பாவண்ணன் – சின்னதாய் இலக்கிய பேட்டி

This entry is part [part not set] of 24 in the series 20081113_Issue

கே ஆர் மணி



அவரைப்போலவே அவரது எழுத்துக்களும். அவரது எழுத்துக்களை போலவே அவரும்.
இரண்டுமே ஓன்றுதானே ? அதனாலென்ன, இரண்டுமுறை சொன்ன தப்பா என்ன ?

எழுத்தின் ஆளுமை கிட்டத்தட்ட எழுத்தாளரின் ஆளுமையாகத்தானிருக்கமுடியும்.
எழுத்துக்கும், எழுத்தாளாருக்குமான இடைவெளி ரொம்ப குறைவு. இப்படிச் சொல்வதில்
வசதியாயிருக்கமுடியும்.

பாவண்ணன் – இலக்கியத்துறைக்கு அறிமுகமான எழுத்தாளர். அறிமுகம் தேவையற்ற
இலக்கியவாதி என்று சம்பிரதாயமாக அறிமுகப்படுத்தலாம். சாதாரண வாசகத்தளத்திலிருப்பவர்களின்
ரசனையை தூண்டிவிடும் வண்ணம், இவர் திண்ணையில் எழுதிய நீண்ட நெடும் தொடரான,
‘எனக்கு பிடித்த கதைகள்’ பரவலாய் பாராட்டுப்பெற்றது.

இவரது – பர்வம் மொழிபெயர்ப்பும், கன்னட தலித் இலக்கிய மொழிபெயர்ப்பும் – அமுக்கி வாசிக்கிற
தமிழ் இலக்கிய சூழல் பயமூட்டுகிறது. இதையெல்லாம் கவலைப்படாத நகர்கிறது பாவண்ணணின்
இலக்கிய பணி. அப்படியே அது கிழட்டு நதிகளை, வறண்ட மணற்பரப்பபை மற்றும் எழுந்து நிற்கிற
கான்கீரிட் காடுகளை எழுதிவிட்டு போய்க்கொண்டேயிருக்கிறது. அதன் குறுக்கே பயணித்து
சில கேள்விகளை கேட்டு, பதிலை பெற்று, பகிர்ந்து கொள்கிறோம்

(மும்பையில் பாவண்ணன் படைப்புகளைக் குறித்து முதல் நாள் 11/10/08 பம்பாய்த் தமிழச்சங்கத்திலும்
இரண்டாம் நாள் 12/10/.08 நவிமும்பை தமிழ்ச்சங்கத்திலும் கருத்தரங்கு, பாவண்ணனுடன் கலந்துரையாடல் ,
பருவம் நாவலின் இறுதிக்காட்சி ஓரங்கநாடகமும் நடைபெற்றன. இதையொட்டி ஒரு சிறிய ஆவணப்படமும்
எடுக்கப்பட்டது. விழாமுடிந்தும், விழாவிலும் கேட்கப்பட்ட சில கேள்வி பதில்களின் சின்னத்துளி இது.
விமர்சகர்களின் கட்டுரை மற்றும் ஆவணப்படம் வரும் வாரங்களில் தொடரும்)

