புதிய மாதவி கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20100206_Issue

புதிய மாதவி


பழுத்த இலை
—————-

நம்பிக்கையின் பச்சை இலைகள்
உதிர்ந்து போனது
இது இலையுதிர்காலம்
உடலுக்கு உயிரும்
உயிருக்கு உடலும்
உன் நினைவுகளைப் போலவே
சுமையாகிப்போனது.

சந்திப்புகளில்
நீ நீயாகவும்
நான் நானாகவும்
கைகுலுக்கும் தருணங்கள்
இனி வரப்போவதில்லை
மொட்டு ஒரு முறைதான் மலரும்
நாம் மட்டும் விதிவிலக்கல்ல.

உனக்காக எழுதிய
காதல் கவிதைகளை
வாசித்தக் காதலர்கள்
கொண்டாடுகிறார்கள்
காதலை வாழ்க்கையை
நம்மைத் தவிர.

காதல் நம்மைப்
புறக்கணித்ததா?
நாம் காதலைப்
புறக்கணித்தோமா?
சருகுகள் உரமாகி
மீண்டும் தளிர்விடுமா?
காத்திருக்கிறது
பச்சையங்களை இழந்த
பழுத்த இலைகள்.

——
(2)
முள்வேலி
—————

காதல் புனிதம்
கற்பு தெய்வீகம்
தாய்மை பெண்மை என
கூர்மழுங்காத ஆயுதங்களால்
கைப்பற்றப்பட்ட
விளைநிலத்தில்
புதைந்து கிடக்கிறது
காலத்தின் கண்ணிவெடி.
வெடித்தால்
விளைநிலம் தரிசாகலாம்
பயமுறுத்துகிறது
வெள்ளை உடையில் வரும்
தேவைதைகள் கூட்டம்.
தேவதைகள் அறிந்ததில்லை
முள்வேலிகளின் பசியை.

——————–
(3)

யாவரும் கேளீர்
——————-

யாதும் ஊரே யாவரும் கேளிர்
பாடிவைத்த எங்கள் முப்பாட்டன்
சத்தியமாய்
இப்போதும் சொல்லுகிறேன்
தாய்மண்ணே தமிழ்மண்ணே
உன்னைத்தவிர
யாதும் ஊரே
யாவரும் கேளிர்
யாவரும் கேளீர்.

————————
– புதியமாதவி,
மும்பை

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை