பயணக்கிறக்கம் (Jet lag)

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

கவிஞர் புகாரி


ஜெட்லாக்கை பயணக்கிறக்கம் என்று எந்தக் கிறக்கமோ மயக்கமோ இல்லாமல் மொழிபெயர்த்தேன், கிறக்கமும்

மயக்கமும் வாசிப்பவர்களுக்கு வந்துவிட்டுப் போகட்டுமே என்ற அக்கறையில்:)

அதென்ன பயணக்கிறக்கம் ? எப்படி இருக்கும் அந்த மயக்கம் ? ஏன் வருகின்றன இந்தக் கிறக்கமும் மயக்கமும் ?

மே 2005, ஒரு பன்னிரண்டு தினங்களுக்காக, கனடாவிலிருந்து சென்னை, பின் சென்னையிலிருந்து கனடா, ஜெர்மனியின் லுப்தான்சா விமானம் மூலம் சிறகடிக்காமல் விமானம் விசிலடிக்கப் பறந்தேன். கனடாவிலிருந்து ஜெர்மனி

ஏழரை மணி நேரம். ஜெர்மனியில் சுமார் ஐந்து மணி நேரம் அடுத்த விமானத்திற்காகக் காத்திருக்கும் ஓய்வு( ?). பின்

ஜெர்மனியிலிருந்து சென்னை ஒன்பது மணி நேரம். இப்படியே பன்னிரண்டு தினங்கள் கழித்து மீண்டும் சென்னையிலிருந்து டொராண்டோ.

இந்த என் திடார்ப் பயணம் குளிர்கால நள்ளிரவுக் கனவைப் போல் கழிந்தது. படுத்தவன் விழித்தபோது கனடாவின் இயந்திர தினங்களில் மீண்டும் நிற்காத ஓட்டங்களோடு இழைந்து விட்டதாய் உணர்ந்தேன். ஆனால் ஒரு வித்தியாசம். யாரோ முகம்தெரியாத துரோகிகள் பலர் இரவோடு இரவாக என் கனவுக்குள்ளேயே வந்து என்னை அடித்து நொறுக்கிப் போட்டு விட்டதைப்போல ஒரே களைப்பு, கழித்தெடுக்க முடியாத அலுக்கை. ஏன் ? எப்படி ? அதுதான் ஜெட்லாக் எனப்படும் பயணக்கிறக்கம்.

விமானத்தை விட்டு இறங்கிய சில நாட்களுக்கு ஒருவித சோர்வு, மயக்கம், தடுமாற்றம் என்று எல்லாவித பலகீனச் சொற்களும் நம்மைக் கூடி நின்று கும்மியடிக்கின்றன. நாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், தேர்தலுக்கு நிற்கும் இளம் அரசியல்வாதியின் இடைவிடாத குழப்பம். எதிலும் கவனம செலுத்தமுடியாமல் ஒரு

திக்குமுக்காடல். வாகனம் ஓட்ட முடிவதில்லை, கவிதை வாசிக்க முடிவதில்லை, முக்கியமான விசயங்களையும் கவனம் பிசகாமல் விவாதிக்க முடிவதில்லை. எந்த வல்லாரை லேகியத்துக்கும் வசப்படாமல், மண்டைக்குள் அடையாளம் தெரியாத நண்டுக்கால்கள் கலங்கலாக ஓடிக்கொண்டிருப்பதுபோல் ஒரு தத்துப் பித்துத் தாண்டவம்.

இதனால் தொடர் உறக்கம் தொலைந்துபோய், முந்தாநாள் பிறந்த குண்டு குழந்தைக்கு வரும் துண்டுத் துண்டு உறக்கங்களைப் போல விட்டு விட்டு வந்து தட்டுக்கெட்டு நிற்கும். வாழும் இடத்திற்கும் பருவ நிலைக்கும் ஏற்ப உடலுக்குள் உருவாகி ஒழுங்குக்கு வந்திருக்கும் நம் திடநிலை, தடதடவென்று குலுக்கப்பட்டு தாறுமாறாகக் குலைக்கப்படுகிறது. அவற்றை உடலும் மூளையும் மீண்டும் சரி செய்துகொண்டிருப்பதுதான் இந்த மயக்க, கிறக்க நிலைக்குக் காரணம்.

இதுபற்றி அமெரிக்காவிலுள்ள வானவூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகமான ‘நாசா ‘ என்ன சொல்கிறது தெரியுமா ? ஒரு மணி நேர இட வித்தியாசத்தைச் சரிசெய்துகொள்ள உடலுக்கு ஒரு நாள் வேண்டும் என்கிறது. அப்படியென்றால் எனக்கு ஒன்பதரை நாட்களாவது வேண்டும். கனடாவுக்கும் இந்தியாவிற்கும் தற்போது ஒன்பதரை மணி நேரம் வித்தியாசம் நிலவுகிறது.

விமானம் தரையிறங்கும் தருணத்தில் ஒரு புதுக்கவிதை வாசித்தேன். அதுவோ அதி நவீன கவிதையாய் என் மண்டையோடு முரண்டுபிடித்தது. எல்லாம் இந்தப் பயணக்கிறக்கம் தந்த பிடிபடாத மயக்கம்தான். இந்த மயக்கத்தால் சில சமயம் நான் வவ்வால் மாதிரி தலைகீழாய்த் தொங்குவதுபோல் உணர்வு.

விமானத்தில் நிலவும் உலர்ந்த நிலையால் உருவாகும் தலைவலியோ மற்றுமொரு கொடுமை. தோலெல்லாம்

வறண்டுபோய், மூக்கெல்லாம் (ஒண்ணுதானே ?) சொறிந்துவிடு சொறிந்துவிடு என்று விடாது விண்ணப்பித்துக்கொண்டே இருக்க, நீர்க்கேடு (இப்படியெல்லாம் ஜலதொஷத்தை நான் மொழி பெயர்ப்பதும் பயணக் கிறக்கப்பலன் என்று நீங்கள் தாராளமாக நினைத்துக்கொள்ளலாம். ஜலதோஷத்தை, நீர்க்கோத்துக்கொண்டது என்று என் கிராமத்தில் சொல்லக் கேட்டிருக்கிறேன்) வந்து தலையில் முகாம் இடுவதைப்போல் இருக்கும். தொண்டைக்குள் நம் தங்கக் குரலைத் திருடிக்கொண்டு யாரோ பித்தளைக் குரலை பொருத்திவிட்டுப் போவார்கள்.

உக்கார்ந்துகொண்டே தூங்குவதற்கு நாம் எடுக்கும் இடைவிடாத பயிற்சிதான் இம்மாதிரியான நீண்ட பிரயாணங்கள் என்று சத்தியமே செய்வேன் நான்.

கால்களில் இனம்புரியாத இக்கட்டு. பாதங்கள் நம்முடையவை அல்லவோ என்ற தப்புத் தப்பான நினைப்பு. போட்டிருக்கும் காலணியை சடக்கெனக் கழற்றி எறிந்துவிட்டுப் பாசமாய் அவ்வப்போது கால்களையும் பாதங்களையும் வாஞ்சையாய்க் கட்டிப்பிடிக்கத் தோன்றும். ஆனால் நிம்மதியாய்த் தூங்க இந்தக் கால்கள்தான் இடையூறு என்பதுபோல் இருக்கும் அவ்வப்போது. கால்கள் இல்லாவிட்டால், இந்தக் குறுகிய இருக்கையில் அப்படியே மல்லார்ந்து படுத்து உறங்கிவிடலாமே.

விமானத்தின் அசையாத இறகுகள் அடித்துக்கொள்ளாமல் பறந்துகொண்டிருக்க அசையும் என் கால்கள் அவசியம்

அற்றதாய்க் கிடக்க, விமானப் பயணம் படுசோம்பேறித்தனமாய் நீண்ண்ண்ண்டு நிகழும்.

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். நாமெல்லாம் குழந்தையாவே இருந்துடக்கூடாதா என்று அவ்வப்போது

ஏங்குவோமே, அந்த ஏக்கத்துக்கு இங்கே அதிக பொருள் உண்டு. மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இப்படி மயக்கம் கிறக்கம் என்று எதுவுமே வருவதில்லை. அவர்களின் உடல் அததனை எளிதாய் வரும் மாற்றங்களையெல்லாம் சரி செய்துகொண்டே இருக்கிறது. ஆமாங்க…. வளர வளர நமக்கு நம் உடல் ஒரு சுமைதாங்க.

அலுவலகம் வீடு சமையல் கட்டு என்று வாழும் அன்றாடச் செக்குமாடுகளுக்கு நீண்ட தூர விமானப்பயணம் என்பது

இன்னும் அபத்தமாய் முடியும். அதனாலென்ன அவர்களுக்குஎல்லாமே எப்போதுமே அபத்தம்தானே ?

டொராண்டோவிலிருந்து சென்னையில் குதித்தபோதுகூட இந்தப் பயணக்கிறக்கம் என்னை ஒன்றும் செய்யவில்லை.

அக்கினி வெயிலுக்குமுன் பயணக்கிறக்கமாவது மண்ணாவது ? ஆனால் சென்னையிலிருந்து கனடா வந்தபின்தான் உயிரை

எடுக்கிறது. ஏனெனில், சென்னைக் காற்றில் ஏகப்பட்ட ஈரப்பசை. சென்னையில் நான் ஒரு நண்பரின் வீட்டுக்குச்

செமத்தையான விருந்துக்குச் சென்றேன். வெளியே மழை பொழிகிறதா என்று கேட்டார் நண்பர். அப்படி நனைந்திருந்தேன் வியர்வை அருவியால். அந்த முழுநீள உப்பு ஈரத்திலிருந்து விமானத்தின் உலர்ந்த சூழலில் ஒரு நாள் முழுவதும் வீற்றிருந்தால் என்னாகும் ? கிறுக்கான கிறக்கம்தானே வந்துசேரும் ?

நீண்ட விமானப் பிரயாணம் செய்யப் போகின்ற செலவாளிகளே என் தலைக்கனமில்லாத யோசனைகளைக் கொஞ்சம் இலக்கணக் கவனமாகக் கேளுங்கள். பணிப்பெண்களெல்லாம் வாஞ்சையாய் அருகில் வந்து நின்று டா குடிக்கிறாயா கண்ணா ? காப்பி குடிக்கிறாயா செல்லம் ? பழரசம் வேண்டுமா தங்கம் ? போதையில் மிதக்கப் பிரியமா குடிமகா என்றெல்லாம் குழைவார்கள். அப்படியே சித்தார்த்தம் தொலைத்த புத்தனாய் மாறி வேண்டாம் வேண்டாம் என்று விரட்டிவிடுங்கள் அவர்களை. ஆனால், நாங்கள் சுத்தத் தமிழர்கள், கர்னாடகாவிடம் மட்டுமல்ல உங்களிடமும் ஒன்றே

ஒன்றைத்தான் கேட்போம் ‘தண்ணீர் தண்ணீர் ‘ என்று பொழுதுக்கும் தொல்லை செய்யுங்கள். அடிக்கடி தண்ணீர்

குடிப்பதும், குடித்ததை வெளியேற்ற, ஒப்பனையறை செல்வதால் கால்களை இயல்புக்குக் கொண்டுவருவதும்

ஆபத்தாண்டவனைப்போல் உங்களைக் காக்கும்

நீங்கள் பெருங்குடிமகன்களாய் இருந்தால் ஒரு மிக முக்கியக் குறிப்பு தருகிறேன். விமானத்தில் நூறு மில்லி அடிச்சா தரையில் நாநூறு மில்லி அடிச்சதுக்கு சமம். அப்புறம் ரஜினிமாதிரி தோள்ல துண்டு போடுறதுக்குக்கூட கையைக் காலை உதற வேண்டிவரும்.

விமானத்தில் முதல் வகுப்பிலும் வணிக வகுப்பிலும் அடிக்கடி காற்று செலுத்தி தேவலோகமாய் வைத்திருப்பார்கள். வழக்கம்போல் நம் வகுப்பில் காற்றும் மட்டமாகவே வழங்கப்படும். காப்பி வேணுமான்னு கேட்டுவரும் பணிப்பெண்ணிடம் காற்றுவேண்டும் என்று கட்டளையே இடுங்கள். அவள் ஏற்பாடு செய்வாள் காற்றுக்கு.

இல்லாவிட்டால் காற்றில்லாமல் நீங்கள் தடாலென்று மயங்கிவிழ தடித்த வாய்ப்புண்டு.

வயிறும்கூட கொஞ்சம் குழம்பிப் போய்தான் இருக்கும். ஒரு மாதிரியாகவே நாம் நாள் முழுவதும் உட்கார்ந்திருப்பதால்

வயிற்றின் இயல்பு வாழ்க்கை சிதைந்து ‘வாழ்வே மாயம் ‘ பாடிக்கொண்டிருக்கும், அவ்வேளையில் நீங்கள் பணிப்பெண்

கொண்டுவந்து தரும் எதையாவது உள்ளே கொட்டிக்கொண்டே இருந்தால், வாந்தியும் மயக்கமும் நிச்சயமாகவோ

நிச்சயமில்லாமலோ வரக்கூடும்.

அவ்வப்போது எழுந்து உடம்பைக் கொஞ்சம் முறித்துக்கொண்டு நீட்டி மடக்கிப் பயிற்சி செய்வது எல்லாத்துக்குமே நல்லது. என்னைப்போல் ஐந்துமணி நேரம் அடுத்த விமானத்திற்காக ஜெர்மனி போன்ற விமான நிலையங்களில் காத்திருக்க நேர்ந்தால், சுகம்மா ஒரு குளியல் போட்டு இரத்த ஓட்டத்தை ஒழுங்கு செய்வது உத்தமம. அல்லது ஜெர்மனி விமான நிலையத்தில் உள்ள கடைகளில் ஏதாவது ஒரு பொருளை ஆசை எடுத்து விலை

கேளுங்கள். இரத்த ஓட்டம் தானே உச்சத்தை அடையும்!

இந்தப் பயணக்கிறக்கத்தைத் தீர்க்க நிறைய மாத்திரைகள் வந்திருக்கின்றன. ரொம்ப தொல்லையாய் உணர்ந்தால்மட்டும்

ஒன்றிரண்டை விழுங்கிக்கொள்ளுங்கள். ஆனால் சில மருந்துகள், சித்தெறும்புப் பிரச்சினையைச் சிறுத்தைப் பிரச்சினையாய் ஆக்கிவிட்டுவிடும். அப்புறம் பயணம்

முழுவதும் அவசர சிகிச்சைகளுடன் படுக்கையில்தான் கிடக்க வேண்டி வரும். மகா தொல்லையாய் இருக்கிறதே இந்தச்

சனியன் பிடித்தக் கிறக்கம் என்று தூக்கமாத்திரைகளை விழுங்கி வைக்காதீர்கள். அது விமானத்த்துக்கும் மேலே உங்கள் உயர் பறவையைப் ஒரேயடியாய்ப் பறக்க வைத்துவிட நிறைய வாய்ப்புகள் உண்டு.

விமானம் ஏறுவதற்குமுன் நன்றாக தூங்கி எழுங்கள். நிம்மதியாக நீராடுங்கள். நல்ல உடற்பயிற்சி செய்து இரத்த ஓட்டத்தைக் குட்டிக் கரணங்கள் போட வைத்துக்கொள்ளுங்கள். விமானம் ஏறியபின் கொஞ்சமாய்ச் சாப்பிடுங்கள், நிறைய (வெறுந்) தண்ணீர் குடியுங்கள், விமானத்தின் மென்மையான இசையை மயக்கத்தோடு கேளுங்கள், அடிக்கடி எழுந்து ஒப்பனையறை செல்லுங்கள், அவ்வப்போது உலாவுங்கள், பணிப்பெண்களின் அசைவுகளை அதிர்ந்து அதிசயிக்காமல் ரசியுங்கள், அப்புறம் நிம்மதியாய்த்( ?) தூங்குங்கள். இந்தப் பயணக்கிறக்கத்தை முக்கால்வாசிக்கும்மேல்…. ஏன் முழுவதுமேகூட வென்று மென்று தின்று செரித்துவிடலாம்.

*

buhari@gmail.com

Series Navigation

கவிஞர் புகாரி

கவிஞர் புகாரி