பிறவழிப் பாதைகள் (மொழி பெயர்ப்புகளின் பொற்காலம், மீண்டும் விஷ்ணுபுரம் )

This entry is part [part not set] of 31 in the series 20020217_Issue

கோபால் ராஜாராம்


மொழி பெயர்ப்புகளின் பொற்காலம்

சிறு பத்திரிகைகளின் பொற்காலம் இது என்று யாரோ எழுதியிருந்ததைப் படித்தேன். இது மொழிபெயர்ப்புகளின் பொற்காலமும் கூட என்று சொல்லமறந்து விட்டார்கள்.

கன்னட எழுத்தாளர் யு ஆர் அனந்த மூர்த்தியின் ‘பிறப்பு ‘ நஞ்சுண்டனால் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. நஞ்சுண்டன் கவிஞராகவும், சிறுகதை ஆசிரியராகவும் அறியப் பட்டவர். தமிழவனால் மொழியாக்கம் செய்யப்பட்ட ‘அவஸ்தை ‘க்குப் பின்பு யூ ஆர் அனந்த மூர்த்தியின் படைப்பின் அடுத்த மொழியாக்கம் இது.

ஆப்பிரிகாகாவின் சினுவா ஆச்சிபியின் ‘ சிதைவுகள் ‘ நாவல் என் கே மகாலிங்கத்தால் மொழியாக்கம் செய்யப்பட்டு காலம் வெளியீடாய் வந்திருக்கிறது.

ஸ்லவோமிர் ம்ரோஸெக்கின் போலந்து கதைகள் பூமணியின் மொழியாக்கத்தில் வெளிவந்திருக்கின்றது. தொகுப்பின் தலைப்பு ‘யானை ‘. மிக எளிமையாகவும் அதே நேரம் மனதில் தைக்கிற அங்கதமும் கொண்டவை ம்ரோஸெக்கின் கதைகள். பூமணி சொல்வது போல் ‘ இவர் தூக்கிப் பிடித்திருக்கும் மனச் சுதந்திரப் பதாகையை நோக்கி கைகள் உயர்கின்றன. ‘

சுரா என்ற சு ராஜசேகரின் மொழிபெயர்ப்பில் வைக்கம் முகம்மது பஷீர், எம் முகுந்தன், சக்கரியா ஆகியோரின் மலையாளப் படைப்புகள் வெளிவந்துள்ளன. இளைய பாரதியின் பதிப்பகம் இவற்றை வெளியிட்டிருக்கிறது.

அமரந்தாவின் மொழியாக்கத்தில் ‘பனியும் நெருப்பும் ‘ என்ற லத்தீன் அமெரிக்கக் கதைகள் வெளியாகியுள்ளன. தொகுக்கப்பட்ட எழுத்தாளர்கள் பற்றிய விரிவான அறிமுகமும், பெயர் உச்சரிப்பின் அசல்தன்மை பற்றிய கவனமும், சூழல் சித்தரிப்பின் நுணுக்கம் பற்றிய சிரத்தை கொண்ட கவனமும், இந்த மொழியாக்கத்தை மிகச் சிறப்பான ஒன்றாய் ஆக்கியுள்ளது. இது நிழல் வெளியீடு.

சாதத் ஹசன் மாண்டோ வின் சிறுகதைகள் மொழியாக்கத்தில் வெளியாகியுள்ளன. உலகின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ‘டோபா டேக் சிங் ‘ காலஞ்சென்ற சரஸ்வதி ராம்நாத்தின் மொழியாக்கத்தில் இந்தத் தொகுப்பில் காணக் கிடைக்கிறது. பாகிஸ்தான் பிரிவினையின் இலக்கியப் பதிவுகள் மிகவும் குறைவு. இந்த அவல நாடகத்தின் பேரதிர்வை, விரிப்பின் கீழே தள்ளிவிடுகிற மன நிலையில் கலை இலக்கியவாதிகள் மெளனம் காத்து நின்றார்கள். குஷ்வந்த் சிங்கின் ‘ பாகிஸ்தானுக்கு ஒரு புகைவண்டி ‘ யும் தமிழில் மொழி பெயர்த்திருப்பதாய் அறிகிறேன். இது திரைப்படமாகவும் ஆகியுள்ளது. பாகிஸ்தான் பிரிவினை ஏற்படுத்திய கலாசாரத் தனிமையின் சோகம் மண்டோவின் படைப்புகளில் அடிநாதமாய் எழக்காண்கிறோம்.

எனக்குக் கையில் கிடைத்த சில புத்தகங்கள் பற்றி மட்டும் இங்கே குறித்துள்ளேன்.

மொழியாக்கம் என்பது வெறும் மொழி பற்றிய விஷயமல்ல. கலாசாரம், வரலாறும் இத்துடன் பின்னிப் பிணைந்து இருக்கின்றன. இருக்க வேண்டும். மொழியாக்கத்திலிருந்து வெறும் உத்திகளை மட்டுமே தம்முடைய ஆக்கங்களுக்குப் பெறுவது என்பது நம் இலக்கியகர்த்தாக்களிடையே பரவலாய்க் காணப்படும் ஒரு வழக்கம். உத்திகளுக்குப் பின்னே உள்ள உயிர்ப்பை உள்வாங்கிக்கொண்டு தமிழ் அனுபவப் பின்னணியில் அவற்றைப் பொருத்தித் தமக்கென ஒரு வழியை உருவாக்கிக் கொள்வது மிக முக்கியம்.

பூமணியின் மொழிபெயர்ப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது என்பது என் எண்ணம். ஆனால், ஒரு படைப்பாளி மொழிபெயர்ப்பில் ஈடுபடும் போது அந்த மொழிபெயர்ப்பின் அசல் எழுத்தாளனின் ஆளுமை மறைந்து போகவும் வாய்ப்பு உண்டு. இது பற்றியும் யோசிக்க வேண்டும். இதில் மொழியாக்கம் என்பது மறு ஆக்கமாய் உருவாகிறது. அது மூலப் படைப்பின் இருப்பில் குறுக்கீடு செய்கிறதா என்பது பற்றி விவாதிக்க வேண்டும்.

தமிழ் இலக்கியப் போக்குகளில் மொழிபெயர்ப்புகளின் பங்கு பற்றி விரிவான ஆய்வை யாரேனும் மேற்கொண்டால் மிகப் பயனுள்ளதாய் இருக்கும். ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுத்து யுகத்திற்கு உந்துதல் தந்ததும், மாக்ஸிம் கார்க்கியின் மொழியாக்கங்கள் சோஷலிச யதார்த்தத்தை ஸ்தாபித்ததும், மார்க்வெஸ் மாந்திரீக யதார்த்தத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்ததும்,காஃப்கா மெளனி பாணியில் இலக்கிய இயக்கத்தைத் திருப்பியதும் பற்றி விபரமான வரலாறு தேவை.

**********

மீண்டும் விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரத்திற்கு நான் எழுதியிருந்தது உடனடியாக மனதில் பட்ட கருத்துகள் தான். விரிவான விமர்சனம் அல்ல. விஷ்ணுபுரத்திற்கு ஏற்பட்ட கவனிப்புப் பற்றி நான் எழுதியிருப்பதில் நுட்பமான விஷமம் எதுவும் இல்லை. இந்த கவனிப்பு நல்ல விஷயம் தான் , அது போன்ற பரவலான கவனிப்பு, ‘கிருஷ்ணப் பருந்து ‘விற்கும், ‘அம்மா வந்தாளு ‘க்கும், கிடைக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம் . ஜெயமோகனின் எழுத்தாற்றல் பற்றிய மனந்திறந்த பாராட்டு என்னுடையது. அது சரியாக முன்பு வெளிப்படவில்லையென்றால் மீண்டும் பதிவு செய்கிறேன் : தமிழில் மட்டுமல்ல இந்தியாவிலேயும் இருக்கிற மிகச் சிறந்த இலக்கியகர்த்தாக்களில் ஜெயமோகன் ஒருவர். இதை ஒப்புக் கொள்ள எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

வணிகப் பத்திரிகையில் வரும் சரித்திர நாவல்களின் உத்தியைக் கையாண்டிருக்கிறார் என்பதன் பொருள் விஷ்ணுபுரம் வணிகப் பத்திரிகை நாவல் என்பதல்ல. இப்படி ஒரு genre -யின் உத்திகளை இன்னொரு genre-யில் கையாள்வது என்பது ஒருவிதச் சோதனை முயற்சி . அதை வெற்றிகரமாய்ச் செய்திருக்கிறார் என்று நான் சொன்னது இப்படித் திரித்துப் புரிந்துகொள்ளப் படும் என்று நான் நினைக்கவில்லை. உதாரணமாய் நா.பா-வின் மணிபல்லவத்தை, விஷ்ணுபுரத்துடன் சேர்ந்து படித்தால் , நான் சொல்ல வருவது என்ன என்று புரியலாம்.

அவர் மேலைத்தத்துவ அறிமுறையியலை ஒட்டித் தான் விவாதங்கள் நாவலில் நடைபெறுகின்றன என்று சொல்கிறார். இதை நான் சிந்திக்க எனக்கு இன்னும் சற்று அவகாசம் தேவை. நான் படித்த அளவில் அதை என்னால் உணர முடியவில்லை. நான் அதை ஒரு வேளை தவற விட்டிருக்கலாம்.

***********

சதங்கை – ஒரு சிற்றேடு

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நாகர்கோவிலிலிருந்து ‘சதங்கை ‘ சிலகாலம் நின்றும் ,தொடர்ச்சியின்றியும் வருகிறது. இப்போது முறையாக தொடர்ச்சியாக வருகிறது என்று அறிகிறேன்.

ஆசிரியர் வனமாலிகை. இவரல்லாமல், எம் சிவசுப்ரமணியன் துணை ஆசிரியராகவும், பொன்னீலன் , செயப்பிரகாசம், காமராசு ஆலோசகர்களாகவும் இருக்கிறார்கள். சமீபத்திய இதழில் பொன்னீலன் பொட்டல் வட்டாரத் திருமணச் சடங்குகள் பற்றி எழுதியிருக்கிறார். காஞ்சனா தாமோதரனின் முக்கியமான சிறுகதை ஒன்றும் இருக்கிறது. நாஞ்சில் நாடனும், சூடாமணியும், கதை எழுதியுள்ளனர். பாவண்ணன் பிச்சமூர்த்தியின் சிறுகதைகள் பற்றி எழுதியுள்ளார். முந்தைய இதழ் ஒன்றில் பொன்னீலன் கன்யாகுமரியில் நடந்த தோள்சீலைப் போராட்டம் பற்றி மிக முக்கியமான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

முகவரி : அஞ்சல் பெட்டி : 9, 459 பாண்டியன் தெரு, கவிமணி நகர், நாகர்கோவில் 629002. வெளிநாட்டுச் சந்தா ரூ 300. இரண்டாண்டுகளுக்கு 500 ரூபாய். நாம் ஆதரவு தரவேண்டிய ஏடு இது.

**********

Series Navigation

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்