புரட்சித்தலைவரும் சூப்பர் ஸ்டாரும் கோவை சரளாவும் ( ஒப்பிட்டுப்பார்க்கும் ஒரு புதுமைத் தொடர் )

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue

சொதப்பப்பா


எம்ஜியார் – அவரது ரசிகர்கள் மனதில் என்றென்றும் வாழும் ஒரு மாமனிதர்

ரஜினி – இந்த மந்திரச் சொல்லுக்கு வசப்படாத இளைஞர்களே கிடையாது

கோவை சரளா- இந்த பெயர் சொன்னாலே புன்னகை தவழாத தமிழர்களே கிடையாது.

இந்த மூவரும் தமிழர்கள் வாழ்வில் உன்னத இடத்தை அடைந்தவர்கள். இவர்களது குணங்களையும் வரலாற்றையும் உண்மையென்னும் சிரட்டையால் உரசிப்பார்க்கும் உன்னத தொடர் இது.

புரட்சித்தலைவர் சரி, சூப்பர் ஸ்டார் சரி, ஏன் கோவை சரளாவை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு இருப்பது தெரியும். அதற்குப் பதில், ஏன் ஒப்பிடக்கூடாது என்பதுதான். எம்ஜியாரோ ரசிகர்கள் மனத்தில் மட்டுமே குடிவாழும் மனிதர். ரஜினி இளைஞர்கள் மத்தியில் மட்டுமே மந்திரம் போல ஆனவர். ஆனால் கோவை சரளா குஞ்சு குளுவான்களிலிருந்து, குடுகுடு கிழம் வரை, பட்டிக்காட்டு பஞ்சுவிலிருந்து பட்டணத்து படாடோபம் வரை எல்லார் முகத்திலும் புன்னகையாகவும், வாய்கொள்ளா சந்தோஷமாகவும் ஆகியிருப்பவர்.

இனி ஒப்பிடும் தொடர்.

புரட்சித்தலைவர் எம்ஜியார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கோவை சரளா ஆகிய மூவருக்குமே இரண்டு கண்களுக்கு நடுவேதான் மூக்கு இருக்கிறது என்பது ஆச்சரியமான ஒற்றுமை. அதிலும் வலது கண்ணுக்கும் இடது கண்ணுக்கும் நடுவேதான் அவர்களது மூக்கு இருக்கிறது என்பது இன்னும் ஆச்சரியமான ஒற்றுமை.

ஒருமுறை நான் கோவை சரளாவை சந்தித்தபோது அவர் இளநீர் குடித்துக்கொண்டிருந்தார். அதுவும் வாயால். நீங்கள் எம்ஜியார் இளநீர் குடிக்கும் காட்சியையும், ரஜினி இளநீர் குடிக்கும் காட்சியையும் புகைப்படத்தில் பார்த்திருப்பீர்கள். என்ன ஒரு ஒற்றுமை!

கோவை சரளா மிகுந்த கடவுள் பக்தி உள்ளவர். அதுவும் மூகாம்பிகை கோவிலுக்கு அடிக்கடிச் செல்பவர். எம்ஜியார் மூகாம்பிகை பக்தர் என்பது உலகமே அறிந்த செய்தி. ரஜினி மிகுந்த கடவுள் நம்பிக்கை உள்ளவரென்றாலும், அவர் மூகாம்பிகை பக்தர் என உலகம் அறியாது. இந்த விஷயத்தில் கோவை சரளாவே எம்ஜியாருடன் மிகுந்த ஒற்றுமை உள்ளவர். கோவை சரளாவுக்கு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச் செல்ல மிகுந்த ஆசை அவரது அடிமனத்தில் இருப்பதை நான் ஒருமுறை அவரை எக்ஸ்ரே எடுக்கும்போது கவனித்தேன். யாரேனும் சமயபுரம் மாரியம்மன் கோவில்லுக்குச் சென்றுவிட்டு அவரிடம் வந்தால், அவரது மொட்டைமண்டையில் சொடேர் என்று அடித்து வேப்பிலையைக் கையில் எடுத்துக்கொண்டு ‘டேய்… ‘ என்று ஆடுவதைக் கண்டு புல்லரித்திருக்கிறேன்.

ஒரு முறை கோவை சரளாவுக்கும் சக நடிகர்களுக்கும் இடையே சண்டை வந்தது. அவருடன் நடித்த நடிகர்கள் அவரது நகைச்சுவை திறமையைக் கண்டு பொறாமைப்பட்டார்கள். தங்களது திரைப்பட தயாரிப்பாளர்களிடம் சென்று, கோவை சரளாவுக்கு வேலை கொடுக்க வேண்டாம் என்று பேசி அவரை வீட்டில் உட்காரவைத்தார்கள். கோவை சரளா துவண்டு விடவில்லை. தெலுங்கு திரைப்பட உலகத்துக்குப் பயணமானார். அங்கு கொடிகட்டிப்பறந்தார் கோவை சரளா. தெலுங்கு திரைப்பட உலகத்தில் நகைச்சுவை என்றாலே கோவை சரளாதான் என்னும் அளவுக்கு உயரத்துக்குச் சென்றார்.

இதே போலத்தான் எம்ஜியாரும் ரஜினிகாந்தும். அவர்கள் இருவருமே தங்கள் சொந்த ஊரில் மதிப்பின்றி வேறொரு மாநிலத்துக்குச் சென்று கொடிக்கட்டிப் பறந்தவர்கள். ஆனால் கோவை சரளா தன் சொந்த மாநிலத்திலும் கொடிகட்டிப்பறந்தவர், பறந்து கொண்டிருப்பவர், பறந்து பறந்து வடிவேலை தாக்குபவர் என்பதை யோசிக்கும்போது எழுதும்போதே எனக்கு புல்லரிக்கிறது.

மூவருமே சண்டையில் வல்லவர்கள். ஒரு திரைப்படத்தில் பாய்ந்து பாய்ந்து வடிவேலுவை கோவை சரளா அடிக்கும் காட்சியில் பார்வையாளர்கள் அனைவருமே கரகோஷம் எழுப்புவதில் திரைஅரங்கமே விழுந்துவிடும் போல அந்த அளவுக்கு மக்களிடமிருந்து கரவொலி எழும்பும், அது போன்றதொரு கரவொலியை எம்ஜியாரோ அல்லது ரஜினிகாந்தோ கூட பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணாதிக்கம் நிறைந்த திரைப்பட உலகில் தொடர்ந்து பல சாதனைகளை செய்து வருகிறார் கோவை சரளா. அவரை இழிவு படுத்துவது போன்று அவருக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரங்களைக் கூட தலைகீழாக்கி, அதில் தன்னுடைய சிறப்பான நகைச்சுவையால் முன்னேற்றமான கதாபாத்திரமாக ஆக்கி, அதில் தொடர்ந்து புரட்சி செய்துவருகிறார்.

பத்திரிக்கை நிருபர்களிடம் நன்றாக மரியாதையுடன் பழகுபவர் கோவை சரளா. அது போன்ற ஒரு குணம் ரஜினிகாந்திடமும் கிடையாது, எம்கியாரிடமும் கிடையாது என்பது உலகமறிந்த விஷயம். ஆனால், பத்திரிக்கையாளர்கள் மரியாதை தருவது அவர்களை மதிக்காத ரஜினிகாந்துக்கும் எம்ஜியாருக்கும் தானே தவிர, கோவை சரளாவுக்கு இல்லை என்பதும் சொல்லித்தெரியவேண்டியதில்லை. எம்ஜியார் பத்திரிக்கையாளர்களை கை நீட்டி அடித்திருக்கிறார். ரஜினிகாந்த் தன்னுடைய திருமணத்துக்கு வரும் பத்திரிக்கையாளர்களை ‘ஐவில் சூட் யூ ‘ என்று மிரட்டியிருக்கிறார். ஒரு பத்திரிக்கையாளரை அடித்திருக்கிறார். ( ஆதாரம் ஆனந்தவிகடன்). அடிக்கிற கைதான் அணைக்கும் என்று பாடுவது பத்திரிக்கையாளர்களே. கோவை சரளா பத்திரிக்கையாளர்களை அடிக்கவில்லை என்பது அவருக்கு ஒரு குறைதான். இந்த தொடரை படித்துவிட்டாவது குறைந்தது இந்த தொடரை எழுதிய பத்திரிக்கையாளரையாவது, செருப்பால் விளாரி, தன்னையும் எம்ஜியார், ரஜினிகாந்த் போல உயர்த்திக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது சரி செய்துவிடக்கூடிய குறையே தவிர நிரந்தர குறை இல்லை என்பது ஒரு ஆறுதல் தரும் விஷயம்.

ஒரு அறிவுஜீவித் தோரணைக்காகவும் கொடுக்கிற காசுக்காகவும் சிலர் எம்ஜியாரையும் ரஜினியையும் ஒப்பிட்டுக்கொண்டிருக்கிறார்களே தவிர, எம்ஜியாரையும் ரஜினியையும், மாபெரும் மனிதரான கோவை சரளாவையும் ஒப்பிடமுடியாது. எம்ஜியாரும் ரஜினியும் தொடமுடியாத உயரத்தில் இருப்பவர் கோவை சரளா.

கிழவிகளை கட்டிப்பிடித்து போஸ் கொடுத்து போஸ்டர் ஒட்டி ஓட்டு வாங்கியவரல்ல கோவை சரளா. பத்திரிக்கைக்காரர்களையும் கை நீட்டி அடிக்காதவர். சிகரெட் குடிப்பதை ஸ்டைல் என்று குழந்தைகள் நம்பும்படி நடிக்காதவர். எல்லோருக்கும் முன்னால் ஐந்து மணிநேரம் உண்ணாவிரதம் இருக்காதவர். சினிமாவில் மக்களை சிரிக்கவைப்பதற்காக மட்டுமே நடிப்பவர். வாழ்க்கையில் நடிக்காதவர். காலையில் பெரியாருக்கு மாலை போட்டுவிட்டு, மாலையில் மூகாம்பிகை கோவிலுக்குப் போகாதவர். ஐந்து ரூபாய் ஒருவனுக்கு பணம் கொடுத்துவிட்டு, ஐந்நூறு ரூபாய் விளம்பரம் தேடாதவர். நிஜவாழ்க்கையிலும் நான் குடிப்பதில்லை என்று ஊர் முழுக்க தம்பட்டம் அடிக்காதவர். தோட்டத்துக்கு அழைத்துவந்து ஆள் வைத்து அடிக்காதவர். வாழ்க்கை என்பது தற்காலிகம் என்று உணராமல், மன்னாதிமன்னன் என்று ஆட்டம் போடாதவர். தன்னை எதிர்த்து எழுதினான் என்பதற்காக ஜெயிலில் போடாதவர். அடியாட்களையும், சாராய ரவுடிகளையும், பம்ப்ளிமாஸ் எக்ஸ்ட்ராக்களையும் அரசியலுக்குக் கொண்டு வராதவர். மக்கள் பிரதிநிதித்துவம் என்பதை கேவலப்படுத்தும் வகையில் ஒரு தகுதியும் இல்லாத குப்பை கூளங்களை எம் எல் ஏ / எம் பி ஆக்கி ரசிக்காதவர். தன்னுடைய சினேகிதி திவாலான காரணத்திற்காக, எம் எல் சி ஆக முடியவில்லை என்பதால், சட்ட மேலைவையைக் குப்பைக் கூடையில் வீசாதவர். 4000 வருடம் உயிர் வாழ்ந்தவர் என்று ஓர் ஆளைப்பற்றி சினிமா எடுக்காதவர். கனவுக் காட்சிகளில் ஜிகினா ஆண்களுடன் பாட்டுப் பாடி மக்களை முட்டாளடிக்காதவர். மழைக் கோட்டு கொடுத்தேன் குடம் கொடுத்தேன் என்று வேஷம் போடாதவர். ஆளுக்கொரு கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்காதவர். இதுவரையில் நான் தான் அடுத்த முதல்வர் என்று போஸ்டர் ஒட்டாத ஒரு பெருமையே சரளாவிற்குப் போதும். சொல்லிக் கொண்டே போகலாம் கோவை சரளாவின் பெருமையை.

***

பின் குறிப்புகள்

1. இன்னும் மின்னாது. இத்தோடு காலி. இது போன்ற குப்பைகளை நீங்கள் படிக்க நிறைய செலவு செய்து பதிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள்.

2. இது எழுத கோவை சரளா காசு கொடுக்கவில்லை. எம்ஜியாரின் விசிலடிச்சான் குஞ்சுகளும், ரஜினி ரசிகர்களும் கோவித்துக்கொண்டால் கவலை இல்லை. கோவை சரளாவோ, கோவை சரளாவின் ரசிகர்களோ மனம் வருந்தினால், மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.

Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா