பல்சமய உரையாடலை வலியுறுத்தும் எழுத்துக்கள் நம் காலத்தின் அவசியம்

This entry is part [part not set] of 31 in the series 20080828_Issue

பொன்னீலன்


கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம் நூல் அறிமுக விழா தலித்தியச் சிந்தனையாளர் வி.சிவராமன் தலைமையில் நடைபெற்றது.கவிஞரும் ,மொழிபெயர்ப்பாளருமான ஆர்.பிரேம்குமார் வரவேற்புரையை நிகழ்த்தினார்.

சாகித்திய விருது பெற்ற நாவலாசிரியரும், மத்திய திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினருமான பொன்னீலன் நூலை அறிமுகம் செய்து பேசினார். வழக்கறிஞர் எம்.எம்.தீன் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

‘இந்துக்கள்,கிறிஸ்தவர்கள்,முஸ்லிம்கள் என அனைத்து மக்களும் ஆழ்ந்து படிக்கவேண்டிய நூல் இது. இறைநேசமும் மனித நேசமும் மிகக இஸ்லாமிய சித்தர்களான சூபிகளைப் பற்றியும் இந்நூல் பேசுகிறது. வெட்டும் கத்தியைவிட தைக்கும் ஊசியே உயர்ந்தது என்பது போன்ற சூபிகளின் வாக்கு சிந்தனக்குரியது. இதுவே இன்றைய காலத்தின் தேவையான நல்லிணக்கத்திற்கும் பல்சமய உரையாடலுக்கும் வழி வகுக்கிறது என்றார்.

அடித்தள முஸ்லிம்கள்,பெண்கள்,அரவாணிகள் என் பல்வேறு மக்கள் பகுதியின் விடுதலை,ஜனநாயகம்,சகோதரத்துவ கருத்துக்களை குரானிலிருந்தும்,வாய் மொழிவரலாறுகளிலிருந்தும் இக் கட்டுரைகள் வெளிப்படுத்திக் காட்டுகின்றன என்றும் விளக்கினார்.

மேற்கத்திய சிந்தனையாளர் ஜியாவுதீன் சர்தார்,அரபு சிந்தனையாளர் இபுனுகசீர்,தமிழ்சிந்தனையாளர் சூபி ஞானி பீர்முகமது வலியுல்லா என இஸ்லாமிய அறிஞர்கள் குரானை வாசித்து காலத்திற்கு தகுந்தவாறு விளக்கம் அளிக்கும் முறையியல்களை மேற்கொள்வதை இந் நூல் அறிமுகம் செய்திருப்பது பாராட்டுக்குரியது என்றும் பேசினார்.

கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் தனது எற்புரையில் சுன்னிகள், ஷியாக்கள்,சூபிகள்,வகாபிகள்,சலபிகள், அஹ்லெகுரானிகள்,காதியானிகள் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய குழுமங்களிடையே நிகழ்த்தப்படவேண்டிய இஸ்லாமிய உட்கட்டமைப்பு உரையாடல் மிக முக்கியமான அவசியம்.

பின்காலனியச் சூழலில் அதிகாரங்களுக்கும் ஒடுக்குமுறைக்கும் மாற்றான அணுகுமுறையில் தராள ஷரியத் கோட்பாட்டை அடித்தள முஸ்லிம்கள், விளிம்புநிலை மக்கள் சார்ந்து வாசித்து பொருள் கொள்ள வேண்டும். சுதந்திரச் சிந்தனை,மனிதமுன்னேற்றம்,பன்மைச் சமய சகவாழ்வு சிந்தனைகளை நம்காலச் சூழலில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

கவிஞர்.நட.சிவகுமார்,குறும்பட இயக்குனர் சிவசங்கர்,ஆயவாளர் பென்னி, பீர்முகமது,எம்.விஜயகுமார்,ஷாகுல்ஹமீது,எஸ்.எம்.யூசுப் உள்ளிட்ட ஏராளமான படைப்பாளிகள் கலந்து கொண்டனர்.

கீற்று வெளியீட்டகம் சார்பில் கவிஞர் ஹாமீம் முஸ்தபா நன்றி கூறினார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,தக்கலை இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.


Series Navigation

பொன்னீலன்

பொன்னீலன்