பழமலையும், ப க பொன்னுசாமியும்….

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

சுப்ரபாரதிமணியன்


சமீபத்தில் சில தமிழ் நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் பார்க்க நேர்ந்த்து. விழுப்புரம் பழமலையின் “ ஜனங்களின் கதை “ கவிதை நூல் ஆங்கில வடிவம் பெற்றுள்ளது. மொழிபெயர்த்துள்ளவர் தில்லியில் வசிக்கும் ராஜா அவர்கள். தலைப்பை அப்படியே வைத்துள்ளது இது ஆங்கில வாசகர்களுக்கு உரியது அல்லவே என்ற எண்ணத்தை உருவாக்கியது. ஆனால் கவிதைகளின் மொழிபெயர்ப்பும் , பழமலை வெளிக்கொணர்ந்த நுணுக்கமான அவர் பகுதி சார்ந்த மக்களின் அனுபவங்களும் சரியாகவே மொழிபெயர்பில் படிக்கக் கிடைத்திருப்பது ஆங்கில வாசகனிடம் சரியாகப் போய் சேரும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. பழமலையின் மொத்தக் கவிதைகள் “ காவ்யா “ பதிப்பகத்தினரால் முழுத் தொகுப்பாக வெளிவந்திருக்கும் இந்த நேரத்தில் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பும் மகிழ்ச்சி தருகிறது.
உடுமலையில் வசிக்கும் முந்நாள் துணை வேந்தர் ப க பொன்னுசாமியின் ”படுகளம்” நாவல் கொங்கு பகுதி பற்றிய குறிப்பிடத்தக்கதாகும் ( மணிவாசகர் பதிப்பகம், சென்னை, ரூ 300)
.இதன் ஆங்கில மொழிபெயர்ப்பின் தட்டச்சுப் பிரதியின் சில பகுதிகளை சமீபத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. தலைப்பு ” அவைட்டிங் காடஸ் “
கொங்கு பிரதேச வழக்குகளும், பேச்சும் ஆங்கில வாசகனுக்கு புதிது போல தோற்றம் கொள்ள செய்தாலும், மக்களின் அனுபவங்கள் நேரடியாக புரிந்து கொள்ளும்படி மொழிபெயர்ப்பு அமைந்திருந்தது. பொன்னுசாமியின் இயற்பியல் சார்ந்த ஆங்கிலக்கட்டுரைகளை வாசிக்கிற போது இந்த நாவலின் மொழிபெயர்ப்பையும் அவரே செய்திருக்கலாம் என்று தோன்றியது.
”படுகளத்” தை அடுத்து அவர் எழுதி வரும் முந்தின நாவலின் தொடர்ச்சியான நாவலை ஆங்கிலத்திலும் அவரே எழுதலாம்.
பொள்ளாச்சி சிற்பிபாலசுப்ரமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் டாக்டர் கே எஸ் சுப்ரமணியனின் மொழிபெயர்ப்பு ஆங்கில வாசகனை மனதில் கொண்டு நுணுக்கமாக உருவாக்கப்பட்டிருந்தது.இந்த்த் தேர்ச்சியை அவர் மொழிபெயர்த்துள்ள ஜெயகாந்தனின் நாவல்களிலும் காணலாம்
எனது “ பிணங்களின் முகங்கள் “ நாவல் கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 2003 ம் ஆண்டிற்கான சிறந்த நாவல் பரிசு பெற்றது பரிசு பெற்றது.( இப்பரிசை பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், சிவசங்கரி, சோலைசுந்தரப்பெருமாள், பாவைச்சந்திரன் போன்றோரும் பெற்றிருக்கின்றனர் )இது சமீபத்தில் கோவையைச் சார்ந்த பேராசிரியர்
ஆர். பாலகிருஸ்ணனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. நவீன இலக்கியத்தோடு பரிச்சயம் கொண்டவர் என்ற வகையில் அவரின் மொழிபெயர்ப்பில் காணப்படும் உற்சாகம் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. இவர் இளம் வயது பேராசிரியர் என்பதால் , ஓய்வு பெற்ற பேராசிரியர்களின் வழமையான மொழிபெயர்ப்பில் இருந்து மாறுபட்டிருக்கிறது எனபது ஆறுதலானது.

*சுப்ரபாரதிமணியன்

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்