(புதிய) விதியை ஏற்பதா ? (2) கிறிக்கற்

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

அருண்


ஒருவரை தவறிழைக்கப்பண்ணும் முயற்சிதான் கிறிக்கற் விளையாட்டின் தாற்பரியம். துடுப்பெடுத்தாடும்போது இப்படி பத்துப் பேர்களை தவறு செய்யப்பண்ணிவிட்டால் அந்த அணியின் ஆட்டத்தை முடித்துவிடலாம். இந்தப்போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 11 விளையாட்டுவீரர்கள் பங்குகற்றினாலும் 12-ம் விளையாட்டுவீரர் என்பவர் காலகாலமாக இருந்து வருகின்றார். எனினும் அவருக்கு தனிச்சிறப்பு ஏதுமில்லை. இந்த பன்னிரண்டாம் வீரருக்கு முக்கியத்துவம் கொடுக்க ICC முனைந்ததால் வந்ததே சுப்பர் சப் விதி!

இந்தப் புதிய விதியால் இப் 12-ம் வீரர் முழு வீரருக்கான தகுதியுடையவராகிறார். இருந்தும் இவர் இன்னொரு வீரருக்காக பிரதியீட்டு விளையாட்டுவீரராக இருக்கமுடியுமேயல்லாமல் அணியை 12 பேர் கொண்டதாக ஆக்கமுடியாது. அதாவது அணியில் எப்போதுமே 11 வீரர்களே அங்கம் வகிப்பார்கள். இவர் எந்தநேரத்திலும் அணித்தலைவரால் இன்னொருவருக்காக பிரதியீடாக அறிவிக்கப்படலாம் என்பதேயல்லாமல் இவரைக் கட்டாயம் விளையாட அனுமதிக்க வேண்டும் என்ற நியதியொன்றுமில்லை. அணிக்கு இவரின்தேவை இல்லாமல்போகவும்கூடும். இவரே சுப்பர் சப்.

இந்த சுப்பர் சப் இரண்டு அணிகளிலும் இடம்பெறுவர் என்பதுடன் இவர்கள் யார் என்பதை இரண்டு அணிகளும் தாம் நாணயச் சுழற்சி செய்யமுதலே அறிவித்து விடவேண்டுமென்பது நிபந்தனை. ஒரு பந்து வீச்சாளருக்கு பிரதியீடாக ஆகும்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட 10ஓவர்களில் பாவிக்காதிருக்கும் மீதி ஓவர்களை மாத்திரமே சுப்பர் சப்பினால் பாவிக்கமுடியும். ஒரு துடுப்பாட்டக்காரருக்காகவும் சுப்பர் சப் பிரதியீடாகமுடியும். அவ்வீரர் துடுப்பெடுத்தாடாத பட்சத்தில் சுப்பர் சப்பால் துடுப்பெடுத்தாடமுடியும். துடுப்பாட்டக் களத்தில் அவுட் ஆகாது விளையாடிக்கொண்டு இருப்பவருக்காகக்கூட சுப்பர் சப் பிரதியீடாகமுடியும். அத்தருணத்தில் பிரதியீட்டுக்குள்ளாகும் துடுப்பாட்டக்காரர் ஆட்டம் இழக்கவில்லையென கூறிக்கொள்ளப்பட்டாலும் அவ்வணி ஒரு விக்கற்ரை இழக்கும் நிலையினதாகவே கருதப்படும். அதாவது அத்தருணத்தில் பிரதியீடாகும் சுப்பர் சப் அடுத்த துடுப்பாட்டக்கராராகவே கருதப்படுவார். இதனால் எப்போதும் 11 துடுப்பாட்டக்காரர்களே அணிகளில் பங்குபற்றுவதென்பது பேணிக்கொள்ளப்படுகின்றது.

இந்த சுப்பர் சப் அங்கீகாரத்தால் சில அனுகூலங்கள் இருக்கின்றன. ஒரு அணி ஒரு மேலதிக பந்து வீச்சாளரை அல்லது ஒரு மேலதிக துடுப்பாட்டக்காரரை அணியில் இணைத்துக்கொள்ள முடியும். தம் விளையாட்டுவீரர் எவராவது அன்றைய விளையாட்டில் சோபிக்காதபோது சுப்பர் சப்பினால் அதனை ஈடுகட்டமுடியுமென அணித்தலைவர் கருதும் பட்சத்தில் அவருக்காக சுப்பர் சப்பை பிரதியீடு செய்ய முடியும். ஒரு அணி தமதுபலம் தளர்ந்துசெல்லும் தருணத்தில் சுப்பர் சப் ஐ அழைப்பதன் மூலம் பலத்தை வீரியப்படுத்திக் கொள்ளலாம். இச்சந்தர்ப்பங்களில் சுப்பர் சப் தனித்த கவனத்தை பெறுகின்றார். அவருக்கு பரிசுபெறுக்கூடிய வாய்ப்பும் ஏற்படலாம்.

இதேபோல சுப்பர் சப் சில பிரதிகூலங்களையம் கொண்டிருக்கிறது. நாணயச்சுழற்சியின் முன்பே பெயர் அறிவிக்கப்பட வேண்டியிருப்பதால் சுப்பர் சப்பாக பந்து வீச்சாளரை இணைப்பதா அல்லது துடுப்பாட்டக்காரரை இணைப்பதா என்ற

குழப்பம் இருக்கும். சுப்பர் சப் அழைக்கப்பட்டபின் பிரதியீட்டுக்குள்ளாகும் வீரர் மீண்டும் விளையாட்டில் இணைந்து கொள்ள முடியாதுபோகிறது. சுப்பர் சப்-ஐ அழைப்பதா விடுவதா அல்லது எப்போது அழைப்பது என்பதை விளையாட்டின் போக்கே தீர்மனிக்கிறது.

இந்த சுப்பர் சப் விதிமுறை இதுவரைநடந்த சில போட்டிகளின் முடிவையே மாற்றியமைத்திருக்கிறது. இதுவரை மூன்று போட்டிகளில் மூன்று சுப்பர் சப் விளையாட்டாளர்கள் போட்டி நாயகர் விருதினைப் பெற்றிருக்கிறார்கள். இதில் ஒருவர் இலங்கை இடஞ்சுழி சுழல் பந்து(டநப ளிைெ)வீச்சாளரான மலிங்க பண்டாரா. மற்ரிருவர் நியூஜிலாந்து வீரர்களான

ஜீதன் பட்டேல், ே~ன் (டா)பான்ட் ஆகியோர். இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில் இம்மூவரும் பந்துவீச்சாளர்கள். அதேபோல நியூஜிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரரான நேதன் அஸ்ரில் இலங்கையுடனான போட்டியில் (துடுப்பாட்ட)சுப்பர் சப்பாக நுழைந்து நியூஜிலாந்து அணி வெற்றியீட்டும் வகையில் ஆட்டம் இழக்காமல் 90 ஓட்டங்கள்

எடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய மாற்றங்களைக் கண்கூடாகக் கண்டபின்பும் “சுப்பர் சப்”ஐ ஏற்பதில் பலரும் எதிர்ப்புக்குரல் எழுப்புவது எதற்காக ? இதற்கு எல்லோரும் கூறிக் கொள்வது, வழமையாகவே நாணயச்சுழற்சி போட்டியின் வெற்றி தேல்வியை தீர்மானிப்பதில் ஒருவகையில் காரணமாக இருக்கின்றபோது சுப்பர் சப் தெரிவும் நாணயம் சுண்டுவதில் வெற்றிபெறும் அணிக்கே சாதகமாக அமைய அவ்வணிக்கு இரட்டிப்பு பலனை கொடுத்துவிடும் என்பதையே! விளையாட்டில் தளர்வை சந்திக்கும் அணி உத்வேகம் பெறும்வகையில் சுப்பர் சப் தெரிவை வாய்ப்பாக்கிக் கொள்வதால் போட்டி சூடானதாய் இருக்கும் என்ற நோக்கில் ICC சுப்பர் சப் விளையாட்டுவிதியை அறிமுகப்படுத்தியது. ஆனால் அது வெற்றிவாய்ப்பை பெற்றிருக்கும் அணிக்கே சாதகமாக அமையுமென்றால் ICCஇன் நோக்கம் பிறழ்ந்து போகுமன்றோ ?

உண்மையில் ICC எதிர்பார்த்தது ஏதோ, ஆனால் நடந்ததோ வேறேதோ என்றுதான் சொல்லவேண்டும். சகல அணியும் நல்ல சகலதுறை ஆட்டக்காரர் ஒருவரையே சுப்பர் சப் வீரராகத் தெரிவுசெய்யுமென்றே ICC எதிர்பார்த்தது. ஆனால் இதுவரை ஒவ்வொரணியும் பந்துவீச்சாளரையோ அல்லது துடுப்பாளரையோதான் சுப்பர் சப் ஆக அறிவித்தது.

இது எவரது தவறு ? சுப்பர் சப் நாணயச் சுழற்சியின் முன்பே அறிவிக்கப்படவேண்டும் என்ற நியதி இருப்பது முன்பே தெரிந்ததொன்று. நாணயச்சுழற்சியில் வெற்றிபெறுவது எவர் கையிலும் இல்லை என்பதும் தெரிந்தவொன்று. இப்படி இருக்கின்றபட்சத்தில் அதிர்ஸ்டத்தை நம்பி தம் சுப்பர் சப் வீரரை அறிப்பது ICC யின் தவறா ? ஒவ்வொரு அணியும் சுப்பர் சப் வீரராக சகல திறமுள்ள ஆட்டக்காரரை தெரிவுசெய்திருக்கவேண்டும். அதையவர்கள் செய்யாது சுப்பர் சப் விதி தவறான அனுகுமுறைக்கு இட்டுச்செல்கின்றது எனக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

12 வீரர்களை தெரிவு செய்யவேண்டுமென புதியவிதி சொல்கிறதேயல்லாமல் 12 பேர்களையும் விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டுமென்று சொல்லவில்லை. தேவையானபோது பயன்படுத்தலாம் என்பதே சரியான விளக்கம். ஆனால் அனுமதிக்கப்படுகையில் அதன் பூரண சலுகையையும் பாவித்துவிடவேண்டுமென்று ஒரு அணியும், பாவிக்கமுடியாது போய்விட்டதேயென்று எதிரணியும் எண்ணத் தலைப்படுவதால்தான் இது அவரவர்க்கு பிழையாகத் தெரிகிறது. இவர்கள் ஒரு பல்துறை ஆட்டக்காரரை சுப்பர் சப் எனத் தெரிவுசெய்தாலென்ன ?

பல்துறை ஆட்டக்கார்கள் குறைவாக உள்ளனர் என்பது அணித்தலைவர்கள் பலரினதும் வாதம். பல்துறை வீரர் இருந்தால் அவரை ஏன் சுப்பர் சப் வீரராக வைத்திருந்து வீணடிக்கவேண்டும் நேரடியாகவே அவரை 11 பேருக்குள் சேர்த்துவிடலாமே! தர்க்கத்திற்கு இது சரியாகத் தெரியினும் உண்மை அதுவல்ல. பொதுவாகவே சகலதுறை ஆட்ட வீரர்கள் எனச் சொல்லப்படுவோர் சகலதுறையிலும் மிகச்சிறந்தவர்களாக இருப்பது மிக அரிது. அப்படியிருந்தால் அவர் கட்டாயம் 11 பேருக்குள் தெரிவாகியேயிருப்பார். ஆனால் சுப்பர் சப் வீரரோ சகல துறையிலும் ஓரளவு திறமை கொண்டவராய் இருந்தாலே போதும். இந்தப்பரீட்சாத்த 10மாதங்களில் 9மாதங்கள் கடந்துவிட்டநிலையில் இப்போதுள்ள கிறிக்கற் அணிகள் எதுவும் சுப்பர் சப் தெரிவுக்கென பிரத்தியேகமாக புதிய விளையாட்டுவீரர் எவரையுமே தெரிவு செய்திருக்கவில்லை. தாம் தெரிவுசெய்துவைத்திருக்கும் குழுவுக்குள் ஒருவரை சுப்பர் சப் எனத் தெரிவுசெய்வதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். இதுவே இவர்கள் விட்ட தவறு! இவர்கள் சுப்பர் சப் என பிரத்தியேகமாக ஒரு கிறிக்கற்வீரரை புதிதாய் தெரிவுசெய்திருக்க வேண்டும். அப்படிச்செய்திருந்தால் சுப்பர் சப் பயனுள்ளதாயிருந்திருக்கும்.

இந்த விதிகளை எதிர்க்கும் அணித்தலைவர்கள் பலரும் கூறும் குற்றச்சாட்டு நாணயச் சுழற்சியின் முன் சுப்பர் சப் அறிவிக்கப்படவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் மீதானதே. சுப்பர் சப் இருக்கக்கூடாது என்பதை எதிர்ப்பதைவிட இதையே இவர்கள் எதிர்க்கிறார்கள். இந்த எதிர்ப்பை செயல்முறையில்காட்டிட நியூஜிலாந்து அணியின் தலைவர் ஸ்ரிபன் பிளமிங் எதிரணியான மேற்திந்தியத் தீவுகள் அணித்தலைவர் சவ்நரேன் சந்திரபாலிடம் தாம் போட்டியிடவுள்ள

5 ஒருநாள் போட்டிகளில் சுப்பர் சப்பை பாவிப்பதில்லையென்ற இணக்கப்பாட்டிற்கு வரும்படி கோரியிருந்தார். ஆனால் சந்திரபால் இதுவரையும் இப்புதியவிதிகளை பாவித்துப்பார்க்காததால் அதன் நன்மை தீமைகளை அனுபவத்தில் பெற்றிராத காரணத்தாலும், சரிவர தெரிந்துகொள்ளமுன்பே எப்படி அதனை உதாசீனம்செய்யமுடியும் என்ற நியாயமான காரணத்தாலும் அதற்கு உடன்படவில்லை. ஆனால் தென்னாபிரிக்க-அவுஸ்ரேலிய அணிகள் மோதிக்கொள்ளும் ஐந்து ஒருநாள் போட்டித்தொடரில்; ICC விதிப்பிரகாரம் சுப்பர்-சப் தெரிவுசெய்யப்படினும் அவரை பயன்படுத்துவதில்லையென்ற உடன்பாட்டுக்கு வந்துள்ளனர். மார்ச் 17 இல் ஆரம்பமாகவுள்ள இலங்கை பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிறிக்கற் போட்டிகளும் இத்தகைய வாய்ச்சொல் உடன்பாட்டுடன் விளையாடப்படும் எனத்தெரியவருகிறது.

அவுஸ்ரேலிய அணித்தலைவர் றிக்கி பொன்ரிங்கின், சுப்பர்-சப் விதியினால் அதிர்ஸ்டமான அணி 12 பேருடனும், எதிரணி 11 பேருடனும் விளையாட வேண்டியுள்ளதென குற்றச்சாட்டுகிறார், உண்மையில் ஒரேநேரத்தில் ஒருஅணியில் 12 பேர் விளையாட எப்போதும் நேர்ந்திடுவதில்லை. மொத்தமாக 12 பேர் பங்குபற்றினும்; ஒருவரை நிறுத்திவிட்டு அவருக்குப் பதிலாக இன்னொருவரை நியமிப்பதுந்தான் நடக்கக்கூடியது. அவரது ஆதங்கம் தர்க்கரீதியானதல்ல.

நாணயம் சுண்டுவதின்முன் சுப்பர் சப் அறிவிக்கப்படவேண்டும் என்பற்குக் கண்டனம் எழுகிறது. சுப்பர் சப் எனத் தெரிவாகும் கிறிக்கற்வீரர் பந்து வீசக்கூடியவராகவும் துடுப்பெடுத்தாட வல்லவராகவும் இருந்தால் இத்தகைய கண்டனம் அநாவசியமானது. அக்கண்டனத்துக்கான அடிப்படைக்கராணம் கிறிக்கற் அணிகள் அதிர்ஸ்டத்தை நம்பி ஒருவரை சுப்பர் சப் என அறிவிப்பதே ஆனால் அதிர்ஸ்டத்தை நம்பாத சுவாரி~ியமான சம்பவம் ஒன்றும் நடந்திருக்கிறது. அண்மையில் மொகாலியில்(பஞ்சாப்) இந்நியா-இலங்கை இடையிலான கிறிக்கற் போட்டியில் கேரளத்தைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளரான சாந்தகுமாரன் ஸ்ரீசாந் சுப்பர் சப் வீரராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார். அந்த மைதானத்தில் முதலில் பந்துவீசும் சந்தர்ப்பம்பெறும் அணியே வெற்றிபெறும்வாய்ப்பை பெரிதும் கொண்டிருக்குமென எதிர்வுகூறப்பட்ட நிலையில் இந்திய அணி தனித்து பந்துவீச்சில் வல்லவரை சுப்பர் சப்பாக தெரிவுசெய்தது ஆச்சரியப்படுத்தியது. இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடவா விரும்புகின்றது என்ற வினா எழுந்தது. தலையா-பூவா பார்க்கப்பட்டதில்

ராகுல் ராவிட் வெற்றிபெற்றார். ஆனால் அவர் பந்து வீச்சையே தெரிவுசெய்தார். இந்நிலையில் சாந்தகுமாரன் ஸ்ரீசாந் களமிறக்கப்படுவதாயின் ஒரு துடுப்பாட்ட வீரருக்காகவே பிரதியீடாகலாம் என்ற நிலை. இலங்கை அதிக ஓட்டங்கள் எடுத்தால் அல்லது அவர்கள் பந்துவீச்சு இறுக்கமானதாக இருந்தால் ஒரு துடுப்பட்ட வீரரை இழப்பது வி~ப்பரீட்சை.

இதனால் சாந்தகுமாரன் சுப்பர் சப்பாக இருந்தும் களமிறக்கப்படவில்லை. இதற்கு ராகுல் கொடுத்தவிளக்கம் நாணயம் சுண்டுவதில் தான் அதிர்ஸ்டம் அற்றவராகவே இருப்பர் என்ற எண்ணத்தில்தான் சுப்பர் சப் தெரிவுசெய்யப்பட்டார் என்பதுதான். இவ்விடத்தில் இன்னொன்றையும் கூறிக்கொள்ளவேண்டும். இப்படி சுப்பர் சப் என்பவர் துடுப்பட்டத்தில் தனித்திறமையுள்ளவராகவோ அல்லது பந்துவீச்சில் தனித்திறமையுள்ளவராகவோ இருப்பவராகத் தெரிவுசெய்யப்படும் போது நாணயச் சுழற்சியில் வென்றால் அவ்வணி முதலில் துடுப்பெடுத்தாட விரும்புகிறததா அல்லது பந்துவீச விரும்புகிறததா என நாணயச் சுழற்சியிக்குமுன்பே எதிரணி இலகுவில் ஊகித்தறிந்துவிட வாய்ப்பாயும்போய்விடும்.

ஆதலால் இவ்வகையிலும் சுப்பர் சப் ஒருவர் பல்திறமுள்ள ஆட்டக்காரராய் இருப்பதே சாலச்சிறந்தது.

பல்துறை ஆட்டக்காரரின் தேவையை கருத்திலெடுக்காது சுப்பர் சப் விதியில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும் என கேரிக்கை முன்வைக்கப்படுகின்றது. அதில் ஒன்று நாணயம் சுண்டப்பட்டபின் சுப்பர் சப் அறிப்படலாம் என்பது. இன்னொன்று இரண்டு சுப்பர் சப்கள் தெரிவு செய்யப்படலாம் அதில் ஒருவரை நாணயச் சுழற்சியின்பின் ஒவ்வொரு அணியும் முடிவாக்கலாம் என்பது. இவை சரியானதாய் இரு அணிகளுக்கும் பாதகமில்லாததாய் தெரியினும் ஒருநாள் கிறிக்கற் போட்டியில் தலா 12 பேர் பங்குபற்றுவதாய் இருக்குமேயல்லாமல் ICC யின் நோக்கத்தை நிறைவேற்றாது.

ஒருநாள் கிறிக்கற் போட்டியின் சுவாரிசியத்தை கூட்டவும் உலக நாடுகள் பலவற்றின் கவனத்தையும் ஈடுபாட்டையும் உயர்த்தவும் அதிகம் இரசிக்கப்படும் ஒருநாள் கிறிக்கற்றில் சில மாற்றங்களைச் செய்துபார்க்கலாம் என சர்வதேச கிறிக்கற் கட்டுப்பாட்டுச்சபை (International Cricket Council) விழைந்ததில் இந்தவிதிகள் அறிமுகமாகினதே அல்லாமல்

கிறிக்கற்றில் 12 பேர்கள் விளையாடத்தக்கதாதய் மாற்றவேண்டுமென்ற நோக்கத்துக்காகவல்ல. இது புரிந்துகொள்ளப் படாமல் அணுகப்பட்டதால் நோக்கம் பிறழ்ந்து வரும் மார்ச் 21 இல் ICC டுபாயில் கூடும்போது சுப்பர் சப் விதியை இரத்தாக்குவதாய் அறிவிக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. இந்த முடிவே அறிவிக்கப்படுமானால், நல்லதொரு விதி, ஆதரவின்மையால் அஸ்தமனமானது என்ற சரித்திரச்சான்று மட்டுமே மீதமாக இருக்கும்.

—-

arunsivakumar@mail.com

Series Navigation

அருண்

அருண்