பற்றிப் படரும் பாரம்பரிய இசை விருட்சம்

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

ஜெயந்தி சங்கர்



மைக்ரோஸிஸ் இண்டர்நேஷனல் மற்றும் இண்டெலிஜெண்ட் ச்சிப்ஸ் கனெக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெடின் ஏற்பாட்டில் கடந்த 2008 நவம்பர் 15 மாலையில் சிங்கப்பூர் பார்க்கர் ரோட்டில் இருக்கும் ACS பள்ளியின் உள்ளரங்கில் நடந்தேறிய தீபாவளி விழாவின் முக்கிய அங்கம் அபிராமியின் வீணையிசை.

தன் பெயரை அழைத்ததும் பின்புறமிருந்து மேடைக்கு வந்து அவையோரை வணங்கிவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து குருவையும் கௌரவ மற்றும் சிறப்பு விருந்தினர்களையும் வணங்கிவிட்டு மேடையேறி குமாரி.G.V.அபிராமி தன் இசை விருந்தை ஆரம்பித்தார். 17 வயதாகும் துமாஸிக் தொடக்கக் கல்லூரி மாணவியான இவர் சிங்கப்பூரில் இசை கற்க ஆரம்பித்து இங்கேயே பயிற்சியை மேற்கொண்டவர். சில வருடங்களாக ‘வைணிகா ம்யூஸிக்’ பள்ளியில் குரு ஸ்ரீமதி. காரைக்குடி ஜெயலக்ஷ்மி சுகுமார் அவர்களிடம் வீணை பயின்று வரும் இவரது அரங்கேற்றம் இன்னமும் முடியவில்லையாம். ஆனால், குருவின் தயாரிப்பில் அன்று அவரது வாசிப்பைக் கேட்டு ரசித்தவர்களுக்கு ஏற்கனவே பலமேடைகள் கண்ட தன்னம்பிக்கையும் லாவகமும் அவரில் இருந்தது புலப்பட்டிருக்கும்.

பெரும்பாலான கச்சேரிகளில் துவக்கமாக அமையும் ஹம்சத்வனி அன்றும் ‘கம் கணபதே’ வழியாக அரங்கில் உற்சாகத்தைக் கொணர்ந்து தன் பங்கையாற்றியது. முதல் உருப்படியிலேயே மிருந்தங்கம் வாசித்த ரமணன் மற்றும் கடம் வாசித்த ஸ்ரீஅகிலேஷ்வர் ஆகிய இருவரும் தொடர்ந்து கச்சேரியில் தாம் கொடுக்கவிருந்த இணக்கமான ஆதரவுக்கு உத்திரவாதம் அளித்துவிட்டிருந்தனர். அபிராமிக்கும் அரங்கில் கேட்டு ரசித்துக் கொண்டு அமர்ந்திருந்தோருக்கும் தான். அடுத்ததாக ஜகன்மோகினி ராகத்தில் ‘சோபில்லு’ என்ற கீர்த்தனையை வாசித்தார்.
கௌரவ விருந்தினராக இந்திய தூதரகத்தின் உயரதிகாரி திரு.வசந்த் குமார் அவர்களும் சிறப்பு விருந்தினராக ‘விஸ்வகலா பாரதி’ ஈழநல்லூர் S.சத்தியலிங்கம் அவர்களும் பங்கேற்ற இவ்விழா நடந்தேறிய அரங்க நுழைவாயிலில் கண்களுக்கு விருந்தாக திருமதி.சசி அவர்களின் ரங்கோலியும் நாவுக்கு இனிப்பாக ஒரு சாக்லெட்டும் கொடுக்கப்பட்டன. சிங்கப்பூரின் தேசிய கலைகள் மன்றத்தின் உயரதிகாரி ஒருவரும் வருகை புரிந்திருந்தார்.

மூன்றாவதாக கீரவாணியில் ‘தேவி நீயே துணை’ வரும் போது அபிராமிக்குள் துளியளவு மிச்சமிருந்த மேடை நடுக்கங்கள் முற்றிலும் விலகி விட கச்சேரி சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. ராக ஆலாபனை சிறப்பாக இருந்தபோதிலும் கீர்த்தனையின் துவக்கம் தான் எல்லோரையும் நிமிர்ந்து உட்கார வைத்திருக்கும். அதேபோல சரணத்தைத் துவக்கிய விதமும் கல்பனா ஸ்வரம் வாசித்தபோதும் ஒரு மாணவி வாசிப்பது போன்றில்லாமல் தேர்ந்த இசைஞர் வாசிப்பதைப் போல உணரமுடிந்தது. என்னைப் போலவே அரங்கில் பலரும் உணர்ந்திருக்கலாம். கீரவாணியில் ஸ்வர சஞ்சாரத்தின் போது அபிராமி அன்று சில இடங்களில் வாசித்த தானப்பிரயோகங்கள் ஓரளவிற்கு இசையறிந்தவரை மகிழ்வித்திருக்கும். இரண்டு லய வாத்தியங்களும் கொடுத்த ஒத்துழைப்பு வெகு அழகு. அவர்களின் தீர்மானமும் அபிராமியின் எடுப்பும் தன்னம்பிக்கையோடு அமைந்திருந்தது.
ஒரு ஜனரஞ்சகத்திற்காகவென்று, பட்டியலில் இல்லாத காரைக்குடி சாம்பசிவய்யரின் இங்கிலிஷ் நோட் ஒன்றை வாசித்துவிட்டு அபிராமி ‘ராகம் தானம் பல்லவி’க்குப் போகும் போது மணி ஏழு ஐம்பத்தைந்தாகியிருந்தது. கீரவாணி மட்டுமின்றி அமிர்தவர்ஷிணியிலும் ஆலாபனையை இன்னும் கொஞ்சம் நிதானமாக வாசித்திருந்தால் அன்றைய கச்சேரி பூரணமடைந்திருக்கும். அந்த நிதானமும் முழு ஈடுபாடுமான ஆலாபனை அபிராமிக்கு எளிதில் சாத்தியம் என்பதில் சந்தேகமேயில்லை.

அமிர்தவர்ஷிணி ராகத்தைவிட அபிராமியின் தானம் அன்று மிகச் சரளமாக இருந்தது. விரல்களில் ஆசிரியரின் பாடமும் மாணவியின் உழைப்பும் பளிச்சென்று புரிந்தது. ஐயங்களேயில்லாத கமகங்களும் நுணுக்கங்களும் காதுகளை நிறைத்தன. ராகமும் தானமும் இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாக அமைந்திருக்கலாமோ என்ற ஒரு திருப்தியின்மையைக் கொடுத்தாற்போல நான் உணர்ந்தேன். என் மனம் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று கேட்டபடியிருந்தது. தானம் முடியும் போது அரங்கில் நியாயமான கரவொலி எழுந்தது.
பல்லவியை வாசிக்க ஆரம்பிக்கும் முன்னர் மடியிலிருந்து வீணையைக் கீழே வைத்து விட்டு தன் குரு ஸ்ரீமதி. காரைக்குடி ஜெயலக்ஷ்மி சுகுமாரன் அவர்களின் சொந்த ஆக்கமான ‘பல்லவி’யை வாய்விட்டு பவ்யமாக அபிராமி பாடியபோது ராகதேவதையைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டது போலிருந்தது. பாடிக் கொண்டே வாசிக்க வலியுறுத்தும் காரைக்குடி பாணி அப்போது தான் நினைவுக்கு வந்தது. பல்லவியை ஒரே ஒருமுறை அழகாகப் பாடினார். அதைக் கேட்டதும் எனக்கென்னவோ அபிராமி வாசிக்கும் போது கொஞ்சமும் தயங்காமல் இனி தைரியமாகப் பாடலாமென்றே தோன்றியது.

நெரவலைச் சிறப்பாக முடித்துவிட்டு ஸ்வராலாபனைக்கு வந்தபோது அபிராமியில் மீண்டும் தன்னம்பிக்கை தூக்கலாகப் பளீரிட்டது. ஆபோகி, மோகனம், ஹிந்தோளம், வலஜி மற்றும் ரேவதி ஆகிய ஐந்து ஔடவ ராகங்களில் ராகமாலிகையாக ஸ்வரம் வாசித்து முடித்ததும் தனியாவர்த்தனம் வாசித்தார்கள் ஐந்து நிமிடங்களுக்கு. நிறைய மேடைகளில் ரொம்பவே அடங்கி ஒலிப்பதைப் போலில்லாமல் கடம் அன்று மிருதங்கத்திற்கு இணையாக தீர்க்கமாக ஒலித்தது. இருவரும் மிக அழகாக ஒருவருக்கொருவர் இசைவாக வாசித்தது நிறைவாக இருந்தது. லயக்கலைஞர்கள் வாசித்த தீர்மானம் முடிந்து பல்லவியை எடுக்குமிடத்தில் சின்ன சந்தேகமேற்பட்டது போல இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு சரியாக எடுத்து விட்டார் அபிராமி.
அடுத்து மீண்டும் ஜனரஞ்சகத்துக்கென்று அமரர் வீணையிசை வித்தகர் சிட்டிபாபு அவர்களின் ஆக்கமான ‘wedding bells’ வாசித்தார் அபிராமி. ஆங்கில ‘பால் ரூம்’ நடனமாடத் தெரிந்தோர் அங்கிருந்திருந்தால் நிச்சயம் அனிச்சையாக எழுந்து ஆடியிருப்பார்கள் அன்றைக்கு. அத்தனை கச்சிதமாக அமைந்தது.

மாலை ஏழு மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய இசை நிகழ்ச்சி ஏழிருபதுக்குத் தான் ஆரம்பித்தது. நல்லவேளையாக, பாம்பே ஜெயஸ்ரீயின் பக்திப்பாடலைப் போட்டு விட்டதால் அரங்கில் காத்திருந்தது அலுப்பேற்படுத்தவில்லை.

பாரதியாரின் ‘நெஞ்சில் உரமுமின்றி’ பாடலை ராகமாலிகையாக அபிராமி வாசிக்கும் போது மணி எட்டு முப்பத்து மூன்றைத் தாண்டியிருந்தது. இந்தப் பாடலை அபிராமி வாசித்தபோது நான் பல இடங்களில் கண்மூடி கேட்டேன். இனிய குரலுடைய யாரோ பாடுவதைப் போலக் கேட்டது. பாரதியாரையும், தமிழையும், அந்தப் பாடலையும் ஏற்கனவே அறிந்ததால் இருக்கலாம். ஆனால், மீட்டுகள் விழுந்த விதத்தில் வீணையே சொற்களைப் பாடியது போலிருந்தது.

சுத்த மத்யம பிரதி மத்யம ராகங்களிலும் அடுத்தடுத்து ஒரே தாளவகையாக இல்லாமல் வெவ்வேறு தாளங்களிலும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படிகளுடன் அமைந்த இசை நிகழ்ச்சியின் இறுதியில் அபிராமி வாசித்த ஹம்சநாதத்திலான தில்லானா காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் உருவாக்கப் பட்டது. சிறப்பாக வாசித்த அவரது லாவகமும் வேகமும் அந்த மேடையில் மீண்டுமொருமுறை நிரூபணமானது. மிருதங்கமும் கடமும் ஒவ்வொரு ஆவர்த்தனமாக மாற்றி மாற்றி வாசித்தது அதி அற்புதமாக இருந்தது. இருவருக்கும் team effort என்பதற்கான மிகச்சரியான புரிதல் இருக்கிறது. வெகுநாட்களுக்குப் பிறகு தேர்ந்த பக்கவாத்திய, அதிலும் லய வாத்திய இசையைக் கேட்ட நிறைவு அன்றைக்கு எனக்குள் ஏற்பட்டது. தில்லானாவை அபிராமி வாசித்து முடிக்கும் போது என் மன ஆழத்தில் தோன்றியது – இடைவெளியில்லாத இசைப்பயணத்தை அபிராமி தொடர்வாரேயானால் அவருக்கு வீணையிசையில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.
இந்தியர்கள் தவிர நிறைய சீனமாணவிகள், சீன ஊழியர்கள் மற்றும் சில மேலை முகங்களும் தென்பட்ட இவ்விழா ஏற்பாடுகளுக்குச் சில இளம்பெண்கள் உதவிபுரிந்திருந்த போதிலும் எல்லாமே திட்டமிட்டபடியும் திருத்தமாகவும் அமைந்ததற்கு திரு மற்றும் திருமதி கௌதம் ஆகியோரையே பாராட்ட வேண்டும்.

இசை நிகழ்ச்சி முடிந்தபிறகு சிறப்பு விருந்தினரான ‘விஸ்வகலா பாரதி’ ஈழநல்லூர் S.சத்தியலிங்கம் அவர்கள் உரையாற்றி அபிராமிக்கு ஆசிகள் வழங்கினார். இசை கற்கும் வழிமுறைகள் குருகுல வழக்கத்திலிருந்து நவீன உலகிற்குள் எப்படி மாற்றங்கள் கண்டனவென்று ஆரம்பித்த அவரது உரை பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தைச் சொன்னது. குருவைத் தேடிப்போக வேண்டிய காலம் மாறியது கலா§க்ஷத்திரா நிறுவப்பட்ட போது என்று அவர் சொன்னார். ருக்மிணி அருண்டேல் அவர்களைக் குறித்தும் பேசினார். சங்கீதம் என்றால் இசை மட்டுமில்லை. சங்கீதம் என்றால் வாய்ப்பாட்டு, வாத்திய இசை மற்றும் நடனம் மூன்றும் சேர்ந்தது என்று சொல்லி கலா§க்ஷத்திராவில் முதல்வராக இருந்த காரைக்குடி சாம்பசிவய்யர் அவர்களுக்கு ஒரு காலத்தில் வெற்றிலை இடித்துக் கொடுத்த மாணவராக தான் இருந்ததை நினைவு கூர்ந்தார். காரைக்குடி சாம்பசிவய்யர் அவர்கள் மாணவர்களுக்கு ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தவென்று வீணையின் அனைத்து சாத்தியங்களைக் காட்டவும் தாமே உருவாக்கி இசைத்த இங்கிலீஷ் நோட்டுகள் பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார். இரட்டையர்களான காரைக்குடி சாம்பசிவய்யர் மற்றும் சுப்பராமய்யர் ஆகிய இருவரில் ஒருவர் வீணையை வழக்கமான முறையிலும் ஒரு தம்புராவைப்போல நிறுத்தி வைத்தும் சேர்ந்து வாசித்ததைக் குறிப்பிட்டு அவ்வாறு வாசித்தவர்கள் அவர்களுக்குப்பிறகு யாருமில்லை என்று வியந்து புகழ்ந்தார். அந்தப் பாரம்பரியமும் புகழும் கொண்ட காரைக்குடி பாணி வீணையிசையை சிங்கப்பூரில் ஊன்றி இசைக்குப் பெறும் சேவையாற்றி வரும் அபிராமியின் குருவும் ‘வைணிகா ம்யூஸிக்’ பள்ளியின் நிறுவனருமான ஸ்ரீமதி. காரைக்குடி ஜெயலக்ஷ்மி சுகுமார் அவர்களின் இசைத் தொண்டையும் உயர்வாகச் சொன்னார். எங்கே போய் வாசித்தாலும் வாசிப்பைக் கேட்பவர் இசைஞரிடம் முதலில் உன் குரு யார் என்றும் தான் கேட்பார்களே தவிர உன் பெயர் என்ன என்று கேட்க மாட்டார்கள் என்றும் கூறினார்.
இசைவிருந்து முடிந்து இரவுணவுக்குப் போகும் முன்னர் விழாவில் சிறப்புகள் செய்யப்பட்டு முக்கியமானவர்களுக்கு நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டன. இறுதியில், அபிராமியின் தந்தை திரு.கௌதம் நன்றியுரையாற்றினார்.

சிங்கப்பூரில் இதுபோன்ற செறிவானதும் சத்தானதுமான இசை நிகழ்ச்சிகள் அடிக்கடி நடந்தேறினால் இளைய சமுதாயத்திற்கு ஊக்கமாக அமைந்து சிங்கப்பூரில் இசையுலக முன்னேற்றங்களுக்கு உறுதுணையாகும்.

–(நிறைவு)–

நன்றி: தமிழ் முரசு 21 நவம்பர் 2008

மேலதிக தகவல்களுக்கு –

திரு & திருமதி. ஜெயலட்சுமி சுகுமார் – sujay@singnet.com.sg

திரு & திருமதி. கௌதம் – kumarakshi@yahoo.com

ஜெயந்தி சங்கர் – jeyanthisankar@gmail.com
http://jeyanthisankar.blogspot.com/

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்