பாவண்ணண்
கேள்விகள்: மணி ;
பதில்கள்: பாவண்ணன்

கேள்வி : உங்கள் குடும்பச்சூழல் மற்றும் இளமைக்காலத்தைப்பற்றி சொல்வீர்களா?
பதில்: 20.10.1958 அன்று புதுச்சேரியில் பிறந்தேன். என் தாயார் பெயர் சகுந்தலா. என் தந்தையார் பெயர் பலராமன்.
நெசவுத்தொழில், விவசாயம் என சின்னச்சின்னதாக பல வேலைகளைப் பார்த்துவிட்டு தையல் தொழிலாளியாக
புதுச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடையில் உள்ள சிற்றூரான வளவனூரில் வாழ்க்கையைத் தொடங்கி நடத்திவந்தார்.
என் பள்ளிப்படிப்பை வளவனூரிலும் கல்லூரிப்படிப்பை புதுச்சேரியிலும் படித்துமுடித்தேன். கணக்குத்துறையில் இளம்அறிவியல்
பட்டப்படிப்பை முடித்ததுமே குடும்fபச்சூழல் காரணமாக வேலை தேடவேண்டிய நெருக்கடியில் கல்வியைத் தொடரமுடியாமல் போனது.
தொலைபேச இயக்குநராக புதுச்சேரியில் வேலைக்குச் சேர்ந்து பிறகு, இளநிலை தொலைபேசி பொறியாளராக 1982ல் கர்நாடகத்துக்கு வந்தேன்.
அன்றுமுதல் கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பணிசெய்து வருகிறேன். என் மனைவி பெயர் அமுதா. எங்கள் திருமணம் 22.08.1984ல் நடந்தது.
எங்கள் மகன் பெயர் மயன். 1987ல் பிறந்தான். இப்போது பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவருகிறான்.

கேள்வி: கணக்குத்துறை மாணவரான நீங்கள் இலக்கியங்களைத் தேடிப் படிக்கத் தொடங்கியது எப்படி?
பதில்: கதைப்புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் சின்ன வயதிலிருந்தே இருந்தது. எங்கள் பள்ளியில் வாரத்துக்கு ஒருநாள் நூலக வாசிப்பு என்றொரு பாடவேளை செயல்படுத்தப்பட்டிருந்தது. வீட்டுக்கு அருகிலேயே எங்கள் ஊர் நூலகம் இயங்கிக்கொண்டிருந்தது. எங்கள் ஆசிரியர்கள் படிக்கும் ஆர்வத்தை மாணவர்களிடையே எப்போதும் தூண்டிக்கொண்டிருந்தார்கள். எங்கள் வகுப்பறைச் சுவரில் “பாடை ஏறினும் ஏடது கைவிடேல்” என்றொரு வாசகம் நிரந்தரமாக எழுதப்பட்டிருந்தது. எங்கள் ஊரில் திருக்குறள் கழகம் என்றொரு அமைப்பைத் தொடங்கி இராசாராமன் என்னும் அண்ணனும் மற்றும் சில அண்ணன்மார்களும் இணைந்து நடத்திவந்தனர். கழக ஆண்டுவிழாவை முன்னிட்டு அவர் பள்ளி மாணவர்களிடையே திருக்குறள் ஒப்பித்தல் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். என்னையும் என் நண்பர்களையும் இணைத்து அந்தப் போட்டியை நடத்தினார். போட்டியில் ஒப்பிப்பதற்காக முப்பது திருக்குறள்களை நான் மனப்பாடம் செய்தேன். திருக்குறள் எனக்கு உற்சாகம் ஊட்டுவதாக இருந்தது. அதன் வரிகளை மனம்போன போக்கில் சொல்லிக்கொண்டு திரிந்தேன். முப்பதில் தொடங்கிய மனப்பாடப்பயிற்சி மெல்லமெல்ல நூறுநூறாக உயரத்தொடங்கியது. திருக்குறள் கொடுத்த உற்சாகத்தால் மற்ற செய்யுள் பகுதிகளைத் தேடிப்படித்தேன். கல்லூரிப்படிப்பை முடிக்கும் தருணத்தில் சங்கப்பாடல்களிலும் கம்பராமாயணம், வில்லிபாரதம், சிலப்பதிகாரம் என தமிழிலக்கியத்தின் செழுமையான பகுதிகளை வாசித்த இன்பத்தில் மனம் திளைத்திருந்தேன். பாரதியார், பாரதிதாசனைக் கடந்து நவீன கவிதைகளை வாசித்துப் பழகிக்கொண்டிருந்தேன். பள்ளித் தமிழாசிரியர்கள் முதல் கல்லுரியில் எனக்கு தமிழ்ப்பாடம் நடத்திய தங்கப்பா வரை வாசிப்புப்பயிற்சியில் எனக்கு வழிகாட்டியாக இருந்தார்கள். குறுந்தொகையும் கலித்தொகையும் சிலப்பதிகாரமும் இராமாயணமும் என் மனம் கவர்ந்தவை. ஒரு மகாகாவியம் எழுதவேண்டும் என்கிற உத்வேகத்தில் எழுதும் பழக்கமும் அப்போதுதான் ஏற்பட்டது. தொடக்கத்தில் மரபுக்கவிதைகளையும் பிறகு மரபை உதறிய நவீன கவிதைகளையும் எழுதிவந்தேன். கவிதைகளைமட்டுமே எழுதுகிறவனாக இருந்தாலும் உரைநடை நூல்களை வாசிப்பதில் எனக்கு எந்தத் தடையும் இருந்ததில்லை. தமிழ்ச்சிறுகதை நூல்கள், புதினங்கள். மொழிபெயர்ப்பு நூல்கள் எனத் தேடித்தேடி ஆர்வமுடன் படித்தேன். புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, மௌனி, அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகிராமன் என பல எழுத்தாளர்களின் முக்கியமான படைப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன். அப்போது படித்த ரஷ்யப் புதினங்கள் மகத்தான அனுபவங்களை வழங்கியவை. என் எழுத்துலகமும் கவிதைத்துறையிலிருந்து உரைநடையைநோக்கி விரிவடைந்தது.

