பிறைசூடிய ஹவ்வா

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

ஹெச்.ஜி.ரசூல்


கானகத்தில் உறைந்த வனதேவதையென
இலையுடைதரித்து நிர்வாணம் மறைத்து
கண்முன்வந்து நின்றாய்

தேனீக்களாய் மாறிய கண்கள்ரெண்டும்
தீராத ருசியின் அமுதக் கடலை
தேனடையில் சுரந்தன.

கடம்பவனக் காட்டின் காற்றாகி
சந்தனக் காடுகளின் உள்நுழைந்து
முடியுறா வாசத்தின் ரகசியங்களை
வார்த்தைகள் ஒவ்வோன்றும்
மூங்கில் வண்டுகளாய்
ஒசையிட்டு பரப்பித் திரிந்தன

தலையுல் பிறைநிலா சூடி
வில்லும் அம்பும் கைகளில் ஏந்தி
வனமெங்கும் அலைந்து திரிந்த களைப்போடு
மரம் செடி கொடிகளாய் உருமாறி தந்ததொரு
கனவுதரிசனத்தின் மடியில்
செண்பகப் பறவைகள் உட்கார்ந்திருந்தன.

எந்தப் பார்வை பட்டும் மறைந்து போகாத
மூன்றாவது மார்பிலும்
பறவைகள் பால் குடித்தன.

பறவைகளை கொல்வதற்கு
ஊளையிட்டு துரத்தி வந்த வேட்டைநாய்களை
ஒரு கொம்புமானாக மாறி
ரத்தம் சொட்ட சொட்ட குத்திக் கிழித்து
பிறிதொரு தோற்றம் காட்டினாய்

உன் வரம் வேண்டுமெனக்கு
நீயும் நானும் நேசித்த தலைகள்
நெடுமரமொன்றில்
அறுபட்டு இனி தொங்காதிருக்க…


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்