பார்சலோனா -4

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


கவுதி- லா சக்ரதா •பமிலியா

“தேவாலயத்தின் உச்சியில் வானை நோக்கி அம்புபோல கட்டப்பட்டுள்ள கோபுரங்களின் அழகை கீழிருந்து பார்க்க சாத்தியமில்லை என்கிறபோது அவற்றின் நோக்கந்தான் என்ன?” என்று ஒரு முறை லா சக்ரதா •பமிலியாவின்(La Sagrada Familia-Holy Family) மூளையும் தந்தையுமாக இருந்த கட்டிடக்கலைஞர் கவுதியை(Antoni Gaudi) விசாரித்தபோது, அவை வானிலுள்ள தேவதைகளுக்காக கட்டப்பட்டன, உங்களுக்காக அல்லவென்று பதில் கூறியிருக்கிறார். உண்மையில் லா சக்ரதா •பமிலியா ஓர் அழகு தேவதை. எங்களது பார்சலோனா வாசத்தின் மூன்றாம் நாளை கவுதிக்காக ஒதுக்கியிருந்தோம். பார்சலோனியாவில் திரும்பியபக்கமெல்லாம், கவுதியைப் பற்றிதான் பேச்சு. உள்ளூர்வாசிகள், அப்பெருமைகளை முகத்தில் சுமந்து நடக்கிறார்கள். பின் நவீனத்துவத்தின் பிதாமகர்களில் ஒருவரென போற்றப்படும் கௌதியின் இயற்கையோடு கலந்த நவீனம், பார்சலோனாவெங்கும், அவரொரு அழகியல் உபாசகர் என்பதை வெளிப்படுத்துபவைகளாக உள்ளன. அவற்றுள் ஒன்று லா சாக்ரதா •பமிலியா. ஆக்ராவுக்குச் சென்று தாஜ்மகாலை பார்க்காமல் திரும்பினால் எப்படியோ அப்படி பார்சலோனாவுக்குச் சென்று லா சக்ரதா •பமிலியாவைப் பார்க்காமல் திரும்புவது.

பார்சலோனா என்றவுடன் பிக்காஸோ நினைவுக்கு வருகிறார், ஆனால் அவருக்கிணையாக போற்றப்படுகிற மற்றொரு பார்சலோனா கலைஞனான கவுதியை முதன்முதலாக நான் அறிய நேர்ந்தது இப்போதுதான். 1852ம் ஆண்டு பிறந்த கவுதியை (Antoni Gaudi) பார்சலோனியா நகரின் பிரம்மா எனலாம். நகரின் புகழ்பெற்ற கட்டிடக்கலைக் கல்விக்கூடமொன்றில் பயின்று பட்டம்பெற்றிருந்த கவுதி தொடக்கத்தில் ஜோசப் •போன்செரே மர்த்தரொல் என்ற கட்டிடக்கலைஞரோடு பணிபுரிந்திருக்கிறார். எனினும் எவரையும் முன்மாதிரியாகக்கொண்டு பின்னாளில் அவர் வளர்ந்தவரல்ல. சொல் புதிது கலை புதிது என்ற குரல்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவெங்கும் ஒலித்தபோது, ஸ்பெயினும் தம் பங்கிற்கு அவ்வியக்கத்தில் முழுமூச்சாகக் கலந்துகொண்டது. இப்புதிய முழக்கத்தில் கட்டலோனிய தேசியவாதமும் அடிநாதமாக ஒலிக்க, நவீன கலைக்கு ஒரு புதிய பரிமாணமும் அங்கே வாய்த்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் படைப்புலகம் தம்மைக் கோத்திக் பாங்கினாலான புதியமுயற்சிகளில் ஈடுபடுத்திக்கொண்டிருக்க, கவுதிக்கு கோத்திக் பாங்கே முற்றாக கசந்தது. தொழில் வளர்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் விளைவாக அக்காலத்தில் பரவலாக உபயோகத்திற்குவந்த இரும்பு, சுண்ணாம்பு, பீங்கான் போன்ற பொருட்களுடன் ஆண்டாண்டுகாலமாக பயன்படுத்தப்பட்டுவந்த கற்கள், மரங்களை கலந்து, புதிய கட்டிடகலை உருவாயிற்று. இயற்கையின் தடயங்களோடு இணைந்த நுண்ணிய கலையாக கட்டிடக்கலையை வடிவமைத்தார் கவுதி. அதனூடாக எந்திர உலகின் சக்கைகளாகத் துப்பப்பட்ட வாழ்வியலுக்கு ஒரு மறுவாழ்வு ஏற்படுத்தித் தந்தார். ஏட்டறிவோடு, கட்டிடக்கலையின் அறிவுசார்ந்த நுணுக்கங்களுக்கும், அலங்காரத்திற்கும் இயற்கை பெரும்பங்கு ஆற்றிருக்கிறது. இலைகள், பனைஓலைகள், கொடிகள், நத்தைகள், பாம்பு, பறவை என ஒவ்வொன்றும் வடிவமைப்பிற்கோ, தொழில் நுணுக்கத்திற்கோ உதவியிருப்பதை வெளிப்படையாகவே இவரது படைப்புகளில் காணமுடிகிறது.

கட்டிடக்கலையில் தேர்ச்சிபெற்று வெளியில் வந்த இளைஞர் கவுதியை அரவணைத்துக்கொண்டவர் ஒரு தொழிலதிபர்: பெயர் எஸெபி குவெல். கவுதியினால் கட்டப்பட்ட Palais Guel என்ற முதல் மாளிகையே அவரது கற்பனைக்கும் கலைத்திறனுக்கும் சிறந்து எடுத்துகாட்டு. பார்சலோனா நகரத்தின் மத்தியில் இம்மாளிகை அமைந்திருக்கிறது. கட்டிடத்தின் வெளிச்சுவர், வண்ணப் பளிங்கு கற்களால் ஒளிருகின்றன, உட்பகுதிகளில் தூண்கள், உத்திரங்கள், சரங்கள், சன்னல்கள், கதவுகளென அனைத்தும் மரங்களாக இருக்கின்றன. மாளிகைக்கான் ஒளிஅமைப்பு, வண்ணக் கண்ணாடி சில்லுகளைக் கொண்ட சாளரங்கள், மர தளவாடங்கள் அனைத்துமே கவுதியின் கைவண்ணம். இசை நிகழ்ச்சிகள், சந்திப்புகள், கலந்துரையாடல்கள் முதலியவை தொடர்ந்து நடப்பதென்பதை நுழைவாயிலில் வைத்திருந்த தகவல் பலகைகள் தெரிவித்தன. பன்னாட்டுடமையாக யுனெஸ்கோவினால் இம்மாளிகை அறிவிக்கப்பட்டிருக்கிறதென்றாலும், பொருத்தமற்ற குறுகிய தெருவொன்றை அதனைக் கட்டுவதற்கு தேர்ந்தெடுமைக்கான காரணம் விளங்கவில்லை. தொழிலதிபர் எஸெபி குவெல்லுக்கு நன்றிதெரிவிக்கும் வகையில் பூங்கா ஒன்றும் Parc Guel என்ற பெயரில் கவுதி உருவாக்கியிருக்கிறார். புது டில்லியிலுள்ள ஜந்தர் மந்த்தரை முன்மாதிரியாகக்கொண்டு கவுதி இதை உருவாக்கினாரென்று எங்களிடமிருந்த விவரணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 73ல் டில்லியில் அதை சென்று பார்த்திருக்கிறோம், ஒப்பிட்டு சொல்லும்படி பதிவுகளில்லை, இணைய தளத்தில் தட்டிப்பார்த்தேன், குவெல் பூங்காவிற்கும், ஜந்த்தர் மந்த்தர்ருக்கும் உள்ள உறவை உறுதிபடுத்த இயலவில்லை.

குவெல் பூங்கா, மற்றும் சக்ரதா •பமிலியாவை பார்ப்பதற்கு முன்பாக பிக்காசோ பெயரில் இயங்கும் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்தோம். இந்த அருங்காட்சியகம் 1963ம் ஆண்டில் தொடங்கப்பட்டிருக்கிறது. பிக்காசோவின் நண்பர் Jaimes Sabartes தம்மிடமிருந்த ஓவியங்களைத் தானமாகத் தர அவற்றைக்கொண்டு ஆரம்பத்தில் இதைத் தொடங்கிடிருக்கிறார்கள். பின்னர் 1968ல் பிக்காசோவே தன்னிடமிருந்த ஓவியங்களைக் கொடுத்திருக்கிறார். பாரிஸில் உள்ள அருங்காட்சியகத்திற்கு மாறாக பிக்காசோ இளமைக்காலத்தில் வரைந்த ஓவியங்கள் இங்கு காட்சிக்கு வைக்கபட்டுள்ளன என்பது இதன் சிறப்பு. தந்தையின் வேலை நிமித்தமாக பார்சலோனாவிற்கு பிக்காஸோவின் குடும்பத்தினர் குடிவந்தபோது அவருக்கு பதின்மூன்றுவயது. La carrer de la Merce வீதியில் அவர்கள் வசித்த 3ம் எண் வீடுதான் நினைவகமாக மாற்றப்பட்டு இளமைகாலத்தில் அவர் வரைந்த ஓவியங்களின் காட்சிக்கூடமாகவும் இருக்கிறது. பிக்காசோவின் தந்தை பணியாற்றிய சிற்பம் மற்றும் ஓவியக்கல்லூரியில் கற்க இளம் வயதிலேயே அவருக்கு வாய்ப்பு இருந்திருக்கிறது, அங்குதான் புகழ் பெற்ற மற்றொரு ஓவியரும், நெருங்கிய நண்பருமான மனுவல் பல்லாரெஸ் குரோவை (Manuel Pallares Grau) அவர் சந்தித்திக்கிறார். பின்நாளில் பிக்காஸோவின் ஓவியங்களுள் புகழ் பெற்ற அவிஞோம் நங்கைகள் (les demoiselles d’Avignon) தீட்டக் காரணமான வேசிப்பெண்களை பதின்வயதில் ஓவிய நண்பர்கள் சந்திக்க நேர்ந்தது, பிக்காஸோ குடியிருந்த வீதிக்கு வெகு அருகிலிருந்த la carrer d’Avinyo என்ற வீதி என்கிறார்கள். பிக்காஸோ காட்சிக்கூடத்தில் சந்தித்த பிரெஞ்சுக்காரர் ஒருவர் பார்சலோனாவுக்கு அவர் வருகின்ற போதெல்லாம் இக்காட்சிக்கூடத்திற்கு தவறாமல் வருவதாகக் கூறினார். பாரீஸிலுள்ள பிக்காசோ அருங்காட்சியகத்திற்கு இதுவரை போனதி
தில்லையென்று அவரிடம் சொல்ல எனக்கு கூச்சம், மறைத்துவிட்டேன்.

கவுதியின் பெருமைக்கு புகழ்சேர்த்திருப்பது லா சக்ரதா •பமிலியா. 1882ல் ஒரு மதபோதகரின் ஆதரவுடன் தொடங்கப்பட்ட இக் கிறிஸ்துவ தேவாலயம் கவுதியின் கற்பனை, கனவு, கட்டிடக்கலை அறிவு ஆகியவற்றின் தேர்ந்த கலவை. ஏறக்குறையாக இரண்டு நூற்றாண்டுகளாக தொடர்ந்து கட்டப்பட்டுவருகிற இத்தேவாலயம் 2025ல் முழுவதுமாக கட்டிமுடிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கால உலக அதிசயங்களில் ஒன்றென வர்ணிக்கப்படும் லா ச்க்ரதா •பமிலியா ஏற்கனவே அதாவது முழுவதும் கட்டிமுடிக்கும் முன்பாகவே கவுதியின் இதரக் கலைக்கூடங்களைப்போலவே யுனெஸ்கோவினால் உலக உடைமையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேவாலயம் எழும்ப காரணமாகவிருந்த மதபோதகரின் பெயர் புனித ஜோஸப். இவருக்கு ரோமுக்கு இணையாக ஒரு தேவாலயத்தை பாரசலோனாவில் எழுப்பவேண்டுமென்கிற ஆர்வம் இருந்திருக்கிறது, தனது திட்டத்திற்குப் பிரான்ஸிஸ்கோ விலாரென்ற கட்டிடக்கலை வல்லுனரின் உதவியை நாடியிருக்கிறார். விலார் தேவாலயத்தின் கட்டுமான குழுவை வழிநடத்த சம்மதிக்கவும் செய்தார். கவுதி அப்போது கட்டுமான குழுவில் ஓரு உறுப்பினராகக் கூட இல்லை. விலார் அக்காலத்திய சூழலுக்கேற்ப கோத்திக் முறையில் தேவாலயத்தை எழுப்ப தீர்மானித்தார். முதல் கல்லினை வைத்தபோது, நிதி ஆதாரம் மிகக்குறைவாக இருந்ததால், தேவாலயத்தைக் கட்ட நினைத்தவர்களுக்குப் பெரிய கனவுகள் என்று ஏதுமில்லை. பணி தொடங்கிய இரண்டாம் ஆண்டு கட்டுமான பணிக்குழு உறுப்பினர்களில் ஒருவரும், கவுதியின் நண்பருமான ஜோசப் •போன்செரே மர்த்தரொலுடன் விலாருக்கு ஏற்பட்ட கருத்துவேறுபாடு, பணியிலிருந்து இரண்டாமவர் விலகிக்கொள்ள காரணமாகிறது. மர்த்தரொலின் அறிமுகத்தினால் 1884ம் ஆண்டு தேவாலய கட்டுமானப் பணி கவுதியின் வழிகாட்டுதலின் கீழ் வருகிறது. கிறிஸ்துவத்தில் தீவிர நம்பிக்கைக் கொண்டவரான கவுதி அப்பணியை விரும்பி ஏற்றார். பின்னாட்களில் கவுதியை முன்நிறுத்தியே பணிகள் தொடர்ந்தன. அக்காலத்தில் பெரும்பான்மை கலைஞர்களின் தேர்வாக இருந்த கோத்திக் முறையிலிருந்து விலகி தொன்மத்தோடு நவீனத்தை கைகோர்க்க முடிவு செய்தார் கவுதி. அவரைப் பொறுத்தவரை, மனித குடியிருப்போ தேவாலயங்களோ அவை இயற்கையின் அங்கமாக இருக்கவேண்டும். இயற்கை ஒளியையும், காற்றையும் முடிந்த அளவு உபயோகித்துக்கொள்ளவேண்டும், அதற்கேற்ப சாளரங்களும், வாயில்களும் அமைப்பதென்று தீர்மானிக்கபட்டன. கட்டிடம் முழுக்க இயற்கையின் பதிவுகள், அவற்றிலிருந்து பெறப்பட்ட பொறி இயல் ஞானங்கள். நத்தைக்கூட்டினை முன்மாதிரியாகக்கொண்டு வடிவமைப்பட்ட படிகள், பனைஓலை வடிவில் அமைந்த கதவுகளென எழுதிக்கொண்டுபோகலாம். மிகச்சிறிய நிதி ஆதாரத்தோடு தொடங்கப்பட்ட திட்டத்தினை நாளடைவில் கவுதி தன்னுடைய படைப்புத் திறனுக்கும், கற்பனைக்கும் விடப்பட்ட சவாலாகக் கருதியதால், வழக்கமாக நாம் ஐரோப்பாவெங்கும் பார்க்கிற கடந்த நூற்றாண்டுகளின் அடையாளமாக இல்லாமல் ஒரு புதுக்கவிதையை படிக்கும் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இத் தேவாலயத்தின் ஊடாக கவுதி வழங்கியிருக்கிறார்.

1929ம் ஆண்டு சாலையை கடக்கிறபோது, விபத்துக்குள்ளாகி கவுதி மரணமடைந்தபிறகு, அவருக்கு உதவியாளராக இருந்த மற்றொரு கட்டிடக் கலைஞர் பொறுப்பேற்றார். எனினும் 1936-1939ல் நடந்த உள்நாட்டுப்போரில், கவுதியின் திட்ட நகல்கள் வரைபடங்கள் அனைத்தும் சாம்பலானதில், கட்டுமான பணிகள் தவக்கமடைந்தன. எனினும் கவுதியின் கீழ் பணிபுரிந்த பல கட்டிடக் கலைஞர்கள், அவரது சீடர்கள் தளரவில்லை தொடர்ந்து பாடுபட்டனர். ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா என உலகின் பல திசைகளிலிருந்தும் வந்த புகழ்பெற்ற கட்டிடடங்கலைஞர்கள் தங்கள் ஞானத்தை கவுதியின் கனவு தேவாலயத்தை உருவாக்கும் பணிக்காக செலவிட்டுள்ளனர். நவீன அறிவியல் வளர்ச்சிகளை தேவாலயத்தின் கட்டுமானத்தில் பின்வந்த கட்டிடக்கலைஞர்கள் பெரிதும் பயன்படுத்தியிருப்பது, கவுதியின் கனவுகளுக்கு முரணானது போன்ற குற்றச்சாட்டுகளும் அவ்வப்போது எழுப்பப்படுகின்றன. இன்றைக்கு பல மில்லியன் யூரோக்களை, பல மில்லியன் நேர உழைப்புகளை விழுங்கிய தேவலாயமாக பிரம்மாண்டமாக நிற்கிறது. ஸ்பெயின் அரசாங்கமோ, பார்சலோனா நகரசபையோ, இரு நூற்றாண்டுகளாக கட்டபட்டுவரும் தேவலாயத்துக்கு இதுவரை உதவியதில்லை என்கிறார்கள், ரோம் நிர்வாகமும், கத்தோலிக்க மத விசுவாசிகளும் தரும் நன்கொடைகளைப் பெற்றே கட்டுமான வேலைகள் தொடர்ந்து நடௌபெற்று வருகின்றன. La Sagrada Familia தேவாலயத்தில் கீழே மிகப்பெரிய நிலவறை கூடத்தில், இது சம்பந்தபட்ட அருங்காட்சியகமொன்றை பார்வையாளர்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். இது தவிர கவுதியைப்பற்றியும் அவரது சாதனைகளை விளக்கும் வகையிலும் சுமார் 30 நிமிடஆவணப்படமொன்று மூன்று மொழிகளில் குளிரூட்டப்பட்ட அறையில் சுருக்கமாக திரையிடப்படுகிறது.

———-

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா