பாலாற்றில் இனி கானல் நீர்தானா ?

This entry is part [part not set] of 32 in the series 20060210_Issue

கோ.ஜோதி


“பஞ்சபாண்டவர்கள் கட்டில் காலைப்போல மூன்று பேர் என்று சொல்லி இரண்டு விரலைக்காட்டி ஒன்று என்று எழுதி அதையும் அழித்தானாம் ஒருவன்” என்ற வழக்கு ஒன்று கிராமப்புறங்களில் உண்டு. இதைப்போலத்தான் “பாலாறு” பிரச்சினையும். கி. பி. 1141ம் வருடம் துவங்கிய காவிரிப் பிரச்சினை 2006ம் வருடமும் நீடித்திருப்பதைப் போன்றுதான் பாலாற்றுப் பிரச்சினையும் 1955ம் வருடம் துவங்கி இன்று மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 1960க்குப்பிறகு பாலாற்றில் ஓடிக்கொண்டிருப்பது வெறும் “கானல்நீர்”தான். எப்பொழுதாவது பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் உண்டு. இருப்பினும் பாலாற்று வடிநிலப்பரப்பு மிகமிக முக்கியமானது. இதன் வடிநிலப்பரப்பு 12125 ச.கி.மீ. நமக்குக் கிடைத்தால் பாலாற்றின் மூலம் தமிழகத்திற்க 77 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வேண்டும். வடிநிலப்பரப்பிலும், தண்ணீர் அளவிலும் இது காவேரிக்கு அடுத்தபடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் காவிரியைப் போன்றே பாலாறும் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கிறது.

1955ம் வருடம் ஷனவரி 8ந் தேதி வடாற்காடு, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் மாநாட்டின் தலைவராக இருந்த ஏ. எஸ். அய்யங்கார் என்பவர் இந்தியப் பிரதமர், நீர்ப்பாசன அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் திட்டக்கமிஜன் தலைவர் ஆகியோருக்கு அனுப்பிய மனு ஒன்றில், தமிழக, கர்நாடக அரசுகள் 1892ல் ஏற்படுத்திக்கொண்ட பாலாறு பிரச்சினை பற்றி ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தை மீறி கர்நாடக அரசு அதன் எல்லையில் உள்ள பேதமங்கலம் என்ற பெரிய ஏரியின் கரையை 9 அடி உயர்த்துவதற்கு பதிலாக 18 அடி உயர்த்திக்கட்ட முனைகிறது. இதேபோல் பேதமங்கலம் ஏரிக்கு கீழ் 2000 மிலியன் கன அடி கொள்ளவு கொண்ட ராம்சாகார் என்ற ஒரு ஏரியையும் நிர்மாணித்து வருகிறது. இதனால் வடாற்காடு, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்றும், இதுபற்றிய ஒருவெள்ளை அறிக்கையை கர்நாடக அரசு வெளியிட மத்திய அரசு பணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஆனால் இவைகளையெல்லாம் கர்நாடக அரசு மீறி செயல்பட்டது.

அடுத்து பாலாற்றின் வடிநிலப்பகுதியில் சுமார் 700 தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இவைகளின் கழிவுநீர் பாலாற்றிலும், நிலங்களிலும் விடப்படுகிறது. இதனால் பாலாறு பாழாக்கப்படுவதுடன் பாலாற்றின் வடிநிலப்பகுதிகளில் உள்ள பல கிராமங்கள், விவசாயக் கிணறுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த 20 வருடங்களாக 11,000 ஹெக்டேர் நிலங்களுக்க மேல் பாதிக்கப்பட்டதோடு, ஏராளமான பொருளாதார இழப்புகள், சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளன.

இங்கு அமைக்கப்பட்டு சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக இல்லை. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் எஸ். ஷனகராஷன் என்பவரது முயற்சியால் 2003ல் ஒரு கருத்தரங்கம் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் தலைமையில் நடத்தப்பட்டு, ஒரு குழு அமைக்கப்பட்டது. இதில் தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள், விவசாயிகள், தொண்டு நிறுவனங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போன்ற அமைப்புகளின் குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தக் குழுவினர் இதுவரை 8 முறை இணக்கமாக கலந்துபேசி சுற்றுச்சூழல் பாதிப்பினை முடிவுக்குக்கொண்டு வர எண்ணியுள்ளனர். 5 ஆயிரம் கோடி ஏற்றுமதி மதிப்பும், 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கொடுக்கும் இத்தொழிற் சாலைகள் மிக முக்கியமானவை. ஆனால் கண்ணை விற்றுதான் சித்திரம் வாங்க வேண்டும் என்பதில்லை. தமிழ்நாடு சுற்றுச்சூழல் வாரியம் முறையாக செயல்பட்டால் பாலாறு வடிநிலம் மாசுபடுவதைத் தடுக்கமுடியும்.

பாலாற்றில் ஏற்பட்டுள்ள அடுத்த பாதிப்பு பல வருடங்களாக நடைபெற்று வரும் “மணல் கொள்ளை”. பாலாற்றின் நீரோட்டம் என்பது 30 அடியிலிருந்து 40 அடிவரை உள்ளது. இந்த நீரோட்டத்தை பாலாற்று மணல்தான் தேக்கிவைத்துள்ளது. இதுதான் பாலாற்றின் சிறப்பம்சம். ஆனால் இன்று பாலாற்றில் வாணியம்பாடி துவங்கி பாலாறு கடலல் கலக்கும் புதுப்பட்டினம் வரை பல இடங்களில் முறையின்றி மணல் அள்ளப்பட்டு வருகிறது. முதலில் தனியார் செய்து வந்ததை தற்போது அரசே பொதுப்பணித்துறை மூலம் செய்துவருகிறது. மருமகள் அல்லது மாமியார் இதில் யார் உடைத்தாலும் குடம் குடம்தானே ? பாலாற்றின் மூலம் தண்ணீர் பெறும் 317 ஏரிகளின் நிலை இன்று கேள்விக்குறியாகி வருகிறது. பாலாற்றிலிருந்து செல்லும் 606 ஆற்றுக் கால்வாய்களின் கதியும் இதுதான். பாலாற்றின் மணல் கொள்ளையால் இப்பகுதிகளில் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள், விபத்துகள், நுண்ணுயிர், நுண்தாவரம் அழிப்பு, குடிநீர்ப்பிரச்சினை போன்றவைகள் ஏற்பட்டுள்ளன. பாலாற்றிலும், பாலாற்றின் கரைகளிலும் ஏராளமான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கிணறுகள் உள்ளன. மணல் கொள்ளையால் இந்தக் கிணறுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது ஏற்பட்டுள்ள ஆந்திர அரசின் பாலாற்று அணைத்திட்டம் உயிர்மூச்சுடன் மட்டுமே இருக்கும் பாலாற்றை சவமாக்கும் பிரச்சினையாகும். 45 கி.மீ. தூரம் மட்டுமே ஓடும் ஆந்திரப் பகுதியில் ஏராளமான தடுப்பணைகள் முன்னமேயே கட்டப்பட்டுள்ளன. தற்போது மேலும் 30 கோடி செலவில் ஒரு தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தடுக்க வேண்டும்.

• காவிரி டெல்டாப் பகுதிக்கு அடுத்தபடியாக தமிழகத்திற்கு அதிக நெல் விளைச்சலைத் தருவது பாலாறு வடிநிலப்பகுதியாகும்.

• காவேரிப்பாக்கம் ஏரி, துளசி மாமண்டூர் ஏரி, தென்னேரி, செங்கல்பட்டு கொளவாய் ஏரி போன்ற பிரம்மாண்டமான ஏரிகள் பாலாறு பகுதியில்தான் உள்ளன.

• பாலாறு வடிநிலப்பகுதியின் நிலத்தடி நீர் வளம் மிக முக்கியமானது.

• பாலாற்றின் கடைமடைப்பகுதியான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்போரூர் பகுதிகளின் விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பங்கள் பாலாற்றின் நீர்வளத்தை நம்பியுள்ளன.

இந்நிலையில் பாலாற்றில் ஆந்திர அரசு கட்டவிருக்கும் அணையில் தமிழகத்திற்கு மிகப்பெரும் கேடு ஏற்படும்.

காவிரிப் பிரச்சினையைப்போல் இல்லாமல், பாலாற்றுப் பிரச்சினையிலாவது தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து, விவசாயிகள், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்துவது மிக அவசியம்.

—-

jothimids@yahoo.co.in

Series Navigation

கோ. ஜோதி, ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்.

கோ. ஜோதி, ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்.