ஆல்பர்ட்
எல்லோருக்கும் பார்த்திப புத்தாண்டு வாழ்த்துகள்.
தாரண ஆண்டு முடிவடைந்து பார்த்திப ஆண்டு பிறந்துள்ளது சித்ரபானு துவங்குவதற்கு அடுத்த நாள் அறிவன்.
அந்த வாரத்தில் ஞாயிறுக்கு முதல் நாள் காரியன்று விடுமுறை நாளாகும். சுறவம், கும்பம், மீனம்,
மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை என்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?
இப்படித்தான் தமிழ் பத்தி பேசினாலே நம்மில் பலருக்கு புரிய மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.
யாரையும் குறை சொல்லமுடியாது. தமிழ் பின் புலம் அப்படி. யார் என்ன செய்ய முடியும் ?
தொடக்கப்பள்ளி துவங்கி கல்லூரி வரை மாணவராகட்டும், போன வருடம் என்ன வருடம் என்று
கேட்டுப்பாருங்க ? 2004 அப்டான்னுதான் சொல்லுவாங்க. எத்தனை பேர் தமிழ் வருடத்தைச் சொல்லுவாங்க ?
அனேகமா யாரும் சொல்ல மாட்டாங்க. தமிழ் சொல்லிக்குடுக்கிற ஆசிரியர்களிடம் கூட கேட்டுப் பாருங்க ?
நூத்துக்கு அய்ந்து சதவிகிதம் சொன்னால் அதிகம். இவ்வளவு ஏன் ? எந்தத் தமிழ் நாளிதழாவது தமிழ்ல
இன்ன வருடம்னோ, தேதின்னோ போடுறது உண்டா ? கிடையாது. காரணம் என்ன ?
உலகம் முழுக்க ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரே வருடம், மாதம், நாள், கிழமைகளைத் தான் ஏற்றுக்கொண்டு
நடைமுறையில் வழக்கத்தில் கொண்டிருக்கிறோம், என்பதுதான் உண்மை. இதில் யாரும் விதிவிலக்கில்லை.
தமிழ்ப் புத்தாண்டு, மலையாள விஷு வருடப் பிறப்பு, சீக்கியர்களின் வைசாகி எனும் வருடப்
பிறப்பு, சிங்களவர்களின் வருடப் பிறப்பு, தெலுங்கு வருடப்பிறப்பு என பல வருடப் பிறப்புகள் மார்ச் இறுதி
அல்லது ஏப்ரல் மத்தியில்தான் கொண்டாடப்படுகின்றன.
‘கரு ‘, ‘ கயரு ‘, ‘ களஉயரு ‘ அப்டான்னா என்ன ? ‘கரு ‘ன்னா தெரியும். ‘ கயரு ‘ ன்னா தெரியும்.
அது என்ன ‘ கள உயரு ‘ இப்படி எல்லாம் சொல்லி எங்கள சோதிக்காதீங்க ?! அப்டாங்கிறீங்களா ?
நீங்க நெனைக்கிற கரு, கயரு இது கிடையாது. இதெல்லாம் தமிழ் எழுத்துக்களில் வரும் தமிழ் எண்கள்.
காதுல பூ வைக்கிற சமாச்சாரமெல்லாம் இல்லை. ஒரு ‘கரு ‘ கைமாத்தா கொடேன், என்றால் 15 ரூபா
கைமாத்தா கொடேன் என்றுதான் பொருள்.
அந்தக் காலத் தமிழ்! அதுக்குன்னு இந்தக் காலத்துல,ஒரு ‘கரு ‘ கைமாத்தா கொடுன்னு
கேக்கக்கூடாதவங்ககிட்ட கேட்டால், நல்லா மாத்துதான் கிடைக்கும் இல்லீங்களா ?
தமிழ் எண் வடிவங்களைக் கொண்டு கூட்டல், கழித்தல், வகுத்தல் என்ற கணித முறை நடை முறைப்படுத்துவதில்
கடினமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இப்போது போல அந்தக்காலத்தில் கணினி எல்லாம் கிடையாதே. எல்லாம் மனக்
கணினிதான்! மனக்கணிப்பில்தான் எல்லாமே… இருந்திருக்கின்றன. மனம் தான் கணினி.
மில்லியனும், பில்லியனையும் அன்றைய தமிழன் கணக்கிட்ட முறையைப் பாருங்கள்!
10 கோடி .. 1 அற்புதம்
10 அற்புதம் .. 1 நிகற்புதம்
10 நிகற்புதம் .. 1 கும்பம்
10 கும்பம் .. 1 கணம்
10 கணம் .. 1 கற்பம்
10 கற்பம் .. 1 நிகற்பம்
10 நிகற்பம் .. 1 பதுமம்
10 பதுமம் .. 1 சங்கம்
10 சங்கம் .. 1 வெள்ளம் அ சமுத்திரம்
10 வெள்ளம் .. 1 அந்நியம் அ ஆம்பல்
10 அன்னியம் .. 1 மத்தியம் அ அர்த்தம்
10 மத்தியம் .. 1 பரார்த்தம்
10 பரார்த்தம் .. 1 பூரியம்
தற்போது புழங்கும் தசம எண்வரிசை இந்தியாவில் கருவாகி உருவாகிப், பின்
அரேபிய நாடுகளின் வழியே ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றது என்பது
எண்ணியல் அறிஞர் கருத்தாகும். வானவியலில் மிகுந்த முன்னேற்றமடைந்திருந்த
இந்தியாவில் மிகப்பெரிய எண்களுக்கும் தேவையிருந்தது. குப்பையைக் கிளறியதில்
கிடைத்தது இது:-
விந்தம் – 64,00,000
நியுதம் – மில்லியன்
மகாகும்பம் – பில்லியன்
கற்பம் – பத்து பில்லியன்
கடல் – பத்தாயிரம் பில்லியன்
பரார்த்தம் – ஒரு லட்சம் பில்லியன்
நிகற்பம் – பத்து டிரில்லியன்
மகாகிதி – ஓராயிரம் டிரில்லியன்
மகாகோணி (மகாக்ஷோணி) – பத்து டிரில்லியன்
மகாக்ஷிதி – ஆயிரம் டிரில்லியன்
சோபம் – பத்தாயிரம் டிரில்லியன்
சாகரம் – பத்து குவாடிரில்லியன்
மகாசாகரம் – 18 சாகரம்
மகாசோபம் (மகாக்ஷோபம்) – நூறாயிரம் டிரில்லியன்
மகாபூரி – பத்து குவின்டில்லியன்
கீழ்க்கண்ட *மிகப்பெரிய* எண்களை தமிழர்கள் புழக்கத்தில் புரளவிட்டுள்ளனர். ஆனால் அவை
எதைக் குறிப்பிட்டன என்பது தமிழறிஞர்கள் கருத்துரைத்தால் நன்று:
மகாதோரை
மகாநிகற்பம்
மகாமகரம்
மகாவரி
மகாவற்புதம்
மகாவுற்பலம்
பிரம்மகற்பம்
கமலம்
பல்லம்
பெகுலம்
தேவகோடி
விற்கோடி
மகாவேணு
தோழம்
பற்பம்
கணனை
தன்மனை
அபிதான சிந்தாமணி சொல்லும் எண்ணின் வகுப்பு (36 வகை):
ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், இலக்கம், பத்திலக்கம், கோடி,
பத்துக்கோடி, நூறுகோடி, அர்ப்புதம், கர்வம், மகாகர்வம், பதுமம்,
மகாபதுமம், சங்ம, மகாசங்கம், க்ஷோணி, மகாக்ஷோணி, க்ஷதி, மகாக்ஷதி,
க்ஷோபம், மகாக்ஷோபம், பரார்த்தம், சாகரம், பரதம், அசிந்தியம்,
அத்தியந்தம், அனந்தம், பூரி, மகாபூரி, அப்பிரமேயம், அதுலம்,
அகம்மியம், அவ்வியத்தம்.
இது தவிர யுகக்கணக்கு, தெய்வத்துள் வைக்கப்பட்டவர் (வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து) வயதுக்கணக்கு, வான்
கணக்கு, நிலக்கணக்கு, நுணுக்கக்கணக்கு, பின்னக்கணக்கு (முந்திரி ?), என்றெல்லாம் இருந்துள்ளன.
காரிநாயனார் கணக்கதிகாரத்தில் கொஞ்சம் காணலாம்.
நமக்கு இந்தத் தமிழ் வேண்டாங்கிறீங்களா ? நடைமுறையிலிருக்கிறதே நல்ல தமிழ்தான் என்ற முடிவுக்குச்
சட்டென்று வந்துவிடுவோம். சரி… தமிழ் ஆராய்ச்சிய அப்பறமா வச்சுக்குவோம்.
ஆண்டுக்கணிப்பு….!
அக்காலத்தில் சூரியனே பூமியை அல்லது மேருவைச் சுற்றிவருவதாக நம்பினார்கள்.
ஆகவே சூரியன் ஒருமுறை சுற்றிவரும் கால அளவு என்றே கருதினார்கள்.
இதனை சூரியனின் பெயரால் செளரமான ஆண்டுக்கணிப்பு என்று அழைத்தார்கள்.
இது 365.25+++ நாள்கால அளவு கொண்டது. செளரமான மாதங்கள் சாந்திரமான மாதப்
பெயர்களையும் முக்கிய திதிகளையும் பெற்றுக்கொண்டன.
செளரமான மாதங்கள் வானத்து விண்மீன்களின் அதாவது நட்சத்திரங்களின் பெயர்கள்
கொண்டே நிர்ணயித்தனர். தமிழ் மாதப் பிறப்பும் அதனையொத்து அமையும் ஆண்டுப் பிறப்பும்
கதிரவனின் இயக்கத்தைக் கொண்டே நம் முன்னோர் கணித்து, சூரியன் தன் பயணத்தை மேச ராசியில்
காலடி வைத்து உட் புகுகின்ற பொன் நாளே தமிழ்ப் புத்தாண்டின் துவக்க நாளாக அமைத்துள்ளனர்.
இன்னொன்றில் சந்திரன் பூமியைச்சுற்றும் காலத்தை அடிப்படையாகக்கொண்டது.
ஒரு அமாவாசையிருந்து மறு அமாவாசை வரைக்கும் கொண்ட கால அளவு.
இது 29.5 நாள்களைக் கொண்டது. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துடன்
சந்திரன் கூடியிருக்கும்போதே முழுநிலவு ஏற்படும்.
ஆகவே ஒவ்வொரு சாந்திரமான மாதமும் அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பெயரேலேயே
அழைக்கப்படலாயிற்று. சித்திரை, வைகாசி என்றெல்லாம் அப்படித்தான் ஏற்பட்டன.
பழங்காலத்திலேயே செளரமானத்தையும் சாந்திரமானத்தையும் இணணத்துவிட்டார்கள்.
இதன்படி தமிழ் மாதங்களை சித்திரை – மேட ஞாயிறு, வைகாசி – இடப ஞாயிறு, ஆனி – மிதுன ஞாயிறு,
ஆடி – கடக ஞாயிறு ,ஆவணி – சிங்க ஞாயிறு, புரட்டசி – கன்னி ஞாயிறு, ஐப்பசி – துலா ஞாயிறு
கார்த்திகை – விருச்சிக ஞாயிறு, மார்கழி – தனு ஞாயிறு, தை – மகர ஞாயிறு, மாசி – கும்ப ஞாயிறு
பங்குனி – மீன ஞாயிறு, என்றும் வழக்கத்தில் கொண்டிருந்திருக்கின்றனர்.
அதற்கு முன் விக்கிரமன் சகாப்தம், சாலிவாகன சகாப்தம், போன்று ஆண்டுகளைத் தொடர்ச்சியாக
எண்ணிக்குறிக்கும் முறையே இருந்திருக்கிறது. வைதிக முறையில் அமையும் பிரபவ, விபவ முதலான
ஆண்டுப் பெயர்கள் தமிழ்ப் பெயர்களும் அல்ல; வரலாற்று அறிவு பெறவும், காலம் கணக்கிடவும் ஏற்றதுமல்ல;
இருந்தபோதும் வடமொழியை வாயிலாக வைத்து பிரசவித்த வருடங்களைத்தான் தமிழ் வருடங்களாகப்
பாவித்து வருகிறோம் என்பது மிகக் கசக்கும் உண்மை.
திருவள்ளுவராண்டு….!
யாரும் நான் திருவள்ளுவர் ஆண்டு 1900ல் பிறந்தேன் என்று சொல்லிக்கொள்வதில்லை.கல்யாணப்பத்திரிகைகளில்
கூட திருவள்ளுவர் ஆண்டுவரிசையைப் பயன்படுத்துவதில்லை.
தூரகிழக்கு தென்கிழக்காசிய நாடுகள் அனைத்துக்குமே சொந்த நாட்காட்டிகள் (காலண்டர்கள்)
இருக்கின்றன.
ஜாவாவில் சக ஆண்டு.
ஜப்பானில் சக்கரவர்த்திவம்சத்தின் தொடக்கம்.
தாய்லந்தில் பெளத்த ஆண்டு.
சீனாவுக்கு கான்ஃபூஷியஸ் ஆண்டு, தாஓ ஆண்டு முதலியவை.
இருப்பினும் சீனாவில் அதிகம் பயில்வது க்ரெகோரியன் காலண்டர்தான்.
திருவள்ளுவர் ஆண்டு என்று தமிழ்நாட்டரசுசொன்னாலும் அது இன்னும் நடைமுறையில் இல்லை.
யாரும் நான் திருவள்ளுவர் ஆண்டு 1900ல் பிறந்தேன் என்று
சொல்லிக்கொள்வதில்லை.கல்யாணப்பத்திரிகைகளில் கூட திருவள்ளுவர் ஆண்டுவரிசையைப் பயன்படுத்துவதில்லை.
நம்மிடமும் பன்னிரண்டு ஆண்டுகள் கொண்ட வட்டமொன்று இருக்கிறது.
இப்போது அது வழக்கில் இல்லை. அதனை இப்போது மாமாங்கம் என்று
குறிப்பிடுகிறோம்.
வியாழன்/குரு பன்னிரண்டு ராசிகளிலும் சஞ்சரித்து மீண்டும் ஆரம்பித்த
இடத்துக்கே வரும் கால அளவு ஒரு மாமாங்கம்.
மனித வாழ்க்கையில் ஒரு மாமாங்கம் என்பது முக்கியமான அளவுகோல்.
பன்னிரண்டு வயதில் திருமணம் செய்வார்கள்.
தமிழாண்டுப் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதம். தற்போது நடைமுறையில் உள்ள தமிழாண்டு 19 வது ஆண்டாகும்.
அறுபது ஆண்டுகள் பட்டியலை கீழே காணலாம்.
கடந்த 85 ஆண்டுகளுக்கு முன்னரே, ஆண்டுக் கணக்கு மேற்கொள்ளத் திருவள்ளுவர் பிறந்த ஆண்டைத் தீர்மானித்தது.
வள்ளுவராண்டு என்று அவர்கள் கணித்திருப்பதுகூட தவறான கணிப்புத்தான், என்று சொல்லுவாரும் உண்டு.
பொதுவாக ஆண்டுக் கணக்கு நம் முன்னோர்களால் எப்படி எப்படியோ கணக்கிடப்பட்டு பின்பற்றப்பட்டு வந்திருந்தாலும்
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே அதாவது 3102 லிருந்து ஒரு ஒழுங்குசெய்யப்பட்டு வரையறுக்கப்பட்ட ஆண்டுக் கணக்கு
கடைப்பிடிக்கப்பட்டு வந்திருப்பதை அறிய முடிகிறது.
ஆண்டுக் கணக்கை ‘ அப்தம் ‘ என்று வழங்கிவந்திருக்கின்றனர். கி.மு.3102 லிருந்து தொடங்கப்படுவதை
‘ கலியப்தம் ‘ என்று நெறிப்படுத்தப்பட்டு நடப்பிலிருந்தது. தமிழர்களிடம் மட்டுமல்லாது சில பண்டைய
இனங்களான மாயா, சுமேரியன் ஆகியோரிடமும் இருந்து வந்திருக்கிறது. இதன் பின்னர் பல
அப்தங்கள் ஏற்பட்டன. விக்கிரமாதித்தன் பெயரால் தோன்றியது விக்ரமாப்தம் அல்லது விக்ரமாங்க சகாப்தம்
ஆகும். கி.பி. 78ல் ஏற்பட்டது ‘ சக சகாப்தம் ‘ஆகும். இதுதான் பாரதத்தின் பெரும்பகுதியிலும்
தென்கிழக்காசியா பகுதிகளிலும் பரவியது. இன்றும் பயன்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
பஞ்சாங்கம்….!
புத்தாண்டுக் காலையில் திருக்கோயில்களில் பஞ்சாங்கம் வாசிக்கிற பழக்கமும் கடைப்பிடிக்கப்படுகிறது.
பஞ்சாங்கம் வாசிப்பதிலும் நம் முன்னோர்கள் ஒருவித அர்த்தம் உள்ளடக்கி வைத்துள்ளனர்.
பஞ்சாங்கம் என்பது பஞ்ச… அங்கம் என்ற இரு தனிச் சொல்லின் சொற்சேர்க்கையாகும்.
இதன் பொருள் அய்ந்து உறுப்புக்களான வாரம் அல்லது கிழமை, திதி, நட்சத்திரம், யோகம்,
கரணம் என்னும் அய்ந்து உறுப்புக்களைக் கொண்டது. வாரம் அல்லது கிழமை என்பது நாளைக் குறிக்கும்.
இது அடுத்தடுத்து வருவதால் பஞ்சாங்கத்தில் முதலிடம் பெறுகிறது. கிழமைக்கு உரிமை என்று பொருள்.
ஞாயிறு ( சூரியன் ) திங்கள் ( சந்திரன் ), செவ்வாய் ( மார்ஸ் எனப்படும் செவ்வாய்க் கிரகம் ),
புதன் ( மெர்க்குரி ), வியாழன் ( ஜூப்பிடர் ), வெள்ளி ( வீனஸ் ), சனி ( சாட்டர்ன் எனும் சனிக் கிரகம்)
எனும் ஏழு கிரகங்களின் பிரதிபலிப்பாகத்தான் வாரத்தின் ஏழு நாட்களைப் பெயர் சூட்டி வழக்கில் கொண்டு
வந்துள்ளனர் நம் முன்னோர் என்பதை நம்மில் பலர் அறிவோம்.
தமிழ்ப்புத்தாண்டு புலருகிற நாளுக்கு முன் தினம் இரவு தங்கள் படுக்கையறையில் நிலைக்கண்ணாடி முன்பாக
ஒரு வெள்ளித் தட்டில் அல்லது சுத்தமான தட்டில் பலவகையான பழங்கள், தங்கள் வீட்டில் உள்ள பணம்…
காசுகள், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்து விடுவார்கள்.
காலையில் துயில் நீங்கி எழும்போது அந்தத் தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் பார்வை பதிய கண்
விழிப்பார்கள். இப்படிச் செய்வதால் அந்தப் புத்தாண்டில் செல்வம் குறைவிலாது கிடைக்கும் என்ற நம்பிக்கை
காணப்படுகிறது. தமிழகத்தில் இந்தப் பழக்க வழக்கம் பெரும்பாலான இந்துக் குடும்பங்களில் நிலவுவதை
இன்றும் காணமுடியும்.
தமிழ்ப்புத்தாண்டு மலரும் பொன் காலைப் பொழுதில் தமிழர்கள் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து
தூய ஆடை அணிந்து கதிரவனை வணங்குகின்றனர். சிலர் தங்கள் குலதெய்வம் குடிகொண்டிருக்கிற
கோவில்களுக்குச் சென்று வழிபடுகின்றனர். விசேச ஆராதனை, அபிசேகங்கள் செய்து வழிபடுகின்ற
அதே நேரத்தில் வீட்டில் உள்ள பெரியோர்களிடம் ஆசி பெறுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தங்கள் வீட்டு உபயோகத்திற்கு ஒரு புதிய பொருளை வாங்கி அளிக்கின்ற பழக்கமும் சிலரிடம் காணப்படுகிறது.
தீபாவளி, பொங்கல் போல் தமிழ்ப்புத்தாண்டு அவ்வளவாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவதில்லை.
கோயில்களில் பஞ்சாங்கத்தைப் படித்து வரும் ஆண்டின் பலன்களைக் கூறுவார்கள். பெரும்பாலவர்கள்
கோயில்களுக்குச் செல்வர்.ஒரு சிலர் புத்தாடைகள் உடுத்திச் செல்வர். வீடுகளில் எளிமையான வகையில்
வழிபாடுகளுடன் சைவ உணவு வகைகளை உண்டு மகிழ்வர்.
தமிழகத்திலிருந்து வெளிவரும் பிரபலமான நாளிதழ்கள் எதிலும் தமிழ் ஆண்டு குறிப்பிடப்படுவதில்லை;
சிங்கப்பூரில் வெளிவரும் தமிழ்முரசு என்ற ஒரே ஒரு பத்திரிக்கையில் தமிழ் ஆண்டு, மாதம் என்று
பிரசுரிக்கப்பட்டு வந்தது. மலேசியாவிலிருந்து பல பத்திரிக்கைகள் வெளிவருகின்றது. அவற்றில் தமிழ் நேசன்
மட்டும் திருவள்ளுவராண்டு 2034, பிரமாதி ஆண்டு பங்குனி… தேதி எனவும் ஹிஜ்ரி 1424 மாதம், தேதி என
முதல் பக்கத்தில் வெளியிடுவதைக் குறிப்பிடலாம்.
நாளும் கோளும் எப்டி இருந்தாலும் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைவது அறிவு ஒன்றுதான். அறிவு
வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமைவது கல்வி. நம்மைக்ரைசேர்க்க வல்லது கல்வி மட்டுமே. கல்வியில்
முதலீடு செய்தல் நல்ல பலனைத் தரும். பார்த்திப ஆண்டு அதற்கான நல்ல தொடக்ககத்தைத் தரட்டும்.
என்ன ? உங்களிடம் தமிழ் நாள்காட்டி இல்லையென்ற கவலையா ?
கவலையை விடுங்கள்; இந்தச் சுட்டியை சொடுக்கினால்
நாள், நட்சத்திரம், நல்ல நேரம் சகலத்தையும் பார்க்கலாம்!
http://www.cs.utk.edu/~siddhart/tamilnadu/CAL/#YEARS
சென்னையில தெருத்தெருவாப் போய் பால் வியாபாரம் செய்தார். மொதல்ல கால் நடையா போய் வியாபாரம் செய்தார்.
அப்பறமா சைக்கிள், வேன் இப்படியா செய்து ஒரு பெரிய பால் பண்ணைக்கு அதிபரா ஆயிட்டார். அவரு தொழிலு
நகமும் சதையும் போல பாலும் தண்ணியுமா ஓஹோன்ணு வளர்ந்துருச்சு! பெரிய ஆளாயிட்டார். தமிழ் புத்தாண்டு
அன்னிக்கு அவரு தன்னோட வாழ்க்கையப்பத்தி ஒரு புத்தகம் வெளியிடப்போறதாச் சொன்னாங்க. புத்தகப் பேரு
என்னானு விசாரிச்சேன்.
‘ கலந்த கால ‘ நினைவுகள் அப்டாங்கிறார்! ?
புலம் பெயர்ந்து வாழும் பெரும்பாலான தமிழர்கள் இல்லங்களில் தமிழ் தவிற்க்கப்படுகிறது. இந்தப் புத்தாண்டு
தினத்திலிருந்தாவது அன்று முழுக்க வீட்டிலும் தமிழிலேயே பேசுங்கள். தங்கள் குழந்தைகளுக்கு ஒரு பாரதியையோ,
வள்ளுவனையோ அறிமுகப்படுத்துங்கள். இந்தப் புத்தாண்டிலிருந்தாவது நாள்தோறும் குழந்தைகளுக்கு சில ஆங்கிலச்
சொற்களுக்கான தமிழ் சொற்களை தவறாமல் சொல்லிக் கொடுங்கள்.
மெல்லத் தமிழ் இனி…. வெல்லத் தமிழாய்
இனிக்க இனிக்க இல்லங்களில் மலர்ந்து மணம் பரப்பட்டும்.
பார்த்திப ஆண்டு என்றழைக்கப்படும் இவ்வாண்டு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க, அவரவர்
விருப்புகள் நிறைவேற எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டி எனது இனிய வாழ்த்துக்களையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.
எண். தமிழ்வருடபெயர்கள் ஆங்கில ஆண்டு
1 பிரபவ 1987–1988
2 விபவ 1988–1989
3 சுக்ல 1989–1990
4 பிரமோதூத 1990–1991
5 பிரசோர்பத்தி 1991–1992
6 ஆங்கீரச 1992–1993
7 ஸ்ரீமுக 1993–1994
8 பவ 1994–1995
9 யுவ 1995–1996
10 தாது 1996–1997
11 ஈஸ்வர 1997–1998
12 வெகுதானிய 1998–1999
13 பிரமாதி 1999–2000
14 விக்கிரம 2000–2001
15 விஷு 2001–2002
16 சித்திரபானு 2002–2003
17 சுபானு 2003–2004
18 தாரண 2004–2005
19 பார்த்திப 2005–2006
20 விய 2006–2007
21 சர்வசித்து 2007–2008
22 சர்வதாரி 2008–2009
23 விரோதி 2009–2010
24 விருத்தி 2010–2011
25 கர 2011–2012
26 நந்தன 2012–2013
27 விஜய 2013–2014
28 ஜய 2014–2015
29 மன்மத 2015–2016
30 துன்முகி 2016–2017
31 ஹேவிளம்பி 2017–2018
32 விளம்பி 2018–2019
33 விகாரி 2019–2020
34 சார்வரி 2020–2021
35 பிலவ 2021–2022
36 சுபகிருது 2022–2023
37 சோபகிருது 2023–2024
38 குரோதி 2024–2025
39 விசுவாசுவ 2025–2026
40 பிராபவ 2026–2027
41 பிலவங்க 2027–2028
42 கீலக 2028–2029
43 செளமிய 2029–2030
44 சாதாரண 2030–2031
45 விரோதிகிருது 2031–2032
46 பரிதாபி 2032–2033
47 பிரமதீச 2033–2034
48 ஆனந்த 2034–2035
49 ராட்சச 2035–2036
50 நள 2036–2037
51 பிங்கள 2037–2038
52 காளயுக்தி 2038–2039
53 சித்தார்த்தி 2039–2040
54 ரெளத்திரி 2040–2041
55 துன்மதி 2041–2042
56 துந்துபி 2042–2043
57 ருத்ரோத்காரி 2043–2044
58 ரக்தாட்சி 2044–2045
59 குரோதன 2045–2046
60 அட்சய 2046–2047
—-
albertgi2004@yahoo.com
- தொடர்ந்து ஒலிக்கும் குரல் – (வெங்கட் சாமிநாதனின் உரையாடல்கள் )
- பெரியபுராணம் – 36
- நினைவிருக்கிறதா ?
- உயிர்த்தேன்
- வடகிழக்கில் ஒரு புதிய குரங்கினம் -100 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு-
- மனிதகுலம்: உலகின் மிகக்கொடிய சுரண்டல் கும்பல்-குற்றஞ்சாட்டுகின்றனர் விஞ்ஞானிகள்
- பூகோள காந்த துருவங்கள் இடமாற்றம், துருவ முனையில் விண்ணிற ஒளித் தோரணங்கள் [Geomagnet Poles Reversal, Arctic Auroras] (8)
- மீண்டும் வரும் நாட்கள் :மு.புஷ்பராஜன் கவிதைகள்
- அதிர்ச்சியும் ஆற்றாமையும் (சுகுமாரனின் மொழிபெயர்ப்புக் கவிதைகள்)
- பார்த்திப ஆண்டு உதயம்
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-6
- கீதாஞ்சலி (18) உன்னைத் தேடும் போது … ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- என்ட வீடும் அப்புன்டேயும் கறுப்பு
- அவளால்…!
- பரிமளத்திற்குப் பதில்மடல்
- தமிழவன் கட்டுரை பற்றி…
- இனவாத ஈவெரா ?
- அன்புள்ள ஆசிரியருக்கு
- பால்வினைத் தொழில்
- ஹினா- மட்சுரி
- ஆட்காட்டிப் புற்கூண்டில் வசிக்கும் இதயம்
- கலைந்துபோன ‘திராவிடஸ்தான் ‘ கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்! – 1
- ஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது!
- இருந்ததனால்….
- பாம்புகள்
- சேதி வந்தது
- சீதாயணம் ஓரங்க நாடகத்தின் பின்னுரை
- பிம்ப உயிர்கள் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
- மழலைச்சொல் கேளாதவர் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
- Pope John Paul II
- தமிழில் பிறமொழி கலத்தலும் திரைப்படத் தலைப்பும்
- கண்கள்
- தமிழ் அறியாத தமிழர்கள்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – சுபாஷ் சந்திர போஸ்
- சிந்திக்க ஒரு நொடி – விட்டு விடுதலையாகி
- சிந்திக்க ஒரு நொடி – சாஸனம் பொய்த்ததா, மானுடம் பொய்த்ததா ?
- இதற்காக இருக்கலாம்!
- பயணம்
- முன்னேறு
- மகள்…
- உயிரினினும் இந்தப் பெண்மை இனிதோ ?