பிரபஞ்சம் ஒரு முடிவற்ற சுழற்சியில்

This entry is part [part not set] of 26 in the series 20020428_Issue


இந்த பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

இரண்டு அறிவியலாளர்கள் பிரபஞ்சத்தை விளக்கவும், இது எங்கு செல்கிறது என்பதை விவரிக்கவும் புதிய மாதிரியமைப்பை முன்வைத்திருக்கிறார்கள்.

பிரபஞ்சத்தில் எல்லாப்பொருட்களும் ஒன்றை ஒன்று அதிவேகமாக விலகிச் சென்றுகொண்டிருக்கிறது என்ற கண்டுபிடிப்பும், புதிய ஒரு மாதிரியமைப்பைக் கொண்டு விளக்க வேண்டிய தேவையை அளித்திருக்கிறது என்று என்று இவர்கள் கூறுகிறார்கள்.

பால் ஷ்டெய்ன்ஹார்ட் அவர்களும் நீல் டுரோக் அவர்களும், பிரபஞ்சம் ஒரு முடிவற்ற சுழற்சியில் ( அதாவது பெருவெடிப்பு, பெரிதாதல், தேங்கிக்கிடத்தல் மீண்டும் பெருவெடிப்பு என) சென்று கொண்டே இருக்கின்றன என்று கூறுகிறார்கள். இந்தப் போக்கிற்குக் காரணமான சக்தி என்ன என்று காணமுடியவில்லை. இதை ‘இருட்சக்தி ‘ என்று அழைக்கிறார்கள்.

இவர்களது கருத்துக்கள் ‘ஸயன்ஸ் ‘ பத்திரிக்கையில் வெளிவந்துள்ளன.

தற்போதைய பிரபஞ்ச மாதிரியமைப்புக் கோட்பாட்டின் படி, நமது பிரபஞ்சம் சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பெருவெடிப்பில் தோன்றி, காலம், இடம், பொருள் ஆகியவை தோன்றி தொடர்ந்து பெரிதாகிக்கொண்டே வருகின்றது என்பதுதான்.

இந்தப்பெருவெடிப்பு காலத்தின் தொடக்கமல்ல, முடிவுறா சுழற்சியின் சமீபத்திய ஒரு வெடிப்புத்தான், என்பார் பால் ஷ்டெய்ன்ஹார்ட்

இந்த மாதிரியின் படி, நமது பிரபஞ்சத்தில் இருக்கும் பல குணாம்சங்களை விளக்கலாம். அதாவது ஏன் பிரபஞ்சம் எல்லா திசைகளிலும் ஒரே மாதிரியாக இருக்கிறது; ஏன் பிரபஞ்சம் தட்டையாக இருக்கிறது (அதாவது இணைகோடுகள் எப்போதும் ஒன்று சேர்வதில்லை நம் பிரபஞ்சத்தின் வெளியில்)

ஆனால் இன்றைய மாதிரியமைப்பில் பல குறைபாடுகள் இருக்கின்றன என்று ஸ்டென்ஹார்ட் அவர்களும் டுரோக் அவர்களும் கூறுகிறார்கள்.

பெருவெடிப்புக்கு முன்னர் என்ன நடந்தது என்பதையும், நம் பிரபஞ்சத்தின் இறுதி முடிவு என்ன என்பதையும் இது விளக்க முடியாது. இது தொடர்ந்து பெரிதாகிக்கொண்டே போகுமா, அல்லது நிற்குமா, அல்லது சுருங்க ஆரம்பிக்குமா ?

இந்த எதிர்காலங்களைப் பற்றிய பிரச்னைகள் 1998இல் மிகத் தெளிவாகத் தெரிந்தன. தூரத்தில் வெடிக்கும் நட்சத்திரங்கள் பிரபஞ்சம் இன்னும் அதிகரிக்கும் வேகத்தில் பெரிதாவதை காட்டின. எல்லா பொருள்களும் இறுதியில் சுருங்கி ஒரு பெரும் அமுக்கத்துக்குள் வரும் என்று எதிர்பார்த்த பல வானவியலாளர்களுக்கு இது ஏமாற்றமாக இருந்தது.

இந்த அதிகரிக்கும் வேகம் பல முறை பரிசோதிக்கபட்டு, உண்மையென கண்டறியப்பட்டுள்ளது.

‘இருட் சக்தி ‘(dark energy) ஒன்று பிரபஞ்சத்தில் வேலை செய்துவருகிறது; இதுஎல்லா விஷயங்களையும் ஒன்றிலிருந்து மற்றொன்றை விலக்குகிறது என்ற பழைய கருத்துக்கு உயிர்கொடுக்க மேற்கண்ட பரிசோதனைகள் பிரபஞ்சவியலாளர்களை தூண்டின.

ஸ்டெயின்ஹார்ட் அவர்களும் டுரோக் அவர்களும் இந்த சக்தியை அவர்களது மாதிரியின் மையத்தில் இருத்தித் தான் விள்க்கம் அளிக்கிறார்கள். கணித ரீதியாக தட்டை(scalar)யென இந்த சக்தியை வரையறை செய்கிறார்கள்.

இந்த இருட்சக்தியே ஒரு சுழற்சியின் ஆதாரமாக இருந்து பெருவெடிப்பையும், அதன் பின் தொடரும் பெரிதாக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்று நம்புகிறார்கள். இந்தச் சுழற்சியினால் தான் பிரபஞ்சம் தெளிவான தட்டைவடிவில் இருக்கவும் செய்கிறது என்று கருதுகிறார்கள்.

‘இந்த சக்தியின் குணாம்சம் காலப்போக்கில் மாறுகிறது. இறுதியில் இந்த சக்திய அளவுக்கு மீறி அமுக்கப்படும்போது இது நிலையற்று வெடித்து பொருளாகவும், கதிரியக்கமாகவும், இந்த பிரபஞ்சத்தை நிரப்புகிறது. இது அடுத்த பெரிதாக்கத்துக்கு ஆதாரமாக இருக்கிறது ‘ என்று பால் ஸ்டெயின்ஹார்ட் கூறுகிறார்.

‘இன்றைய மாதிரியில், காலத்துக்கும் வெளிக்கும் ஆரம்பமாக பெருவெடிப்பு (Big Bang) பார்க்கப்படுகிறது. அதாவது முன்பு ஒன்றுமே இல்லாமல் இருந்தது, பிறகு ஒன்றுமில்லாததன் நடுவில் திடாரென்று வெளியும், காலமும், பொருளும் கதிரியக்கமும் தோன்றின என்று சொல்கிறது இந்தக் கருதுகோள் ‘

‘இப்போது நாங்கள் கூறும் இந்தப் புதிய வரைபடத்தில், காலத்தின் ஆரம்பம் பெருவெடிப்பு அல்ல என்பதையும், அந்தப் பெருவெடிப்பு பல தொடர் பெருவெடிப்புகளின் வரிசையில் , வெறும் சமீபத்திய வெடிப்பு என்பதையும், முடிவற்ற சுழற்சிகளில் சமீபத்திய சுழற்சியின் ஆரம்பம்தான் சமீபத்திய பெருவெடிப்பு என்பதையும் கூறுகிறோம். பிரபஞ்சம், சூடாகிறது, பெரிதாகிறது, குளிர்கிறது, தேங்கிக்கிடக்கிறது, காலியாகிறது, அதன் பின்னர் மீண்டும் பெரிதாக ஆரம்பிக்கிறது ‘

தங்களது கருத்துக்களை தங்களது தோழமை ஆராய்ச்சியாளர்களிடம் விவாதித்து ஆதரவான கருத்துக்களைப் பெற்றாலும், கொஞ்சம் ஜாக்கிரதையாகவும் எதிர்வினைகள் வந்திருக்கின்றன. ‘இறுதி முடிவு சொல்லப்போவது இயற்கைதான் ‘ என்று ‘ஸயன்ஸ் ‘ பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்கள்.

‘புவியீர்ப்பு விசை அலைகளைக் கணக்கிடுவதும், இருட்சக்தியின் குணாம்சங்களை அறிவதும், சேர்ந்து , இந்த இரு கோட்பாடுகளில் ( பெரும் வெடிப்பு ஒற்றையா, சுழற்சிவரலாற்றில் ஒன்றா என்பது – மொ பெ) எது சரியானது என்பதை பரிசோதனை மூலம் நமக்கு தெளிவாக்கும் ‘ என்று கூறுகிறார்கள்.

மார்கஸ் செளன் என்ற பிரபஞ்ச எழுத்தாளர் பிரபஞ்சம் பற்றிய எந்த மாதிரி அமைப்பையும் இதுவே சரி என நிரூபிப்பது மிக மிகக் கடினம் என்பதை ஒப்புக்கொள்கிறார்.

‘பிரபஞ்சவியலின் வரலாறு என்பது நாம் முழுக்கத் தவறாகக் கருதியதன் வரலாறு. அதாவது, பிரபஞ்சவியல், மற்ற அறிவியல் துறைகளைக் காட்டிலும் மிகவும் கடினமான அறிவியல். இந்த மிகப்பரந்த பிரபஞ்சத்தில் ஒரு மூலையில் ஒரு சிறிய கிரகத்தில் எங்கும் போக முடியாமல் உட்கார்ந்து கொண்டு நம்மால் முடிந்த பரிசோதனைகளை மட்டும் பண்ணிக்கொண்டுதான் இருக்க முடியும். நம் மீது வந்து விழும் ஒளியை ஆராய்ச்சி செய்து அதிலிருந்து இந்த பிரபஞ்சம் பற்றிய சில விஷயங்களை அறிந்து கொள்ளலாம். அவ்வளவுதான் செய்யமுடியும் ‘

**

பால் ஸ்டேய்ன்ஹார்ட் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். நெயில் டுரோக் காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.

http://news.bbc.co.uk/hi/english/sci/tech/newsid_1951000/1951406.stm

Series Navigation

செய்தி

செய்தி