பன்முகப் படைப்பாளி திரு சுஜாதா அவர்களின் மறைவுக்கு அஞ்சலி:

This entry is part [part not set] of 35 in the series 20080227_Issue

உஷாதீபன்


பன்முகப் படைப்பாளி திரு சுஜாதா அவர்களின் மறைவுக்கு அஞ்சலி:

அவருக்கிருந்த அளப்பரிய திறமையினாலேயே பலரும் அவரைத் தொடப் பயந்தார்கள்.
நவீனத் தமிழ் இலக்கியம், அதன் தீவிரத் தன்மை, என்றெல்லாம் பேசியவர்கள் “இந்தா
வாங்கிக் கொள”; என்று அவரும் தன் பங்குக்கு பல படைப்புக்களை முன் வைத்தபோது
வாயடைத்துப் போனார்கள்.
நாக்கு நுனியிலே அவரை விமர்சனம் செய்யத் துடித்தவர்கள் எல்லோருக்குமே, அது
தேவையா என்ற தயக்கம் எக்காலத்திலும் இருந்து கொண்டுதான் இருந்தது.
எழுத்துக்கு ஜாதி கிடையாது. ஜாதி கூடாது. அதை அப்படிப் பார்ப்பவன் மடையன்.
ஆனாலும் பார்க்கும் மனநிலை வந்தது. அப்படிப் பார்ப்பதிலே திருப்தி கண்டவர் பலர். இன்றும்
அந்தப் பார்வை தொடரத்தான் செய்கிறது. அவர்களெல்லாம் கூட வாயடைத்துத்தான்
கிடந்தார்கள் சுஜாதாவைப் பொறுத்தவரை. அவருக்கே தெரியாமல், தன் சூழலுக்குச்
சொல்லாமல் படிக்கத்தான் செய்தார்கள். படித்துக்கொண்டும் இருக்கிறார்கள். தங்களை
வளர்த்துக்கொள்ள. கொஞ்சமாவது அவரைப் போல் ஆக மாட்டோமா என்று.
ஆனால் ஒன்று. எல்லோரும் சுஜாதா ஆகிவிட முடியுமா என்ன?
அங்கே தொட்டு, இங்கே தொட்டு கடைசியில் இவரென்னடாவென்றால் சங்க
இலக்கியத்திலும் கை வைக்கிறாரே? என்று வயிற்றெரிச்சலில் புலம்பியவர் பலர். சொல்பவர்
சொல்லிக் கொண்டிருக்கட்டும். நான் சொல்கிறேன், கேள். இந்த மாதிரி எளிமையாகப்
புரிந்துகொள் என்று சொல்லிக் கொடுத்தார் அவர். சங்க இலக்கியங்களைக் கற்க வேண்டும்
என்ற ஆர்வத்தை சாதாரண வாசகர் மத்தியிலேகூட ஏற்படுத்திய பெருமை இவருக்கே உண்டு.
எதைச் சொல்வது எதை விடுவது? இன்னொரு சுஜாதா பிறந்து வந்தால்தான் உண்டு.
உஷாதீபன்,
மதுரை-14. நாள்: 27.02.08 இரவு 12.00 மணி.

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்