பாரதி மணி என்னும் பன்முக ஆளுமை

This entry is part [part not set] of 28 in the series 20090319_Issue

பாவண்ணன்



நம் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பாரதி மணி அவர்கள் நாகர்கோயிலுக்கு அருகில் உள்ள பார்வதிபுரத்தில் பிறந்து வளர்ந்து, கல்வி கற்று, தில்லிக்குச் சென்று பணிபுரிந்தவர். தன் திறமையால் நிறுவனத்தின் நம்பிக்கையைப் பெற்று, மெல்லமெல்ல தன்னை ஒரு முக்கிய ஆளுமையாக வளர்த்துக்கொண்டவர். புதியவர்களானாலும் பழகியவர்களானாலும் எவ்விதமான சந்தேகத்துக்கும் இடம்தராமல், நம்பிக்கையோடும் அன்போடும் தாராளமாக ஒட்டி உறவாடி நட்பை உருவாக்கிப் பழகுவதிலும் அன்பைப் பொழிவதிலும் தலைசிறந்தவர். அந்த அன்புக்காக மற்றவர்களுக்காக அவரும் அவருக்காக மற்றவர்களும் எதைச் செய்யவும் தயாராக இருக்கிறார்கள். அபூர்வமான அன்பின் ஆளுமையால் கட்டுண்ட ஒன்றாகவே அவருடைய வாழ்வு இன்றுவரை அமைந்திருக்கிறது. தில்லி நாடகப்பள்ளியில் பயின்று, தமிழ் நாடகங்களுக்காக தில்லியில் ஓர் அமைப்பை உருவாக்கி, நாற்பதாண்டுகளுக்கும் மேலாக பல நாடகங்களை மேடையேற்றிய பெருமையும் அவருக்குண்டு. அரைநூற்றாண்டுக்கும் மேலான தில்லி வாழ்விலிருந்து விடுபட்டு, சென்னையில் குடியேறியபிறகு, தம்மை விரும்பியழைக்கும் இயக்குநர்களின் திரைப்படங்களiல் அவ்வப்போது நடித்துவருகிறார். திறமையான நிர்வாகி, மிகச்சிறந்த மேடை நடிகர், அன்புள்ளம் கொண்ட நல்ல மனிதர், நல்ல குணச்சித்திர திரைப்பட நடிகர் என பல கோணங்களிலும் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பாரதி மணி தன் ஐம்பதாண்டுகால வாழ்வில் நடந்த சில அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதத் தொடங்கியதுமே, அவருக்குள் இதுவரைக்கும் மறைந்திருந்த எழுத்தாளுமை மிகுந்த முகம் சுடருடன் ஒளிரத்தொடங்கிவிட்டது. பாரதி மணி நம்மிடையே வாழ்கிற பன்முக ஆளுமை கொண்ட நண்பர்.

பல நேரங்களில் பல மனிதர்கள் என்னும் தொகுப்பில் உள்ள பதினெட்டு கட்டுரைகளும் ஒன்றையொன்று விஞ்சும்வண்ணம் எழுதப்பட்டுள்ளன. அவருடைய வாழ்வனுபவங்கள் ஒவ்வொன்றும் மகத்தானவையாக அமைந்துள்ளன. தொட்ட இடமெல்லாம் சுரங்கமாக மாறுகிறது. எல்லா ஏற்ற இறக்கங்களையும் அவருடைய கண்கள் பார்த்திருக்கின்றன. சிரித்துச்சிரித்துப் பேசுகிற மனிதர்களையும் பழக்கமற்றவர்களைப்போல பாராமுகம் காட்டுகிறவர்களையும் ஒரே ஊரில் சந்தித்தித்திருக்கின்றன. அதிகாரத் தேர்ச்சக்கரம் உருளும்போது மேலே இருந்தது கீழே செல்வதையும் கீழே இருந்தது மேலே செல்வதையும் ஒரு நாடகக்காட்சியைப்போல சுவைத்துப் பார்த்திருக்கின்றன. அசைபோடும் அவருடைய மனம் ஒவ்வொரு சம்பவத்தையும் ஒரு குறும்படத்தைப்போல சித்தரிக்கிறது. தொகுப்பைப் படித்து முடித்ததும், பல குறும்படங்களை ஒரே சமயத்தில் திரைப்படவிழா நேரங்களில் தொடர்ந்து பார்த்ததுபோன்ற அனுபவம் உண்டாகிறது.

ஒரு வரலாறு உருவாவது வரலாற்றுப் பாத்திரங்களால் மட்டுமல்ல, வரலாற்றைத் தள்ளிநின்று பார்த்துக்கொண்டிருக்கிற எளிய மனிதர்களின் பார்வைகள்வழியாகவும் வரலாறு உருவாகிறது. ஒரு வரலாறு பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட பதிவுகளாக இருக்கக்கூடும். இன்னொன்று வாய்வழியாகவே தலைமுறைதலைமுறையாக தொடர்ந்து சொல்லப்படுகிற நாடோடிப் பாடல்களாகவும் பழமொழிகளாகவும் கதைகளாகவும் பதிவாகியிருக்கக்கூடும். ஒன்று மேற்கட்டுமானம். இன்னொன்று அடிக்கட்டுமானம். பொதுமக்களiன் நெஞ்சில் நெகிழ்ச்சிக்கும் நிறைவுக்கும் கவலைகளுக்கும் கசப்புகளுக்கும் காரணமாக அமைந்துவிடும் சம்பவங்களின் பதிவுகள் அனைத்தும் இந்த அடிக்கட்டுமானத்தில் மட்டுமே இடம்பெறும். இரண்டும் இணைந்ததுதான் வரலாறு. பாரதிமணியின் பதிவுகளை ஒருவகையில் நம் சமூகத்தின் அடிக்கட்டுமான வரலாற்றோடு தொடர்புடையவையாக எடுத்துக்கொள்ளலாம்.

வங்கத் தந்தையின் மகள் ஷேக் ஹஸினாவைப்பற்றிய குறிப்புகளும் பங்களாதேஷ் நினைவுகளும் வேறு எந்த வழியிலும் நம்மால் அறியமுடியாத தகவல்களைக் கொண்டிருக்கின்றன. அவருடைய வாழ்வில் ஆன் சாங் சூகி, தெரசா போன்ற மாபெரும் ஆளுமைகளின் வரவு, அபூர்வக்காட்சிகளாக அமைந்திருக்கின்றன. பாஸ்மதி அரிசி உற்பத்தியில் இந்தியாவுக்கு பஞ்சாபியர்கள் உருவாக்கிக்கொடுத்த தலைமையிடத்துக்குப் பின்னால் இருக்கிற வரலாற்றுச் சம்பவங்கள் இதுவரை நாம் எந்தப் புத்தகத்திலும் படிக்காத உண்மை. ஆந்திரத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியபோது, அஞ்சையா என்னும் முதல்வர் கொண்டுவந்த மாலையின் ரோசா இதழ்கள் பறந்து ஹெலிகாப்டரின் இறக்கையில் படிந்துவிடக்கூடும் என்று பதறி பொறுமையில்லாமல் எரிந்துவிழுந்த ராஜீவ் காந்தி என்னும் இளைஞரைத்தான் நாம் அறிவோம். அதே ராஜீவ் காந்தி பதவியில் இல்லாத நேரத்தில் விமான நிலையத்தில் மணிக்கணக்கில் காத்திருக்கவைக்கப்பட்ட தருணத்தில் பொறுமையோடு ஒதுங்கிநின்ற காட்சியை பாரதிமணி சுட்டிக் காட்டுகிறார். அது நமக்குப் புதிய முகம். “காந்திபாய் தேசாய்- தலைவர்களும் தனயர்களும்” என்னும் கட்டுரை அரசியல் களத்தின் இருண்ட பக்கங்கள்மீது சிறிது வெளiச்சம் பாய்ச்சுகிறது. பாரதிமணியின் ஐம்பதாண்டு கால தில்லி வாழ்வில் கண்ட அனுபவங்களiல் நூற்றில் ஒரு பங்காகவே இது இருக்கக்கூடும். இந்தியாவில் மூலைமுடுக்கெல்லாம் இன்று தில்லியின் சாயல் உள்ள நகரங்கள். எல்லா இடங்களிலும் காந்திபாய் தேசாயின் சகோதரர்கள் அல்லது சகோதரிகள். ஒரு பெயரை எடுத்து இன்னொரு பெயரை எழுதி நிரப்பிவிட்டால் அது அவர்களுடைய குறுவரலாறாகவே மாறிவிடும்.

சுப்புடு, சுஜாதா, பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோரைப்பற்றி எழுதப்பட்டுள்ள அஞ்சலிக்கட்டுரைகளை அழுத்தமான நிறங்களால் வரையப்பட்ட சித்திரங்கள் என்றே சொல்லவேண்டும். நட்பைப் பேணிவளர்ப்பதில் அவருக்கிருந்த உள்ளார்ந்த ஈடுபாட்டை அவை உணர்த்துகின்றன.

“நாதஸ்வரம் –என்னை மயக்கும் மகுடி” என்னும் கட்டுரையில் பாரதி மணி தன்னுடைய தந்தையைப்பற்றி எழுதியுள்ள ஒரு குறிப்பு மிகமுக்கியமாகப் படுகிறது. வீட்டுப்பாடம் எழுதுகிற மகனை அழைத்து, வானொலிப்பெட்டியில் இசைக்கச்சேரியைக் கேட்கவைத்த அனுபவத்தையும் வெளியூர்களில் நடைபெறுகிற கச்சேரிகளுக்கும் திருவிழாக்களில் நிகழ்த்தப்படும் கச்சேரிகளுக்கும் தன்னோடு அழைத்துச்சென்று சுவைக்கவைக்கிற அனுபவத்தையும் போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போகிறார். தன் மகனுக்கு இசையை அறிமுகப்படுத்துகிற தந்தை எவ்வளவு உன்னதமானவர். தன் கனவுகளையும் எதிர்பார்ப்புளையும் பிள்ளைகள்மீது சுமத்தி, கேரட் துண்டைப் பார்த்து குதிரையை ஓடவைக்கிற வண்டிக்காரனைப்போல, வெற்றி என்னும் ஒற்றை இலக்கைப் பார்த்து ஓட வைக்கிற தந்தையர் வாழும் பூமியில் அந்தத் தந்தையை அபூர்வமான மனிதராகவே பார்க்கத் தோன்றுகிறது. இசை பயில்வதை ஒரு பயிற்சியாக பிள்ளைகளை ஈடுபடுத்துவதற்கும், “வாடா, வந்து இந்த பாட்ட கேளுடா” என்று ஈடுபடுத்துவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அதற்கெல்லாம் ஒரு பரந்த மனம் வேண்டும். அந்த மனம் பாரதிமணியின் தந்தைக்கு இருந்திருக்கிறது. சின்னஞ்சிறு வயதில் பாட்டைக் கேட்டு, அதன் சுவையில் தோய்ந்து, அதைப் பிரித்தறிகிற நுட்பத்தையும் அறிந்துகொண்ட மனம் வளரவளர பலதரப்பட்ட மனிதர்களின் உரையாடல்களையும் கேட்டுக்கேட்டு அவர்களுடைய உள்மன ஓட்டங்களை அறிகிற ஆளுமையையும் வளர்த்துக்கொண்டிருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. இக்கட்டுரையைப் படித்து முடித்ததும் ஒரு தந்தையாக நாம் நம் பிள்ளைக்கு எதை அறியக்கொடுத்தோம் என்றொரு கேள்வி மௌனமாக நம் மனக்கண்முன்னால் நிற்பதை உணரலாம்.

திருவிதாங்கூர் சமஸ்தானம் பற்றிய கட்டுரையும் நிகம்போத் சுடுகாடு பற்றிய கட்டுரையும் தொகுப்பில் முக்கியமானவை. ஒன்று அவருடைய நினைவாற்றலுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. மற்றொன்று வாழும் காலத்தில் நாம் எப்படிப்பட்ட துணையாக மற்றவர்களுக்கு இருக்கவேண்டும் என்கிற திசையில் நம்மை எண்ணத்தூண்டுவதாக உள்ளது.

தொகுப்பின் இரண்டாம் பகுதியில் பாரதி மணியைப்பற்றி இருபத்துமூன்று நண்பர்கள் பகிர்ந்துகொண்ட நினைவலைகள் உள்ளன. முன்னுரையில் நாஞ்சில் நாடன், இந்திரா பார்த்தசாரதி, வெங்கட் சாமிநாதன், ஜெயமோகன் ஆகியோர் பகிர்ந்துகொண்ட நினைவலைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் எடுக்கப்பட்ட நிழற்படத்தைப்போல உள்ளது. எல்லாவற்றிலும் தெரிவது பாரதிமணியின் முகம்.

( பல நேரங்களiல் பல மனிதர்கள். கட்டுரைத்தொகுதி. பாரதி மணி. உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியபுரம் தெரு, அபிராமபுரம், சென்னை-18. விலை.ரூ100)

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்