பார்வை–கொங்கு மண்டல கூத்துக் கலை

This entry is part [part not set] of 26 in the series 20020421_Issue

வெளி ரெங்கராஜன்


பன்மைத்தன்மை கொண்ட தமிழ்க் கலாச்சார மரபுகள் பேணிப் பாதுகாக்கப்பட்ட ஒரு காலகட்டத்திலிருந்து நாம் விலகி கலாச்சாரம் என்கிற பெயரில் அதிகார வர்க்க மற்றும் மத்திய வர்க்க மதிப்பீடுகளே தமிழ் இயக்கங்களாலும், ஊடகங்களாலும் மீண்டும் மீண்டும் முன்நிறுத்தப்படுகிற ஒரு நிலையையே நாம் பார்க்க முடிகிறது, வாய்மொழிக் கதைகள், இசைப்பாடல்கள், தொன்மங்கள், ஒப்பாரிப் பாடல்கள், பேயாட்டம், சாமியாட்டம், திருவிழா கூத்துகள் என பல்வேறு புலங்களில் கலாச்சார செயல்பாடுகள் விரிவடைந்த கால கட்டங்கள் நம்மிடையே உண்டு. அடித்தள மற்றும் குற்றப் பரம்பரை வாழ்வைச் சொல்லும் பள்ளு, நொண்டி நாடகங்களும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தவைதான். பெருங்கதையாடல்களை வழிபடும் போக்கு என்பது பின்னர் வந்த இயக்கங்களாலேயே உருவாக்கப்பட்டது. இதனால் நம்முடைய சூழலின் இயல்பான கதையாடல்களும், வரலாற்றுப் பின் புலங்களும் அவைகளின் வழி வெளிப்பட்ட அழகியல் எழுச்சிகளும் நீர்த்துப்போனதான ஒரு தோற்றமே நாம் காணக் கிடைக்கிறது. இந்நிலையில் அண்மையில் ஈரோட்டை அடுத்த மொடக்குறிச்சியில் அல்அமீன் கல்லூரி வளாகத்தில் பாதம் அமைப்பின் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெற்ற கொங்குநாட்டு கூத்துக்கலை பற்றிய பயிலரங்கு கொங்கு வட்டார சிறுகதையாடல்களின் பல்வேறு அழகியல் தன்மைகளைப் புலப்படுத்தி கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலோடு ஒரு நேரடி அறிமுகம் கொள்ள வகை செய்தது.

கூத்து வடிவங்களைப் பொறுத்தவரை தமிழ்ச்சூழலில் தென் மாவட்டக் கூத்து வடிவங்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட அளவு மற்ற பகுதி வடிவங்கள் முன்னிலை பெறவில்லை. இது திரும்பவும் அரசியல் கலாச்சார போஷகர்களின் சார்புத்தன்மை குறித்த விமர்சனமாகவே அமையும். வேர்களைத் தேடுதல் மற்றும் நாட்டுப்புறவியல் ஆய்வுகள் குறித்த கவனங்கள் பெருகிவரும் இன்றைய காலகட்டத்தில் முன்னுரிமை பெறாத கலாச்சார இனக்குழுக்களின் பிரதிகளையும், கதையாடல்களையும், நிகழ்வுகளையும் எதிர்கொள்வது என்பது ஒரு அழகியல் அனுபவமாகவே கொள்ளப்படும். அவ்வகையில் கொங்கு நாட்டுப் பாரம்பரியக் கூத்து வடிவிலான பொன்னர்-சங்கர் கதை, மதுரைவீரன் கதை, காத்தவராயன் கதை, பன்றிமலைக் குறவன் கதை ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் பாடல் வடிவிலும், நிகழ்வு மூலமாகவும் காலையிலிருந்து தொடங்கி இரவு முழுவதுமாக வெவ்வேறு பின் புலங்களில் அங்கு முன் வைக்கப்பட்டன. உடுக்கை, கஞ்சிரா இவற்றின் துணையோடு பாடல் வடிவில் கூத்துக் கலைஞர்கள் சரளமாக கதைகளை சொல்லிக்கொண்டு வந்தபோது பார்வையாளர்களிலிருந்து ஒரு நடுத்தரவயதுப்பெண் உணர்ச்சி மேலிட சாமி வந்து ஆடியது இப்புனைவு சார்ந்த நம்பிக்கைகள் வாழ்வை இப்புனைவின் தொடர்ச்சியாக மாற்றியிருப்பதை உணரமுடிந்தது.

பொன்னர் – சங்கர் சகோதரர்களின் வீர உரையாடல்கள், சுற்றத்தாரின் வஞ்சனைகள், சகோதரிகளின் துயரம், போரில் மரணம் என கொங்கு வட்டார வரலாற்றினை தொட்டுச் செல்லும் பொன்னர் – சங்கர் கதையையும், காத்தவராயன்-ஆரியமாலா சந்திப்பு, தாய் மகன் வாக்குவாதம் என நீளும் காத்தவராயன் கதையையும், காலனீய அதிகாரத்தின் குரூரமான சட்டங்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த பன்றி மலைக் குறவன் கதையையும் பாடல் வடிவில் உடுக்கு ஒலியுடன் ஒரு சரளமான ஓட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்தது பல மன அதிர்வுகளை எழுப்புவதாக இருந்தது. கூத்துக் கலைஞர்கள் வெறும் பாடல் ஆற்றுபவர்களாக மட்டுமல்லாமல் காலம் கடந்த உணர்வுகளின் ஆழ்ந்த காயங்களையும், நெகிழ்வுகளையும் வேதனைகளையும் நினைவு அடுக்குகளிலிருந்து வெளிக் கொணர்பவர்களாக உருமாற்றம் கொண்டனர்.

சிங்கம் இருக்குதென்று சின்னண்ணா

என்றிருந்தேன்.

சிங்கம் எங்கொளிந்தாய்

திகில் வந்து சேர்ந்திப்போ

என்ற சகோதரிகளின் ஓலம் வளாகத்தை நிறைத்திருந்தது. உணர்வுகளின் அழுத்தம். பாடல்களின் செறிவு, வெளிப்பாட்டின் சரளம் எல்லாம் சேர்ந்து வரலாறு மீள் புனைவு கொள்ளும் ஒரு அரிய பின்புலத்தை வழங்கிக் கொண்டிருந்தன. இதே போல் இரவில் கூத்தாக நிகழ்த்தப்பட்ட பொன்னர் – சங்கர் கூத்து நிகழ்வும், மதுரைவீரன் கூத்து நிகழ்வும் அடித்தள மக்கள் வாழ்வியலின் வெளிப்படைத்தன்மைகள், உணர்ச்சிகளுக்கு பலியாதல், பாலியல் தன்மைகள், கொண்டாட்டம், தலித் எழுச்சி என பல்வேறு முகங்கள் கொண்டிருந்தன.

மறுநாள் இந்தக் கதையாடல்கள் மற்றும் கூத்து நிகழ்வுகளின் அழகியல் குறித்த உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த உரையாடல்களில் கவனம் பெற்ற சில விஷயங்களாக பின்வரும் விவாதங்களைக் குறிப்பிடமுடியும்.

1. ஒரு செறிவான பின்புலம் கொண்ட கொங்கு நாட்டுக் கூத்து சந்திக்க நேரும் புறக்கணிப்பின் கலாச்சாரக் காரணிகள் எதிர்கொள்ளப்பட வேண்டியவை. ஆழ்ந்த ஈடுபாடும், சொல்வளமும் கொண்ட அந்த கூத்துக் கலைஞர்களின் வாழ்நிலை அவலங்கள் தீவிர கவனத்தைக் கோருபவை.

2. கூத்துக்களின் இடையே வெளிப்படும் சில பாலியல் தன்மைகளைக் கண்டு முகம் சுளிக்கும் சில பார்வையாளர்களின் போக்கு பரிசீலனைக்குரியது. இவை இறுக்கங்களற்ற அடித்தள மக்களின் அழகியல் வெளிப்படைத் தன்மைக்கு எதிராக இருப்பது சுட்டிக் காட்டப்பட்டது.

3. இந்துத்வா கொள்கைகளின் மூலம் ஒரு கலாச்சார பாசிசத்தை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதாவைப் போலவே தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களும் தமிழ்ப் பண்பாடு என்கிற பெயரில் தமிழ் இன மக்களின் வேறுபட்ட பண்பாட்டுக் கூறுகளையும், தனித்தன்மைகளையும் அங்கீகரிக்காமல் நாட்டுப்புற தொன்மங்கங்களுக்கும், கதையாடல்களுக்கும் எதிராக கலாச்சாரத்தை திசைமாற்றம் செய்து கொண்டிருப்பது.

4. இந்தக் கூத்து வடிவங்கள் இதே வடிவில் தொடர்ந்து முன் நிறுத்தப்பட வேண்டுமா அல்லது நிகழ்கால மதிப்பீடுகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் மறுநிர்மாணம் செய்யப்படவேண்டுமா என்பது.

ஆனால் அடித்தள மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் ஒரு செறிவான பிரதியை இவை வழங்குவதை யாரும் கண்கூடாகப் பார்க்க முடியும். சிறுசிறு இனக் குழுக்களின் அழகியல் வெளிப்பாடுகள் அதிக கவனம் பெறும் இன்றைய பின் நவீனத்துவ காலகட்டத்தில் இவை தங்களுடைய இயல்பான வடிவிலேயே எதிர்கொள்ளப்பட வேண்டும் என்பதே இன்றைய குரலாக இருக்கமுடியும்.

***

Series Navigation

வெளி ரெங்கராஜன்

வெளி ரெங்கராஜன்