகுமே என்ற நப்பாசையில்தான். ஆனால் நடந்ததோ தலைகீழ்! “ஆண்களால் மட்டுமே பிற ஆண்களைப் பற்றி இவ்வாறு தவறாக எடை போட முடியும். குடிவெறி காமவெறியைத் தூண்டக்கூடிய ஒன்று என்பது இப்படி செய்வதற்கு முன் இரண்டு நிமிடம் யோசித்திருந்தால் கூடப் புரிந்திருக்கும். ஒருவேளை நடந்த கற்பழிப்புகள் பாதியாகக் குறைந்திருக்கும்.” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கற்பழிப்புகளைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார் இக்குறிப்புகளை எழுதிய பெண்மணி.
கிழக்கு ப்ரஷ்யாவில் முதலில் நிகழ்ந்த கற்பழிப்புகள், ஸ்டாலின்க்ராட் முற்றுகையின்போது (Stalingrad March) ஜெர்மன் படைகளின் மேற்கு யூரோப்பிய அணிகள் நடத்திய கொடுமைகளுக்குப் பதிலாகப் பழிவாங்கும் வெறியில் ஆரம்பிக்கப்பட்டவை. ரஷ்ய வீரர்கள் வீடுகளை அழித்தார்கள். பெண்களைக் கற்பழித்தார்கள் – சிலர் 12 வயதே நிரம்பிய சிறுமிகள். பழிவாங்கும் உணர்ச்சி மட்டுமே ஜெர்மனியில் ரஷ்யப் படைகளால் எங்கும் தொடர்ந்த கற்பழிப்புகளுக்குக் காரணமாக இருந்திருக்க முடியாது. ஏனென்றால் ஜெர்மனியிடம் பிணைக்கைதிகளாக இருந்த சோவியத் பெண்கள் மற்றும் யூதப் பெண்கள் கூட அவர்களை விடுவித்த ரஷ்ய வீரர்களால் கற்பழிக்கப்பட்டார்கள். அதில் சில பெண்களுக்கு 16 வயதே ஆகியிருந்தது. எனவே வெறும் இன அல்லது நாட்டுப் பகை இங்கு முதல் காரணியாகச் செயல் பட்டதென்று சொல்லி விட முடியாது.
மிகச்சரியான எண்ணிக்கை தெரியாவிட்டாலும் தோராயமாக இருபது லட்சம் ஜெர்மானியப் பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. (பல பேர் ஒரு தடவைக்கு மேல்!) பெர்லினில் மட்டுமே 95,000 முதல் 1,30,000 வரை கற்பழிப்புகிரையானவர்கள் இருந்ததாக மருத்துவமனை புள்ளிவிவரங்கள் இருக்கின்றன. சில பெண்கள் கீழ்ப்படிவதை விட இறந்து போவதே மேல் என்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். சில ஆண்கள் கற்பழிப்பிலிருந்து தப்பி மானத்தைக் காத்துக்கொள்ள தங்கள் குடும்பப் பெண்களைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
நாட்குறிப்பை எழுதிய பெண்மணி உலகப்போருக்குமுன் பத்திரிக்கையாளராக வேலை பார்த்தவர்; ப்ரான்ஸின் புகழ் பெற்ற சார்போன் பல்கலையில் கல்வி கற்றவர்; பல நாடுகளுக்குச் சென்றவர். கொஞ்சம் ரஷ்ய மொழியும் தெரிந்திருந்ததால், ஜெர்மானிய மக்களுக்கும் ரஷ்ய வீரர்களுக்குமிடையே மொழி பெயர்ப்பவராக இருந்தார். ஜெர்மானிய ஆண்கள் தப்பியோடிய பின், இப்பெண்மணி, வேறு சில பெண்களுடன் ஒரு வீட்டின் கீழ்த்தளத்தில் பதுங்கியிருந்தார். வீட்டைச் சுற்றி ரஷ்ய வீரர்கள் நடமாடத் தொடங்கினர். கற்பழிக்கப்படவிருந்த சில பெண்களை தப்பிப் போக வைத்தபின் இப்பெண்மணி தானும் வெளியே செல்வதற்கு முயன்றபோது, வெளியே இருந்த ஜெர்மானியர்கள் தாம் தப்பித்துக்கொள்வதற்காக இப்பெண்ணை உள்ளே வைத்து கதவைப் பூட்டிவிட்டனர். அதன் பின்னர் அவர் ரஷ்யர்களால் அந்த அறையில் வைத்துக் கற்பழிக்கப்படுகிறார்.
“ஒரு ரஷ்ய வீரன் என்னுடையை மேலாடையை இரண்டாகக் கிழித்தான். மேலெழும்ப முயற்சி செய்தபோது இன்னொருவன் முழங்கால் மற்றும் முன்கையால் என்னைக் கீழே தள்ளினான். கதவைத் திறந்து இரண்டு, மூன்று ரஷ்யர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களனைவரும் என்னைப் பார்த்து கேலியாகச் சிரித்தனர்”.
அன்றிரவு அவர் மீண்டும் கற்பழிக்கப்பட்டார். அப்போதுதான் தெரியவந்தது – ஒரு முறை கற்பழிக்கப்பட்டால், அதுவே கடைசி முறையாக இருக்க எந்த உத்தரவாதமும் இல்லை என்பது. அடுத்த நாள் அவர் மீண்டும் “பிராந்தியும், குதிரை வாடையும் கலந்த ஒரு துர்நாற்றம் வீசும்” வயதான மனிதனால் மூன்றாவது முறையாகக் கற்பழிக்கப் படுகிறார்.
இவர் எழுதி வைத்திருக்கும் சில கற்பழிப்புகள் மிகவும் அதிர்ச்சியும், வெறுப்பும் அளிப்பதாய் இருக்கின்றன. நான்கு முறை கற்பழிக்கப்பட்ட பெண்; ரத்தம் சொட்ட சொட்ட இறந்து கொண்டிருக்கும் தன் கணவன் முன்னால் கற்பழிக்கப்பட்ட யூதப்பெண், இருபது பேரால் கற்பழிக்கப்பட்ட பெண் – எனப் படிக்கும்போதே மிகுந்த அச்சம் விளைவிக்கும் குறிப்புகள் இவரால் எழுதப்பட்டிருக்கின்றன.
இக்குறிப்புகளில், ஜெர்மானிய ஆண்களைப் பற்றி மிக மிகக் குறை¨வாகத்தான் சொல்லப்பட்டு இருக்கின்றன. சொல்லப் பட்டிருக்கும் கொஞ்ச ஆண்களும் நம் மதிப்பைப் பெறும் வகையில் எதுவும் செய்து விடவில்லை. சோவியத் படைகள் குண்டு போட்டு ஊரையே துளைத்துக்கொண்டிருக்கும் வேளையிலும், தங்கள் சாம்ராஜ்யம் மீண்டும் எழுந்து வரும் எனப் பெரும்பாலான ஆண்கள் கனவு கண்டு கொண்டிருந்தார்கள். அவ்வாறு நினைக்காத கொஞ்ச பேரும், படுகொலை செய்து கொண்டிருந்த ரஷ்யர்களுக்குப் பயந்து தங்கள் மனைவிகளை அவர்களிடம் ஒப்படைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு ஜெர்மானியன் கற்பழிக்கப்படவிருக்கும் தன் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் “நீ ஏன் அவர்களுடன் போய்த் தொலையக்கூடாது? உன்னால் நாங்கள் எல்லாரும் ஆபத்திலிருக்கிறோம்” என்று கோபமாகக் கத்துகிறான். தாங்கள் மிகப் பெருமையாகக் கொண்டாடிக்கொண்டிருந்த, உலகெங்கும் பீற்றிக்கொண்டிருந்த “ஜெர்மானிய ஆண்மை”யின் வீழ்ச்சிதான் உலகப்போரில் ஜெர்மனி சந்தித்த மிகப்பெரிய தோல்வி என்கிறார் நாட்குறிப்பை எழுதும் பெண்மணி.
ஆனால் மிகப் பரிதாபமான நிகழ்ச்சி நாட்குறிப்பை எழுதுபவருக்கு நேருகிறது. இப்பெண்ணுக்கு மிகப்பெரும் அவமானம் ரஷ்யர்கள் மூலம் அல்ல – திரும்பி வந்த இப்பெண்ணுடைய கணவன் மூலம் ஏற்படுகிறது. போர்முனையிலிருந்து திரும்பி வரும் அவன் இப்பெண் எழுதி வைத்திருக்கும் குறிப்புகளைப் படித்துவிட்டு, இப்பெண்ணை மற்றும் கற்பழிக்கப்பட்ட அத்தனை பெண்மணிகளையும் மோசமான வார்த்தைகளால் திட்டிவிட்டுத் திரும்பி வராமலே போய்விடுகிறான்.
இப்படியான தொடர் கற்பழிப்புகளின் மூலம் எக்கச்சக்க எண்ணிக்கையான பெண்கள் கர்ப்பமடையவே, போருக்குப்பின் தன்னுடைய “வலிமை மிகுந்த, உயர்ந்த” ஜெர்மானிய இனத்தைப் பெருக்குவதற்காகக் கருக்கலைப்பைத் தடை செய்திருந்த அரசாங்கம், அத்தடையை நீக்கிக் கொண்டது. மருத்துவமனைகளெல்லாம் கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களால் நிரம்பி வழிந்தது. இத்தனை துயரங்களை ரஷ்யர்கள் மூலம் ஜெர்மானியப் பெண்கள் அனுபவித்திருந்தாலும், அவற்றைப் பற்றி வெளிப்படையாக பேசுவதோ, பிற நாடுகளுக்குத் தெரிவிப்பதோ ஜெர்மானிய அரசாங்கத்திற்கு மானப் பிரச்சனையாக இருந்தது. தாங்கள் அனுபவித்த அத்தனை துன்பங்களையும், மெளனமாக முள்முடி போல் தாங்கிக் கொண்டார்கள் ஜெர்மானியப் பெண்கள்.
போர் முடிந்தபின் இக்குறிப்புகளைப் படித்த இப்பெண்ணின் கர்ட் மாரெக் (Kurt Marek) என்ற நண்பர் அவற்றை புத்தகமாக வெளியிட முயற்சி செய்தார். ஆனால் அவரால் அதை ஜெர்மனியில் செய்ய முடியவில்லை. ஜெர்மானிய மக்களும், அரசாங்கமும் இப்புத்தகத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கவே, பிற நாடுகளெங்கும் வெளியாகிப் பிரபலமாகிய இப்புத்தகம் எழுதப்பட்டு 60 வருடங்கள் கழித்து, இப்பெண்மணி இறந்து நான்கு வருடங்கள் கழித்து சென்ற வருடம்தான் (2005) ஜெர்மனியில் வெளியிடப்பட்டது. ஆனால் அதுவரை இப்புத்தகம் திரைமறைவில் சிறு பத்திரிக்கையாளர்களிடமும், பெண்கள் இயக்கங்களிடமும் வலம் வந்து கொண்டுதானிருந்தது.
இறுதியில், இப்புத்தகம் குறித்த எதிர்வினைகளும், மறுபார்வைகளும் ரஷ்ய ஆண்கள், ஜெர்மானிய ஆண்கள் இருவர் குறித்தும் மிகக் கசப்பான உணர்வையே ஏற்படுத்துகின்றன. இதில் ஜெர்மானியர்களைப் பற்றியாவது எக்கச்சக்கமான புத்தகங்களும், திரைப்படங்களும் யூதக்கொடுமைகளை முன்னிருத்தி ஒரு விமர்சனப் பார்வையைத் தோற்றுவித்திருக்கின்றன. ஆனால் ரஷ்யர்கள் கம்யூனிஸக் கொள்கைகளை முன்னிருத்தியதன் மூலமும், ஜெர்மானியர்கள் மீது மற்றவர்களுக்கிருந்த வெறுப்புணர்வின் மூலமும் மிக எளிதாகத் தப்பித்துவிட்டார்கள்.
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியர்கள் நடத்திய வெறியாட்டம் அளவுக்கு ரஷ்ய வீரர்கள் நடத்திய அட்டூழியங்கள் மீதோ, ஹிட்லர் அளவுக்கு ஸ்டாலினோ, யூதர் அடைக்கப்பட்ட சித்திரவதைக் கூடங்கள் அளவுக்கு ரஷ்ய குலாகுகளோ (gulag) – கடும் உழைப்புச் சிறைகளோ விமர்சிக்கப்படவில்லை. நாஜிகளுக்கு எதிராக உலகமே கூடி எதிர்ப்பு தெரிவித்த போது சோவியத் அரசும் அதன் கருத்துப் பிரச்சாரமும் உலக மக்களின் காவலராகத் தாம் இயங்கியதாகக் காட்டிக் கொண்டு உலக மக்களின் மதிப்பைப் பெற்றிருந்தன. பின்னாளில் சோவியத் அரசின் கொடிய முகம் உலகுக்குத் தெரிய வந்து அந்த அரசியல் இன்று உலகில் பெரும்பகுதியில் மதிப்பிழந்து போயிருக்கிறது.1
மற்றொரு புத்தகமும் ரஷ்ய வீரர்களின் வெறியாட்டத்தைப் பற்றி எடுத்துரைக்கிறது. ஆந்தனி பீவொரின் ‘பெர்லின்: 1945இல் வீழ்ச்சி’ [ Antony Beevor- Berlin: the Downfall- 1945] என்ற ஒரு வரலாற்று நூல் சமீபத்தில் வெளியானது- இது எப்படி 1945 இலிருந்து 1948வரையான கால கட்டத்தில் கிட்டத்தட்ட 100,000 ஜெர்மன் பெண்கள் போரில் முன்னேறிய ரஷ்யத் துருப்புகளால் தொடர்ந்து கற்பழிக்கப் பட்டார்கள் என்ற கரும் வரலாற்றைப் பதிவு செய்கிறது. இந்த நூல் எதிர்பார்க்கப் பட்டபடி ரஷ்யாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஜெர்மனியில் கூட இந்தத் தகவல்கள் இந்நாள் வரை வெளிப்படுத்தப் படாததற்குக் காரணங்கள் நம் அனைவருக்கும் எளிதாகவே புரியும்.2 இந்தப் புத்தகத்தைப் பற்றி பிரிட்டனின் இடதுசாரிக் கோட்டை என்று கருதப்படும் ‘கார்டியன்’ பத்திரிகையே ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது.
(பார்க்க: http://observer.guardian.co.uk/international/story/0,6903,1056125,00.html)
ஒரு இறுதிக் குறிப்பு:
அந்த ஜெர்மன் பெண் நிருபரின் பெயர் இன்று நன்கு தெரிய வந்ததால் அவர் பெயரை இங்கு பதிவு செய்கிறேன். மார்தா ஹில்லர்ஸ் என்ற அப்பெண்மணி அவர் காலத்தில் பொது வாழ்வில் இருந்து ஒதுங்கி சாதாரணப் பெண்ணாகவே வாழ விரும்பினார். அவருடைய மனவலிமையையும் வரலாற்றுப் பார்வையின் அவசியத்தையும் பாராட்டும் நோக்கத்துடனேயே இங்கு அவர் பெயரைப் தந்திருக்கிறேன். இவர் தன் 90 ஆவது வயதில், ஜுன், 2001 இல் இறந்து போனார்.
முன்னரே குறிப்பிடப்பட்டதுபோல் அவருடைய நூல் சமகாலத்தில் பெருவாரி ஜெர்மானியரால் விரும்பப்படவில்லை. ஐரோப்பிய இடது சாரிகள் அந்த நூல் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் செய்கிறது என்று ஒரு பொத்தல் காரணத்தைச் சொல்லி அதைக் காணவும் மறுத்தனர். ஆனால் இன்று உலக இடது சாரிப் பத்திரிகைகள் தம் கரி பூசிய முகத்தோடு இந்த நூலின் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர் என்பது கார்டியன் பத்திரிகையின் கட்டுரையில் இருந்தே தெரியும். சோவியத் ரஷ்ய அரசாங்கத்தின் பாதுகையைத் தூக்கி நின்றால்தான் உண்மையான இடது சாரி என்ற அவல நம்பிக்கையைக் கை விடுவதுதான் நேர்மை என்பது பிரிட்டிஷ் இடதுசாரிகளுக்குப் புரிந்து இருபது ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் ரஷ்ய மற்றும் சீனக் கம்யூனிஸ்டுகளின் பாதுகையைத் தாங்குவதுதான் தம் வாழ்க்கைப் பயனே என்றுதானே நம்மூரில் கட்சிகளும், ஏன் கற்றறிந்த மேதைகளான பத்திரிகை ஆசிரிய/ அதிபர்களுமே உலவுகிறார்கள், அந்த அவலம் என்று ஒழியும் என்றுதான் கேட்க வேண்டி இருக்கிறது.
மார்தா ஹில்லர்ஸ் பற்றிய மேல் விவரங்களுக்கு பார்க்க:
http://www.answers.com/topic/marta-hillers
விவரங்கள் வேண்டுவோர் ஆன்னி ஆப்பிள்பாம் எழுதிய ‘குலாக்’ (Anne Applebaum- ‘Gulag’) என்ற சமீபத்து வெளியீடான ஒரு புத்தகத்தைப் பார்க்கலாம்.
2 ‘அக்கினிப் பிரவேசம்’ போன்ற சிறுகதைகள் எழுதப்பட்டது நம் பண்பாட்டில்தானே? ஒரு பெண் க்ஷண நேரத் தூண்டுதலில் தன்னை விட்டுக் கொடுத்ததற்கு அவள் தன் வாழ்நாள் பூராவும் அவமானப் பட நேரிடும் என்ற விதமான கடுமைப் பார்வை கொண்ட ஒரு சமுதாயத்தை விமர்சித்த ஒரு கதை இன்றும் வெறுப்பை விமர்சனமாகப் பெறுவது எதனால்? அதே விதமான கண்டனமும் ஒதுக்கலும் சம்பந்தப்பட்ட ஆணுக்குச் சிறிதும் நேராததும் எதனால்? பெண்களின் உடலில் ஒரு மொத்த சமுதாயத்தின் மானமே உறைந்திருப்பதாகக் கருதும் ஒரு மூடத்தனத்தால்தானே. நாட்டுப் பிரிவினையின் காலத்தில் பெரும் வன்முறையைச் சந்தித்துச் சீரழிக்கப்பட்டுக் குலைந்து போன பல்லாயிரம் இந்தியப் பெண்களைப் பற்றிப் பெரும் மௌனம் இது நாள் வரை சாதித்து வருவது இந்தியாவும் பாகிஸ்தானும்தானே? (பாகிஸ்தானியப் பெண்களும் சீரழிக்கப் பட்டார்கள், உண்மை, ஆனால் அவர்கள் சீரழிக்கப்பட்ட போது இன்னமும் இந்தியப் பெண்களாகத்தான் இருந்தார்கள் என்பதை நினைவு படுத்துகிறேன்.) இந்தியர்களே இந்தியர்களைக் கொலை வெறி கொண்டு அழித்தது காலனியத்தின் பெரும் சதி வேலையாலும், அவர்களை இறுதி வரை நம்பிய இந்தியர்களின் அடிமை புத்தியாலும்தான். இவை போன்ற பெரும் வன்முறைச் சம்பவங்களைப் பற்றி கடந்த பத்தாண்டுகளில்தானே இந்தியாவில் நாம் வெளிப்படையாகப் பேசவாவது ஆரம்பித்திருக்கிறோம். இந்த மௌனம் குலைந்ததற்கு ஒரு காரணம் இன்று வலுவான நிலையில் கல்வி பெற்ற பெண்கள் தம் நலன் காக்கும் முயற்சியில் பலவிதமான போராட்டங்களில் தொடர்ந்து இறங்கி இருப்பது ஒரு அடிப்படைக் காரணம் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
——
sethupathi.arunachalam@gmail.com
- புரட்சி செய்த சில பதிவுகள்
- மகாத்மா காந்தி செய்யாதது !
- மனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றிப் பாரிஸ் கருத்தரங்கு-1 (IPCC)
- தீபச்சுடரும், நெருப்பும்; விரோதியும், நண்பனும்
- ரியாத் வாழ் தமிழர் விழா
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 7
- பெருஞ்சுவருக்குப் பின்னே (சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும்) – முன்னுரை
- சிலம்பில் உரைநடை
- 30.12.2006 ல் சிங்கப்பூரகத்தில் நடைபெற்ற திரவியதேசம் புத்தக வெளியீடு ஓர் அலசல்
- உரையாடும் சித்திரங்கள் – பெருமாள் முருகனின் “நீர் மிதக்கும் கண்கள்” -(கவிதைத்தொகுப்பு அறிமுகம்)
- கவிமாலையின் 80வது (மாதாந்திர) நிகழ்வு
- புனைவின் கோடுகள் – ராணி திலக்கின் “காகத்தின் சொற்கள்” – ( கவிதைத்தொகுப்பு அறிமுகம் )
- கடித இலக்கியம் – 44
- சிங்கப்பூரகத்தில் நடைபெற்ற தைப்பூசத்திருவிழா
- 1000மாவது கவிதை. வைரமுத்து வாழ்த்து !
- சாகித்திய அகாதமி – எம் கவிதைகள்-கதைகள்-கருத்துக்கள்
- எனது முதல் ‘ஈபுக்’ – சிறுகதைத் தொகுதி
- நித்தம் நடையும் நடைப்பழக்கம்
- “சுப்ரபாரதிமணியன் : படைப்பும், பகிர்வும்” – தொகுப்பு கே பி கே செல்வராஜ்
- அலாஸ்கா கடற் பயணம் – இரண்டாம் பாகம்
- நீர்வலை (10)
- காலனியத்தின் குழந்தை மானிடவியல்: பக்தவத்சல பாரதியின் ‘மானிடவியல் கோட்பாடுகள்’ அறிமுகப்படுத்தும் கோட்பாடுகள்
- இலை போட்டாச்சு! – 14. கறி வகைகள்
- கைத் தொலைபேசி
- புலம் பெயர்ந்த தமிழன் தாலாட்டு
- காதல் நாற்பது (8) உன் காதலில் சிக்கினேன் !
- அமானுஷ்ய புத்ரனின் கவிதைகள்
- ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள்
- கள்ளுக்கொட்டில்
- பெரியபுராணம் -122 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
- புஷ்யமித்திரரும் பிரச்சார படுகொலைகளும்
- காவிரி தீர்ப்பில் கர்நாடகத்தின் நிலைப்பாடுகள்
- அம்பேத்கரின் கண்டனம் சமயத்திற்கா, சமூகத்திற்கா?
- பேராசிரியர் சுபவீயின் நேர்க்காணலை முன்வைத்து சில நேரங்களில் சில மனிதர்கள்……
- சிறப்பு பொருளாதார மண்டலங்கள்- காலனியாதிக்கமா, தொழில் மறுமலர்ச்சியா?
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:4)
- மடியில் நெருப்பு – 24