கேள்வி: முதல் சிறுகதையை எப்போது எழுதினீர்கள்?
பதில்: 1982ல் என் நேர்காணல் அனுபவத்தை முன்னிலைப்படுத்தி ஒரு சிறுகதையை எழுதினேன். ஆனால் அது வெளிவரவில்லை. அதைத் தொடர்ந்து நான் எழுதிய பழுது என்கிற சிறுகதை தீபம் இதழில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து கணையாழி, தாமரை, செம்மலர், மனஓசை என பல இதழ்களிலும் என் சிறுகதைகள் வெளிவந்தன.

கேள்வி: உங்கள் படைப்புகளுக்கு சிறுபத்திரிகைளைமட்டுமே வெளியீட்டுக்களமாக ஏன் தேர்ந்தெடுத்துக்கொண்டீர்கள்? ஜனரஞ்சகப் பத்திரிகைகளை விலக்கியதற்கு என்ன காரணம்?
பதில்: வாழ்க்கையைப்பற்றிய பார்வைவை வகுத்துக்கொண்டதில் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுதான் காரணம். வாழ்க்கையின் ரணங்களைநோக்கியும் துக்கங்களைநோக்கியும் ஆழத்தைநோக்கியும் நம் கவனத்தைத் திருப்பும் படைப்புகளே சிறுபத்திரிகைகளின் இயங்குதளம். இவற்றுக்கு நேர்மாறாக, பொழுதுபோக்கை அடிப்படையாகக் கொண்ட படைப்புகளே ஜனரஞ்சகப்பத்திரிகைளின் இயங்குதளம். அதனால், என் படைப்புகளின் உலகத்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சிறுபத்திரிகைகளையே என் களமாகக் கொண்டேன். இந்தியா டுடே என்னும் செய்திப்பத்திரிகை தமிழில் ஒரு பத்திரிகையைத் தொடங்கியபோது ஒரு மிகப்பெரிய மாற்றம் நடைபெற்றது. சிறுபத்திரிகை உலகைச் சேர்ந்த பல படைப்பாளிகளின் படைப்புகள் அதில் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து சுபமங்களா, புதிய பார்வை ஆகிய இதழ்கள் வெளிவந்து அந்த மாற்றத்தை மேலும் விரிவாக்கியது. இந்த இதழ்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் என் படைப்புகள் வெளிவந்தன.

கேள்வி: உங்கள் முதல் சிறுகதைத்தொகுதி எப்போது வெளிவந்தது? இதுவரை எத்தனை சிறுகதைத்தொகுதிகள் வந்துள்ளன?
பதில்: 1987ல் வேர்கள் தொலைவில் இருக்கின்றன என்னும் தலைப்பில் என் முதல் சிறுகதைத்தொகுதி வெளிவந்தது. 2006ல் வெளிவந்த வெளியேற்றப்பட்ட குதிரை என்னுடைய பன்னிரண்டாம் சிறுகதைத்தொகுதியாகும்.

கேள்வி: நீங்கள் படித்தவற்றில் மிக முக்கியமான சில நூல்களைப்பற்றி சொல்லமுடியுமா?
பதில்: உரைநடையைப் பொறுத்தவரையில் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் என் சரித்திரம் என்னைப் பெரிதும் கவர்ந்த ஒரு புத்தகம். மரபுக்கவிதைகளில் பாரதியார், பாரதிதாசன், தங்கப்பா, பெருஞ்சித்தினார் ஆகியோரின் கவிதைகளையும் நவீன கவிதைகளில் பிச்சமூர்த்தி, பிரமிள், பசுவய்யா, ஞானக்கூத்தன், வைத்தீஸ்வரன் ஆகியோரின் கவதைகளையும் புதினங்களில் பொய்த்தேவு, ஒரு புளியமரத்தின் கதை, மோகமுள், தலைமுறைகள், கோபல்லபுரம் ஆகியவையும் தமிழில் வெளிவந்த மொழிபெயர்ப்பைப்பொறுத்தவரையில் போரும் அமைதியும், அன்னாகரினினா, நிலவளம், மண்ணும் மனிதரும், அவமானச்சின்னம், ஏழை படும் பாடு, சத்தியசோதனை ஆகியவையும் மகத்தான அனுபவங்களை வழங்கியவை.
நவீன இலக்கியப்படைப்பாளிகளில் ஜெயமோகன், எஸ்,ராமகிருஷ்ணன், கோணங்கி, பெருமாள்முருகன், யுவன் சந்திரசேகர், சு.வேணுகோபால், எம். கோபாலகிருஷ்ணன், என்.ஸ்ரீராம், கண்மணி குணசேகரன், ஆகியோருடைய படைப்புகள் நல்ல வாசிப்பனுபவத்தை வழங்குபவை.

கேள்வி: மொழிபெயர்ப்புத்துறையில் ஆர்வம் வந்தது எப்படி?
பதில்: கர்நாடகம் என் வேலைக்கான களம் என்றானதும் கன்னடமொழியை முறையாகக் கற்கத் தொடங்கினேன். ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு தொடங்கி பத்தாம் வகுப்பு நூல்கள்வரை வாங்கிவைத்துக்கொண்டு படித்து பயிற்சி செய்தேன். பிறகு செய்திப்பத்திரிகை, வார இதழ்கள், மாத இதழ்கள் படித்தேன். அவற்றைத் தொடர்ந்து என் மனம் கவர்ந்த எழுத்தாளரான சிவராம காரந்த் அவர்களின் படைப்புகளைக் கன்னடத்திலேயே படித்து இன்பமடைந்தேன். படித்து மகிழ்வது மட்டுமே அப்போதெல்லாம் என் நோக்கமாக இருந்தது. பெங்களூருக்கு வந்தபிறகு, என் நண்பரும் தாய்க்கு நிகராக நான்மதிப்பவருமான மொழிபெயர்ப்பாளர் திருமதி.சரஸ்வதி ராம்நாத் தன்னுடைய ஒரு தொகைநூலுக்காக ஒரு கன்னட நாடகத்தை மொழிபெயர்த்துத் தரும்படி கேட்டுக்கொண்டார். எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. அவருடைய வற்புறுத்தலுக்குக் கட்டுப்பட்டு சந்திர சேகர் பாடீல் என்பவருடைய ஒரு நாடகத்தை மொழிபெயர்த்துத் தந்தேன். பிறகு, மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் ஒரு சிறுகதையையும் மொழிபெயர்த்தேன். அதுதான் தொடக்கம். பிறகு எனக்குள் கிளர்ந்தெழுந்த ஆரவத்தின் காரணமாக ஏராளமான படைப்புகளை மொழிபெயர்த்தேன். கன்னடத்தின் மிக மூத்த படைப்பாளிகளான மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், யு.ஆர்.அனந்தமூர்த்தி, யஷ்வந்த சித்தாள், சாந்திநாத் தேசாய், பைரப்பா, லங்கேஷ், கிரீஷ் கார்னாட் தொடங்கி, இளம்படைப்பாளிகளான விவேக் ஷான்பாக், மொகள்ளி கணேஷ், நடராஜ ஹ¤ளியார் வரை பலருடைய படைப்புகளை தமிழில் அறிமுகப்படுத்தினேன். கால் நூற்றாண்டுக்கும் மேலாக கர்நாடக மண்ணில் வசிக்கிறவன் என்கிற வகையில் இதை என்னுடைய கடமையாகவே நினைத்துச் செய்தேன்.

கேள்வி: இசைத்துறையில் நாட்டம் உண்டா?
பதில்: இசையின் எந்த நுட்பமும் தெரியாத பாமரன் நான். ஆனால் இசையில் நாட்டம் உண்டு. மகாராஜாபுரம் சந்தானத்தின் குரலில் தாயே யசோதா பாடலையும் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் தீர்த்த கரையினிலே பாடலையும் கேட்கநேரும்போது அந்த இடத்தைவிட்டுச் செல்ல மனமே வராது. இசை நம் மனத்துக்குள் நுழைந்து நிகழ்த்தும் மாயம் அபாரமானது. ஒரு நாளில் சிறிது நேரமாவது அந்த மாய அனுபவத்தில் திளைத்து அது வழங்கும் நெகிழ்ச்சியாலும் குழைவாலும் மனத்தை நிரப்பிக்கொள்வது இனிய அனுபவம்.

கேள்வி: நூற்றுக்கும் மேற்பட்ட உங்கள் புத்தக அறிமுகக்கட்டுரைகளை இலக்கிய இதழ்களிலும் இணைய இதழ்களிலும் படித்திருக்கிறேன். உங்கள் விமர்சனத்துக்கான அளவுகோல் என்ன?
பதில்: என் விமர்சனத்துக்கான அளவுகோல் எந்தத் தத்துவமும் அல்ல. வாழ்க்கையைப்பற்றிய பார்வையை ஒரு நூல் எந்த அளவுக்கு நுட்பமாக வெளிப்படுத்துகிறது என்பதை அறிவதும் அதைப்பற்றி விரித்துரைப்பதும்தான் என் அளவுகோல். என் வாழ்வனுபவத்தின் அடிப்படையிலும் வாசிப்பனுபவத்தின் அடிப்படையிலும் அந்த அளவுகோலைப் பயன்படுத்திக்கொள்கிறேன்.

கேள்வி: ஒரு விமர்சகனாக விலகிய நிலையில் உங்கள் சிறுகதைகளை நீங்களே மதிப்பிடும்போது முக்கியமானதாக நினைக்கும் பத்து சிறுகதைகளைப் பட்டியலிட முடியுமா?
பதில்: என் தொடக்கக்கால சிறுகதைகளில் முள், பேசுதல், ராதை, வடு, வண்டி ஆகியவற்றையும் சமீபத்திய சிறுகதைகளில் ஜெயம்மா, ஆறு, சூறை, கிணறு, வெளியேற்றப்பட்ட குதிரை ஆகியவற்றையும் முக்கியமான சிறுகதைகளாகப் பட்டியலிடலாம்.

***

தன் விவரக் குறிப்பு

சொந்தப்படைப்புகள் விவரம்

சிறுகதைத்தொகுதிகள்

1. வேர்கள் தொலைவில் இருக்கின்றன( 1987- காவ்யா பதிப்பகம்)
2. பாவண்ணன் கதைகள் ( 1990- அன்னம் பதிப்பகம்)
3. வெளிச்சம் ( 1990- மீனாட்சி பதிப்பகம்)
4. வெளியேற்றம் ( 1991- காவ்யா பதிப்பகம்)
5. நேற்று வாழ்ந்தவர்கள் ( 1992- காவ்யா பதிப்பகம்)
6. வலை (1996- தாகம்)
7. அடுக்கு மாளிகை ( 1998- காவ்யா பதிப்பகம்)
8. நெல்லித்தோப்பு ( 1998- ஸ்நேகா பதிப்பகம்)
9. ஏழு லட்சம் வரிகள் ( 2001- காவ்யா பதிப்பகம்)
10. ஏவாளின் இரண்டாவது முடிவு (2002- தமிழினி பதிப்பகம்)
11. கடலோர வீடு ( 2004- காவ்யா பதிப்பகம்)
12. வெளியேற்றப்பட்ட குதிரை ( 2006- அகரம் பதிப்பகம்)

நாவல்கள்

1. வாழ்க்கை ஒரு விசாரணை (1987- புத்தகப்பூங்கா)
2. சிதறல்கள் (1990- தாகம்)
3. பாய்மரக்கப்பல் ( 1995- காவ்யா பதிப்பகம்)

குறுநாவல்கள்

1. ஒரு மனிதரும் சில வருஷங்களும் (1989,2005- அகரம் பதிப்பகம்)
2. இது வாழ்க்கையில்லை (1989- சரவணபாலு பதிப்பகம்)

கவிதை

1. குழந்தையைப் பின்தொடரும் காலம் ( 1997- விடியல் பதிப்பகம்)
2. கனவில் வந்த சிறுமி (2006-அகரம் பதிப்பகம்)
3. புன்னகையின் வெளிச்சம் (2007-சந்தியா பதிப்பகம்)

குழந்தைப்பாடல்கள்

1. பொம்மைக்கு இடம் வேண்டும் ( 1992- கலைஞன் பதிப்பகம்)

கட்டுரைகள்

1. எட்டுத் திசையெங்கும் தேடி ( 2002- அகரம் பதிப்பகம்)
2. எனக்குப் பிடித்த கதைகள் ( 2003- காலச்சுவடு பதிப்பகம்)
3. ஆழத்தை அறியும் பயணம் ( 2004- காலச்சுவடு பதிப்பகம்)
4. தீராத பசிகொண்ட விலங்கு ( 2004- சந்தியா பதிப்பகம்)
5. எழுத்தென்னும் நிழலடியில் ( 2004- சந்தியா பதிப்பகம்)
6. மலரும் மணமும் தேடி (2005- சந்தியா பதிப்பகம்)
7. வழிப்போக்கன் கண்ட வானம் (2005- அகரம் பதிப்பகம்)
8. இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள் (2006- சந்தியா பதிப்பகம்)
9. நதியின் கரையில் (2007- எனி இந்தியன் பதிப்பகம்)
10. துங்கபத்திரை (2008- எனி இந்தியன் பதிப்பகம்)

மொழிபெயர்ப்புகள்

(கன்னடத்திலிருந்து)
1. கன்னட நவீனக் கவிதைகள (1989)f
2. பலிபீடம் (1992)
3. நாகமண்டலம் (1993)
4. மதுரைக்காண்டம் (1994)
5. வினைவிதைத்தவன் வினையறுப்பான் (1995)
6. புதைந்த காற்று (1996)
7. ஊரும் சேரியும் (1996)
8. கவர்ன்மெண்ட் பிராமணன் (1998)
9. பசித்தவர்கள் (1999)
10. வட கன்னட நாட்டுப்புறக்கதைகள் (2001)
11. அக்னியும் மழையும் (2002)
12. பருவம் (2002)
13. ஆயிரம் மரங்கள் ஆயிரம் பாடல்கள (2004)
14. நூறு சுற்றுக் கோட்டை (2004)
15. கல் கரையும் நேரம்
16. ஓம் நமோ (2008)

ஆங்கிலத்திலிருந்து

1. நீர்யானை முடியற்றதாக இருந்தபோது (1998)


mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி