பாடம் எடுக்கும் ஆசிரியர்:விமர்சனங்கள் குறித்த ஜெயமோகனின் எதிர்வினையை முன்வைத்து

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

அரவிந்தன்


காடு, ஏழாம் உலகம் ஆகிய நாவல்கள் குறித்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாக ஜெயமோகன் ஆற்றிய உரையின் பதிவைப் படித்தேன். அந்த நாவல்கள் குறித்த கட்டுரையன்றை (காலச்சுவடு ஆகஸ்ட் 2004 இதழ் 56) எழுதியவன் என்ற முறையில் அது பற்றிச் சில வார்த்தைகளைக் கூற விரும்புகிறேன்.

எழுதத் தொடங்கிய காலத்தில் விமர்சனங்கள் குறித்துத் தனக்கிருந்த பதற்றம் இப்போது இல்லை என்று ஜெயமோகன் கூறியது எனது பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. ஜெயமோகன் அடையும் பதற்றங்களை மிக நெருக்கதில் கண்டுணர்ந்தவன் என்ற முறையில் என்னால் அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ காலகட்டம்வரையிலும் இந்தப் பதற்றம் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். மேற்படி எதிர்வினை அவரது பதற்றம் கணிசமாகக் குறைந்திருப்பதைக் காட்டுகிறது. ஆனால் பதற்றம் குறைந்திருக்கிறதே தவிர, அவரது பார்வையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

மலைக் காட்சியை முன்வைத்து நித்ய சைதன்ய யதி குறிப்பால் உணர்த்திய பார்வை இலக்கியப் பிரதிக்கு மட்டுமின்றி, பிரதியின் மீதான பிரதிகளுக்கும் பொருந்தும். ஒரு விமர்சனப் பிரதியும் அதை அணுகுபவர்கள் சார்ந்து பல்வேறு தோற்றங்களை எடுக்கக்கூடும். தான் உருவாக்கிய இலக்கியப் பிரதி சார்ந்த தன் பார்வையுடன் ஒத்துப்போகாத பார்வைகள்மீது ஜெயமோகனுக்கு இருக்கும் மதிப்பீடுதான் என்னை இக்கட்டுரையை எழுதத் தூண்டியது.

தன் படைப்பின் சாரம் எனத் தான் கருதும் புள்ளியையே அதன் சாரம் என இனம்காண்பவர்களைத் தனக்கான வாசகர்கள் என்று ஒரு எழுத்தாளன் கருதுவதில் தவறில்லை. ஆனால் இதற்கு அப்பாற்பட்ட வாசிப்புகள் குறைபாடுடையவை என்று கருதத் தலைப்படுவதில்தான் தவறு இருக்கிறது. ஒரு பிரதியில் வாசகர் கொள்ளக்கூடிய மன எழுச்சி, மனநெகிழ்வு ஆகியவை அப்பிரதியை ஆக்கியவர் உத்தேசிக்காத புள்ளிகளிலிருந்தும் பிறக்க முடியும். எங்குமே பிறக்காமலும் இருக்கவும் முடியும். இவை எல்லாமே சாத்தியம் என்பதை அங்கீகரிப்பதுதான் ஓர் எழுத்தாளனின் பிரதி சார்ந்த பதற்றமின்மையின் அடையாளம்.

வாசிப்பு என்பது மிகவும் அகவயமான, சிக்கலான ஒரு செயல்பாடு. படிக்கும் தருணம், அத்தருணம் சர் மனநிலை, அத்தருணத்து வாழ்க்கையின் அக, புறச் சூழல்கள் என்று பல காரணிகள் ஒரு வாசிப்பின் மீது செல்வாக்குச் செலுத்துகின்றன. பிரதிக்குள் தன்னைக் கரைத்துக்கொண்டு படிப்பவர்களும் இதற்கு விலக்கு அல்ல. இந்நிலையில் ஒரு பிரதியின் மீதான ஒவ்வொரு வாசிப்பும் ஒவ்வொரு விதமான பிரதியைத் தனக்கென உருவாக்கிக்கொள்ள முடியும். ஒரே படைப்பை வெவ்வேறு தருணங்களில் படிக்கும் ஒருவருக்கு அது வெவ்வேறு அனுபவங்களை ஏற்படுத்தக்கூடும். வாசிப்பு எல்லையற்றது. வாசிப்பின் வகைமைகளோ எண்ணற்றவை. (தீவிரமான படைப்புகளைப் படிக்கும் மனநிலையோ பயிற்சியோ அற்ற வாசிப்புகளையும் முன்முடிவுகளோடும் இலக்கியம் சாராத உள்நோக்கங்களோடும் அணுகும் வாசிப்புகளையும் இதில் சேர்க்க இயலாது.)

படைப்பின் மையம் குறித்த தனது நிர்ணயங்களை மறுக்கும் வாசிப்புகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் படைப்பாளி என்ற முறையில் ஜெயமோகனின் பிரச்சினை. எங்கு மன எழுச்சிகொள்ள வேண்டும், எங்கு நெகிழ்வடைய வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானமாக அவர் வரையறுத்து வைத்திருப்பதையும் வலியுறுத்துவதையும் அவரது எதிர்வினை உணர்த்துகிறது. பேசப்படும் இந்த இரு நாவல்களையும் வாசித்த பல வாசகர்களிடம் (இவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள்) நான் விவாதித்தபோது அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரத்யேக கோணம் இருப்பதை அறிய முடிந்தது. நாவலைப் பாராட்டுபவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக அதைப் பாராட்டுகிறார்கள். நாவலின் வெவ்வேறு புள்ளிகளில் தங்களை அவர்கள் இனம் காண்கிறார்கள். குறைகூறுபவர்களின் முடிவுகளும் அவர்கள் பார்வை சார்ந்து வேறுபட்டே இருக்கின்றன. இதுவே இயல்பானது. இது இயல்பானது என்று அங்கீகரித்து எதிர்வினைகளை அணுகுவதே ஆரோக்கியமானது. மெய்யான பதற்றமின்மையின் அடையாளம் அது.

ஜெயமோகனும் ஒரு சில இதழ்களுக்கு முன்பு ‘திண்ணை ‘யில் காடு நாவலைப் பற்றி எழுதிய சூரியா என்பவரும் குறிஞ்சி மலர் தரிசனக் காட்சியை இந்நாவலின் மையமாக முன்வைக்கிறார்கள். இந்த சூர்யா ஜெயமோகன் தேடிக்கொண்டிருக்கும் லட்சிய வாசகர்களில் ஒருவராகவே இருக்க வேண்டும். ஜெயமோகனின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘வாசக ஜெயமோகன் ‘. படைப்பாளி ஜெயமோகனும் வாசக ஜெயமோகனும் முன்வைக்கும் இந்தப் பார்வையோடு முரண்பட ஒரு வாசகனுக்கு எல்லா விதமான சாத்தியங்களும் இருக்கின்றன என்பதை ஏற்பதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை என்று புரியவில்லை. இவர்களது பார்வையின் அடிப்படையில் அந்நாவலை மறுபரிசீலனை செய்து பார்க்கும்போது நாவல் மேலும் பலவீனமாய்த் தெரிகிறது. குறிஞ்சியின் தரிசனம் ஏற்படுத்தும் வெறுமையுணர்வு வாழ்வின் பல்வேறு அனுபவங்கள் சார்ந்து நீட்சியடையக்கூடிய ஒன்றுதான் என்றாலும் அது வாசிப்பின் மூலம் நிகழும் நீட்சியேயன்றி, பிரதியினூடே நிகழ்த்தப்படும் நீட்சி அல்ல. குறிஞ்சி மலர் தரிசனத்திற்கு முன்னும் பின்னுமான பக்கங்கள் அலைபாயும் இடங்கள், வாசகப் பயணத்தை வெவ்வேறு திசைகளில் செலுத்தக்கூடியவையாக உள்ளன. இவற்றில் எந்தப் புள்ளியிலும் ஒரு வாசகர் மன எழுச்சி/நெகிழ்ச்சி கொள்ள முடியும். ‘இன்னும் இரண்டு ஆண்டுகள் பொறுங்கள்; பிறகு நான் பார்த்துக்கொள்கிறேன் ‘ என்று கிரிதரனின் மகன் கூறும் இடத்தை ஓர் உதாரணமாகக் குறிப்பிடலாம். இப்படிப்பட்ட தருணங்கள் நாவலில் நிறையவே உள்ளன. குறிஞ்சி தரிசன அனுபவம் அவற்றில் ஒன்று. ஆகவே நாவல் தரும் அனுபவத்தின் உச்சம் என்று ஜெயமோகன்களைப் போலவே பிறரும் கருத வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. மகாபாரதம் முதல் நேற்று எழுதப்பட்ட ஒரு சிறுகதைவரை இலக்கியப் பிரதிகள் ஒரு வாசகருக்கு மன எழுச்சி/நெகிழ்ச்சியைக் கொடுக்கும் தருணங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. வாசிப்புகளில் ஒற்றுமைகள் இருக்கலாம். ஆனால் ஒரே விதமாக இருவர் ஒரு பிரதியை வாசிப்பது சாத்தியமே இல்லை.

அதுபோலவே, ‘உருப்படி ‘களை வைத்துப் பிழைப்பு நடத்தும் பண்டாரம் அவரது குடும்பத்தினரால் ‘உருப்படி ‘யாக நடத்தப்படுவது பற்றிய ஜெயமோகனின் வரிகளும் வாசகர்/விமர்சகர் அங்கீகரித்தாக வேண்டியவை அல்ல. குடும்பத் தலைவன்/தலைவி பரிதாபத்திற்குரிய முறையில் சுரண்டப்படுவது சராசரி இந்தியக் குடும்பங்களின் யதார்த்தம். கீழ்மட்ட நடுத்தரக் குடும்பங்களில் இத்தகைய காட்சிகள் அன்றாடம் நம் அனுபவத்திற்குட்பட்டபடி இருக்கின்றன. குறைப் பிறவிகளை வைத்துப் பிழைப்பு நடத்துதல் என்ற பின்னணியின் தேவையின்றியே இத்தகைய சுரண்டல்களை நாம் உணர்ந்துகொள்ள முடியும். புதுமைப்பித்தன் அசோகமித்திரன் போன்றோர் இதுபோன்ற பல பாத்திரங்களை நமக்கு உருவாக்கித் தந்திருக்கிறார்கள். எனவே, நாவலின் முக்கியமான பரிமாணமாக அதன் படைப்பாளியால் இது சுட்டிக்காட்டப்படும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஜெயமோகன்கள் முன்மொழியும் ‘மைய ‘த்தைப் பிறரும் வழிமொழிய வேண்டிய அவசியம் இல்லை என்பதை இது காட்டுகிறது.

விஷ்ணுபுரத்தைப் படித்துவிட்டு பிரமித்துப்போன ஒரு விமர்சகர் ஜெயமோகனிடம் விஷ்ணுபுரம் பற்றிப் பேசிய பிறகு கூறிய வார்த்தைகள் இத்தருணத்தில் நினைவுக்கு வருகின்றன: ‘இவர்தானா அந்த நாவலை எழுதியது என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ‘

யார் எப்படி விரும்பினாலும் வாசிப்பு என்பது அகவயமானதுதான். ஒரு அளவிற்கு மேல் பகிர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு அந்தரங்கமானதும்கூட. ஆனால் நாவல் பற்றிய விமர்சனம் என்பது வேறு. அது அகவயமான வாசிப்புடன் புறவயமான பல அளவுகோல்களும் இணைந்து உருவாக வேண்டியது. புறவயமான அளவுகோல்கள் அற்ற விமர்சனம் வாசிப்பு அனுபவப் பகிர்வாக மட்டுமே இருக்க முடியும். இத்தகைய பகிர்வுகளும் அவசியமானவையே என்றாலும் ஒரு பிரதி குறித்த எல்லாப் பதிவுகளும் இப்படிப்பட்டவையாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. நிகர மதிப்பீட்டில் தான் நிராகரிக்கும் ஒரு படைப்பின் பல அம்சங்களை ஒருவர் தனக்கு மிக நெருக்கமாக உணர்வதும் நிகர மதிப்பீட்டில் தான் ஏற்றுக்கொள்ளும் படைப்பின் பல அம்சங்களை ஒருவர் நிராகரிப்பதும் சாத்தியமே. தனக்குப் பிடித்த ஒரு நாவலை புறவயமான காரணங்கள் (சமூகப் பெறுமானம், இனவாதம் முதலானவை) சார்ந்து ஒருவர் கடுமையாக விமர்சிக்கவும்கூடும். புறவயமான காரணங்களால் ஒருவரால் பாராட்டப்படும் நாவல் அவரது அந்தரங்க தளத்தில் இடம்பெறாமல் போகலாம். உதாரணமாக, புறக்கணிக்கப்பட்டவர்களின் குரலை, வாழ்வை வலுவாகப் பதிவுசெய்வதற்காக ஒரு நாவலைப் பாராட்டும் ஒருவர், அழகியல் காரணங்களுக்காக ரசனை வாசிப்பு சார்ந்து அதை நிராகரிக்கலாம். என்னைப் பொறுத்தவரை இரு நாவல்களிலும் நான் கண்ட சாதக-பாதகங்களை அவற்றுக்குரிய தர்க்கங்களோடு முன்வைத்திருப்பதாகவே கருதுகிறேன். இன்னமும் விரிவாகச் செய்திருக்கலாமே – குறிப்பாக, காடு நாவலில் – என்ற மனக்குறை மட்டும் இருக்கிறது.

பிரதியின் ஆசிரியர் உத்தேசிக்கும் மையம் அல்லது உன்னதம் வாசகர்/விர்சகர் பார்வையோடு ஒத்துப்போக வேண்டிய அவசியம் இல்லை என்பதை ஒரு படைப்பாளி என்ற நிலையிலிருந்தும் என்னால் கூற முடியும். நாகதோஷம் என்ற எனது சிறுகதைக்கு (காலச்சுவடு இதழ் 49 – இணையத்தில் உள்ளது) கிடைத்த எதிர்வினைகள் பலவிதமானவையாக இருந்தன. ஆனால் பாராட்டியவர்களோ விமர்சித்தவர்களோ அந்தக் கதையில் நான் உத்தேசித்த மையப் புள்ளியைத் தொட்டுப் பேசவேயில்லை என்பது எனக்கு ஏமாற்றம் தந்தது. உளவியல் பகுப்பாய்வு நிபுணர் ஒருவர் அக்கதையைக் கட்டுடைத்துக் கூறிய சில சொற்கள் மட்டுமே என் உத்தேசத்திற்கு அருகில் இருந்தன. ஆனால் இதை வைத்துக்கொண்டு அக்கதையை யாருக்குமே வாசிக்கத் தெரியவில்லை என்ற முடிவுக்கு நான் வரவில்லை. என்னுடைய உத்தேசத்திற்கும் வெளிப்பாட்டிற்கும் இடையே உள்ள இடைவெளியையும் அந்த இடைவெளியை சாத்தியப்படுத்தியிருக்கக்கூடிய எனது படைப்பு ரீதியான பலவீனத்தையும் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். நான் மிக சமீபத்தில் எழுதிய (இன்னும் பிரசுரமாகாத) ஒரு கதையைப் படித்த ஒரு நண்பர் அதன் இலக்கு சார்ந்த என் உத்தேசத்தைக் கச்சிதமாகப் பிடித்துவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஒரு கதையில் நான் உத்தேசிக்காத பல அம்சங்களைக் கண்டு சொன்னார் ஒரு நண்பர். இது போன்ற அனுபவங்கள் எந்தப் படைப்பாளிக்கும் எந்தப் பிரதிக்கும் நேரக்கூடியது என்பதில் எனக்குத் துளியும் ஐயமில்லை. அக்கறையோடு செய்யப்படும் எந்த வாசிப்பும் ஒரு படைப்பில் புதிய வாசல்களைத் திறக்கக்கூடியவை என்ற பிரக்ஞையோடு ஒரு படைப்பாளி தன் படைப்பு சார்ந்த வாசிப்பு அனுபவங்களை/விமர்சனங்களை அணுகுவதே நல்லது.

இப்படி வாசி என்று சொல்லிக்கொடுப்பதை நிறுத்துவது இதற்கு முதல் படி.

—-

aravindanmail@yahoo.com

Series Navigation

அரவிந்தன்

அரவிந்தன்