அமர்நாத்
“மாதவி ரங்கநாதனை நான் போனவாரம் கோவில்லே பார்த்தேன். உனக்கு அவளை எப்படித் தெரியும்?” பக்கத்தில் உட்கார்ந்திருந்த பரிமளாவை சாமி கேட்டான்.
இருபெண்களையும் அவன் எந்தஇடத்தில் இறக்கிவிட்டானோ, அதேஇடத்தில் அவர்களைக் காரில் ஏற்றிக்கொண்டான். சரவணப்ரியா பின்னால் உட்கார்ந்து சிந்தனையில் ஆழ்ந்தாள். அவர்களின் உரையாடலில் கலந்துகொள்ளவில்லை. சோமசுந்தரம் ஒரு காகிதஉறையில் அவள் தந்தையின் படத்தைத் தந்துவிட்டுச் சென்றபிறகு சரவணப்ரியாவிடம் ஏற்பட்ட மாறுதலைக் கவனித்த பரிமளா அவளுடன் மௌனமாக மருத்துவமையத்தின் வாசலுக்கு நடந்தாள். தன்மனைவியின் வருத்தம் தோய்ந்த முகத்தைப் பார்த்தபோதுதான் சாமிக்கும் தான் சந்திக்காத தன் மாமனாரின் நினைவுநாள் என்பது ஞாபகம் வந்தது.
“அவளைச் சின்னவயசிலேர்ந்தே தெரியும். காலேஜ்லே படிச்சப்போ சான்டா க்ளாரா வீட்டுக்கு ரெண்டுமூணு தடவை வந்திருக்கா. அப்புறம் பாத்ததில்லை. அவகிட்டேர்ந்து வருஷக்கடைசிலே ‘சீசன்ஸ் க்ரீடிங்ஸ்’ தவறாம வரும்.”
பரிமளா இன்னும் இரண்டு நாட்களில் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றாலும், அவளுக்குப் புத்தாண்டுவாழ்த்து அனுப்பும் பழக்கத்தை ஆரம்பிக்கலாமென சாமிக்குத் தோன்றியது.
“நான் போனதிங்கள் அவளோட ரொம்பநேரம் பேசினேன். இங்கே வந்தப்புறம் கூப்பிடச்சொன்னா. வந்ததுக்கு அவளையும் பாத்துட்டுப்போலாம்னு இருக்கேன்.”
“தாராளமா. அவளுக்கு எப்போ சௌகர்யமோ அப்போ அழைச்சிண்டு போறோம். பக்கத்திலேதான் இருக்கா.”
சரவணப்ரியாவின் நினைவுகள் அவள்தந்தையைச் சுற்றியதுபோல் பரிமளாவுக்கும் எண்ணங்கள் பின்னோக்கிச் சென்றன.
“மாதவியோட அப்பா ஆர். ராமானுஜம் ஒரு அபூர்வமனிதர். என்னோட அப்பா போனப்புறம் அவரைத்தான் அப்பாவா நெனெச்சிண்டிருந்தேன்” என்று சாமியின் பக்கம் தலையைத்திருப்பிச் சொன்னாள்.
“அப்படியா?”
“நாங்க க்ரோம்பேட்டைக்குப் போனதிலேர்ந்து அவரைத் தெரியும். கையகல வீட்டிலே தனியா தானே சமைச்சு சாப்பிட்டிண்டிருந்தார். அப்பவே அவருக்கு அறுபது வயசிருக்கும். சுதந்திரப் போராட்டத்திலே கலந்துண்டு கல்யாணத்தைப் பத்தி நினைக்கவே இல்லை. அப்போ ராஜாஜியோட ‘ஸ்வராஜ்யா’ பத்திரிகைலே அடிக்கடி எழுதுவார். அதை வச்சுத்தான் பிழைப்பு நடத்தியிருக்கணும்.”
“நீ இப்போ சொல்றப்போ அவர்பேர் ஞாபகம் வரது.”
“நாம காலேஜ்லே படிச்சு முடிச்சப்போன்னு நினைக்கிறேன். ஒரு அம்மாவும் குழந்தையும் அவரோட வந்துதங்கினா. கொஞ்சநாளைக்கு அவ யார், குழந்தையோட அப்பா வயசான அவராகவே இருக்குமோன்னு ஊர்லே கசமுசா. அப்புறம் அது அடங்கிப்போயிடுத்து. அப்பகூட குழந்தைக்கு ஒரு வயசு ஆனப்போ, தன்னாலே அவருக்குக் கெட்டபேர் வரக்கூடாதுன்னு இருக்கலாம், அவ ஓடிப்போயிட்டா. அவர் தனியாவே அந்தக் குழந்தையை வளர்த்தார். மாதவி காலேஜ் படிச்சுமுடிக்கிற வரைக்கும் இருந்துட்டு அப்புறம்தான் கண்ணை மூடினார். நீ மாதவியைப் பாத்தேன்னு சொன்னியே, எப்படி இருக்கா?”
“நல்ல நிலமைலே இருக்காள்னுதான் சொல்லணும்” என்று பட்டும்படாமலும் சொன்னான்.
கார் நின்றது. முதலில் இறங்கிய சரவணப்ரியா, “நீங்க ரெண்டுபேரும் என்னைக் கொஞ்சநேரம் மன்னிக்கணும்” என்று வீட்டிற்குள் சென்றாள். கடைசியாக இறங்கிய பரிமளா நின்று சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள்.
“நான்தான் கராஜ்லே அதிக சாமான்களை சேத்துவைக்கலைன்னு நினைச்சிண்டிருந்தேன். இங்கே கார்களைத் தவிர ரெண்டு சைக்கிள் இருக்கு, அவ்வளவுதான். சிலபேர் ஆத்திலே சுவர் தெரியாம சாமான்களா அடுக்கியிருக்கும்.”
சாமி காரிலிருந்த பரிமளாவின் பெட்டிகளை எடுத்து நடந்தான். அவன்பின்னால் பைகளோடு வந்த பரிமளாவின் பார்வை நுழைவிடத்தில் இருந்த ஒரு பறவையின் கூட்டின்மேல் விழுந்தது. அதை எடுத்துப் பார்த்தாள்.
“அழகா குழிந்த உள்ளங்கை மாதிரி இருக்கே.”
“எந்தப் பறவையோடதுன்னு கேக்காதே. நடந்துபோகும்போது கீழே கிடந்தது. அழகா இருக்கேன்னு எடுத்துண்டுவந்தேன்.”
“இந்த வீடு ‘எம்டி நெஸ்ட்’னு ஞாபகப்படுத்திக்கவா?”
“அப்படி நினைச்சுண்டா போறது.”
பரிமளாவுக்கு மாடியில் அவள் தங்கப்போகும் அறையைக்காட்டி அவள் பெட்டிகளையும் சாமி அங்கே வைத்தான். “பக்கத்திலேயே பாத்ரூம்.”
அவன் உடைமாற்றிக்கொண்டு கீழே வந்தபோது பரிமளா ஒரு புளிக்காய்ச்சல் பாட்டிலைத் தந்தாள்.
“தாங்க்ஸ் பரிமளா! ஐயங்கார் புளிக்காய்ச்சல்னா ஸ்பெஷலாச்சே.”
“ஐயர், ஐயங்கார் வித்தியாசமெல்லாம் பாக்கறியா?”
“நீ வரப்போறேன்னு தெரிஞ்சதும் பாக்க ஆரம்பிச்சுட்டேன்” என்று சிரித்தான். “நான் காப்பி போடப்போறேன். உனக்கும் தரட்டுமா?”
“ப்ளீஸ்!”
“முதல்லே உக்கார்! முன்பசிக்கு இது” என்று மனோகர டப்பாவை அவள்முன் வைத்தான். “கடலைமாவுக்கு பதிலா சோய்மாவு போட்டு பண்ணினது.”
ஒரு துண்டை எடுத்துச் சுவைத்த அவள், “இலேசா சாப்பிட நன்னா இருக்கு” என்றாள்.
சாமி தயாரித்த காபியை இருவரும் அருந்தியபோது, “இன்னிக்கி ப்ரியாவோட அப்பாவின் இறந்தநாள். அவர் நினைவா அவர் இயற்றிய சில பாடல்களைப் படிக்கறது வழக்கம். காலைலே எழுந்ததிலேர்ந்து க்ரான்ட்டுக்கான வேலை. இப்பத்தான் அவளுக்கு ஒழிஞ்சிது” என்று சாமி தன்மனைவியின் சார்பில் சொன்னான்.
“அது மட்டுமில்லை, நான் அவ ‘லாப்’லே இருந்தப்போ சோமசுந்தரம் அவளுடைய அப்பாவின் படத்தைக் குடுத்துட்டுப் போனார்.”
“அப்படியா? அவர்படம் எங்ககிட்ட ஒண்ணுகூட கிடையாது. சோமசுந்தரத்துக்கு எப்படிக் கிடைச்சுதுன்னு தெரியலை.”
சிறு இடைவெளிக்குப்பின் பரிமளா கேட்டாள். “நீ உன் அப்பாவுக்கு என்ன செய்யறது வழக்கம்?”
“அவருக்கு எக்சர்சைஸ் செய்யப் பிடிக்கும். அதனாலே அந்த தினத்திலே எட்டு கிலோமீட்டர் அவர் நினைவா நடப்பேன். மழையா இருந்தா எக்சர்சைஸ் பைக்லே ஒருமணி.”
“நான் என் அப்பாவோட சேர்ந்திருந்தது ரொம்ப குறைச்சல். நாலுவயசுக்கு முன்னாலே நடந்தது ஞாபகமில்லை. அப்புறம் ஒன்பதுவயசு வரைக்கும் நானும் சம்பத்தும் தாத்தா வீட்டிலே வளர்ந்தோம். அப்போ கான்பூர், அம்பாலா, டெல்லின்னு பல ஊரிலே இருந்தார். வருஷத்துக்கு ஒருதடவை அவரைப் பாக்கறதுதான். ‘லீவ்’ முடிஞ்சு அவர் கிளம்பும்போது அழுகையா வரும். அவரைத் தாம்பரத்துக்கு மாத்தினப்போ நாலுவருஷம் எல்லாரும் சேர்ந்திருந்தோம். அந்தமாதிரியொரு சந்தோஷமான காலம் வாழ்க்கைலே அப்புறம் வரவேயில்லை.” பரிமளாவுக்கு குரல் கரகரத்தது
“தினமும் சம்பத் மோட்டார் சைகிள்லே குறுக்கியும் நெடுக்கியும் போவானே” என்று சாமி நினைவுகூர்ந்தான்.
“அப்பவே அவனுக்கு அதிலே பைத்தியம். எங்களுக்குக் கொஞ்சநாள் கழிச்சு நீ வந்தே. உன்வீடு எங்கவீட்டுக்குப் பின்னால இருந்ததும் ஞாபகம் இருக்கு.”
“நான் அப்போதான் சின்ன ஊர்லேர்ந்து வந்திருந்தேன். பத்து வயசானதும் புடவையை சுத்திண்டு வீட்டுக்குள்ளே ஒதுங்கற பெண்களைத்தான் தெரியும். உனக்குப் பேர்தான் பரிமளவல்லின்னு பழங்காலம். ‘மாடர்னா’ நீ ஸ்கர்ட்லியும் சட்டையிலியும் திரிஞ்சதைப்பார்த்து…”
“பயமா இருந்ததா?” என்று பரிமளா சிரித்தாள்.
“ஆரம்பத்திலே. அப்புறம் ரெண்டுபேர் வீட்டுக்கும் நடுவிலே ஒருநாளைக்கு நாலுதடவையாவது நடப்போம். சாயந்தரம் பந்து, டென்னிகாய்ட்னு எதாவது விளையாடுவோம். நம்ம வீடுகள் எவ்வளவு பெரிசா இருக்கும்? நாலு பெரிய கூடம், ஆறு பெரிய ரூம்கள். முன்னாடி தோட்டம். வீட்டைச்சுத்தி ஓடிவிளையாட எவ்வளவு நிலம்? இப்போ நினைச்சுப்பாத்தா நாம எந்தவிதத் தடையுமில்லாம சந்தோஷமா இருந்ததுக்கு அதுவும் ஒரு காரணமோன்னு தோணறது.”
“இருக்கும். ஒரு சம்மர்லே நாம ரெண்டுபேரும் சைகிள்விடக் கத்துண்டோம். யார் முதல்லே கீழேவிழாம ஓட்டறான்னு போட்டி. கத்துண்டப்புறம் சைகிள்லே ரூபவாணி தியேட்டருக்கு போய் ‘ப்யார் கி ப்யாஸ்’னு ஒருஹிந்தி சினிமா பாத்தோம்.”
பரிமளா மேஜைமேல் தொங்கிய வட்டமான விளக்கையே உற்றுப்பார்த்தாள். அந்தக்காலத்திற்கே சென்றதுபோல் அவள் முகத்தில் சிறுபெண்ணின் பரவசம்.
“முக்கியமான ஒண்ணை மறந்துட்டியே” என்று சாமி நினைவூட்டினான்.
“என்ன?” என்று அவன்பக்கம் திரும்பினாள்.
“ரயில் ஊஞ்சலாட்டம் ஆடறதே” என்று சாமி ராகத்துடன் சொன்னான்.
ஒருகணம் யோசித்துவிட்டு, “அதனாலதான் ‘விமானம் ஊஞ்சலாட்டம் ஆடித்தா’ன்னு கேட்டியா? என்னைவிட உனக்கு நன்னா ஞாபகமிருக்கு” என்றாள்.
“ஜெமினியும் சாவித்ரியும் நாடகம் பார்க்க தினமுமா வரப்போறா?”
பரிமளாவின் பார்வை மறுபடி தொலைவுக்குச் சென்றது. “ஒத்திகைக்குப் போனது, பயமில்லாம மேடைலே நடிச்சது, அப்புறம் நீ என்னைக் கேலிபண்ணினது எல்லாம் எவ்வளவு சந்தோஷமான நாட்கள்! பட்டுனு முடிஞ்சுடும்னு எதிர்பாக்கலை. ஏதோ போறாதகாலம், ‘கமான்டிங் ஆஃபீசர்’ ஆசை காட்டினப்போ அப்பா ஏமாந்துட்டார். அவன் தப்பிச்சுட்டான், அப்பா மாட்டிண்டார்.”
பரிமளா பார்வையை சாமியின்பக்கம் திருப்பினாள். அதில் ஏக்கம், வருத்தம், தாபம் எல்லாம் கலந்திருந்தன.
“உன்னை மறுபடியும் காலேஜ் வந்தப்புறம்தான் பாத்தேன். நடுவிலே ரெண்டுவருஷம் இருந்திருக்குமா?” என்று கேட்டாள்.
“சரியா, ரெண்டேகால் வருஷம். அந்தக் கால்கட்டத்தில் நாம வளர்ந்தது மட்டுமில்லை, நமக்குள்ளே எவ்வளவோ வித்தியாசங்கள்!”
“நீ சொல்றது சரிதான். என் அப்பா தினமும் ஒருதடவை, ‘பணம் வெளிலே போறதுன்னு சந்தேகம் வந்ததும் ராமனாதன் கோர்ட் மார்ஷல் வரைக்கும் போகாம என்னை வார்ன் பண்ணியிருக்கலாம். நான் யாருடைய பணத்தையும் திருடலியே’ன்னு சொன்னதினாலே, உன் அப்பாமேலே, உன்மேலே எனக்கு அசாத்திய கோபம்.”
“என் அப்பா குணம் அப்படி. நான் சின்னதப்பு செஞ்சாக்கூட அவருக்குப் பொறுக்காது” என்று சாமி தன்அப்பாவுக்காக வாதாடினான்.
“படிச்சுமுடிச்சு வேலைலே சேர்ந்து அங்கே நடக்கிற தில்லுமுல்லுகளை பாத்தப்புறம் எனக்கும், ‘அவர் தன்கடமையைச் செய்தார், அதுக்காக என்னோட சின்னவயசு சினேகிதத்தை தொலைச்சிருக்க வேண்டாம்’னு தோணித்து.”
“ரொம்ப வருஷத்துக்கப்புறம் அது திரும்பக் கிடைச்சதா வச்சுப்போம்” என்று சாமி சொன்னான்.
“அப்படியா?” என்று நம்பிக்கையுடன் அவனைப் பார்த்தாள்.
“விருந்தாளிகள் வர்றதுக்கு முதல்நாளே நாங்க நிறைய சமைச்சுவைப்போம். இந்ததடவை பண்ணலை” என்று சாமி ஆரம்பித்தபோது பரிமளா குறுக்கிட்டாள். “அப்போ நான் விருந்தாளி இல்லைன்னு சொல்!” அவளும் மாடிக்குச் சென்று வேலைசெய்ய சௌகரியமாக வீட்டுடைக்கு மாற்றிக்கொண்டிருந்தாள்.
“அப்படியும் வச்சுக்கலாம். மஞ்சுளான்னு இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒருத்தியோட ப்ரியாவுக்குப் பழக்கம். நேத்திக்கி சாயந்தரம் அவ திடீர்னு சாப்பிடக் கூப்பிட்டிருந்தா. ப்ரியாவும் ப்ரசன்டேஷன் பத்திய கவலையை மறக்கட்டும்னு அவ வீட்டுக்குப் போனோம். இனிமேதான் சமைக்கணும். அவியலும் பொங்கலும் பண்ணலாம்னு இருக்கேன்.”
“அவியல்கூட உனக்குப் பண்ணத்தெரியுமா?”
“அவியல்கூட என்ன? அவியலும் சமைப்பேன்” என்று சாமி அழுத்திச்சொன்னான். “லாப்லே ‘காம்பௌன்ட்’ தயாரிக்கிறமாதிரிதான். எல்லாத்தையும் அளவா கலந்து கொதிக்க வைக்கணும், அவ்வளவுதானே!”
பயத்தம்பருப்பை இலேசாக வறுத்து அரிசி, தண்ணீருடன் கலந்து ப்ரஷர் குக்கரில் வைத்தான். அவியலுக்கு வேண்டிய எல்லா காய்களையும் எடுத்து நடுமேஜைமேல் வைத்தான்.
“நான் எதாவது பண்ணட்டுமா?”
“வேடிக்கை பார்!”
“நான் காய் திருத்தறேன்.”
“விரல்லே வெட்டு போல இருக்கு.”
“அதை ஏன் N;கக்கறே? ரெண்டுவாரத்துக்கு முன்னாடி ஆழமா வெட்டினுட்டேன். ஒருதடவை பட்டது போறாதுன்னு, போனவாரம் அதே இடத்திலே இன்னொருதடவை கீறல். நறுக்கின காயைக் கத்திலேர்ந்து எடுத்தது தப்பாப்போயிடுத்து.”
“என்ன கத்தி உபயோகிக்கிறே.”
“இந்த மாதிரி ஒண்ணு” என்று மேஜைமேலிருந்த ஒரு விலைமலிவான கத்தியை எடுத்துக் காட்டினாள்.
“அது கூரா இருக்கும், ஆனா நம்ம இஷ்டத்துக்கு வெட்டாது. இதாலே நறுக்கிப்பார்! கத்திக்கு ரெண்டு பக்கமும் பள்ளம்பள்ளமா இருக்கறதனால காய் ஒட்டிக்காது” என்று வேறொன்றைக் காட்டினான்.
அவனிடமிருந்து அதை வாங்கி பரிமளா சில அவரைக்காய்களைப் பலகையில் அடுக்கி வெட்டினாள்.
“கையிலே பிடிக்கறதுக்கே நன்னா இருக்கே.”
“சன்டோகுன்னு பேர்.”
பக்கத்து அறையின் ஆளுயர அலமாரியிலிருந்து அதேபோல ப்ளாஸ்டிக் உறையில் புதிதாகப் பளபளத்த இன்னொன்றை எடுத்துவந்து பரிமளாவிடம் கொடுத்தான். “இதை நீ வைச்சுக்கோ!”
“இதுக்கு எவ்வளவு காசு தரணும்?”
“எதுவும் வேண்டாம். ப்ரியா சாமான் வாங்கறதிலே படுசாமர்த்தியம். ஒரு விலைக்கு ரெண்டுபொருள் வாங்கினாத்தான் அவளுக்கு திருப்தி.”
“ஒரு சென்ட் (நாணயம்) தரேன். வெறுமனே வாங்கிண்டா நமக்குள்ள சண்டை வரலாம்.”
“மிளகாய்க்குத்தான் அப்படி சொல்லக் கேட்டிருக்கேன், கத்திக்குக் கூடவா?”
“எதுக்கு ரிஸ்க்?” என்று கத்தியை ஓரத்து மேஜைமேலிருந்த அவள் கைப்பையின் அருகில் வைத்துவிட்டு, அதிலிருந்து ஒரு பளபளக்கும் லிங்க்கன் நாணயத்தைத் தர, சாமி அதை வாங்கி பத்திரப்படுத்தினான்.
“மிச்ச காய்களை நான் திருத்தறேன். இந்தக் கத்திலே நறுக்கறது என்ன கஷ்டம்?” பரிமளா நாற்காலியை முன்னால்தள்ளி அதில் அமர்ந்து காய்களை நீளவாட்டில் வெட்டத்தொடங்கினாள்.
அவளுக்கு போரடிக்காமலிருக்க, “கோர்னேல்லே உனக்கு இடம்கிடைச்சது அதிருஷ்டம்தான்” என்று சாமி ஆரம்பித்தான்.
“அதுவும் முப்பத்தைஞ்சு வயசிலே” என்று பரிமளா சிரித்தாள். “அதைவிட ஸ்ரீஹரிராவ் கீழே ரிசர்ச் செஞ்சது இன்னும் அதிருஷ்டம். ஹார்வேர்ட்லே போஸ்ட்-டாக்கா இருந்துட்டு அப்போதான் அவர் அசிஸ்டன்ட் ப்ரொஃபசரா சேர்ந்திருந்தார். புதுஆள்கிட்ட போறதுக்கு மத்தவாளுக்கு பயம். அவரோட ஒருதடவை பேசினதும் எனக்கு பிடிச்சுப்போயிடுத்து. நான்தான் அவரோட முதல் ஸ்டூடன்ட். அதை அவர் மறக்கவே இல்லை.”
“இதாகாலே குளிர் அதிகமாச்சே.”
“அப்போ அது தெரியலை. கலிNஃபார்னியாலே இத்தனை வருஷம் இருந்துட்டு ஜுன்மாசம் போகும்போது சிலநாள் குளிராத் தெரியும். நீ பிட்ஸ்பர்க்லே இருந்திருக்கியே. அங்கியும் குளிருக்குக் குறைச்சலில்லை.”
“குளிர்தான். ரெண்டரைவருஷம் முடியறதுக்குக் காத்திண்டிருந்னே;. அதனாலே அதைக் கவனிக்கலை.”
“அதென்ன ரெண்டரைவருஷ கணக்கு?”
“பி.எஸ்ஸி. படிக்கும்போது சரவணப்ரியாவுக்கும் எனக்கும் படிப்பு, இலக்கிய ரசனை எல்லாத்திலும் பயங்கர ஒத்துமை. அதனாலே ரெண்டுபேருக்கும் நடுவிலே ஒரு மனக்கிளர்ச்சி. வேறெதையும் யோசிக்காம ஆகாசத்திலே பறக்கறமாதிரி இருந்தது. பி.எஸ்ஸி. கடைசிவருஷம் அவளுடைய அப்பா போயிட்டார். ‘டௌன் சின்ட்ரோம்’ குழந்தையை எடுத்துண்டு அக்கா வீட்டுக்கே திரும்பிவந்துட்டா. அப்போதான் அவளுக்கு கல்யாணம் என்பது அவ்வளவு சுலபமில்லைன்னு பயம் வந்துடுத்து. ‘நமக்கு இருபதுகூட ஆகலை. பிரிஞ்சுடுவோம். இன்னும் ஐந்து வருஷம் கழிச்சும் நீ ஆசைப்பட்டா நாம கல்யாணம் செஞ்சுப்போம். அப்போ நமக்கு மனப்பக்குவம் வரும்’னு சொல்லிட்டா. எம்.எஸ்ஸி. முடிஞ்சி யு.எஸ். வந்தப்புறம் அவ கொடுத்த கெடு முடியறதுக்குக் காத்திண்டிருந்தேன்.”
பரிமளா மௌனமாக அவர்கள் கதையைக் கேட்டாள். பிறகு, அவளும் பரண்மேலேறி பழைய சாமான்களின் குவியலைக் குடைந்து எதையோ தேடியெடுத்தது மாதிரி தோன்றியது.
“இதைக் கேட்டதும் எனக்கும் பிஎச்.டி.யின்போது நடந்தது ஞாபகம் வர்றது. நான் அதைக் கிட்டத்தட்ட மறந்தே போயிட்டேன்” என்றாள்.
“நீ மீதியை நறுக்கறதுக்குள்ள நான் அவியலை ஆரம்பிச்சுடறேன்.” பரிமளா நறுக்கிய காய்களை சாமி தண்ணீரில் வேகப் போட்டுவிட்டு திரும்பிவந்து அவளெதிரில் ஆர்வம்காட்டிய முகத்துடன் அமர்ந்தான்.
“மாத் டிபார்ட்மென்ட்லே பிஎச்.டி.க்கு ரெண்டு இந்திய மாணவர்கள்தான். பத்மநாபன் எனக்கு ஒருவருஷம் சீனியர். நெத்திலே ஸ்ரீசுர்ணம் இட்டிண்டிருப்பான். எல்லா நேரமும் ரிசர்ச்லேதான் முழுகவனம். அதனாலேயே தடி கண்ணாடி மாட்டிண்டானோன்னு தோணும். யாரோடையும் பேசமாட்டான், பழகமாட்டான். அதுவும் பெண்கள்னா ரொம்ப பயம். இந்தியாவிலியும் படிப்பே குறியா இருந்திருப்பான்னு நினைக்கிறேன். முதல் ஆறுமாசம் நான் எதிர்லே வந்தாக்கூட என்னைப் பாக்காதமாதிரி போயிடுவான். ஸ்ரீஹரிராவோட பேசறதுக்கு முன்னாடி அவனுடைய அட்வைசர் எப்படிப்பட்டவர்னு தெரிஞ்சுக்க, ஒருநாள் அவனை நடைவழிலே நிறுத்திவைச்சுக் கேட்டேன். உடம்பை வளைச்சிண்டு என்னை நேராப்பாக்காம பதில்சொன்னது தமாஷா இருந்தது. அப்புறம் அவனைப் பாக்கறப்பெல்லாம் எங்கே பருப்பு வாங்கறே, தளிகைபண்ணத் தெரியுமான்னு மத்த விஷயங்கள் பேசினேன். கேட்டகேள்விக்கு மட்டும் பதில் சொன்னான். ஒருமாசம் கழிச்சு அவனே எங்கே படிச்சேள், என்ன வேலைபாத்தேள்னு கேக்க ஆரம்பிச்சான். அப்புறம் நெருங்கின பழக்கம். தினம் மத்தியானம் சாப்பிடும்போது பேசுவோம். வெயில்காலத்திலே காம்பஸை சுத்திநடப்போம். என்வீட்டுக்கு நாலைஞ்சு தடவை சாப்பிட வந்திருக்கான். அவன் இன்னும் ரெண்டுபையங்களோட இருந்தான். நானும் அவா வீட்டுக்குப் போயிருக்கேன்.”
“காயெல்லாம் முடிஞ்சுடுத்து. அரைக்கறதுக்கு தேங்காய், இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி நறுக்கிக் குடு!” என்று அவற்றை அவள்முன் வைத்தான்.
“உம்மணாமூஞ்சியா இருந்த பத்மநாபன் என்னோட பழக ஆரம்பிச்சதிலேர்ந்து கலகலன்னு மாறிட்டான். எல்லாநாட்டுக் காராளோடையும் சுமுகமாக பேசஆரம்பிச்சான். எனக்கும் இளமை திரும்பின மாதிரி இருந்தது. அப்போ, நான் ஏதோ ரொம்ப உசரம்னு நினைச்சு கொஞ்சம் கூன்போடுவேன். அவன் பாக்கறான் என்பதற்காக நிமிர்ந்து நடக்க ஆரம்பிச்சேன். ஸ்கர்ட், ஜீன்ஸ் போட்டுக்க ஆரம்பிச்சேன். கண்ணாடிக்குபதிலா கான்டாக்ட் லென்ஸ்.”
வெட்டும் பலகையிலிருந்த துண்டுகளையும் ஜீரகத்தையும் நீர்த்த தயிரில் கலந்து சாமி அரைத்தான். ப்ளென்டரின் சத்தம் நின்றதும், “சாரி! உன் கதையைப் பாதிலே நிறுத்திட்டேன். மேலே சொல்!” என்றான்.
“எனக்கும் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருந்தது. அது எப்படிப்பட்ட உறவுன்னு இப்போகூட நிச்சயமா சொல்லத்தெரியலை. நான் அவனைத் தம்பியா நினைச்சுப் பழகினேன்னு சொன்னா அதுபொய். காதல்னு சொல்றதும் பொருத்தமில்லை. அமெரிக்காவிலேதானே இருக்கோம், எங்களுக்குள்ள சம்பந்தம் ஏற்பட்டாலும் ஏற்படலாம்னு ஒருநம்பிக்கை எனக்கே தெரியாம அடிமனதிலே எங்கேயோ ஒளிஞ்சிருக்கலாம். அதுகூட நிச்சயமில்லை. எதுவானாலும் அந்த ரெண்டரைவருஷம் ரொம்ப சந்தோஷமா வேகமா ஓடிடுத்து. அவன் நாலு வருஷத்திலேயே ரிசர்ச்சை முடிச்சுட்டான். ‘டிஜிடாலிஸ்’லே வேலையும் கிடைச்சுது. அப்புறம் மூணுமாசம் கண்ணிலியே படலை. லைப்ரரிலே மூழ்கியிருந்தான். தீசிஸ் எழுதும்போது நானும் அவனுக்குத் தொந்தரவு தரலை.”
“அரைச்சதை விட்டதும் அவியல் ஆனமாதிரிதான். இனி பொங்கல்.” வெண்ணெய்க்கட்டியில் பாதியை வெட்டி உருக்கினான். பரிமளா எழுந்து அவனருகில் நின்று கவனித்தாள்.
“உனக்காக நிறையப் போடறேன்.”
“ஒருதிங்கள் காலை பத்மநாபனோட ‘தீசிஸ் டிnஃபன்ஸ்’. ப்ரொஃபசர்களோட சேர்த்து முப்பதுபேர் இருக்கலாம். அது முடிஞ்சதும் எல்லாரும் கைகுலுக்கினா. கும்பல்லே கோவிந்தா போடவேண்டாம், அப்பறமா அவனைப் பாக்கறப்போ ஸ்பெஷலா பாராட்டலாம்னு தள்ளிநின்னேன். அவனும் கூட்டத்திலே என்னைத் தேடறதா தெரியலை. ஏற்கனவே கார்லே எல்லாசாமானும் போட்டு ரெடியா இருந்திருக்கான். டிஃபென்ஸ் முடிஞ்ச கையோடு அப்படியே கிளம்பிட்டான். வீட்டுக்கு வந்தப்போ மெயில்-பாக்ஸ்லே மிஸ் கோலப்பன் பெயரில் ஒருகவர். அதில் அவனுடைய கல்யாணப் பத்திரிகை.”
எப்போதோ நடந்ததற்கு இப்போது, ‘ஐ’ம் சாரி’ என்று சொல்வது சாமிக்கு அனாவசியமாகப் பட்டது. பொங்கலில் பொடித்த மிளகையும் ஜீரகத்தையும் கலப்பதில் கவனம் வைத்தான்.
“அவன் எந்த நோக்கத்தோட என்னோடு பழகியிருந்தாலும், போறதுக்கு முன்னாடி, ‘நமக்குள்ள உண்டான அன்பை எந்த வகையிலியும் சேர்க்க முடியாது. உங்களுக்கு என்னைவிட ஒன்பது வயசு அதிகம். ரெண்டுபேரும் ஃப்ரென்ட்ஸாத்தான் இருக்கமுடியும். நான் பாஸ்டனுக்குப் போனப்புறம் கூப்பிடறேன். எதிர்காலத்திலே சந்திச்சாலும் சந்திப்போம்’னு சொல்லியிருந்தா அவனுடைய நினைவு இனிமையா முடிஞ்சி போயிருக்கும். ஹ, சொல்லாம கொள்ளாம ஓடிட்டான்.”
“வாழ்க்கையின் அடுத்தகட்டத்திலே காலடி வைக்கறதுக்கு முன்னாடி அவனுக்கு பழசையெல்லாம் முழுக்க மறக்கணும்னு தோணியிருக்கும், அதனாலேதான் உன்னை நேருக்கு நேரா பாக்கமுடியலையோ என்னமோ.”
“இருக்கலாம். அவனோட அவனுடைய நினைவுகளும் என்னைவிட்டுப் போயிடுத்து.”
மூவர் சாப்பிடுவதற்குத் தேவையான தட்டுகளையும், தம்ளர்களையும் சாமி மேஜைமேல் எடுத்துவைத்தான்.
“என்ன குடிக்கிறே?”
“தண்ணி ஏதேஷ்டம்.”
“பிஎச்.டி. முடிச்சப்புறம் என்ன பண்ணினே?”
“அப்போ எனக்கு நாப்பது வயசு. கம்பெனிகள் கொடுத்த இன்டர்வியுக்குப் போனதுதான் மிச்சம். ஒண்ணும் தகையலை. சென்ட்ரல் ஜியார்ஜியா யுனிவெர்சிடிலே அசிஸ்டன்ட் ப்ரொஃபசர் வேலை கிடைச்சுது. அங்கே கொஞ்சநாள் இருந்து சொந்தமா ஒரு ரிசர்ச் ப்ராஜக்ட் ஆரம்பிச்சா அங்கேயிருந்து பெரிய யுனிவெர்சிடிக்குப் போகலாம்னு ஹரி சொன்னார்.”
“நல்ல ஐடியா.”
“ஐடியா நல்லதுதான். ஆனா நடக்கலை.”
“ஏன்?”
“எல்லா ஸ்டேட் காலேஜையும்போல அங்கே விளையாட்டுதான் முக்கியம். விளையாடறவங்க மூளையை உபபோகப்படுத்தாம பாஸ் பண்ணறதுக்கு சுலபமா ஒரு கோர்ஸ் வேணும்னு கேட்டா. ‘ஸ்போர்ட்ஸ் ஸ்டாடிஸ்டிக்ஸ்’னு ஒரு கோர்ஸ் நடத்தினேன். அதிலே ‘பேஸ்பால் பாட்டிங் ஆவரேஜ்’, ‘பாஸ்கெட் பால் ஷ_ட்டிங் பர்சன்ட்டேஜ்’ இப்படித்தான் பாடம். நிஜமா நடந்த ஒரு ஆட்டத்தை மானிடர்லே போட்டுக் காட்டுவேன். நடுவிலே நிறுத்திட்டு கோச் செஞ்சது சரியா தப்பான்னு ‘பிராபபிலிடி’ பிரகாரம் விவாதிப்போம்.”
“உனக்கு எல்லா ஸ்போர்ட்ஸ_ம் அத்துப்படி ஆயிருக்கணுமே.”
“இதாகாலே இருக்கும்போதே டிவிலே ஸ்போர்ட்ஸ்தான் பார்ப்பேன். ஜியார்ஜியா போனதும் அதுதான் தொழில். க்ரேடிங்கும் சுலபம்தான். எல்லா க்ளாஸ_க்கும் வந்தா நாப்பது பாய்ன்ட். சராசரி என்னன்னு தெரிஞ்சா முப்பது. கடைசி பரிட்சையிலே, ‘உன்னுடை டீம் நாலு பாய்ன்ட் பின்னால இருக்கு, எதிராளிகிட்டே பந்து, ஆட்டத்திலே இருபது செகன்ட்தான் பாக்கி, என்ன பண்ணுவே?’ இந்தமாதிரி அவாளுக்குப் பரியறமாதிரி கேள்வி.”
“சுவாரசியமான கோர்ஸ்தான். சூரன் அதிலே வெளுத்துவாங்கி யிருப்பான்.”
“இப்படி ஒரு மூணுவருஷம். ஹரி உதவியோட ‘பயோ-ஸ்டாட்’லே ஒரு ரிசர்ச் ப்ராஜக்ட் ஆரம்பிச்சேன். ஆரம்பத்திலே அது மெதுவாத்தான் போச்சு. நாலாவது வருஷத்திலே ஒரு பாஸ்கெட் பால் ஆட்டக்காரன், ‘ஆல்-அமெரிக்கன்’. என்னோட கோர்ஸ்லே ரிஜிஸ்டர் பண்ணிட்டு செமிஸ்டர் முழுக்க கண்ணிலேயே படலை. நான் அவனை nஃபயில் ஆக்கிட்டேன்.”
“அவன் யுனிவெர்சிடிக்கு ஆடமுடியாம போயிருக்குமே.”
“அப்படித்தான் நடந்தது. உடனே அவனோட கோச்லேர்ந்து யுனிவெர்சிடி ப்ரெசிடென்ட் வரைக்கும் என்னை நெருக்கி அவனை பாஸ் போடுன்னு கட்டாயப்படுத்தினா. நான் மாட்டேனுட்டேன்.”
“அநியாயத்துக்கு பணிஞ்சுபோகலை, தைரியசாலிதான்.”
“அதோட பலன், அடுத்தவருஷம் வேலை இல்லைன்னு சொல்லிட்டா.”
“அங்கேர்ந்து சான்டா க்ளாரா.”
“அப்போதைக்கு வேற எதுவும் கிடைக்கலை. ஆனா போயி ஒண்ணுரெண்டு வருஷத்திலே வேலை ரொம்பவே பிடிச்சுப்போயிடுத்து.”
சரவணப்ரியா இறங்கிவந்தபோது, ‘எப்படி இருக்கிறது?’ என்று கேட்க அவசியமில்லாமல் அவள் முகத்தில் ஒருதெளிவு.
“சமையல் முடிஞ்சப்புறம் வந்திருக்கேன், என்ன சாமர்த்தியம்!” என்று தன்னையே பாராட்டிக்கொண்டாள். “பரிமளா! சாமி சமைக்கறதைப் பாத்தியா?”
“ப்ரொஃபஷனல்தான்.”
தாங்களே பரிமாறிக்கொண்டு சாப்பிடத் தொடங்கினார்கள்.
“Nஃபமிலி-ரூம்லே கண்ணாடி அலமாரி கொள்ளாம ட்ரோஃபி இருக்கே. அவ்வளவும் சூரன் ஜெயித்ததா?”
“ஸ்விம்மிங், டென்னிஸ், படிப்புன்னு பன்னண்டு வருஷத்திலே அவன் சேர்த்தது.”
“உங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கும்” என்று எப்போதும் ஆசிரியைகள் பெற்றோர்களிடம் சொல்வதைச் சொன்னாள்.
“பெருமைதான், ஆனா அதனாலே இல்லை. எல்லாரிடமும் நல்லவிதமா பழகுவான்” என்றான் சாமி.
“பரிமளா! எங்களுக்கெல்லாம் பத்துபக்க பேப்பர் எழுதறதே பெரியபாடு. ஆரம்பத்திலே சொன்னதை திருப்பிச்சொல்லாம, முன்னே சொன்னதுக்கு எதிர்மாறா எழுதாம இருக்க சிரமமப்பட வேண்டியிருக்கு. நீ முன்னூத்திஐம்பது பக்கத்துக்கும் எப்படி கணக்கு வச்சுக்க முடிஞ்சுது?”
“வேறெதிலியும் கவனம் செலுத்தாம அதிலேயே ஆழ்ந்துபோயிருப்போ” என்று சாமி குறுக்கிட்டான். “பொதுவா விஞ்ஞான சரித்திரம்னா முதல்லே க்ரீஸ், பிறகு ரோம்னு சொல்லிட்டு நவீன ஐரோப்பாவுக்கு தாவிடுவாங்க. இந்தியாவைப்பத்தி ஒருவார்த்தை இருக்காது. நீ உன்னுடைய புஸ்தகத்திலே புராணகாலத்து சூதாட்டத்திலேர்ந்து லீலாவதி கணிதம்வரை விவரமா சொல்லியிருக்கே.”
“சமஸ்க்ருதம் தெரிஞ்சதுலே ஒருலாபம்.”
“சகுனியை கெட்டவன்னு நினைச்சாலும், அவன் பகடைலே ஒவ்வொரு எண்ணும் விழுவதற்கு என்ன சான்ஸ்னு கணக்குப் போட்டு விளையாடினான், மத்தவங்க அது தெரியாம குருட்டாம்போக்குலே காயை நகர்த்தினாங்கன்னு நீ சொல்லியிருக்கறதும் புதுமைதான்.”
“பரிமளா! உனக்கு ஜாதகத்திலே நம்பிக்கை இருக்கும்னு நான் எதிர்பாக்கலை” என்றாள் சரவணப்ரியா.
“எனக்கு நேரடியா கிடையாது. நாம பிறக்கும்போது இருந்த கிரகங்களின் அமைப்பு ஜீன்ஸ் மாதிரி நம் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது என்கிற அடிப்படை தத்துவம் சரியில்லைதான். ஆனா கிரகங்களின் பெயர்ச்சிகளைக் கணக்கு போட்டு ஒரு சம்பவம் நடக்க எவ்வளவு சாத்தியம்னு ஜோசியர்கள் சொல்றதுக்கு விஷயஞானம் வேணும். அதுக்காகத்தான் என்னுடைய புஸ்தகத்திலே ஜோசியத்துக்கு சில பக்கங்களை ஒதுக்கினேன்.”
“எனக்கொரு காபி தரேன்னு சொன்னியே.”
“ஒண்ணென்ன ரெண்டே கொண்டுவந்திருக்கேன். எனக்குவந்த பத்திலே ஸ்ரீஹரிராவுக்கும் அனிடாவுக்கும் தந்ததுபோக எட்டு மிச்சம்.”
“யார் அனிடா? இன்னொரு டீச்சரா?”
“இல்லே, என்னோட ஸ்டூடன்ட். புத்திசாலிப்பெண்.” பிறகு, “உங்களைத்தவிர என் புஸ்தகத்தை ‘அப்ரிஷியேட்’ பண்ண வேற யார் இருக்கா?” என்று வருந்திய அவள் குரலுக்கு ஆறுதல்சொல்ல முடியாமல் உரையாடல் நின்றது.
முதலில் சாப்பிட்டு எழுந்த சரவணப்ரியா, “பரிமளா! உனக்கு ரெண்டுமணி குறைச்சலாச்சே. உனக்கு உடனே தூக்கம் வருமோ?” என்றாள்.
“சந்தேகம்தான்.”
“நாங்க ‘ஜிம்’முக்கு போறதா இருக்கோம். அங்கேவந்து எக்சர்சைஸ் பண்ணேன்!”
“நான் ஷார்ட்ஸ் எடுத்துண்டு வரலியே.”
“அதனாலே என்ன? ‘ட்ரெட்-மில்’லே நடக்கறதுக்கு பான்ட் சட்டை இருந்தாலும் போதும்.”
காரில் சென்றபோது, பரிமளா மாதவியை அழைத்தாள். பின்னணியில் குழந்தைகளின் கூச்சல் கேட்கவில்லை. இன்னும் மாதவி அலுவலகத்தில் இருக்கிறாள் போலிருக்கிறது.
“ஹாய் மாதவி! நான் இன்னிக்கி மத்தியானம் நாஷ்வில் வந்தேன். இப்போ சாமிவீட்டிலே தங்கியிருக்கேன். நான் உன்னை எப்போ பார்க்க வரலாம்னு சொல்!”
“வியாபார விஷயமாக வந்த ஒருவன் நாளைஇரவுதான் திரும்புகிறான். அவனுக்கு உபசாரம் செய்யவேண்டிய கட்டாயம். புதன் நண்பகலுக்குப் பிறகு நேரம் கிடைக்கும்” என்றாள் மன்னிப்பு கேட்பதுபோல்.
“நான் வியாழன் காலை எட்டுமணிக்கு ஏர்போர்ட்டில் இருக்க வேண்டுமே” என்று பரிமளா நினைவூட்டினாள்.
மாதவி சிலநொடிகள் யோசித்துவிட்டு, “நீங்கள் கவலைப்பட வேண்டாம்! புதன் பிற்பகல் நீங்கள் என்வீட்டிற்கு வந்துவிடுங்கள். நான் மறுநாள் அழைத்துப் போகிறேன்” என்றாள்.
“ஒரு நிமிடம்.”
சாமியிடம் விவரத்தைச் சொன்னாள். அவன் ஆட்சேபிக்கவில்லை.
“மாதவி! அப்படியே வச்சுப்போம்.”
- சந்திரனைச் சுற்றித் தளத்தில் இறங்கப் போகும் இரண்டாவது இந்தியத் துணைக்கோள் சந்திரயான் -2 (கட்டுரை : 5)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -12
- அண்ணா மீது கவி பாடிய திருலோக சீதாராம்
- துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்ட மய்யித்துகளுக்கான ஜனாஸா குறிப்பு
- மொழிவது சுகம் : பெண்களின் மகத்தான சக்தியை ஆண்களுக்குணர்த்துவதே எனது எழுத்தின் நோக்கம் – மரி தியய்
- பார்சலோனா -3
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -18 பூமியின் கூக்குரல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -33 பாகம் -4 நமது பூமி
- முள்பாதை 46
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
- தந்தையும் தாயுமான அதிபர்.
- MARUPAKKAM And National Folklore Support Centre Jointly organizes Monthly screening of Documentaries and Short films
- குவைத்தில் ரமாலான் சிறப்பு மாதாந்திர இலக்கிய நிகழ்வு
- திலகபாமாவின் கழுவேற்றப்பட்ட மீன்கள் – நாவல் விமர்சன விழா
- முள்பாதை = வாசகர் கடிதம்
- பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் மாநாட்டில் அற நலதிட்டங்கள் அறிவிப்பு
- கவிஞர் கே. ஆர் திருத்துவராஜாவுக்கு பாராட்டு
- கடிவாளம்
- பிரான்சு ஸ்ட்ராஸ்பூரில்…. “சொல் புதிது” இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு
- மேட்ரிக்ஸ் தமிழில்
- யெளவனம்
- அப்பனே அப்பனே; பிள்ளையார் அப்பனே!!
- வனச்சிறுவனின் அந்தகன்
- இவர்களது எழுத்துமுறை – 5 பாரப்புரத்து (மலையாள எழுத்தாளர்)
- உவமையும் பொருளும் – 1
- தாணிமரத்துச் சாத்தான்…..!
- இரண்டு கவிதைகள்
- பரிமளவல்லி – 11. சன்டோகு கத்தி
- சும்மாக் கிடந்த சங்கு
- குற்றமிழைத்தவனொருவன்
- ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும் -மொழிபெயர்ப்புக் கவிதை
- காதுள்ளோர் கேட்கட்டும்
- காக்கி உடை காவலர்கள் தங்களைவிட உயரமான தடிகளோடு மல்லுக்கு நிற்பதை நிறுத்தி உழைப்புதான திட்டத்தை அமல்படுத்துவோம்.
- மறுபடியும் அண்ணா
- எரியாத முலைகள்
- இசட் பிளஸ்
- கோகெய்ன்