பரிமளவல்லி – 12. அதீனா பார்த்தனாஸ்

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

அமர்நாத்


சாமி படுக்கையிலிருந்து எழுந்துசென்ற ஐந்து நிமிடங்களுக்குள் சரவணப்ரியாவும் விழித்துக்கொண்டாள். அவன் போட்டிருந்த காப்பியைக் குடித்துவிட்டு அவனுக்குமட்டும் இட்லி தயாரித்தாள். அதை சாப்பிட்டுவிட்டு அவன் வேலைக்குச் சென்றுவிட்டான். அதிகம் சத்தம் எழாமலிருக்க அலுவலக அறையின் கணினியில் தன்வேலை சம்பந்தப்பட்ட கோப்புகளைத் திறந்தாள். ‘ரைடர் சீட்ஸ்’ ஆராய்ச்சியின் முடிவுகளைப் பிரசுரிக்க இயலாமல் போனதற்கு வருந்திப் பயனில்லை. எலிகளைவைத்துச் செய்த ஆராய்ச்சியை சிறு கட்டுரையாக எழுத முடிவுசெய்தாள். 1-ப்ரோமோப்ரோபேனால் பாதிக்கப்பட்ட வேறு தொழிலாளர்களைப் பற்றி அவளுக்கு எதிர்காலத்தில் தெரியவந்தால், அவர்களை சோதித்து இன்னொரு கட்டுரை வெளியிடலாம்.
பரிமளா இறங்கிவந்த போது எட்டுமணிக்கு மேல். முதல்நாள் ‘ட்ரெட்-மில்’லில் நான்குமைல் நடந்ததன் பலன்.
“முன்னாடியே என்னை எழுப்பக்கூடாதோ?”
“பரவாயில்லை. உனக்கு இன்னும் கலிNஃபார்னியா நேரம்தானே” என்று சரவணப்ரியா சமாதானம் சொன்னாள்.
“அப்படி பாத்தாக்கூட எனக்கு ஏழேமுக்காலுக்கு விழிப்பு வந்திருக்கணும். அங்கே அஞ்சேமுக்காலுக்கு எழுந்தாத்தான் நான் ஏழரைக்கு பள்ளிக்கூடத்திலே இருக்கமுடியும்.”
“போனாப்போவுது. உனக்கு இப்போ வின்டர்-ப்ரேக். சோம்பேறித்தனமா இருக்கலாம்” என்று அனுமதி தந்தாள்.
பரிமளா சமாதானமாகவில்லை. “இருந்தாலும் இன்னொருத்தார் ஆத்திலே…”
“இது உன் சொந்தவீடு மாதிரி நினைச்சுட்டுப் போயேன்!”
பரிமளாவின் புன்னகையில் சினேகபாவம் வெளிப்பட்டது. சமையலறைக்கு வந்தார்கள்.
“காப்பி கலக்கலாமா?”
“டிகாக்ஷன் அதிகமா…”
“சர்க்கரை?”
“அரை டீஸ்பூன்.”
“எங்களைமாதிரி உனக்கும் ஸ்ப்லென்டா தேவையில்லை போலிருக்கு, குட்.”
“வாழ்க்கைலே பெருமைப்படறதுக்கு அது ஒண்ணு இருக்கு.”
இரண்டு கோப்பைகள் கலந்து சாப்பாட்டு மேஜையில் வைத்து பரிமளாவுக்கு எதிரில் உட்கார்ந்தாள்.
“நீ இன்னும் குடிக்கலியா?”
“உனக்காக இன்னொரு கப்.”
“நம்மஊர் காப்பி மாதிரி வாசனையா இருக்கே.”
“சாமியோட சாமர்த்தியம்.”
முதலில் குடித்துமுடித்த சரவணப்ரியா எழுந்து இரண்டு இட்லித்தட்டுகளில் மாவை நிரப்பினாள். அது வேகும் நேரத்தில்… எப்படியும் பரிமளாவிடம் சொல்லியாக வேண்டும், அவள் நம்பிக்கையை வளர்ப்பது நியாயமில்லை. க்ரான்ட் கிடைக்காது என்று தெரிந்ததும் பணத்திற்கு அவள் வேறுவழிகளை யோசிக்கலாம். திரும்பவந்து அமர்ந்து குரலில் நிதானத்தைச் சேர்த்து, “பரிமளா! க்ரான்ட்லே ஒரு சின்ன சிக்கல். இப்போ கிடைக்கும்போலத் தோணலை. அதைச் சரிப்படுத்தி மறுபடி ‘அப்ளை’ பண்ணினா அடுத்தவாட்டி கிடைக்கலாம். அதுக்குக்கூட ஏழெட்டு மாசம் ஆகும்” என்றாள்.
செய்தியைக் கேட்டு பரிமளா ஏமாற்றமடைந்ததாகத் தெரியவில்லை. “கமிட்டிலே ஒருத்தர் மட்டும் வந்தப்பவே எனக்கு சந்தேகம்தான். அதிலும் அவர் முக்கியமா உன்னைப் பாக்கத்தானே வந்தார்.”
குற்ற உணர்வைப் போக்கிக்கொள்ள சரவணப்ரியா, “டிசம்பர் மாசம் நாங்க சென்னைலே இருக்குற ‘ரைடர் சீட்ஸ்’ கம்பெனிக்குப்போய் நிறைய ‘டேடா’ சேகரிச்சிட்டு வந்தோம். அதை உடனே பப்ளிஷ் செய்யறதா இருந்தோம். அந்த அளவுக்கு நல்ல திருப்தியான ரிசல்ட். போனவாரம் அதைப்பாத்துட்டு சோமசுந்தரம் நம்பிக்கை தெரிவிச்சார். அப்பதான் உன்னைக்கூப்பிட்டுப் பேசினேன். அந்த ஃபாக்டரி மேனேஜர் ஏதோ காரணத்தினாலே திடீர்னு மனசுமாறி அதை வெளியிடக் கூடாதுன்னு நேத்திக்கிக் காலைலே எனக்கொரு ஈ-மெயில் அனுப்பியிருந்தான். அது சம்பந்தப்பட்ட விவரங்களை எடுத்ததாலே ப்ரசன்டேஷனோட கனம் குறைஞ்சிட்டுது” என்றாள்.
சரவணப்ரியாவின் நீண்ட விளக்கம் சரியாகப்பட்டாலும் அதன் விவரங்களில் பரிமளா அதிககவனம் செலுத்தவில்லை. “நீ இவ்வளவுதூரம் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. நான் என் கைவிட்டு பணத்தை செலவழிச்சிண்டு இங்கே வரலை, எனக்கு என்ன நஷ்டம்? இங்கே வந்ததும் ஒருவிதத்திலே லாபம்தான். உங்க ரெண்டுபேரையும் பாத்ததும் கவலையில்லாத காலேஜ் வாழ்க்கைக்குப் போனமாதிரி இருக்கு. நம்மோட படிச்சவங்க வேற யாரையாவது சமீபத்திலே பாத்தியா?”
“அனுராதாவைப் பத்தி ஒண்ணும் தெரியாது. தங்கமணி ஷிகாகோலே இருக்கா, வனஜா அட்லான்ட்டாலே. அவ சஷ்டியப்தபூர்த்திக்குக் கூட நான் போயிருந்தேன்.”
“உங்களுக்கும் இப்போ வரணுமே.”
“எனக்கு அறுபதானாலும் சாமிக்கு இன்னும் ஆகலை. நாற்பத்திமூணு ஆண்டுகளுக்குமுன் ஜுலை பத்தொன்பதாம் தேதி, ஒரு திங்கள், நான் முதன்முதலா சாமியைப்பாத்து சிரிச்சேனாம்” என்றாள் சிறிது நாணத்துடன். “அந்த நாளைத்தான் நாங்க ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடறது வழக்கம்.”
“அந்த தினத்தை எப்படி மறக்கமுடியும்?”
கடிகாரம் மணியடித்து நேரமானதை அறிவித்ததும் சரவணப்ரியா எழுந்து அடுப்பை அணைத்துவிட்டு திரும்பவந்து அமர்ந்தாள்.
“இட்லிக்கு சட்னி இருக்கு, மிளகாய்ப்பொடியும் இருக்கு.”
“சட்னி போரும்.”
சாப்பிட்டு முடிக்குமுன்பே, “மதியம் என்ன சமைக்கலாம்?” என்ற யோசனை.
“அதுக்கென்ன அவசரம்? சோம்பேறித்தனமா இருப்போமே.”
சுவரில் மாட்டிய தொலைபேசியின் சத்தம் இடைமறிக்க அதை சரவணப்ரியா எடுத்தாள்.
“ஹாய், மிசஸ் நாதன்!” சூரனின் நெருங்கிய பள்ளித்தோழர்களில் ஒருவன். குரலை வைத்து யாரென்று சொல்ல இயலவில்லை.
அதனால், பொதுவான, “ஹலோ”வுக்குப் பிறகு, “சூரன் இங்கே இல்லையே. மே கடைசியில்தான் வருவதாக இருக்கிறான்” என்றாள்.
“எனக்கு அது தெரியும். நேற்று அவனுடன் பேசினேன்.” தொடர்ந்து அவன், “நான் அலுவலகத்தை அழைத்தபோது நீங்கள் வேலைக்கு வரவில்லை என்று தெரிந்ததால் வீட்டைக் கூப்பிட்டேன். உங்கள் உடம்புக்கு ஒன்றுமில்லையே” என்றான் அக்கறையோடு.
“விருந்தினருக்காக வீட்டில் தங்கியிருக்கிறேன்.”
தயக்கத்துடன், “உங்கள் அறிவுரை எனக்குத் தேவை. உங்களை சந்திக்க முடிந்தால் நல்லது” என்றான்.
எதற்காக இருக்கும்? “நாளை மாலை வருகிறாயா?”
“மிக அவசரம், மிசஸ் நாதன். இன்று பிற்பகல் ஒன்றரைக்கு ஹியூஸ்டன் திரும்புகிறேன். அரைமணி கொடுத்தால் போதும்.”
ஊரின் பெயரைச் சொன்னவுடன் அவன் சூரனைவிட ஒருவகுப்பு முன்னதாகப் பள்ளியில் படித்த ஹிக்கரி க்ராஃப்ட் என்று தெரிந்தது. ஒலிவாங்கியை வாயிலிருந்து நகர்த்தி, பரிமளாவிடம், “சூரனுக்கு நன்றாகத் தெரிந்தவன். என்னோடு பேச வரட்டுமா என்று கேட்கிறான்” என்றாள்.
“தாராளமா வரட்டும்.”
“ஹிக்கரி! எப்போது வருவாய்?”
“இன்னும் ஒருமணியில்…”
“நான் தயாராக இருப்பேன். பை!”
“தாங்க்ஸ், மிசஸ் நாதன்!”
சோம்பலைத் துரத்திவிட்டு ஒருமணிக்குள் இருவரும் குளித்து, விருந்தினரை வரவேற்கும் கௌரவமான உடையில் புகுந்தார்கள்.
“இன்னொரு வாய் காப்பி வேணுமா, இல்லை டீ போடட்டுமா?”
“டீ போடு!”
தேனீர் தயாரிக்க தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் சரவணப்ரியா ப்ரஷர் குக்கரில் சாதம் வைத்தாள். உலோகப்பந்தில் தேயிலையை அடைத்து வெந்நீரில் ஒருநிமிடம் அமிழ்த்தியெடுத்தாள். தேனீரை இரண்டு கோப்பைகளில் ஊற்றி சிறிது பாலும் சர்க்கரையும் சேர்த்தாள். குடித்துப்பார்த்த பரிமளா, “சக்கரை சரியா இருக்கு” என்றாள்.
“உன்னோட அரட்டை அடிக்கலாம்னா ஹிக்கரி குறுக்கே வரான்.”
“அவன் போனப்புறம் அதைப் பண்ணினா போறது. இன்னி முழுக்க இருக்கே.”
“ஹிக்கரி பாப்டிஸ்ட்னு நினைக்கிறேன். நாலைந்து தலைமுறைகளா டென்னெஸிலே இருக்குற குடும்பம். அவன் காதலி ஒரு இந்திய முஸ்லிம். ரைஸ் யுனிவெரிசிடிலே படிக்கும்போது பழக்கம். ஆனா ரெண்டுபேருக்கும் வீட்டிலே சொல்ல பயம். சூரனைப் பாக்க வரும்போதெல்லாம் அவளைப்பத்தியும் சொல்வான். கல்யாணத்துக்கு அறிவுரைகேக்க வரான்னு தோணுது. அதைப்பத்திப் பேச அதிக நேரமாகாது.”
வாசல்மணி அடித்தது.
கதவைத் திறந்தாள். ஹிக்கரி தலையை படியவாரி நன்குமடித்த சம்பிரதாய உடையில் ஏர்போர்ட் செல்ல தயாராக காணப்பட்டான். ஐந்தேமுக்கால் அடிக்கும் குறைவான உயரம், தடிமனான கண்ணாடி, சீரியஸான முகம், இவற்றால் படிப்பைத்தவிர வேறெதிலும் கவனம்சிதறாத பள்ளிமாணவனின் தோற்றம். “ஹாய் ஹிக்கரி! எப்படி இருக்கிறாய்?”
“ஐ’ம் iஃபன். நீங்கள்?”
“எல்லாம் நல்லபடியாகச் செல்கின்றன.”
ஹிக்கரி நின்றபடியே காலணிகளைக் கழற்றிவிட்டு சரவணப்ரியாவைத் தொடர்ந்தான்.
“இது என் கல்லூரித்தோழி, பரி.”
“ஹாய் மிஸ் பரி!”
பரிமளா எழுந்தாள். “ஹாய் ஹிக்கரி!”
“மிசஸ் நாதன்! உங்களை திடீரென்று அழைத்து தொந்தரவுகொடுக்க வேண்டிய கட்டாயம்” என்றான் மன்னிப்புகோரும் குரலில்.
“நீ சொல்லவந்ததைச் சொல்! அது தொந்தரவா இல்லையா என்பதை நான் முடிவுசெய்கிறேன்” என்றாள் புன்னகையுடன். “தேனீர் தயாரித்தேன், வேண்டுமா?”
“ப்ளீஸ்!”
சரவணப்ரியா சர்க்கரைமட்டும் சேர்த்த தேனீரை மேஜையின் ஓரத்தில் வைத்தாள். எல்லோரும் உட்கார்ந்தார்கள். ஹிக்கரி கோப்பையை எடுத்துக்குடிக்க மற்றவர்கள் குடிப்பதைத் தொடர்ந்தார்கள்.
ஹிக்கரியை சுமுகமாக பேசவைக்க, “சட்டப்படிப்பு எப்படிப் போகிறது?” என்று ஆரம்பித்தாள்.
“வகுப்புபாடங்கள் முடிந்துவிட்டன. ஜுன் மாதம்வரை ப்ரூவர் பாட்ஸ் சட்ட அலுவலகத்தில் பயிற்சி. அதற்குப்பிறகு பட்டம் கிடைத்துவிடும்.”
“வெரிகுட்! பயிற்சி முடிந்ததும் அங்கேயே வேலையில் சேரலாமோ?”
“பொதுவாக அப்படி நடப்பதுதான் வழக்கம். ஆனால், இன்றைய பொருளாதார நிலையில் அது நிச்சயமில்லை.”
“உன் தம்பி?”
“அப்படியேதான் இருக்கிறான்.”
தேனீர் குடித்துமுடித்ததும் சரவணப்ரியா, “ஆயிஷா எங்கே யிருக்கிறாள்?” என்று கேட்டாள்.
ஹிக்கரி பதில்சொல்லுமுன் பரிமளா நாற்காலியைப் பின்னால் நகர்த்தினாள்.
“மிஸ் பரி! நான் சொல்லப்போவதை நீங்களும் கேட்பதில் தவறில்லை. நான் விவாதிக்கப்போவது என் சொந்த விவகாரமல்லை.” சரவணப்ரியாவைப் பார்த்து, “அவள் தொடக்கக்கல்வியில் எம்.எஸ். வாங்கி, இப்போது கேடி ஆரம்பப்பள்ளியில் மூன்றாம்வகுப்பு ஆசிரியை. கேடி ஹியுஸ்டனிலிருந்து மேற்கே மூப்பது மைலில் இருக்கிறது” என்றான்.
ஆயிஷாவின் தந்தை ஹியுஸ்டனில் மருத்துவர் என்பது நினைவுக்கு வர, “அங்கே வேலைகிடைத்தது அவளுக்கு அதிருஷ்டம்தான்” என்றாள் சரவணப்ரியா. பிறகு, “உனக்கும்தான்” என்று சேர்த்தாள்.
உரையாடலின் விஷயத்தை மாற்றுவதற்கு சிறிது அவகாசம் தந்துவிட்டு ஹிக்கரி ஆரம்பித்தான். “மிசஸ் நாதன்! ஜனவரியிலிருந்து நான் பணியாற்றும் சட்ட அலுவலகம் சூழலியல் சம்பத்தப்பட்ட வழக்குகளைக் கையாள்கிறது. சென்றமாதம், சில பழுப்புநிறத் தொழிலாளிகள் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு அவர்களுக்கு வந்தது. மிக சாதாரண வழக்கு, அதனால் என்கையில் போட்டார்கள் போல” என்று சிரித்தான். “இரண்டு பசையுள்ள நிறுவனங்களுக்கு இடையில் தகராறு என்றால் அலுவலகத்தின் பெரிய வழக்கறிஞர்களே கவனித்திருப்பார்கள்.”
“நீயும் ஒருகாலத்தில் பெரிய வக்கீலாக வரப்போகிறாய். மேலேசொல்!”
“மின்னணு இயந்திரங்களின் பாகங்களைச் சுத்தம்செய்வது ‘மார்க்ஸ் க்ளீனிங் சர்வீஸி’ன் தொழில். கார்பஸ் க்ரிஸ்டியில் இருக்கும் அதற்கு பல பிரபலமான தொழில்நிறுவனங்கள் வாடிக்கை. அங்கே வேலைசெய்யும் எட்டுபேருக்கு காரணமற்ற நரம்புத்தளர்ச்சி. தலைசுற்றல், நடக்கும்போது நிதானம் இழத்தல், கைகால் விரல்களில் எரிச்சல், ஆகிய குறைபாடுகள். பலமுறை மருத்துவர்களைப் பார்க்க நேர்ந்திருக்கிறது. நிர்வாகம் அக்கறை காட்டவில்லை என்பது வழக்கு. நாங்கள் தொழிலாளர்களின் நலனுக்காக வாதாட இருக்கிறோம்.”
“எவ்வளவு காலமாக இது நடக்கிறது?”
“இரண்டு ஆண்டுகளாக.”
“என்ன காரணம்?”
“எனக்குத் தரப்பட்ட எல்லா விவரங்களையும் ஒருமாதமாக அலசினேன். தொழிலகத்தின் வரவுசெலவுகள் மற்றும் சுகாதாரப் புள்ளிவிவரங்கள், வேலையாட்களின் குடும்பநிலை, மருத்துவர்களின் அறிக்கை — எல்லாவற்றையும் படித்தேன். முதலில் பிடிகிடைக்கவில்லை. மறுபடி கூர்ந்து படித்தபோது அந்தக் காலகட்டத்தில் சுத்தம்செய்ய வேறொரு கரைப்பானுக்குப் பதிலாக 1-ப்ரோமோப்ரோபேனுக்கு மாறியிருக்கிறார்கள் என்பதை கவனித்தேன். அந்த இரசாயனப்பொருளைப் பற்றிய விவரங்களை வலைத்தளத்தில் தேடியபோது ஒரு ஆராய்ச்சி போஸ்டரின் குறிப்பு என் கண்ணில்பட்டது. அதில் நான் முன்புசொன்ன குறைபாடுகள் 1-ப்ரோமோப்ரோபேனை சுவாசித்த எலிகளுக்கு வந்ததாகக் காட்டப்பட்டிருந்தது.”
சரவணப்ரியாவின் புன்னகையைக் கண்டு ஹிக்கரி நிறுத்தினான். பிறகு அவனும் சிரித்துக்கொண்டே, “அந்தப்போஸ்டரைத் தயாரித்தவர்களில் உங்கள் பெயரும் இருந்தது, மிசஸ் நாதன்!” என்றான்.
“அது சென்ற மாதம்தான் வெளிவந்தது.”
“அந்த போஸ்டரில் குறிப்பிட்ட முடிவுகள் மனிதர்களுக்கும் பொருந்துமா?”
“எங்கள் சமீபத்திய ஆராய்ச்சிகளின்படி பொருந்துமென்றுதான் நினைக்கிறேன்.”
“அந்த ஆராய்ச்சியின் விவரங்கள் பிரசுரமாகிவிட்டனவா?”
“ஹிக்கரி! அந்தக் கண்டுபிடிப்புகளை வெளியிடுவதாக இருந்தோம். எதிர்பாராத காரணத்தால் தடங்கல். எப்போது அச்சில் வெளிவருமென்று சொல்வதற்கில்லை.”
முதலில் ஏமாற்றம் அவன் முகத்தில் தோன்றினாலும் நம்பிக்கை இழக்காமல், “ஆனாலும் அவை உண்மையா?” என்றான்.
“என்னைப் பொறுத்தவரையில்.”
ஹிக்கரி உரையாடலை எப்படித் தொடர்வதென யோசித்தான்.
அந்த இடைவெளியைப் பயன்படுத்தி பரிமளா எழுந்து ப்ரஷர் குக்கரிலிருந்து சாதத்தை எடுத்தாள். அதன் வாசனை கூடம் முழுக்கப் பரவியது. அதைக் கவனித்த சரவணப்ரியா, “ஹிக்கரி! ஒருநிமிடம்” என்று அவளும் சமையலறையின் பக்கம் வந்து பரிமளாவுக்குத் தேவையான பாத்திரங்களும் சாமான்களும் எங்கிருக்கும் என்று காட்டினாள்.
“நீ செய்துட்டுவந்த புளிக்காச்சல் ஃப்ரிஜ்லே இருக்கு.”
“எலுமிச்சம்பழம் இருக்கா?”
காய்கறிக்கூடையிலிருந்து இரண்டை எடுத்துத்தந்தாள்.
“வேர்க்கடலை?”
“பச்சையாத்தான் இருக்கு, பரவாயில்லையா?”
“பேஷா. நான் வறுத்துக்கறேன்.”
அதையும் கொடுத்துவிட்டு சரவணப்ரியா திரும்பிவந்து அமர்ந்தாள். “இப்போது சொல்!” ஏதோ ரகசியத்தைச் சொல்லப்போவதுபோல் ஹிக்கரி குரலைத் தாழ்த்தினான்.
“இந்த வழக்கில் என் நிறுவனம் அதிக அக்கறை காட்டாததற்கு முக்கிய காரணம், வெற்றி கிடைக்கும் என்று அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. சில ஆண்டுகளுக்குமுன் மிஷிகனில் கார்களின் அலங்காரத்திற்கான க்ரோமியம் உலோகக்கலவையை வார்த்த தொழிலாளர்களுக்கும் கார் கம்பெனிகளுக்கும் இடையே ஒரு வழக்கு விசாரணையின் போது, ‘கெம்-சேஃப்’ என்கிற ஆலோசக நிறுவனம் க்ரோமியத்தைக் கையாளுவதில் ஆபத்தில்லை என்று சீன டாக்டர்களை எழுதவைத்து, ‘வொர்க்கர் சேஃப்டி’யில் வெளியிட்ட ஒரு கட்டுரை கார் கம்பெனிகளுக்கு பக்கபலமாக அமைந்தது. வயிற்றில் புற்றுநோயால் அவதிப்பட்ட தொழிலாளிகளுக்காக வாதாடிய எங்களுக்கு தோல்வி. இப்போதும் ‘கெம்-சேஃப்’ மார்க்ஸ் நிறுவனத்திற்கு உதவப் போவதாகத் தெரிகிறது. அவர்களுக்கு நிறைய பணபலம். நாஷ்வில்லில்தான் தலமை அலுவலகம் இருக்கிறது.”
ஹிக்கரி தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறானென்று சரவணப்ரியா ஊகித்தாலும், “நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டாள்.
“மார்க்ஸ் தொழிலாளர்களின் நிலைக்கு சுத்திகரிப்பில் அவர்கள் பயன்படுத்தும் 1-ப்ரோமோப்ரோபேன் காரணமாக இருக்குமா?”
“இருக்கலாம்.”
“அதை நிரூபிக்க முடியுமா?”
“நிரூபணம் என்று சொல்வதற்கில்லை. சாத்தியமென்று காட்டலாம்.”
“எப்படி?”
“நாங்கள் அந்த இரசாயனப்பொருள் உடலுக்குள் செல்வதைப் பின்பற்ற ‘பயோமார்க்கர்’ கண்டுபிடித்திருக்கிறோம்.”
“அப்படியென்றால்…”
“நரம்புகளுக்கு ஊறு விளைவிப்பதோடு 1-ப்ரோமோப்ரோபேன் இரத்தத்திலும் சிறுநீரிலும் சில மாறுதல்களை உண்டாக்கும். அவை பாதிப்பின் அறிகுறிகள். அவற்றை அளப்பது எளிது.”
“அந்தத் தொழிலாளர்களின் இரத்தமும், சிறுநீரும் கிடைக்க நான் ஏற்பாடு செய்தால்…”
“இரண்டையும் அனுப்பலாம். ஆனால், இரத்தம்தான் எங்களுக்கு முக்கியம்.”
“ஏன்?”
“சிறுநீரின் மாற்றம் ஒருசில நாள்தான். இரத்தத்தின் சிவப்பணுக்களில் உடலின் நான்குமாத சரித்திரம் அடங்கியிருக்கிறது. வேலைநேரம் முடிந்தபிறகு மாநில அங்கீகாரம் பெற்ற ஒரு மருத்துவர் தொழிலாளர்களின் இரத்தத்தை எடுத்து, உடனே உறைவித்து எனக்கு ஓரிரவுக்குள் அனுப்ப வேண்டும். ஒப்பிடுவதற்கு அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் இரத்தமும் தேவை. எது யாருடைய உடலிலிருந்து எடுத்தது என்கிற விவரம் எனக்கு இப்போது தெரியவேண்டாம். இதுபோன்ற ஆய்வுகளில் சாம்பில்களை குருட்டாம்போக்கில் அளவிடுவது என் வழக்கம்.”
“ஹியுஸ்டனில் இறங்கியதும் அங்கிருந்து நேராக கார்பஸ் க்ரிஸ்டிக்குச் சென்று இன்றே இரத்தத்தை சேகரிக்கப் பார்க்கிறேன்.”
“குட்லக்! பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் மருத்துவ அறிக்கை உங்களிடம் இருக்கும். முடிவுகளை சரிபார்க்க அதுவும் வேண்டும்.”
ஹிக்கரி தயங்கினான். “மேலிடத்தில் அனுமதி பெற்று உங்களுக்கு அதை ஃபாக்ஸ் செய்கிறேன். முடிவு எப்போது தெரியும்?”
“வெள்ளிக்கிழமை.”
“அதற்குள் நான் ஹியுஸ்டன் சென்று திரும்பிவிடுவேன்.”
ஹிக்கரி வந்ததன் நோக்கம் நிறைவேறியதென சரவணப்ரியா எழுந்தாள்.
“உனக்கு எப்படியோ தெரியாது, ஹிக்கரி! சாப்பாட்டு வாசனை வந்தபிறகு என்னால் வேறெதையும் சிந்திக்கமுடியாது.”
“எனக்கும்தான்.”
“எங்களுடன் சாப்பிடுகிறாயா?”
காத்திருந்ததுபோல் அவன், “சரி” என்றான்.
பரிமளா தயாரித்த புளியோதரையும், எலுமிச்சை சாதமும் சரவணப்ரியாவுக்குச் சற்று காரம். ஆனால், ஹிக்கரி ரசித்து சாப்பிட்டான்.
“ஆயிஷா உன்னைக் காரம் சாப்பிடப் பழக்கிவிட்டாள் போலிருக்கிறது, ஹிக்கரி!”
“காதலுக்காக எதுவேண்டுமானாலும் செய்யலாம்” என்று ஹிக்கரி புன்னகைத்தான்.
அவன் கிளம்ப வேண்டிய நேரம்.
“எல்லாவற்றுக்கும் நன்றி, மிசஸ் நாதன்! பை, மிஸ் பரி! உங்கள் சமையல் மிகநன்றாக இருந்தது.”
“பை ஹிக்கரி! ஜாக்கிரதையாகப் போ!”
வாசல்வரை சென்று அவனை வழியனுப்பிவிட்டுத் திரும்பினாள்.
“எங்கேயாவது வெளியே போவோமே.”
“டீச்சர்கள் அரட்டைலே வின்டர்-ப்ரேக் பத்தி பேச்சு வந்தப்போ நாஷ்வில் போகப்போறேன்னு சொன்னேன். உடனே ஹிஸ்டரி டீச்சர் பார்த்தனானை மறக்காம பாத்துட்டுவான்னு சொன்னா. அதுக்குப் போலாமா?”
“தாராளமா. நாங்க பொதுவா எங்கவீட்டுக்கு வர்றவங்களைப் பிள்ளையார் கோவிலுக்குத்தான் அழைச்சிட்டுப்போறது வழக்கம்.”
“பார்த்தனானும் ஒரு கோவில்மாதிரிதானே.”
“ஒரு விதத்தில்.”
“நீ போயிருக்கியா?”
மறுப்பாகத் தலையசைத்தாள். “வெளிலேர்ந்து பார்த்ததோட சரி. ஒருதடவை கட்டடத்தோட பின் வராண்டாலே சின்னக்குழந்தைகள் நாடகம் போட்டாங்க. அதைப் பார்க்கப் போயிருந்தேன்.”
“க்ரீஸைத்தவிர வேறே எங்கேயும் இதுமாதிரி கிடையாதாம்.”
“உள்ளுர்லே இருக்கறதாலே எனக்கு அதோட மகிமை தெரியலை.”

வீட்டிலிருந்து கிளம்பியபோது சூழ்ந்திருந்த மேகங்கள் வேகமாகவிலகி சூரியனை வெளிப்படுத்தின.
“நான் கல்யாணமான பிறகுதான் இங்கேவந்து படிச்சேன். நானா தனியா யு.எஸ். வந்திருப்பேனா என்பது சந்தேகம். நீ தைரியசாலிதான்!” என்று சரவணப்ரியா பரிமளாவைப் பாராட்டினாள்.
“டில்லிலேர்ந்து வந்து என்னைப்பாத்த ஒருத்தன் வேண்டாம்னு சொன்னதும் அமெரிக்கா வர ஆசைலே எம்.எஸ்ஸி. பண்ணினேன். அண்ணா மோட்டர்சைகிள் ரேஸ்லே போனதுக்கப்புறம் அந்த ஆசையை விட்டுட்டேன். பணவிஷயத்திலே மன்னிக்கு என்னோட தயவு வேண்டியிருந்தது. ஆனா, அவளுக்கு குழந்தைகள் தன்னைத்தான் மதிக்கணும்னு ஆசை. அதனாலே எங்களுக்குள்ளே கொஞ்சம் உரசல் வர ஆரம்பிச்சுது. பையனுக்கு பன்னண்டுவயசு இருந்தப்போ நடந்ததா ஞாபகம். ‘பக்கத்தாத்து மாதவி மேக்-அப் போட்டுக்கறா, பள்ளிக்கூடத்திலே ஒருபையனோட சிரிச்சுப்பேசறாள்’னு அவ ஏதோ தேவடியாங்கற மாதிரி அலட்சியமா சொன்னான். அப்படி மத்தவா பேசறது அவன் காதிலே விழந்திருக்கும்னு நினைக்கிறேன். எனக்கு அது பொறுக்கலை. ‘அவமேலே தப்பு ஒண்ணுமில்லை, வாலிபவயசிலே அது சகஜம்தான், வம்புபேசறவாளுக்குத் தான் கண் சரியில்லை’ன்னு அவளுக்கு நான் வக்காலத்து வாங்கினது தப்பாப் போயிடுத்து. எனக்கு கல்யாணம் ஆகாததை வச்சு என்மனசு புண்படறமாதிரி அவன் ஏதோ சொல்ல, அதைக்கேட்டு நான் கண்ணீர்விட, மன்னி அவனைக் கண்டிக்காம மௌனம் சாதிச்சப்போ, தனியாப் போயிடறது நல்லதுன்னு தோணித்து. பக்கத்திலியே இன்னொரு வீட்டுக்குப் போறதுக்கு பதிலா இன்னொரு நாட்டுக்கு வந்தேன்.”
“பிரிஞ்சுவந்தப்புறமும் அந்தக்குடும்பத்துக்கு பணஉதவி செய்திருக்கியே, உனக்கு நல்ல மனசுதான்!”
“அண்ணாவுக்காக.”
சென்டென்னியல் பார்க்கின் கார் நிறுத்துமிடத்தில் பாதிகுமேல் காலி. இடத்தை அடைத்துக்கொண்டு வில்சன் மாவட்ட பள்ளியின் பெயர் போட்ட ஒருபஸ். அதுநிறைய பத்துபன்னிரண்டு வயது மாணவர்கள்.
காரிலிருந்து இறங்கிய பரிமளாவையும், சரவணப்ரியாவையும் நீர்வாழ் பறவைகளின் நாராசமான கூவல் வரவேற்றது. பரிமளா, “நேத்தி குளிருக்கு இன்னிக்கி பரவாயில்லை” என்றாள்
“வியாழன் மதியத்திலேர்ந்து ரொம்ப குளிரும்னு சொல்றாங்க. அதுக்குள்ளதான் நீ திரும்பிப்போயிடறியே.”
“அதீனாவை தரிசனம் பண்ணறதுக்கு முன்னாடி கொஞ்சம் நடந்துட்டு வரலாமா?”
“நான் தயார்.”
பூங்காவின் ஏரியைச்சுற்றி ஒரு நடைபாதை. கனடா வாத்துகள் எங்களுக்கும் பறக்கத்தெரியும் என்று காட்டிக்கொள்ள நீர்ப்பரப்பிலேயே சில தப்படிகள் பறந்தன. அங்கிருந்து தொலைவில் தெரிந்த கட்டடங்கள். போக்குவரவின் ஓசை காதில்விழாத அமைதியான சூழல்.
“ஊர் அழகா இருக்கு.”
“இங்கேயிருந்த பன்னண்டு வருஷங்களும் எங்களுக்கு சந்தோஷமா போயிருக்கு. அதீனாவை நாஷ்வில்லுக்குக் காவல்தெய்வமா வச்சிகிட்டா, அவளுக்கு நன்றி!” என்று பார்த்தனானின் திசையை நோக்கி சரவணப்ரியா ஒருகும்பிடு போட்டாள்.
அதைப்பார்த்த பரிமளாவுக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை. ஏரியின் குட்டிப்பாலத்தின்மேல் நின்று, “எங்கேர்ந்து பார்த்தாலும் பார்த்தனான் கட்டடம் கம்பீரமா தெரியறது” என்றாள்.
நடை முடிந்து பார்த்தனானின் முன்வாசலுக்கு வந்தார்கள். கூரைக்குக்கீழே கிரேக்க புராணத்திலிருந்து சிலைகள்.
“நீ முன்னாடி நில்! படம் எடுக்கறேன். நீ ஹிஸ்டரி டீச்சர்கிட்ட காட்டி நான் பார்த்தனானைப் பார்த்தேனேன்னு பெருமை அடிச்சுக்கலாம்.”
சரவணப்ரியா பரிமளாவையும் பார்த்தனானின் முகப்பையும் காமராவில் பதிவுசெய்தாள்.
“உள்ளே போறதுக்கு முன்னே கட்டடத்தை சுத்திட்டு வரலாமா?”
“பிரதட்சணமாகத்தான்.”
படியேறி பார்த்தனானின் சுற்றுத்திண்ணையில் நடந்தார்கள். அதன் ஒருபக்கம் எட்டும் இன்னொருபக்கம் பதினேழுமாக தடிமனான நெடிதுயர்ந்த தூண்கள்.
“எவ்வளவு பெரிய தூண். அதுக்குப் பக்கத்திலே நாமும் நம்ம கவலைகளும் அற்பமாத் தோணறது.”
“அதுக்குத்தான் அந்தக் காலத்திலே அப்படிக் கட்டினாங்களோ என்னவோ?”
சுற்று முடிந்ததும் படியிறங்கி கட்டடத்தின் நுழைவிடத்திற்கு வந்தார்கள். உள்ளே செல்லுமுன் விற்பனையாளன்போல் ஒருவன். எதை விற்கிறானென்று தெரியவில்லை.
“எக்ஸ்க்யுஸ் மீ! பார்த்தனானை சுற்றிப்பார்க்கத்தானே வந்திருக்கிறீர்கள்?”
“ஆமாம், அதற்கென்ன?”
“இல்லை, இங்கே வரும் ஒருசிலர் அதீனாவைக் கன்னிக்கடவுளாக பாவித்து வழிபடுகிறார்கள். நீங்களும் அப்படிச் செய்ய நினைத்தால் அது பாவம் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். தன்னைத் தவிர வேறு யாரையும் வழிபடக்கூடாது என்பது கடவுளின் ஆணை.”
“நாங்களெல்லாம் ‘பேகன்’களாயிற்றே! எங்களை எந்தப் பாவமும் அண்டாது” என்று சொல்லி அவனிடமிருந்து தப்பி உள்ளே நுழைந்தார்கள்.
அனுமதிச்சீட்டு வாங்குமிடத்தில் ஒரு நடுவயதுப்பெண். கட்டணங்களின் பட்டியலைப் பார்த்த சரவணப்ரியா, பரிமளாவுக்கு இன்னும் அறுபதாகவில்லை என்பதால், “ஒரு முழு டிக்கெட், ஒரு சீனியர் (அறுபது வயதுக்கு மேற்பட்ட, அறுபது சதம் விலையுள்ள) டிக்கெட்” என்று அவற்றுக்கான தொகையை எடுத்துத் தந்தாள். மற்றவள் பணத்தைப் பெற்றுக்கொண்டு முழு டிக்கெட்டை சரவணப்ரியாவிடமும், சீனியர் டிக்கெட்டை பரிமளாவிடமும் கொடுத்தாள். அதற்காக முகம் மாறினாலும் பரிமளா மறுத்துப்பேசாமல் டிக்கெட்டை வாங்கிக்கொண்டாள். வெளிக்கதவு திறந்து பள்ளிமாணவர்களின் இரைச்சல் உள்ளே நுழைந்தது. அவர்கள் கடந்து செல்லட்டுமென்று சரவணப்ரியாவும், பரிமளாவும் அங்கிருந்த பெஞ்ச்சில் அமர்ந்தார்கள்.
பரிமளாவை சமாதானப்படுத்த, “இடுப்பிலே பருமனில்லை, தோலிலும் சுருக்கமில்லை. தலைக்குக் கொஞ்சம் சாயம்பூசி, கண்ணாடிக்கு பதிலா கான்டாக்ட் லென்ஸ் மாட்டிக்கிட்டா உன்னை பத்துவயசு குறைவா காட்டும்” என்றாள்.
“காட்டக்கூடாதுன்னுதான் சாயம் போட்டுக்கலை. இப்போ இருக்கற ஸ்கூல்லே வேலைக்கு சேந்தப்போ அங்கொண்ணு இங்கொண்ணுன்னு நரை தெரியும். அதை மறைக்க சாயம் போட்டுப்பேன். ஜாக்சன்னு ஒருபையன், தினம் க்ளாஸ் முடிஞ்சதும், ‘எனக்குப் பாடம் புரியலை, இன்னொருதரம் சொல்லித்தா’ன்னு கேப்பான். அப்புறம், என் அம்மா கொடுத்தாள்னு ஒவ்வொரு வாரமும் பூச்செண்டு, இல்லாட்டா விலையுள்ள சாக்லேட் டப்பா கொண்டுவந்து கொடுப்பான். கிறிஸ்மஸ் பார்ட்டிலே அவனோட அம்மாவைப் பார்த்தேன். அவனுக்கு அக்கான்னு சொல்றமாதிரி அவ்வளவு சின்னவளா இருந்தா. அவளோட பேசினப்போ, ‘கிஃப்ட் எதுவும் பையன்மூலமா உனக்குக் குடுத்தனுப்பலியே’ன்னு சொன்னா. அப்பத்தான் அவனுக்கு என்மேலே ‘க்ரஷ்’னு உறைச்சுது. அதுவரைக்கும் என்னைமாதிரி இந்திய டீச்சர் யாரையும் அவன் பாத்ததில்லை போலிருக்கு. நான் க்றிஸ்மஸ் லீவ்லே தினம் தலைக்கு ஷாம்பு போட்டு சாயத்தை அலம்பி, கான்டாக்ட் லென்ஸை எடுத்துட்டு கண்ணாடி மாட்டிண்டதும் பத்துவயசு அதிகமானமாதிரி இருந்தது. அதுக்கப்புறம் அவனுக்குப் பாடத்திலே அனாவசிய சந்தேகம் வரலை” என்று நடந்த கதையைச் சொன்னாள். “நான் வருத்தமா இருக்கறது என்வயசு அறுபதுக்கு மேலேன்னு அந்தப்பெண் நினைச்சதுக்காக இல்லை, வேறொரு காரணத்துக்காக.”
எதுவென்று கேட்காமல் பரிமளாவே சொல்லட்டும் என்று சரவணப்ரியா காத்திருந்தாள்.
“கொஞ்சநாளா என்னுடைய வாழ்க்கையைத் திரும்பிப் பாக்கறேன்” என்று சொல்லிவிட்டு அவள் நிறுத்தினாள்.
“எரிக் எரிக்சனை நீ கேள்விப்பட்டிருக்கலாம். அவர் மனித வாழ்க்கையை ஷேக்ஸ்பியர் மாதிரி பலகட்டங்களா பிரிச்சு, ஒவ்வொரு கட்டத்திலும் என்ன பிரச்சினைகள் வரலாம்னு விவரிச்சிருக்கார். அதன்படி, கடைசிகட்டத்திலே கடந்துபோன வாழ்க்கையிலே எதாவது அர்த்தம் இருக்கான்னு தேடறது இயற்கைதான்.”
“நீ அந்தமாதிரி பண்ணிருக்கியா?”
சரவணப்ரியா யோசித்துவிட்டு இல்லை என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் அதற்கான காரணத்தை விவரித்தாள். “குழந்தைப்பருவம், வாலிபவயது மாதிரி இந்த இறுதிக்கட்டம் குறிப்பிட்ட வயசிலேதான் ஆரம்பிக்கும்னு நிச்சயமா சொல்லறதுக்கு இல்லை. எதாவதொரு பெரிய பிரச்சினை வந்தாலோ, இல்லாட்டி இனிமே நாம சாதிக்க ஒண்ணும் மிச்சமில்லைன்னு தோணும்போதோ கடந்துபோன வாழ்க்கையைத் திரும்பிப்பார்க்கிறோம்.”
“அப்படி எதுவும் உனக்கு வரலை போலிக்கு, நீ அதிருஷ்டசாலிதான்! அதனாலதான் உன்னைப்பாத்து டிக்கெட் விக்கறவ உனக்கு இன்னும் அறுபதாகலைன்னு நினைச்சிருக்கணும். போகட்டும், போனவாரம் உன்னோட பேசினப்புறம் உனக்குபதிலா நான் உன்வாழ்க்கையை அலசிப்பாத்தேன்.”
சரவணப்ரியாவுக்கு வியப்பு. “என் வாழ்க்கையைப் பத்தி உனக்கு எப்படி தெரியும்?”
“இது இன்டர்நெட் யுகம். அந்தரங்கத்துக்கு இடமில்லை. அதுவுமில்லாம, உன் ஒவ்வொரு சயின்டிஃபிக் பேப்பர்லியும் உன்னோட சரித்திரம் கொஞ்சம் அடங்கியிருக்கு.”
“சொல், பார்க்கலாம்!” என்றாள் ஆவலுடன்.
“யூ.எஸ்.லே நாலுஊர் மாறியிருக்கே. ஒரு பிரபலமான ஆள்கிட்ட வேலைசெஞ்சு பிஎச்.டி. வாங்கியிருக்கே. அங்கங்கே தமிழர் கூட்டத்திலே தமிழ் இலக்கியம்பத்தி பேசியிருக்கே, ஒருகட்டுரையும் எழுதியிருக்கே. சின்னவயசிலேயே உன் ஆசைப்படி கல்யாணமானாலும் ரொம்பநாள் கழிச்சுத்தான் ஒருபையன். டென்னிஸிலும், படிப்பிலும் நன்னா பண்ணியிருக்கான். இன்டெல் போட்டிலே பரிசு வாங்கியிருக்கான். கெமிஸ்ட்ரி ஒலிம்பியாட்லே ஜெயிச்சிருக்கான். எம்ஐடிலே படிச்சிருக்கான். அங்கே காலேஜ் பத்திரிகையிலே சினிமாவுக்கு விமர்சனம் எழுதியிருக்கான். நீ யுனிவெர்சிடிலே பெரிய பதவியில் இல்லாட்டாலும் பலதரப்பட்ட ரிசர்ச்லே பங்கெடுத்துருக்கே. வேலைலே நீயும் சாமியும் சேர்ந்து நிறைய பேப்பர் போட்டுருக்கேள். அந்த ஒத்துமை உங்க சொந்த வாழ்க்கையிலும் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த ஒருநாள் உங்களை நேர்லே பாக்கறப்போ அது சரிதான்னு நினைக்கிறேன்.”
“தாங்க்ஸ். இவ்வளவும் செய்த நீ விருப்பப்பட்டா என்னோட வாழ்க்கை வரலாறை உன்னுடைய அடுத்த புத்தகமா எழுதலாம். நான் அனுமதி தரேன்” என்றாள் சரவணப்ரியா புன்னகையுடன். “வர்ற லாபத்தை பாதிபாதியா பிரிச்சுக்கலாம்.”
பரிமளா அத்துடன் நிற்கவில்லை. “உன்னுடைய பரிபூர்ணமான வாழ்க்கையைப் பார்க்கும்போது நான் குறைப்பட்டுப்போன மாதிரி தோணறது.”
“நீ இப்படி வருத்தப்பட அவசியமே இல்லை. வாய்ப்புகளை வச்சுத்தான் சாதனைகளை ஒப்பிட முடியும். வீட்டு நிலமையை உணர்ந்து, பி.எஸ்ஸி. முடிச்சதும் மேலே படிக்கிற ஆசையை மறந்து வேலைக்குப் போயிருக்கே. உன்னுடைய அண்ணனின் குழந்தைகளை ஆளாக்க நிறைய தியாகம் செய்திருக்கே. மாணவர்களின் முன்னேற்றத்தில் அக்கறைகாட்டும் ஒருநல்ல டீச்சர். ஒவ்வொரு வருஷமும் ‘லீவ்’லே சும்மா இல்லாம ரிசர்ச் செய்திருக்கே. அதெல்லாம் போதாதுன்னு ஒரு தரமான புத்தகம் எழுதியிருக்கே. அதுக்கு பலவருஷம் ஆகியிருக்கும். சொந்த வாழ்க்கையை எடுத்துக்கிட்டாலும் உன்னுடைய புத்திசாலித்தனத்துக்கும், மனப்போக்குக்கும் ஏத்தமாதிரி யாரும் கிடைக்காதப்போ நீ உன்னைத் தாழ்த்திக்காம தனியா இருந்ததே சாதனைதான்.”
உள்ளே சென்ற மாணவர்கள், “கூல்!” “க்ரேட்” என்று சொல்லிக்கொண்டே திரும்பிவந்தார்கள். அதனால் உரையாடல் நின்றது.
இளையவர் வரிசை தாண்டிச்செல்லும்வரை காத்திருந்து, “தொந்தரவு இல்லாம நாம நிம்மதியா பாக்கலாம், வா!” என்று சரவணப்ரியா எழுந்தாள்.
க்ரேக்க நாட்டில் அதீனா கடவுளுக்கு கோயில் எழுப்பப்பட்ட சரித்திரம், காலப்போக்கில் அதன் மகிமையை உணராத பாமரர்களின் குறுகிய கண்ணோட்டத்தால் அது இடிந்து சிதைந்த கதை, அதை மாதிரியாக வைத்து நாஷ்வில்லில் பார்த்தனான் கட்டப்பட்ட வரலாறு ஆகியவற்றை முதலில் தெரிந்துகொண்டார்கள்.
பிறகு, படியேறி பிரதான கூடத்திற்குச் சென்றார்கள். அதன் ஒரு பக்கத்தில் கூரையைத் தொட்டுநின்ற அதீனாவின் சிலை. அவள் உள்ளங்கையில் வெற்றிதேவதை நைகி. முழு உருவத்தையும் கண்களில் அடக்கமுடியாமல் பரிமளா பிரமித்தாள். “நாப்பத்திரெண்டு அடியா? ரொம்ப நன்னா இருக்கே. நான் இந்தியாலே உயரமான ஆஞ்சனேயர்சிலை பாத்திருக்கேன். இவ்வளவு பெரிசா இருக்காது. முகத்திலே எதைப்பத்தியும் கவலைப்படாத ஒரு அற்புதபாவம்! தெய்விகக்களை! சேவிக்கலாம் போலத் தோண்றது.”
“தாராளமா சேவிக்கலாம். இங்கே நான் மட்டும்தான் இருக்கேன்.”
அதீனாவின் கோவிலைச் சுற்றிப்பார்த்து விட்டு வெளியே வந்தபோது மூன்றுமணி.
“அனிடாவுக்கு ‘சூவனீர்’ வாங்கணுமே.”
நுழைவிடத்துக்கடையில் மேஜைமேல் வைக்கும் அளவுக்கு ஒரு அதீனா பொம்மை பரிமளாவின் கண்ணில்பட்டது. தனியாக, தன்னம்பிக்கையோடு வாழநினைக்கும் அவளுக்குப் பொருத்தம்தான் என்ற முடிவோடு அதை எடுத்தாள்.
பார்த்தனானுக்கு வெளியே வந்தபோது, ‘அதீனாவை வணங்கினீர்களா?’ என்று கேட்க அந்த ஆள் இல்லை.
“நேத்து சாமி சமைச்சதாலே இன்னைக்கு சமையல் என் பொறுப்பு.”
“நான் உதவி பண்ணறேன்.”
“அப்போ, சாமிக்குப் பிடிச்சமாதிரி எதாவது செய்வோம்.”

வீடுதிரும்பிய போது இருவருக்கும் எதிர்மாறான எண்ணங்கள். சரவணப்ரியாவின் அக்கா பாரிஜாதத்தின் சோகமான மணவாழ்க்கையை அக்காவும் அம்மாவும் சாமர்த்தியமாக அவளிடமிருந்து மறைத்துவைத்தாலும் பள்ளியில் படித்தபோதே சிறிதுசிறிதாக அவளுக்கு அது தெரிந்துபோனது. அதே சுவட்டில் தானும் செல்ல அவளுக்கு விருப்பமில்லை. தனியாக வாழ்வதில் என்ன தவறு? தந்தையின் ஆசைப்படி தமிழ் படித்ததால் அவளுடைய விருப்பத்தை அவர் மறுக்கமாட்டார் என்ற நம்பிக்கை. ஆனால், விதி அல்லது ‘சான்ஸ்’ சாமியை சந்திக்கவைத்தது. அவள்வழியில் அவன் குறுக்கிடாதிருந்தால் அவளும் பரிமளாமாதிரி தனிமரமாக இருந்திருப்பாள். வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும்? இந்தியாவில் பெண்கள் கல்லூரியில் ஒரு பேராசிரியை. புல பெண்களுக்கு வழிகாட்டி. அக்காவையும் மனக்குறைவுள்ள அவள் பெண்ணையும் தன்னுடனே வாழச் செய்திருக்கலாம். பரிமளாவைப்போல் ஒரு அரிய புத்தகம் எழுதியிருந்தால் தனிமைக்கு அர்த்தமும் கிடைத்திருக்கும்.
பரிமளா சரவணப்ரியாவின் நிறைவான வாழ்க்கையை மனதில் கொண்டுவந்தாள். புத்திசாலியான, நல்லவிதமாகப் பழகும் ஒருபையன், ஆதரவான கணவன். அந்தக் காட்சியில் தூரத்தில் இரண்டுபேர்கள், யாரென்று தெரியவில்லை. ஒருவரின் கையில் ஒரு புகைப்படம். சோமசுந்தரமாக இருக்கலாம். இன்னொரு உருவம் அவளாக இருக்குமோ?

Series Navigation

அமர்நாத்

அமர்நாத்