பிங்கி

This entry is part [part not set] of 28 in the series 20090319_Issue

மனுநீதி



பிங்கி பிறந்து கண்கள் திறந்த போது கார்மேக போர்வைகள் தானே விலகி நட்சத்திரம் வெளிப்பட்டது போல் இருந்தது. அந்த நொடி வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியில் நானும் என் மனைவியும் களித்திருந்தோம். அவள் வளர்ந்த நாட்கள் நொடிகளை பறந்து போயின. அவளுக்கு சிறு நோயானாலும் நான்கு கண்களும் கலங்கின. உண்மையில் சொல்ல போனால் எங்கள் இருவர் மீது நாங்கள் வைத்த அன்பை விட பிங்கியின் மீது நாங்கள் வைத்த அன்பு தான் பெரியது. ஆனால் இன்று என் கண்முன்னே என் பிங்கி உயிரற்று கிடக்கிறாள். வாயில் ரத்தம் கசிந்து உறைந்து போயிருந்தது. அதன் மேல் ஈக்கள் இரங்கல் கூட்டம் போட்டு கொண்டிருந்தன.

சாலையில் விளையாடி கொண்டிருந்த என் பிங்கியை வேகமாக வந்த கார் இடித்து நிற்க்காமல் சென்று விட்டதாக கூட்டம் கதைத்து கொண்டிருந்தது. ஐயோ! நீ இடித்த உடனே இறந்திருப்பாயா இல்லை வேதனையில் துடித்தாயா. உனக்கு உதவ கூட முடியாத நிலையில் இருந்துவிட்டேனே .

தவிர்க்க முடியாத ஒரு உறவினர் திருமணத்திற்காக ஊருக்கு சென்ற என் மனைவியிடம் இதை எப்படி கூறுவது. அழ கூட தோள்கள் இல்லாமல் உடைந்து போவாளே. ஊருக்கு போக மறுத்த அவளை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்த நான் குற்றவாளியை போல் நின்று கொண்டிருந்தேன். நாங்கள் பார்த்து கொள்கிறோம் என அவளை சமாதானபடுத்திய பக்கத்துக்கு வீட்டுகாரர்கள் விரோதிகளை விட விரோதமாய் தெரிந்தார்கள். உங்களால் முடியாது என்று சொல்லியிருந்தால் நான் லீவ் போட்டாவது பார்த்து கொண்டிருந்திருப்பேனே இப்போது என் பிங்கியின் சாவிற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் என மனதிற்குள் அவர்கள் சட்டையை பிடித்து உலுக்கி கொண்டிருந்தேன்.

பிங்கி பிறந்த சில நாட்களில் தன் சிறு கண்களை உருட்டி உருட்டி எங்களை பார்த்தது இன்றும் நினைவில் இருக்கிறது. பிங்கியை கொஞ்சதவர்கள் எங்கள் சுத்துவட்டாரத்திலேயே இல்லை என்ற அளவிற்கு எல்லாருடைய செல்லமாக திகழ்ந்தாள். அதன் சாட்சியே இன்று அவள் உடலை சுற்றி நிற்கும் இந்த கூட்டம் .

பிங்கி ஒரு வயது ஆன பிறகு நல்ல துடிப்புடன் காணப்பட்டாள். தினமும் தோட்டத்தில் என் மனைவி அவளிடம் விளையாடுவதை ஒரு அத்தியாவசிய கடமையை போல் செய்து கொண்டிருந்தாள். தெருவில் விளையாடும் போதும் என் மனைவியின் கண்காணிப்பில் தான் இருப்பாள். ஆனால் சில சமயம் தெருவில் விளையாடும் சிறுவர்களோடு கொஞ்ச தூரம் சென்றாலும் என் மனைவியின் குரலுக்கு உடனே திரும்பி விடுவாள். இன்று கூப்பிட குரல் இல்லையென்று கூப்பிட்டாலும் வரமுடியாத தூரத்திற்கு சென்று விட்டால். சோகத்தை சேகரித்து கொண்டிருந்தேன். 
இனி வேலைக்கு செல்லும் போது வாசல் வரை வந்து என்னை யார் வழியனுப்புவார்கள். மாலை பணி முடிந்து வரும்போது யார் என்னை வரவேற்பார்கள். அந்த ஒளிரும் கண்கள், எந்த சத்தத்தையும் உணரும் காதுகள், இரவில் உறங்காமல் நீ செய்யும் சேட்டைகள், உன் நான்கு கால் பாய்ச்சல், என்னை பார்த்தவுடன் வாலாட்டி குழையும் அந்த அழகு. அனைத்தையும் தொலைத்து உள்ளத்தில் தேம்பி கொண்டிருந்தேன்.

இருண்ட வானம் என் பிங்கிக்காக கண்ணீர் துளிகளை சிந்த தொடங்கியது.


Series Navigation

மனுநீதி

மனுநீதி