“பருவம்” தாண்டிய சமூக வேலிகள் – (கன்னட நாவலாசிரியர் எஸ்.எல்.பைரப்பாவின் புகழ்பெற்ற ‘பருவம்’ நாவலை முன்வைத்து)

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

புதியமாதவி, மும்பை



சாகித்திய அக்காதெமியின் வெளியீடாக வெளிவந்திருக்கும் நாவல் “பருவம்”, எழுத்தாளர் பாவண்ணனின் மொழியாக்கத்தில் தமிழ் வாசகர்களுக்கும் வாசிக்க கிடைத்திருப்பதற்கு தமிழ் வாசகர்கள் எழுத்தாளர் பாவண்ணனுக்கு பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 1075 பக்கங்கள் கொண்ட நீண்ட நாவல், இந்தியாவின் பெரும்காப்பியங்களில் ஒன்றான மகாபாரதக் கதையை காப்பிய மாந்தர்களுக்கான அலங்காரங்கள், புனிதங்கள் என்ற கட்டுமானங்களை உடைத்து ஆண்மை, பெண்மை என்ற அட்டவணைக்குள் எழுதப்பட்டிருக்கும் கற்பிதங்களைக் கேள்வி கேட்டு, ஆரியம், தேவர்கள், யாதவர்கள் என்ற சமூகங்களுக்கு ஊடாக பயணித்து மகாபாரதக்கதை மாந்தர்களை அவரவர்களுக்கான பார்வைகளுடன் பேச வைத்துள்ளது.

நம் காப்பியங்கள், இதிகாசங்கள் உண்மையா? கற்பனையா? என்ற பட்டிமன்றங்களிலேயே நாம் சுகம் கண்டு உண்டு, இல்லை இரண்டுக்கும் கைதட்டும் ஒரு கூட்டமாக உருவாகி இருக்கிறோம். இந்த இதிகாசங்களின் ஊடாக மனித நாகரிக வளர்ச்சியில் முகிழ்த்த பண்பாட்டு மாற்றங்களை உணரும் சொரணையற்று இருக்கிறொம். அரசியல் வாதிகளும் மதவாதிகளும் அவரவர் சுயலாபங்களுக்காக புராணக்கதை மாந்தர்களை மனித வரலாற்றிலிருந்து விலக்கி வைத்து தங்களுக்கான தலைமைப் பீடத்தை தக்கவைத்துக் கொள்வதில் கண்ணுங்கருத்துமாக இருந்து வருகிறார்கள். பருவம் நாவல் தெய்வீகமாக கருதப்பட்டுக்கொண்டிருக்கும்
புராண மாந்தர்களின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது.

பள்ளி பருவத்தில் குந்தி-கர்ணன் நாடகம் அனைவரும் விரும்பும் கதை. பாடப்புத்தகத்திலும் இந்த நாடகமே இடம் பெற்றும் இருந்தது.
தொலைக்காட்சி வசதிகள், கணினி வசதிகள், பாலியல் கல்வி எதுவுமில்லாத 30 வருடங்களுக்கு முன்பு குந்தி மந்திரம் சொல்லி
கர்ணனைப் பெற்றெடுத்ததாகச் சொன்ன அதி நவீன கற்பனைக் கதை அடிக்கடி சில கேள்விகளை முன்வைக்கும். ‘மந்திரம் சொன்னால் குழந்தைப் பிறக்குமா? சூரியதேவன் வந்து குழந்தையைக் கொடுப்பானா?..இத்தியாதி கேள்விகள். அறிவியலுடன் சிந்திக்காமல் கற்பனைகளில் மட்டுமே உலாவி வாழும் ஒரு தலைமுறையைத் தான் நம் கல்வித் திட்டங்களும் உருவாக்கி வைத்திருந்தன. இப்போதும் அதே பாடத்திட்டங்கள் தானிருக்கின்றன எனினும் இன்றைய குழந்தைகளுக்கு மந்திரம் சொல்லி குழந்தைப் பிறக்காது என்ற உண்மை புரிகிறது.

இந்தக் குந்திதேவியின் மூத்த மகன் கர்ணன் சூரிய தேவனுக்கு அவள் அறியாமல் மந்திரம் சொன்னதால் பிறந்தவனில்லை. குழந்தை எப்படி பிறக்கிறது என்று இரண்டும்கெட்டான் வயதில் அரண்மனைக்கு வந்திருந்த முனிவரிடம் கேட்க அவரும் இப்படிதான் குழந்தை உருவாகும் என்று பாடம் கற்பித்திருக்கிறார். திருமணத்திற்கு முன்பு பெண் குழந்தைக்குத் தாயாவதும் அந்தக் குழந்தையுடன் சேர்த்தே ‘தாயும் கன்றுமாக’ ஆண் திருமணம் செய்து கொள்வதும் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

நாளடைவில் ஆட்சி, அதிகாரம், சொத்துரிமை அனைத்தும் வாரிசு வழி உரிமையாகும் போது தனக்குப் பிறந்தக் குழந்தைக்கும் அடுத்தவனுக்குப் பிறந்த குழந்தைக்குமான உரிமைகளை ஆண் சமுதாயம் நிலைநிறுத்த முனைகிறது. அதனால்தான் நியோக முறையில் குந்திக்கு தருமன், பீமன், அர்ஜூனனும், மாதுரிக்கு நகுலன், சகாதேவன் பிறந்தப் பிறகும் பாண்டுராஜா தன் உடல்நிலைத் தேறி தன் மூலம் ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்று காத்திருக்கிறான்.

திரெளபதையின் ஆண்பிள்ளைகள் ஐவரும் யுத்த களத்தில் கூடாரத்தில் பாண்டவர்கள் என்று தவறுதலாக நினைத்து அஸ்வத்தாமனால் .கொலைச் செய்யப்படுகிறார்கள். தன் சகோதரனுடன் சேர்ந்து பிணமாகக் கிடக்கும் தன் ஐந்து பிள்ளைகளுக்காக
அழவில்லை திரெளபதை.. அவளருகில் வராமல் அணைத்து ஆறுதல் சொல்லாமல் ஒதுங்கி நிற்கும் தன் வீரமிக்க கணவன்மார்களில் விலகல்அவளை அழவைக்கிறது.

“கிருஷ்ணா, எனது நிலைமை உனக்குப் புரியவில்லை. அபிமன்யு இறந்தப்போது, அர்ஜூனன் ஓடிவந்து மனைவி சுபத்திரையைத் தழுவிக் கொண்டு தேம்பித்தேம்பி அழுவதை நீ பார்த்தாயல்லவா? கடோத்கஜன் இறந்தபோது
அவன் உடலைச் சுமந்து வந்த பீமன் தன் மீது இருந்த ரத்தக் கறையையெல்லாம் கண்ணீராலேயே கழுவியதையும் பார்த்தாயில்லையா? இப்போது இந்த ஐந்து பேர்கள் மீதும் நான் ஒருத்தியே விழுந்து அழுது முடித்தேன். சுற்றிலும் நின்று கொண்டிருந்த தந்தைமார்கள் ஐந்து பேரில் ஒருவனும் இப்பிணங்கள் மேல் விழுந்து அழவில்லை…ஈனப்பிறவியான அஸ்வத்தாமன் எனக்குப் புத்திரசோகத்தைக் கொடுத்துவிட்டான். அதே சமயத்தில் எனக்கு மிகப்பெரிய உண்மையொன்றை விளங்க வைத்திருக்கிறான்” என்று சொல்லிவிட்டு அவள் பிள்ளைகளுக்கு அவளே கொள்ளி வைக்கிறாள். மனிதர்களை விட தேவர்கள் உயர்ந்தவர்கள், என்றும்
தேவலோகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்பதெல்லாம் கிடையாது என்றும் நம்புகின்ற ஒரு சமுதாயத்தில் தான் வாரிசுரிமைக் கருத்துருவாக்கம் எப்படி முளைத்தது என்பதைக் கதைப் போக்கில் நாம் உணரமுடிகிறது.

திருதராஷ்டிரனுக்கு காந்தாரி மூலம் பிறந்த 14 ஆண்குழந்தைகள், ஒரு பெண் குழந்தைத் தவிர மீதி 86 ஆண்குழந்தைகளும் அரண்மனைப் பணிப்பெண்ணுக்குப் பிறந்தவர்கள். சரி இந்த 86 ஆண் குழந்தைகள் தவிர பெண் குழந்தைகளே பணிப்பெண்களுக்குப் பிறக்கவில்லையா?
இந்தக் கேள்விதான் சில புனிதங்களை உடைக்கிறது.
“ஆண்பிள்ளைகள் பிறந்தால் அரசனின் பெயரைச் சொல்பவர்கள் பெண் குழந்தைகள் பிறந்தால் எந்தப் பெயரையும் சொல்லாமல் இருப்பதும் உண்டு. இவள் தன் தந்தைக்குப் பிறந்த பெண் என்ற எண்ணம் எந்த அரச குமாரனுக்காவது எழுந்துவிட்டால், பிற்பாடு அரச சேவையில் சேர முடியாமல் போய், வயிற்றுப்பாட்டுக்குத் திண்டாட்டமாக ஆகிவிடும்.” என்று பணிப்பெண்சுஸ்மிதா மூலமாகச் சொல்லியிருப்பார். (பக்865)

தேவதாசிகளுக்குப் பிறந்தப் பெண் குழந்தைகள் பற்றிய கதைகள் நிறைய உண்டு. தேவதாசிகளுக்குப் பிறந்த ஆண்குழந்தைகள் பற்றிய கதைகள் நம் நாட்டார் கதைகளிலும், இலக்கிய வட்டத்திலும் மிகவும் குறைவு. வாரிசுகளின் பாலின அடையாளம் கூட அவரவர் தொழில், வாழ்க்கை சம்மந்தப்பட்டே முன்னிலைப் படுத்தப் படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.

உக்கிரசேனன் தன் மனைவிக்கு திருமணத்திற்கு முன் பிறந்த குழந்தை கம்சனிடம் தன் குழந்தைகள் போல அன்பு காட்டாமல் வேறுபாடு காட்டி வித்தியாசமாக நடத்தியதுதான் கம்சனை ஒரு மனித நேயமற்ற கொடியவனாக்கியது. நடைமுறை வாழ்க்கை வழங்கும் உரிமை, அன்பு மறுக்கப்படும் போது அந்த மறுதலித்தலின் விளைவுதான் மக்கள் சமுதாயம் சந்திக்கும் தீவிரவாதிகளும் அவர்களின் தீவிரவாத செயல்பாடுகளும்.

கண்ணன் குழல் ஊதுவதும் பெண்கள் அவனைச் சுற்றி மயங்கி நிற்பதும் இப்போதும் காலண்டர்களை அலங்கரிக்கும் காட்சிகள்.
இத்தனைப் பெண்களா.. ஓர் ஆடவனிடம் குழலோசைக்காக மட்டுமே தன்னை மறந்து மயங்கி நிற்பது சாத்தியப்படுமா? பெண்கள் எல்லோரும் குழலோசைக்கு மயங்கி நிற்கும் குணநலன் உடையவர்களா?
கண்ணனுக்கு இத்தனைப் பெண்களின் அவசியம் ஏன் வந்தது? கண்ணன் பெண்பித்து பிடித்தவனோ?அப்படி அந்தக் கண்ணனிடன் என்னதான் இருந்தது இத்தனைப் பெண்களை வசப்படுத்த?
பெண்கள் பலர் ஆணிடம் மயங்கி நிற்பதாகச் சொல்வதில் அந்த ஆணுக்குப் பெருமை இருப்பதாக ஆண்கள் கட்டமைத்த இச்சமுதாயம் நம்புகிறது. இன்றுவரை இதில் மாற்றமில்லை. கண்ணனின் கதையை இக்கருத்துருவாக்கத்திற்காக வளைத்துப் போட்டிருக்க வேண்டும். பருவம் நாவலில் வரும் கண்ணன் நரகாசுரனிடமிருந்து விடுவித்துக் கொண்டு வந்த பெண்கள் கையில் குழந்தைகளுடனும் வயிற்றில் குழந்தையுடனும் அவன் முன்னால் நிற்கிறார்கள். இனி அவர்களின் எதிர்காலம்? அவர்கள் குழந்தைகளின் எதிர்காலம்?

கண்ணன் தன் நண்பர்களுக்கு அப்பெண்களுக்கு வாழ்வளிக்க வேண்டியது நம் கடமை என்று வேண்டுதல் வைத்தும் அவர்கள் யாரும் மணந்து கொள்ள முன்வரவில்லையாதலால் கடலோரம் அப்பெண்களை வரிசையாக நிறுத்தி ஒவ்வொருவருக்கும் மணமாலைச் சூட்டி மனைவியராக்கிக் கொள்கிறான். அடுத்தவனுக்குப் பிறந்த குழந்தைகளை எல்லாம் தன்
குழந்தைகளாகவே ஒத்துக் கொண்டு அந்தப் பெண்கள் அனைவருக்கும் தன் மனைவியர் என்ற ஒரு சமூக அந்தஸ்த்தைக் கொடுக்கிறான். அவர்களில் சில பெண்கள் அதன் பின் கண்ணனின் குழந்தைக்கும் தயாகிறார்கள்!
பணிப்பெண்களுக்கு 86 பிள்ளைகளைக் கொடுத்த திருதராஷ்டிரன்..
அடுத்தவனுக்குப் பிறந்த குழந்தைகளுடன் தன்னிடம் அடைக்கலம்
புகுந்தவர்களுக்கு மணமாலைச் சூட்டி மனைவியராக்கி கொண்ட கண்ணன்..
ஆண்-பெண் பாலியல் உறவுக்கு திருமணம் என்ற ஒப்புதலை நோக்கி
சமுதாயம் நகர்வதைக் கதைப் போக்கில் வைத்திருக்கிறார் பைரப்பா.

திரெளபதையின் ஐந்து புதல்வர்களையும் பார்த்து ஒரு தச்சன் “இளவரசே நீங்கள் எல்லோரும் ஐந்து பேரையும் அப்பா என்று கூப்பிடுவீர்களா அல்லது மூத்தவர் தருமரை மட்டும் அப்பா என்றும் மற்றவர்களை சித்தப்பா என்றும் கூப்பிடுவீர்களா?” என்று கேட்கிறான். (பக் 270)
அப்போதுதான் “எங்கள் பாஞ்சாலத்தில் இது அவ்வளவு வித்தியாசமான ஒன்றாக இருக்காது. ஆனால் பாஞ்சாலத்துக்கு வடக்கிலும் மேற்கிலும் இருக்கிற பெரும்பாலன்வர்களுக்கு இப்படி ஒரு பழக்கம் இருக்கிறது என்பதே தெரியாது. என்ற இனக்குழுக்குகளுக்குள் நிலவும் வெவ்வேறு ஒழுக்க வரைமுறைகளை விளக்கியிருப்பார். (இன்றும் இமயமலைப் பகுதியிலிருக்கும் கடவால் பகுதி,
பஞ்சாப், ஹரியானா பகுதிகளில் நவயுக திரெளபதை தன் கணவன்மார்களுடனும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்) திரெளபதையின் மகன் அவளிடம்,

“உண்மையான ஆரியதருமம் என்றால் என்ன?”என்று கேட்கிறான்.
அவளும் சொல்கிறாள்..இளையவனிடம்,”ஆரிய தருமம் என்றால் என்ன வென்று உன் அண்ணன் கேட்டான். வேட்டை, சூது, மது, பெண்களுடன் சல்லாபம் என்று ஞாபகம் வந்தது”என்கிறாள்.
புராணக்கதையின் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தின் மூலம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் நம்பியதைத் தூக்கிப்
பிடிக்கும் நம் நம்பிக்கைகளைக் கேள்விக்குரியதாக்குகிறார்.

இதுவரை நாமறிந்த ஏகலைவன் கதையை பைரப்பா ஓர் அரசியல் பார்வையுடன் வைக்கிறார். எந்த ஓர் ஆசிரியரும் தான் விரும்பும் முதல் மாணவனின் நலனுக்காக தன்னைக் குருவாக ஏற்றுக்கொண்ட இன்னொரு மாணவனின் கட்டைவிரலைக் கேட்கும் ஈனப்பிறவியாக இருந்திருக்க முடியுமா? இந்தக் கோணத்தில் இதுவரை நம்மைச் சிந்திக்கவே விடாமல் வைத்துவிட்டது
நம் காவியங்களும் கவிஞர்களும் ஊடகங்களும். அடேங்கப்பா… துரோணரின் இச்செயலைக் கண்டித்து எத்தனை எத்தனைக் கவிதைகள் …துரோணரின் இந்தச் செயலுக்கு அவரை மட்டுமே பொறுப்பாக்குவதில் பைரப்பாவுக்கு உடன்பாடில்லை.

குருசேத்திரத்தில் சந்திக்கும் ஏகலைவன் துரோணரிடன் கேட்கிறான். ‘குருவே , உண்மையை இப்போதாவது சொல்லுங்கள், யாரைக் கண்டு பயந்தீர்கள்?’
துரோணர் பீஷ்மர்தான் காரணம் என்பதைச் சொல்கிறார்.
‘வரவர காட்டுவாசிகள் ராஜ்ஜியத்திற்குள் புகுந்து தொல்லை கொடுப்பது அதிகமாகிவிட்டது. ஆரியர்களின் கிராமங்களில் புகுந்து தானியங்களைக் கொள்ளையடிக்கிறார்கள், நம் பெண்களைக் கடத்திக் கொண்டு போகிறார்கள், அப்படிப்பட்டவர்களின் தலைவனுடைய மகனுக்கு நீங்கள் ஆரியர்களூக்குரிய வில் பயிற்சி (காட்டுவாசிகள் பழகியிருப்பது தக்கையான அம்புகள், ஆரியர்களின் அம்புகள் உலோக நுனியுடன் இருப்பது) முறையக் கற்றுக் கொடுத்தால் ,ராஜ்ஜியத்துக்கு அநியாயம் செய்கிறதைப் போலாகும், அதுமட்டுமல்ல, இப்போது கற்றுக் கொடுத்திருப்பதையும் திரும்பிப் பெற வேண்டும்” என்று ஆணையிட்டத்தைச் சொல்லி ஏகலைவனின் கட்டைவிரலை வெட்டிய ஆதிக்க இனத்தை அடையாளம் காட்டுகிறார்.

அதிகார ஆட்சி வர்க்கம் தன்னை தர்மாதிகாரியாகக் காட்டிக் கொள்ள மற்றவர்களை எப்போதும் பகடைக் காயாக்குவதைப் பார்க்கிறோம். பீஷ்மரும் நினைத்திருந்தால் அவரே ஏகலைவனிடன் போரிட்டு சிறை எடுத்து அவன் கட்டைவிரலை வெட்டி எறிந்திருக்கமுடியும். அல்லது அவர் ஆணைப்படியே துரோணர் இதைச் செய்கிறார் என்பதையாவது உலகறிய செய்திருக்க முடியும்.
ஏன் அப்படி செய்யவில்லை?
அஸ்தினாபுரத்துக்கும் காட்டுவாசிகளுக்கும் இடையில் நடக்கும் பண்டமாற்று வணிக உறவு பாதிக்கப்படக் கூடாது என்பதால்.
ஆட்சியிலிருப்பவர்கள் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள ஆடும் ஆட்டங்களை பிதாமகர் பீஷ்மரும் செய்திருக்கிறார் என்று காட்டி அதிகாரத் தலைமைகளின் முகத்திரையைக் கிழித்திருக்கிறார்.

ஏகலைவன் கதையில் நாவலாசிரியர் பைரப்பா புதிய ஓர் அத்தியாயத்தைப் படைத்து பல்வேறு கோணங்களில் மறுவாசிப்புக்கு இடமளிக்கிறார்.

நியோகமுறையைப் பற்றி பீஷ்மர் துவைபாயணா முனிவரிடம் ‘நள்ளிரவு நேரமாக இருக்க வேண்டும், சம்மந்தப்பட்ட ஆண், பெண்
இருவரும் உடல் முழுக்க நெய் தடவிக்கொண்டிருக்க வேண்டும். தன் புலன்களை எல்லாம் ஆண் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். முழுக்க முழுக்க உணர்ச்சி வசப்படாத ஒன்றாகவும் மருத்துவர் நோயாளியின் வாயைத் திறந்து மருந்தைப் புகட்டுவது போல இருந்துவிட்டு திரும்பவேண்டும்..” என்கிறார்.
ஆனால் ஆண்-பெண் உறவுஎன்ன? என்பதை முனிவருக்கு அரண்மனைப் பணிப்பெண் ( முனிவருக்கு விதுரனைப் பெற்றவள்)சொல்லிக்கொடுக்கிறாள். ஆண்-பெண் உறவைப் பற்றி பிரம்மச்சாரியான பீஷ்மருக்கு என்ன தெரியும்? அய்யா அவர் சொல்வது போலப் புலன்களை அடக்கிக் கொண்டால் எப்படி வீரியதானம் செய்ய முடியும்? ‘ என்று புரியவைக்கிறாள்.-
நடைமுறை வாழ்க்கையுடன் ஒப்பிடும் போது ஆதிக்கவர்க்கம் உருவாக்கி வைத்திருக்கும் ஒழுக்க விதி முறைகள் எத்துணைப் போலித்தனமானதுஎன்ற உண்மையின் முகத்தைப் பார்க்கிறோம்.

குருஷேத்திர யுத்தம் என்றவுடன் எண்ணிக்கையில் அடங்காத காலாள் படைவீரர்கள், தேர்ப்படைகள், குதிரைப்படைகள் என்ற
காட்சி நம் கண்முன்னே விரியும். வில்லும், வேலும் வாளும் யானையின் பிளிறலும் குதிரையின் மின்னல் வேகமும்…
இதற்கு அப்பால் எதையும் நாம் எண்ணிப்பார்ப்பதில்லை.மிகப்பெரிய யுத்த களத்தில் படைகளுக்குள் ஏற்படும் அடையாளச் சிக்கல்,
உணவு , குடிதண்ணீர் பற்றாக்குறை, அழுகி நாற்றமெடுக்கும் பிணங்கள், அதனால் பரவும் நோய்கள், வீரர்களின் மனநிலைப் பாதிப்புகள், ஏன் இத்தனை மனிதர்களின் ‘காலைக்கடன்’ வாயுமண்டலத்தையே நாத்தமெடுக்க வைத்திடும் அவலம்… இப்படியாக குருஷேத்திர யுத்த களத்தின் இன்னொரு காட்சியைச் சித்தரிக்கும் முதல் படைப்பிலக்கியமாக பைரப்பாவின் பருவம்.

எல்லாம் முடிந்து .. குருவம்சத்தின் வாரிசு பூமியில் தொடரும் என்ற நம்பிக்கை அபிமன்யுவின் குழந்தை இறந்து பிறந்ததில் தவிடு பொடியாகிவிடுகிறது… மழைக் கொட்டுகிறது. மழையில் நனைந்து கொண்டே பெண்களின் கூட்டம் சபைக்குள் நுழைந்தது
என்ற காட்சியைக் காட்டி தருமனிடன் ஒரு கிழவி கேட்பதாக வரும் வரிகளுடன் நாவல் முடிவு பெறும்.

இவர்கள் எல்லோரும் யார் என்று கேட்டான் தருமன்.

அதற்கு ஒரு கிழவி “இவர்கள் அனைவரும் போர்வீரர்களைச் சந்தோசப்படுத்துவதற்காகப் போர் முனைக்கு இழுத்துச் செல்லப்பட்ட கிராமத்துப் பெண்கள். எல்லோரும் கருவுண்டாகி இருக்கிறார்கள். இதனால் இவர்களின் கணவன்மார்கள் இவர்களை மீண்டும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. ஊமையாக அவர்கள் அனைவரையும் பார்த்தான் தருமன். ஊரெங்கும் நிறைந்திருக்கும் விதவைப் பெண்கள் ஒரு பக்கம் போர்க்களம் உருவாக்கிய ‘வார் மதர்ஸ்’ இன்னொரு பக்கம்.. ‘இந்த வம்சம் இத்தோடு நின்று போனால் என்ன ஆகப்போகிறது? என்று குந்தியை எதிர்த்து பேசும் திரெளபதை… கடல் பொங்கி வழிந்தது.. கிருஷ்ணன் கட்டிய நகரம் கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள்.. சபைக்குள் புகுந்து கேள்வி கேட்ட பெண்களின் கேள்விகள் மட்டும் அழியாமல்.. காலம் காலமாய் பதில் சொல்லப்படாமல் ..

எப்போதோ வாசித்த மகாகவி பாரதியின் கவிதை வரிகள்

ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொலும் வீரிய வாசகம்
ஜய ஜய பாரத ஜயஜய பாரத

சில மயக்கங்களிலும் மாயைகளிலும் சிக்கிக்கிடக்கும் சிந்தனை அலைகளைப் பருவம் நடுக்கடலுக்கு இழுத்துச் செல்கிறது.
நடுக்கடலில் அலைகள் இல்லை. ஆரவாரமில்லை. அமைதி.. அமைதி.. அமைதி..தொட்டுவிடும் தூரத்தில் வானம் தெரிவது
உண்மையல்ல என்ற புரிதலுடன் பூமி கடலைப் பார்க்கிறது.

————–
(பின்குறிப்பு: இந்நாவலை எழுதத் தொடங்கும் முன்பு நாவலாசிரியர் மேற்கொண்ட பயணங்கள், எண்ணங்கள், ஆய்வுகள், எழுதும் போது ஏற்பட்ட கருத்துகள் பற்றியும் எழுதிய முறை குறித்தும் எழுதிய 60 பக்க கட்டுரையை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. )


puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை