பவனி

This entry is part [part not set] of 29 in the series 20091225_Issue

ராமலக்ஷ்மி, பெங்களூர்.


பளபளக்கும் பட்டுடையும்
மினுமினுக்கும் நகைநட்டும்
சரிகை இழையோடும்
தலைப்பாகையுமாய்..
அலங்கரித்த
வெண்புரவிகளில்
கம்பீரமாய் பெருமிதமாய்
அரசத்தம்பதியர் வீற்றுவர-
கண்நூறுதான் கண்டுமகிழ..

ஊர்உலா முடிந்து
உடைமாற்றி நகை களைந்து-
நின்றார்கள் கூலிக்கு
இன்றாவது கிடைக்குமாவென..

கனைக்காத குதிரைக்குக்
கால்களாய் இருந்த
களைப்பு மிகுதியில்
ராஜாவும்..
செழிக்காத கலைக்குச்
சேவகியாய்-
மெய் வருத்திப்
பொய்க் களிப்புடன்
பவனிவந்த ராணியும்!
***

ராமலக்ஷ்மி, பெங்களூர்.

நன்றி:‘வடக்குவாசல்’ மாத இதழ், டிசம்பர் 2009

ramalakshmi_rajan@yahoo.co.in

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி