.பன்முகத்தமிழியல் (ஆய்வுக்கட்டுரைகள்) – நூல் விமர்சனம்

This entry is part [part not set] of 31 in the series 20100319_Issue

முனைவர் மு பழனியப்பன்


.பன்முகத்தமிழியல் (ஆய்வுக்கட்டுரைகள்) சு.மாதவன், செம்மொழி, தஞ்சாவூர், விலை.50 (9751330844)

ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய நூல்கள் பல இன்றைக்கு வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் தமிழியல் கல்வி திறனாய்வு போக்குடையதாக இருக்கிறது, இயங்குகிறது என்பதே ஆகும். ஒரு பொருள் பற்றிய தொகுதி, ஒரே ஆசிரியர் எழுதிய கட்டுரைகளின் தொகுதி, பலரும் பல பொருள் பற்றி எழுதிய தொகுதி எனப்பல நிலைகளில் இவ்வாய்வுக்கட்டுரைத் தொகுப்புகள் வெளிவந்து கொண்டுள்ளன. இவ்வெளியீடுகள் அடையாளச் சான்று, தரச்சான்று, நடத்தும் நிறுவனம் போன்றன கருதி அவற்றின் தரத்திற்கு ஏற்ப மதிப்பு உடையனவாகவும் இருக்கின்றன. இத்தொகுதிகளில் உள்ள கட்டுரைகள் பல நிலைகளில் வாசிப்புத் தளங்களைப் பெறுகின்றன என்பது மட்டும் உண்மை.
ஆய்வரங்குகளில் அவை படிக்கப்படுகின்றன. பின்பு ஆய்வறிஞர்களின் இருக்கைக்குச் செல்கின்றன. நூலகங்களில் இருக்கின்றன. இது தவிர ஆய்வுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரையாளர்கள் தம் கட்டுரைகளைத் தொகுத்துத் தனி நூலாக்கம் செய்யும் போது இவை மீளவும் அச்சுவடிவம் ஏறுகின்றன. இந்தப் பரவலாக்கம் வரவேற்கத்தக்கது. இருப்பினும் இக்கட்டுரைகளில் அவசரத்தன்மை, இடநெருக்கடி போன்ற குறைபாடுகள் இல்லாமலும் இல்லை.

இதே அடிப்படை வாய்ந்த பல அரங்குகளில் படிக்கப் பெற்ற கட்டுரைகளை முனைவர் சு. மாதவன் தொகுத்து பன்முகத் தமிழியல் எனத் தந்துள்ளார். இந்நூல் பதினோரு கட்டுரைகளை உள்ளடக்கி இருக்கிறது. பல தளங்களில் நூலாசிரியர்தம் சிந்தனைகள் சென்றிருப்பதை இத்தொகுப்பு காட்டுகின்றது.

நாளந்தாவும் காஞ்சியும் என்ற கட்டுரை படிக்கப் படிக்க பல புதிய செய்திகளைப் படிவர்க்கு அளிக்கின்றது. நாளந்தாவின் வரலாற்றுப்பிண்ணனியில் தருமபாலர், சுமதி சேனா என்ற இரு தமிழரகள் அந்தக் காலத்திலேயே அறிவு உலக நிலையில் போற்றப்பட்டவர்களாக இருந்தனர் என்ற அரிய குறிப்பினை இக்கட்டுரை வழங்குகிறது. தமிழகத்தில் பிள்ளைகளுக்கு வைக்கப் படும் பெயர்கள் குறித்து ஒரு கட்டுரை அமைந்துள்ளது. இக்கட்டுரை வித்தியாசமான கருப்பொருளுடையதாக உள்ளது. எண்பது விழுக்காட்டுப் பெயர்கள் தற்காலத்தில் தமிழ் மரபிற்கு மாறான (எதிரான கட்டுரையாசிரியர் கூற்றுப்படி) வடமொழி சார்ந்த பெயர்களாக இருக்கின்றன என்ற முடிவினை இக்கட்டுரை தெரிவிக்கிறது. மேலும் பெயர் சூட்டலில் பொருள், மரபு சார்பு போன்றன பின்தள்ளப் பெற்று கவர்ச்சி காரணமான பிடித்த பெயர் வைத்தல் என்பது தமிழ்ச்சூழலில் நிகழ்ந்து வருகிறது என்பதை இக்கட்டுரை தெளிவாக்குகின்றது.

திருவாசகத்தில் உள்ள பௌத்த சார்புடைய கருத்துகளை விளக்கும் கட்டுரை ஆசிரியரின் பௌத்த அறிவு நிலையை எடுத்துக்காட்டுகிறது. அதுபோல திருக்குறள், தொல்காப்பியம் குறித்துப் பல அறச் செய்திகள் இந்நூலுள் பதியப் பெற்றுள்ளன.

கவிதைக் கூறுகளுடன் விளங்கும் கலைஞரின் சங்கத்தமிழ், தமிழ நெறி விளக்கம் என்ற நூலில் உ.வே. சாமிநாதையர் கடைபிடித்துள்ள பதிப்பு நெறி, புத்தநெறிகளை உள்ளடக்கி நிற்கும் வேதாத்திரி மகரிஷியின் நெறிகள், சிதம்பரநாத செட்டியாரின் அறவியல் நோக்குநிலை போன்ற பல கருப்பொருளுடைய கட்டுரைகள் பல தளங்களைப் படிப்பவர்க்கு அறிமுகம் செய்விக்கின்றன.

நிறைவுக் கட்டுரை தமிழ்ப் பாடத்திட்டம் குறித்தது ஆகும். போட்டித் தேர்வுகளில் பத்தாம் வகுப்புத் தமிழ்ப்பாடத்திட்டமும், பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ்ப்பாடத்திட்டமும் தேர்வுக்களனாக அறிவிக்கப்படுகின்றன. பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு மீண்டும் பத்தாம், பன்னிரண்டாம் வகுப்புப் பாடப்புத்தகங்களைத் தேட, படிக்க வைக்கும் பின்னிலை ஏன் ஏற்படுகிறது என்ற கேள்விக்குப் பதில் தேடியே ஆக வேண்டும்.

பட்டப்படிப்பில் பகுதி 1. தமிழ் என்ற நிலையில் வைக்கப் பெறும் பாடப்பகுதிகளை விட பத்தாம் …. வகுப்புப் பாடப்பகுதிகள் அறிவுத் திறன் சார்ந்தவை, செய்முறைப் பயிற்சி சார்ந்தவை என்பதே மேற்காட்டியே கேள்விக்குப் பதில் ஆகும். இதனாலேயே பட்டப்படிப்புத் தமிழ்ப் பாடப்பகுதி தேர்வுக்களனாகக் கொள்ளப் பெறுவதில்லை எனக்கூறுவதில் ஒன்றும் தவறில்லை.

இந்தக் கருத்தை அடியொற்றி இந்நூலாசிரியர் பட்டப்படிப்பில் தற்போது வைக்கப் பெற்றுள்ளத் தமிழ்ப்பகுதிப் பாடங்களில் உள்ள குறைகளைக் காட்டியும் அவற்றைக் களைந்தும் ஆன முன்வரைவை இக்கட்டுரைக்குள் தந்துள்ளார்.

“பெரும்பாலான தமிழாசிரியர்களிடம் நிலவும் பொறுப்பற்ற தன்மை, மொழி ஆசிரியர்களே மொழி ஆளுமைத்திறனை வளர்த்து எடுத்துக் கொள்ளாமை, கல்வித்துறை மொழி ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வதற்கான புதிய புதிய பாடத்திட்டங்களை காலவளர்ச்சிக்கு ஏற்ப புதுக்காமை” போன்ற காரணங்களை இந்நூலாசிரியர் தமிழ்க்கல்வியில் ஏற்பட்டுள்ள தடைகளாகக் கருதுகிறார். அப்படியே நூற்றுக்கு நூறு இது உண்மை. இத்தடைகளை உடைத்தெறிந்து தக்க நிலையில் தமிழ்ப்பாடப்பகுதி அமைய ஒரு பாடத்திட்டத்தையும் முனைவர் மாதவன் அவர்கள் வழங்கியிருக்கிறார்.அவர் மிகப் பெரிய பொறுப்புகளுக்கு வரும்போதாவது இந்நிலை சீறாகாட்டும்.

இவ்வகையில் குறிக்கத்தக்க பல கருத்துக்களை அள்ளி வழங்கும் கட்டுரைத் தொகுதியாக இந்நூல் விளங்குகிறது.

muppalam2006@gmail.com

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்