பருவக்கோளாறு

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

சுஜாதா சோமசுந்தரம்


ஆதவன் பணியினை தொடங்கி வெகு நேரமாகியும் எழுந்திராமல் சோபாவில் உடலை குறுக்கி கால் முட்டியை நெஞ்சிடம் இழுத்து வந்து நிறுத்தி வலது கையை தலைக்கு கொடுத்து கருவறை குழந்தையைப் போல உறங்கிக்கொண்டிருந்தான் நவீன்.இன்றையிலிருந்து ஒரு மாத காலத்துக்கு பள்ளி விடுமுறை என்பதால் விழிப்புணர்வு செல்களும் ஓய்வில் இருந்தன.நவீன் உயர்நிலை மூன்றில் பயிலும் மாணவன்.ஆஹா ஓஹோன்னு புகழும் அளவுக்கு படிக்காவிட்டாலும் ஓரளவு நன்கு படிப்பவன்.

நவீன்…விடிய விடிய காற்பந்து பார்த்துட்டு விடிந்ததுகூட தெரியாம தூங்குறீயா ?எழுந்து கிளம்பி டியூசனுக்கு போ..சந்தியா தோளை குலுக்கவும் வெறுப்பை சுமந்தபடி எழுந்து அமர்ந்தான்.

சரியான தூக்கமில்லாமல் தலை விண் விண்ணென்று தெரித்தது.கைகளால் நெற்றியை அழுந்த பிடித்தவன்,அம்மா…என்னால பள்ளி விடுமுறையில துணைப்பாட வகுப்புக்கு போக முடியாது.

ஏன்… ?தொலைக்காட்சி,கணினி, ப்ளே ஸ்டேசன்னு வீட்ல உட்கார்ந்துக்க போறீயா ?

இல்லைம்மா…என்னோட நிலைமையை கொஞ்சம் புரிஞ்சுக்கங்கம்மா.

எதை… ?இப்ப எழுதின தேர்வுல வாங்கி குவித்திருக்கிற மதிப்பெண்களை வைக்க இடம் தெரியாம முழுக்கிறதையா ?இல்ல..காற்பந்துல காட்டுற ஆர்வத்தை கற்கிற கல்வில காட்ட மறுக்குறீயே அதையா ?

ஆமாம்…ஏதேதோ பேச எண்ணங்கள் எகிறிக் கொண்டு வந்த போதிலும் காரியத்தை சாதித்துக்கொள்ள கனிவாக பேசலானான்.அம்மா…லீவு விட்டது மனதை ரிலாக்ஸ் பண்ணிக்கத்தானே தவிர மன இறுக்கத்தை ஏத்தி வைக்க இல்லை.ஏற்கனவே ஸகூல்ல கொடுத்த ஒரு கோப்பு வீட்டுப்பாடத்தை முடிக்கவே இரண்டு வாரமாகும்.இதுல அப்பப்ப பள்ளிக்கு போகணும்,முகாம்ல கலந்துக்கணும்னு விழி பிதுங்கி நிற்கிறேன்.நீங்க என்னன்னா… அங்கே போ இங்கே போன்னு அடுக்குறீங்க.

நவீன்…நான் ஆரம்பத்திலிருந்து சொல்லிட்டு இருந்ததைதான் மீண்டும் நினைவுப்படுத்துறேன்.பள்ளி வேலையும் துணைப்பாட வகுப்பும் வேறு வேறு.இரண்டையும் சம்மந்தப்படுத்தி குழம்புறதை நிறுத்திக்க.காரணங்களை தேடிப்பிடித்து பேசுறதை விட்டுட்டு துணைப்பாட வகுப்புக்கு வர்றதா போன் பேசியிருக்கேன்.போயிட்டு வா.

நீங்க யாரை கேட்டுக்கிட்டு போன் பண்ணினீங்க ?நீங்களா வகுப்புல உட்கார்ந்து பாடம் கவனிக்க போறீங்க ? கடமைங்கிற பெயரால கண்மூடித்தனமா செய்யிற ஒவ்வொரு செயல்களுக்கும் என்னால ஈடுகொடுக்க முடியல.

நவீன்…என்ன பேச்செல்லாம் அதிகப்படியா இருக்கு.பணத்தை கொடுத்து சில மணிநேரங்கள் படிக்க அனுப்புறதே வலிக்குதுன்னா பிற்காலத்துல எப்படி ஒயிட் காலர் ஷாப் பார்க்கிறது.இப்பவே படிக்க விருப்பமில்லன்னா எப்ப படிக்கிறது ? இதை பற்றி உங்கப்பாகிட்ட பேசுட்டான்… ?

விருட்டென எழுந்தவன்..நீங்க எதையும் பேசவேண்டாம்.நான் போய் தொலைக்கிறேன் என்றபடி அவசர அவசரமாக கிளம்பினான்.

தலையணைக்குள் முகத்தை புதைத்து குப்புறப்படுத்திருந்த டர்ஸன் ஹாலில் நடக்கும் சம்பாசணையின் சாரல் காதுகளில் பாய எழுந்து அமர்ந்தான்.சிறிய முள் எட்டை நெருங்கிக்கொண்டிருந்தது.ச்சே..பள்ளி விடுமுறைதான் தொடங்கிவிட்டதே இன்னும் சற்று நேரம் உறங்கினால் என்ன ? என்ற மனதின் நேரடி கேள்விக்கு பதில் கூற முடியாமல் கண்களை கசக்கியபடி வந்த டர்ஸனின் வயது ஒன்பது.

அம்மாவோடு அண்ணன் சரிசமமாக வாதம் செய்வதால் தனக்கு ஏதாவது பிரச்சனை முளைத்துவிடுமோ என்ற பயத்தில் விழித்தபடி நின்றவனை பிரஸ்ஸில் பேஸ்டை தடவி கையில் கொடுத்து அழைத்துச்சென்றாள் வேலைக்காரப்பெண்.

அம்மா…நீச்சல் வகுப்புக்கு கிளம்புட்டான் ? ஓடிவந்த டர்ஸனை சமத்துபிள்ளையென்று அணைத்துக்கொண்டாள் சந்தியா.

சற்று நேரத்தில் முதுகில் பையை மாட்டிக்கொண்டு கதவை திறந்த நவீனை நோக்கி டர்ஸன் ஓடி வந்தான்.

அண்ணா…நானும்…முடிப்பதற்குள்,டேய்…ஆர்வக்கோளாருல அலைஞ்சியன்னா என்கிட்ட நல்லா அடி வாங்கி கட்டிக்குவே தம்பியின் கைப்பட்டையை பிடித்து தள்ளிவிட்டு நடந்தான்.

அடுக்குமாடி கட்டிடத்தை கடந்து பேருந்து நிறுத்தத்தை அடைந்த போது நவீன்…லீவுலயும் புத்தகத்தை தூக்கிட்டு கிளம்பிட்டியா ?என்று தோளை தொடவும் திரும்பினான்.தொடக்கப்பள்ளி தோழன் சுரேன் கையில் பந்தோடு கலகலவென்று சிரித்தான்.

டேய்..எப்படிடா இருக்கே.. ?ஓரே வட்டாரத்துல இருக்கோம்னுதான் பேரு பார்த்துக்கிறதே கிடையாது ஆதங்கப்பட்ட நவீன்,ஆமாம் பந்து விளையாடப்போறீயா ?

பின்ன…நேற்றைக்கு பார்த்தீயா… நம்ம ஆர்ஸ்னல் குழு இந்த வருசமும் சேம்பியனா கப்பு துக்கிறுக்கு.அதை இந்த மாத லீவு முழுவதும் விளையாடி கொண்டாடுணும்.அதான் கிளம்பிட்டேன்….வரட்டுமா…!

பேருந்தில் ஏறி அமர்ந்த நவீன்..செய்யாத கணக்கு பாடத்திற்கு என்ன கதை சொல்வது.. ?யோசிக்கையில் பக்கத்தில் அமர்ந்திருந்த அறுபது வயது மதிக்கதக்க சீனர் இரண்டு இருபது காசு நாணயத்தால் சவரம் செய்த முகத்தில் விடுபட்ட முடிகளை இழுத்துக்கொண்டிருந்தார்.அவனையும் அறியாமல் அவனுடைய கை மூக்கிற்கு கீழே விரல்களால் தடவி அகப்பட்ட அரும்பு மிசையை இழுக்கவும் உடலில் ஒருவித சிலிர்ப்புடன் கண்கள் கலங்கி நின்றன.தன் வயதொத்தபிள்ளைகள் எல்லாம் எவ்வளவு சந்தோசமா இருக்கிறார்கள்.நண்பர்களுடன் குழு குழுவாக விளையாட செல்வதும்,வெளியே சுற்றுவதும் நினைக்கையில் தன்மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

ஏற்கனவே அரைமணிநேர காலதாமதம் ஆனதால் வகுப்பு நடந்துக்கொண்டிருந்தது.நான்கு திசைகளிலும் சிதறி ஆளுக்கொரு பக்கம் சிந்தித்துக்கொண்டிருந்த மனதை இழுத்து பிடித்து ஒருநிலைப்படுத்தி பாடத்தைக் கவனிக்க ஆரம்பித்தும் முடியவில்லை.அருகிலிருந்த பிரவின் குறிப்பெடுப்பதைப் போன்று பாவனை செய்தபடி உறங்கியே விட்டான்.

டேய்…காசை கொடுத்து தூங்குற இடமாடா இது.பொண்ணுங்க பார்த்து சிரிக்கிறதுக்கு முன்னாடி நிமிர்ந்து உட்காருடா.நண்பனின் காதை கடித்தபடி தொடையை தட்டினான் நவீன்.

அறிவுருக்காட உனக்கு… ?வீட்லதான் நிம்மதியாய் காலை நீட்ட முடியாத அளவுக்கு தொல்லை.இங்கே என்னடான்னா உட்கார்ந்தும் தூங்கவிடாம மூட்டைபூச்சி மாதிரி ஏண்டா புடுங்குற.கணக்கே கரெக்டா போடு அப்புறமா காப்பி பண்ணிக்கிறேன்.

நவீன்…வந்ததும் வராததும் பர்வின்கிட்ட என்ன பேச்சு வேண்டிகிடக்கு.தூங்குறவங்கள எழுப்பக்கூடாதுங்கிற நாகரிகம் கூடவா தெரியாது.ஆசிரியரின் அரைகுறை வார்த்தைகள் பிரவின் தலையில் ‘ ணங்கென்று ‘ இறங்கியது.குழுமியிருந்த வெவ்வேறு பள்ளி மாணவிகள் களுக்கென்று ஒருசேர சிரிக்கவும் அவமானத்தால் ஆசிரியரை முறைத்தான் பர்வின்.

பிரவின்…எதையும் விருப்பமில்லாம கத்துக்கிறதும் கத்துக்கொடுக்கிறதும் உனக்கும் எனக்குமே உபயோகமில்லை.உன் பெற்றோர்கள் உழைச்சி சம்பாதிக்கிற பணத்தை வாங்குற எனக்கு ஒட்டணுங்கிறதுல உறுதியா இருக்கேன்.அதுக்கு நீ ஒத்துழைக்கணும்.

யாரு இல்லேன்னா.உங்களுக்கும் எனக்கும் புரியிறது என் அம்மாவுக்கும், ‘ எஃப் ஏ கப் ‘ இறுதி ஆட்ட ஏற்பாட்டுக் குழுவுக்கு தெரியலையே.வெளிவரதுடித்த கொட்டாவியை வாய் திறக்காமல் விழுங்கியபோது கண்களிலிருந்து கண்ணீர் தழுக்கென்று கன்னத்தில் விழுந்து உருண்டோடியது.

அவன் அழுவதாக நினைத்த ஆசிரியர் அதற்கு மேல் எதுவுமே பேசவில்லை. ஒருவழியாக வகுப்பு முடிய பிரவினும்,நவீனும் வீட்டிற்கு செல்ல நடந்தனர்.

ஏண்டா பிரவின் அழுதே… ?

நானா..ஓ அதை சொல்லிறீயா ?உனக்கு ஒண்ணு தெரியுமா ?எனக்கு மத்தவங்கள அழ வைச்சுதான் பழக்கம்.என் ஸ்கூல்ல வந்து விசாரிச்சி பாரு.அப்ப தெரியும் இந்த பிரவின் யாருன்னு.என்க்கு இந்த தற்பெருமையெல்லாம் பிடிக்காது.சரி….நாளைக்கு என் நண்பர்கள் கடற்கரையில முகாமுக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க வர்றீயா.. ?

என்னால முடியாதுடா.என் அம்மாவுக்கு நண்பர்களோட வெளியே போறதெல்லாம் பிடிக்காததால அனுமதிக்கமாட்டாங்க.

ஏன்… ?எங்களையெல்லாம் வீட்ல தறுதலைங்கன்னு சொல்லி வைச்சிருக்கியா ?

இல்லடா…!

பின்ன..என்னடா பொண்ணுங்க மாதிரி பேசுற.எத்தனை நாளைக்கு அம்மா சேலையை பிடிச்சிக்கிட்டு ஆமாம் போட்டு சுத்தி வருவே.பெற்றோர்கள் விறுப்பு வெறுப்புபடி நடந்துக்கனும்னா நம்ம விருப்பங்களை எங்கே போய் கொட்டுறது ?சந்தோசங்களை சுமக்க வேண்டிய மனசுல அட்டவனையை மாட்டி அதிகாரப்படுத்தினா ஆசையா வரும்.அவுங்க கற்பனையில உருவாக்குகிற வாழ்க்கைக்கு நாம எப்படி செயல் வடிவம் கொடுக்க முடியும்.

பிரவின்…நீ பேசுறதை மறுக்க முடியலடா.சில நேரங்கள்ல தொல்லைகள் தாங்க முடியாம வீட்டை விட்டு ஓடிப்போயிடாலமான்னுகூட தோணுதுடா.

தப்புடா..பிரச்சனையிலிருந்து விடுபட வழி தேடாம வீட்டை விட்டு ஓட்றது வாழ துடிக்கிற இளைஞனுக்கு வழி வகுக்காது.உலகத்துல கொட்டி கிடக்கிற சந்தோசங்கள் எல்லாம் நாம அனுபவிக்கத்தான்.நீ என்னடான்னா..பழுத்த கிழம் மாதிரி பேசுற.சரி..நாளைக்கு வா பேசிக்கலாம்.

எப்படிடா… ?

வீட்ல பொய் சொல்லிட்டுத்தான்.என்ன பயப்படுறீயா ?

அப்படியில்லடா..என் அம்மாவுக்கு என் நடத்தையில கொஞ்சம் மாற்றம் தெரிந்தாலும் உடனே துப்பறியும் ஆய்வாளரா மாறிடுவாங்க.என் அப்பா மனசுக்குள்ள பூந்து எல்லாத்தையும் நேர்ல கண்ட மாதிரி பேசுவாரு.அதான் யோசிக்கிறேன்.

அப்படின்னா…ஒரு வட்டத்தை வரைந்து அதுக்குள்ள நின்னுக்கிட்டு அம்மா அப்பான்னு கும்மியடிச்சி வா..வரட்டுமா..

மறுநாள் பாழாய் போன மனம் மல்லுக்கு நின்று பள்ளியில் முகாம் இருப்பதாக பொய் சொல்லிவிட்டு கிளம்ப வைத்தது.அன்று சாயங்காலமே நவீன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று நின்று நிதானித்து திரும்பி பார்க்ககூட பயந்துப்போய் வீடு வந்து சேர்ந்தான்.

நவீன்…முகாம் எப்படியிருந்தது.. ?தொலைக்காட்சியிலிருந்து கண்களை விலக்காமலே கேட்டார் ராஷன்.

ம்ம்ம்…நல்லாயிருந்தது அப்பா.பார்வையை வீடு முழுவதும் துரத்தி அம்மாவையும்,தம்பியையும் தேடினான்.அவர்கள் வெளியே சென்றிருப்பார்கள் போலும் வீட்டில்லை.

இதோ பார்த்தியா நவீன் ‘பர்சரிஸ் ‘ கடற்கரையில முகாம் போட்ட பசங்க பொண்ணு விசயத்துல ஒருத்தனுக்கு ஒருத்தன் வெட்டிக்கிட்டு விழுந்துக்கிடக்குறத. ‘சேனல் நியூஸ் ஏசியா ‘ நேரடியாக ஒலிப்பரப்பிக்கொண்டிருப்பதை பார்த்த வேகத்தில் பயத்தில் அந்த ஒரு நிமிடம் இருதயம் செயல்பாட்டை இழந்து மீண்டும் உயிர்ப்பெற்றது.

நவீன்…அங்கே கிடக்குற பை உன்னோட மாதிரி இல்லை…. ? உள்ளுக்குள் எடுத்த உதறல் சனிபோல நாக்கில் நின்று நடனம் ஆடியது.

அவசரப்பட்டு அதெல்லாம் இல்லைப்பா..அவன் முடிக்கு முன்னே..பின்னே ஹய் பீச் சத்தத்தில் வீடே அதிர டா டேபுளை உதைத்துவிட்டு ஓங்கிய கையோடு மகனின் முன் நின்றார் ராஷன். நவீன் முகத்தை மூடிக்கொண்டு முதல் முதலாக அடிப்பதற்கு லாவகமாக உடலை வளைத்துக் கொடுத்தான்.பொட்டில் நின்று உந்திக்கொண்டிருந்த கோபத்தை கண்களை மூடி சாந்தப்படுத்த முயன்ற ராஷன் முதல் கட்டமாக கையை மடக்கி சுவற்றில் குத்தினார்.அந்த அதிர்வில் மேசையின் ஓரத்தில் இருந்த கிளாஸ் ப்ளேட் சலக்கென்று விழுந்து நொறுங்கியது.

நவீன்..போய் தண்ணீ எடுத்துட்டு வா.. ?சாந்தமாக பேச முயன்று சிலையாக நின்ற மகனை உசுப்பி விட்டார் ராஷன்.

அப்பா…பிரம்மிப்பில் இருந்து விடுபடாதவன் பேந்த பேந்தவென விழித்தபடி முகத்திலிருந்து கையை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கினான்.

தண்ணீ எடுத்துட்டு வான்னு சொன்னேன்.

உடலை ஏதோ ஒரு வேகத்தில் திருப்பி அடுக்களைக்குள் நடந்தவன் அப்படியே நின்றான்.

ஏன்…கோயிலுக்கு நேந்து விட்டவன் மாதிரி நிக்கிறே… ? போ…

க..க..கண்ணாடிப்பா.அடி எடுத்து வைக்க இடமில்லாத அளவுக்கு எங்கும் சுக்கு நூறாக சிதறிக் கிடந்தது.

குத்திடும்னு பயமா இருக்க ? இறங்கிய கோபம் சட்டென உச்சந்ததலையில் ஏறி உட்கார்ந்துக்கொண்டது.காலெடுத்து வைச்சா கிளாஸ் குத்தி இரத்தம் வந்து வலிக்கும்னு முனனச்சரிக்கையா மூலை எச்சரிக்குதுல்ல ? அதே போல நேற்றைக்கு அப்பாக்கிட்ட பொய் சொல்லிட்டு கூட்டாளிங்ககூட தங்கினப்ப ஏன் எச்சரிக்கை செய்யல ?

அப்பா…நான் செஞ்சது மிகப்பெரிய தப்புன்னு தெரியுது.ஆனா ஏதோ ஒண்ணு நியாயப்படுத்த முயலுது.அதான் என்னன்னு தெரியல.

நவீன்…பருவக்கோளாரு செய்யிற கண்மூடித்தனமான செயல்களுக்கு பக்க வாத்தியம் ஊதுறதுதான் பதின்ம வயது.பிரவின் போன் பண்ணி நடந்ததையெல்லாம் சொன்னப்ப,என்னோட வளர்ப்பு முறையில எனக்கே சந்தேகம் வந்திட்டது.இந்த வயசுல நீ வாழ நினைக்கிற வாழ்க்கை அழகான கண்ணாடில அதிராம நடக்கனும்னு.பதின்ம வயதை தேகத்துல ஏத்திக்கிட்டு பதறாம நடக்கையில சட்டுன்னு நிற்கிற கோபம் பட்டுன்னு பாதத்துல ஏறிட்டா காலம் முழுவதும் பட்ட கதையை சொல்லிட்டுத்தான் இருக்கும்.வாழ்க்கையை தீர்மானிக்க வேண்டிய வயசுல முகவரியை தொலைச்சிட்டு நிற்கவா நாங்க பாடுபட்டுக்கிட்டு இருக்கோம்.

அப்பா… நான்கு பக்கமும் கட்டுப்பாடுகள்ங்கிற கற்களால மதிலை எழுப்பி அக்கறைங்கிற பேர்ல அசைய விடாம பண்ணும்போதுதான் தப்பு பண்ணனுங்கிற எண்ணமே எழுந்து நிக்குது.அம்மா மேல இருந்த கோபம்தான் என்னை இப்படியெல்லாம் செய்ய தூண்டியது.

நவீன்…பெத்தவங்க கட்டுப்பாடுகள்ங்கிற ஸ்பீட் பிரேக் போடலன்னா நீ விழுந்த இடத்துலயே காணாமல் போயிடுவே.பூக்களை பரப்பி வைத்து பாதம் நோகாம நடக்க வழிக்காட்டினாலும் நோகுதுன்னு சொல்ற வயதுங்கிறதை நான் மறுக்கலை.அதுக்காக…. யோசிக்கவே பயமா இருக்குடா. வாழ்க்கை விநோதமானதுங்கிறதுக்காக வித்தியாசமா வாழ முடியாது.நவீன்..ஏதோ ஒரு நல்ல நேரம் உன்னை வெகுநேரம் கூட்டிக்கிட்டு போனதனாலதான் காவலர் விசாரணையிலிருந்து தப்பிச்சிருக்கே.இல்லேன்னா சண்டையிட்ட குழுவுல நீயும் ஒருத்தன்னு கைது பண்ணியிருப்பாங்க.ஒரு குற்றவாளியோட பிள்ளை குற்றவாளின்னு ஊரும் பேசியிருக்கும்.

அப்பா…நீங்க என்ன சொல்லுறீங்க ? தயங்கி தயங்கி விலகி நின்றபடி கேட்டான்.

நவீன்…என்னோட கசப்பான கடந்த காலம் இருட்டுக்குள்ள வெளிச்சத்தை தேடின கதையா இன்பம் அளிக்காமலே போய்ட்டது. உன்னோட நிகழ்கால நன்மை கருதி கசப்பான உண்மையை வெட்கப்படாம வெளிப்படையாகவே சொல்றேன்.உனக்கு கிடைத்த இறுக்கமான உறவுகள் போல ஒரு காலத்துல எனக்கும் கிடைச்சிருந்தா குற்றவாளியா சிறைகம்பிகளுக்குள் சிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுருக்காது.காதல் தந்த போதையில கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பங்கிற கூட்டுச்சேர்க்கையால குழந்தையை பெத்துக்கிட்டு சந்தேகங்கிற பேர்ல வாழ தெரியாம வழுக்கி விழுந்தவங்களோட மூத்தபிள்ளை நான்.

என் பெற்றோர்கள் பிரிய நேர்ந்தப்ப அப்பாக்கூட நிரந்தரமா வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலை.எனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்தே அப்பா பெத்த பிள்ளையை துளிக்கூட நினைக்காம தினமும் ஒரு பெண்ணோடயும்,பாட்டிலோடயும்தான் வீட்டுக்கு வருவாரு. புத்தகத்தை சுமக்க வேண்டிய வயசுல வாழ்க்கை பாறாங்கல்லாய் கனக்க ஆரம்பித்தது.படிப்பில் கவனம் செலுத்த முடியாம பல இரவுகள் துடிச்சிருக்கேன்.என்னொத்த பிள்ளைகளிடம் பெற்றோர்கள் காட்டும் பிரியத்தை கண்டு பொறாமைப்பட்டு புலம்பி அழுதுருக்கேன்.

நாட்கள் செல்ல செல்ல என் அப்பாவால அவரோட தேவைகளுக்கே பொருள் ஈட்ட முடியல.உயர்நிலைய ஒழுங்கா முடிக்காத நிலையில பணத்தேவைக்காக திருட ஆரம்பிச்சேன்.அந்த வயசுல உழைச்சி சாப்பிடுறதால ஏற்படுகிற உன்னதம் என் எண்ணங்களுக்கு எட்டவில்லைங்கிறதுதான் உண்மை.

என்னோட பதினைந்து வயதுலிருந்து இருபத்தி ஐந்து வயது வரை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் வெளியே இருந்ததைவிட திருட்டு குற்றத்திற்காக உள்ளே இருந்ததுதான் அதிகம்.என் உடம்புல நரம்புகளைவிட தழும்புகள்தான் எண்ணிக்கை வித்தியாசத்துல அதிகமாயிருக்கு.வாழ்க்கை நெறி புரியாம வாழவும் தெரியாம தான்தோன்றித்தனமா திரிஞ்சதனால இளமைங்கிற அத்தியாயம் நினைவு கூர்ந்து அசை போட்ற அளவுக்கு இல்லாம போய்ட்டது.சிறைச்சாலையும்,அறிவுரைகளும்,தண்டனைகளும் திருத்த முயன்றதுல தோல்வி மட்டும்தான் மிச்சம்.

அப்புறம் எப்படி திருந்தியிருப்பேன்னு யோசிக்கிறியா… ?என்றபடி மகனை பார்த்த ராஷன், மனுசங்க எப்போதும் ஓரே மாதிரி இருக்கிறதில்ல.கடைசியா சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வீட்டுக்கு வந்துக்கொண்டிருந்த போது ஓரே மாதிரி ஒற்றை கையும் காலும் சூம்பி இழுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட இரண்டு ஊனமுற்றவர்கள் ஒற்றை கையால பொருள்களை தூக்கிக்கொண்டு காலை இழுத்து இழுத்து நடந்த காட்சியை கண்டு உதவ ஓடினேன்.அதற்கு அவுங்க மறுத்ததோடு இல்லாமல்,எங்க சுமையை நாங்க சுமக்கிறதுதான் முறை.நீங்க உதவுறதால இயலாமை எகத்தாளம் பேசி எங்களுக்குள்ள எரிஞ்சிக்கிட்டு இருக்கிற வாழனுங்கிற தீப்பொறியை அணைத்தாலும் அணைக்கலாம்.ஒருநாள் வாழ்ந்தாலும் வெளிச்சத்தோடு போராடி சாகுற விட்டில் பூச்சியாத்தான் வாழ்ந்து சாகணும்.ஊனத்தை மறக்க விரும்பித்தான் ஓடி ஓடி உழைச்சிட்டு இருக்கோம். நாங்க சோர்ந்து போறதுக்கு நீங்க காரணமா இருக்க வேண்டாம். உதவ ஓடி வந்த உயர்ந்த பண்புக்கு நன்றின்னு சொன்னப்ப ஆயிரம் சம்மட்டிகளால அடி நெஞ்சை அடித்து விழ்த்தப்பட்ட உணர்வோடு முதல் முறையா கோவிலுக்குப் போனேன்.

சமயகுரவருள் ஒருவரான மாணிக்கவாசகர் இறைவனை சிக்கென பிடித்ததைப் பற்றி பிரசங்கம் நடந்துக்கொண்டிருந்தது.அவர் களவு தொழிலிருந்து சிவபெருமான் அருளால் விடுப்பட்ட கதையை கேட்டப்பொழுது எனக்குள் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்ததை என்னால் மறுக்க முடியாது.திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்ற வரிகள் இன்னும் எனக்குள்ள ஒலிச்சிக்கிட்டுதான் இருக்கு.

வேலை தேடி போன இடமெல்லாம் குற்றவாளிங்கிற காரணங்காட்டி மறுத்துட்டாங்க.என்மேல் வீசப்பட்ட அனாவசியமான பேச்சுக்களை அட்சதைகளா ஏத்துக்கிட்டு சில அமைப்புகளோட உதவியால இரவு வகுப்புக்கு போய் படிச்சேன்.அதன்பின் தெரிந்த நண்பர் மூலமா சாதாரண பேக்கிங் வேலையில தொடங்கி இன்றைக்கு மேற்பார்வைறாளரா வளர்ந்துருக்கேன்.

என் வாழ்க்கையை இப்படித்தான் வாழனும்னு எடுத்துச் சொல்லவோ,கண்டித்து கவனிக்கவோ,அக்கறை எடுத்து வளர்க்கவோ ஆளில்லாததனாலதான் பிஞ்சிலேயே பழுத்து கன்னி போயிட்டேன்.நான்தான் ஓடையில ஒதுங்கின நீரா பயன்படாமே இருந்துட்டேன்.நீயாவது உயரத்துல இருந்து கொட்டுற அருவியாய் நதிகளில் விழுந்து கடலில் கலக்கணும்.

என்னங்க…பையனை உட்கார வைத்து பாடம் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க ?கதவை திறந்துக்கொண்டு டர்ஸனோடு உள்ளே வந்த மனைவி கேட்கவும்,ஒண்ணுமில்லைம்மா..நாட்டு நடப்பை நவீனுக்கு புரிகிற மாதிரி சொல்லிட்டு இருந்தேன்.மகனிடம் எதையும் அம்மாவிடம் காட்டிக்கொள்ள வேண்டாம் கண்களாலேயே ஷாடை கூறிய ராஷன் டர்ஸனை மடியில் அமர்த்திக்கொண்டார்.

அப்பா..நகம் வெட்டி விடுறீங்களா ? என்ற டர்ஸனிடம், சரிப்பா.. போய் நகவெட்டியை எடுத்துட்டு வா என்றார்.

அப்பா..எனக்கு… ?கையை நீட்டிய நவீனை அணைத்துக்கொண்டு உச்சி முகர்ந்தார் ராஷன்.

முற்றும்.

கதை சுருக்கம்

பதின்ம வயது இளைஞன் நண்பர்களின் கூட்டுச்சேர்க்கையால் மன அழுத்தத்தை காரணங்காட்டி பெற்றோர்களிடம் பொய் சொல்லாவிட்டு பாதை மாற முயன்று அடியெடுத்து வைக்க முயலும் போது அவன் கண்ட கொலை அவனை துரத்துகிறது.இந்நிலையில் தந்தை தன்னுடைய கடந்த காலத்தை சொல்ல வேண்டிய கட்டாயம்.மகனை திருத்த தான் குற்றவாளியாய் வலம் வந்த கதையை கூறி மகனை திருத்துகிறார்.

எழுத்து; சுஜாதாசோமு

தொலைபேசி எண்;67759054

Series Navigation

சுஜாதா சோமசுந்தரம்

சுஜாதா சோமசுந்தரம்