மஞ்சுளா நவநீதன்
இந்தியப் பத்திரிக்கைகளில் 26 சதவீதம் வரை வெளிநாடு முதலீடு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
இதனை காங்கிரஸ், இடதுசாரிகள், பெரும் பத்திரிக்கைகளான இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ், மலையாள மனோரமா, ஈநாடு போன்றவை எதிர்த்திருக்கின்றன.
ஏற்கெனவே இதனை ஆராய்வதற்காக போட்ட பாராளுமன்ற கமிட்டியில், இந்த யோசனை வேண்டாம் என்று உதறப்பட்டிருக்கிறது. இருந்தும், மத்திய மந்திரி குழுமம் இதனை ஒப்புக்கொண்டு இந்த முதலீட்டுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இது நிச்சயம் முறைகேடான செயல். பாராளுமன்றக் குழுவின் தீர்மானங்களையோ, ஆலோசனைகளையோ நடைமுறைப் படுத்தப் போவதில்லை என்றால் ஏன் குழுவை நியமிக்க வேண்டும் ? இந்த பாராளுமன்றக்குழுவின் தலைவர் சிபிஎம்மைச் சேர்ந்த சோம்நாத் சட்டர்ஜி. ஆனால் இந்த பாராளுமன்றக்குழு பாரபட்சமாக நடந்து கொண்டு, எதிர்க்குரல்களை நசுக்கி விட்டது என்று பலர் எழுதியிருக்கிறார்கள்.
சமீபத்தில் அலெக்ஸ் பெரி என்ற டைம்ஸ் நிருபர் எழுதிய கட்டுரையில் கிழத்தனத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட வாஜ்பாயி குடிகாரர், அவரால் நிற்கக்கூட முடியவில்லை. இவர் கையில் அணுகுண்டுக்கான பட்டன் இருப்பது பெரும் ஆபத்து என்று எழுதியிருக்கிறார். அதில் உள்ள ஏளனத்தொனியும் இது மாதிரி ஆளை மக்கள் பிரதமராய் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்ற பச்சாத்தாபமும் ஓங்கி நின்றதும் உண்மை தான். ( எழுத்துக் கூட்டி மட்டுமே படிக்கத் தெரிந்த புஷ்ஷை ஜனாதிபதியாய் ஏற்றுக் கொண்டவர்களின் மத்தியிலிருந்து வாஜ்பாய் பற்றி இப்படி ஒரு கருத்து ஏளனம் வெளிப்படுவது முரண்பாடான விஷயம்.) ஆனால் இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. டைம், நியூயார்க் டைம்ஸ் போன்ற அமெரிக்க இங்கிலாந்து பத்திரிக்கைகள் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை உபயோகப்படுத்தும் பிரச்சார பீரங்கிகள் என்பதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் இல்லை. இப்படிப்பட்ட வெளிநாட்டு மூலதனம் இந்திய ஊடகங்களில் நுழைந்தால், இந்தியாவின் சுதந்திரத்துக்கும், அதன் இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் பல விஷயங்களும் கருத்துக்களும் பரப்பப்படும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஆனால் அவை வெறும் கருத்துகளே. இப்படிப்பட்ட கருத்துகள் எல்லோரும், எல்லா நேரத்திலும் இந்தியப் பத்திரிகைகளில் வெளியிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
தி இந்துவிலும், இந்த அனுமதியை எதிர்க்கும் மற்றப்பத்திரிக்கைகளிலும், இதை எதிர்த்து தலையங்கமும், கட்டுரைகளும் வெளிவருகின்றன. எதிர்ப்பில் இன்னமும் ஒரு படி மேலே போய், இந்தியாவை பிரிட்டிஷ் ஆளக் காரணமாய் இருந்த ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் வருகையுடன் இதை ஒப்பிட்டு கே கே காத்யால் என்பவர் இந்து-வில் கட்டுரை எழுதியிருக்கிறார்.
ஆனால், இதனைச் சொல்வதற்கு இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகளுக்கு அருகதை இருக்கிறதா ? இந்த எதிர்ப்பிற்கு ஏதும் பொருள் இருக்கிறதா ? இந்து போன்ற பத்திரிகைகளின் விற்பனை அளவு குறையலாம் என்ற அச்சந்தான் இந்த எதிர்ப்பிற்கு மூல காரணம் என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தானே ? இந்த ஒரு காரணத்திற்காகவே நான் வெளிநாட்டு முதலீடை வரவேற்பேன்.
இன்று பத்திரிகை உலகில் நிலை என்ன ? தமிழில் வடவர் வருகைக்கு முன்னால் ‘ இந்தியா டுடே ‘ போன்ற குறைந்தபட்சத் தரம் கொண்ட வெகுஜனப் பத்திரிகை கூட தமிழில் இல்லை. ‘ ஆங்கில விகடன் ‘களும், ‘குமுதமும் ‘ குமுதத்தைப் பிரதியெடுத்த குங்குமங்களும், இதயங்களும் தான் இங்கே புழங்கி வந்தன. வடவர் ஏடான ‘இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ‘ தமிழ் நாட்டின் மீது கொண்டுள்ள அக்கறை கூட நிச்சயம் ‘இந்து ‘ என்ற சீன தேசியத் தினசரிக்குக் கிடையாது. லா ச ராமாமிர்தம் என்ற தமிழ் எழுத்தாளரைப் பற்றிச் செய்தி போட்டுவிட்டு, லா சு ரங்கராஜன் என்ற இன்னொருவர் படத்தை வெளியிடும் அளவு அறியாமையும், திமிரும், தமிழ் இலக்கியம் மற்றும் வாழ்வு பற்றிய அலட்சியமும் கொண்ட ஏடு இது. இதனைப் பொறுத்தவரை, ஆர் கே நாராயண் தான் ஒரே இந்தியப் புனை கதை எழுத்தாளர். வெளிநாட்டு முதலீட்டை ஆதரிக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸின் தினமணி பத்திரிக்கையில்தானே, கொஞ்சமாவது தரமான செய்திகளும் கட்டுரைகளும் வருகின்றன ? எமெர்ஜென்சி காலத்திலும் கூட கோயங்காவிற்கு இருந்த துணிவு , கஸ்தூரி கம்பெனிக்கு இல்லை.
இந்துப் பத்திரிக்கை சீனாவின் தேசீய பத்திரிக்கை என்ற அளவில்தானே இன்றும் வெளிவருகிறது. சீன வெளியுறவுக்கொள்கையை ஆதரித்தும், இந்தியாவின் அரசாங்க நிலைபாடுகளை எதிர்த்தும்தானே அதில் கட்டுரைகள் வருகின்றன. இந்தியாவைச் சுற்றியும் இருக்கும் சீன ஆதரவு நாடுகளான, இலங்கை, பாகிஸ்தான் ஆகியவற்றின் தேசீய நிலைப்பாடுகளை ஆதரித்துத்தானே அதில் தலையங்கங்கள் எழுதப்படுகின்றன. அப்படி இருக்கும் போது, அமெரிக்க பத்திரிக்கைகள் அமெரிக்க நிலைப்பாடுகளை இன்னொரு பக்கம் பேசப்போவதில் என்ன தலை முழுகிவிடப் போகிறது ? பாகிஸ்தான் ஆதரவு எழுத்தாளர்களான குல்தீப் நய்யார், எம் ஜே அக்பர், குஷ்வந்த் சிங் இவர்களுடன் புதிதாக அமெரிக்க ஆதரவாளர்களும் இருந்து விட்டுப் போகட்டுமே. சீன – ஸ்ரீலங்கா ஆதரவு எழுத்தாளர்கள் என் ராம், சுப்பிரமணியம் ஸ்வாமி இவர்களோடு அமெரிக்க ஆதரவுக் குரலும் வெளிவரட்டுமே. என்ன குடி முழுகிப் போய்விடும் ? நடக்கப்போவது சீன ஆதரவுச் செய்திகளுக்கும், அமெரிக்க ஆதரவுச் செய்திகளுக்கும் இடையேயான போர்தானே தவிர, தமிழ்நாட்டுக்கு என்ன வந்தது ? பெரும்பாலான மக்கள் தினமலர், தினத் தந்தி படித்துத் தான் தம்முடைய கருத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு அருகாமையில் இருக்கும் பிரச்னைகள்தான் முக்கியமே தவிர, நியூ ஜெர்ஸியில் கொசு செத்தால் என்ன கவலை ? அல்லது சீனாவில் பாலும் தேனும் ஓடினால் என்ன சந்தோஷம் ?
ஆங்கிலப் பத்திரிகைகள் எந்த அளவு பொது மக்கள் கருத்தைப் பாதிக்கிறது , உருவாக்குகிறது என்பதே இன்று பெரும் கேள்விக்குரிய விஷயம். ஏற்கனவே தொலைக் காட்சியில் அன்னிய முதலீடும் அன்னிய செய்திகளும், பார்வைகளும் வரலாயிற்று. சி என் என்-உம், மற்ற சேனல்களும் கோடிக் கணக்கான மக்களால் பார்க்கப் படுகின்றன. பத்திரிகையை விட அதிக வீச்சுக் கொண்ட சின்னத் திரையில் வெளிநாட்டு ஆதிக்கம் பற்றி எந்த நிலைபாடும் எடுக்காத இந்த ஏடுகள் ஏன் இப்போது அலற வேண்டும் ?
இவைகள் அலறுவதற்கு முக்கியக் காரணம், அமெரிக்கப் பத்திரிக்கைகள் அமெரிக்க நிலைப்பாடுகளை இந்தியாவில் பரப்பக்கூடும் என்பதுதான் இருக்கும். அது சீனாவின் தேசீய நலன்களுக்கு எதிரானது என்பதால் இந்துப் பத்திரிக்கை போன்றவை இந்த வெளிநாட்டு மூலதனத்தை எதிர்க்கின்றனவா ? அமெரிக்க மூலதனத்துக்கு எதிராக நிற்க முடியாது என்ற பயத்தில் கட்டுரை கட்டுரையாக எழுதித்தள்ளிக்கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. சீீனாவிடம் காசு வாங்காமலேயே விசுவாசமாக இருக்கும் இவர்களை, காசு வாங்கிக்கொண்டு அமெரிக்க விசுவாசமாக இருக்கப்போகும் எதிர்கால பத்திரிக்கையாளர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று பார்க்கலாம். சபாஷ் சரியான போட்டி என்று காலரியில் உட்கார்ந்து கைதட்டலாம் நாம்.
அதில்லாமல், எழுத்தாளர்களுக்கு ஓரளவு வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கலாம். வெளிநாட்டு சேனல்கள் வந்தவுடன் சின்னத்திரையில் வேலை வாய்ப்புகள் அதிகரித்த மாதிரி இங்கும் நடக்கலாம். அதுவே தரத்திற்கு உத்தரவாதம் இல்லை தான். ஆனால் வெளிநாட்டு முதலீட்டை எதிர்ப்பவர்கள் யாரும் தரம் பற்றி மூச்சு விடுவதில்லை. அவரவர் பத்திரிகைகளின் தரம் இவர்களுக்குத் தான் தெரியுமே.
பாஜகவுக்கு கவலை இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் இந்து, இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற இந்தப் பத்திரிக்கைகள் என்றைக்கும் பாஜகவுக்கு ஆதரவாக எழுதப்போவதில்லை. பாஜக நின்றால் குற்றம் தும்மினால் குற்றம் என்று இருக்கும் இந்தப் பத்திரிக்கைகளுக்கு நல்ல சூடு என்று நினைத்துத்தான் அது வெளிநாட்டு மூலதனத்தை உள்ளே கொண்டுவருகிறது போலும். அதில்லாமல், இப்போது பா ஜ க ஆதரவு தளத்தில் அமெரிக்காவும், அமெரிக்கப் பத்திரிகைகளும் இயங்குவதாய் ஒரு பிரமையில் பா ஜ க இருப்பது போன்று தெரிகிறது. ஆனால் இது எப்போது எப்படி மாறும் என்று சொல்ல முடியாத விஷயம். இந்தியாவும் சரி, பாகிஸ்தானும் சரி அமெரிக்கக் கணக்கீட்டில் நாகரிகமற்ற மூன்றாவது உலக நாடுகள் தான். அமெரிக்கா ஐரோப்பாவைப் பொறுத்தமட்டில் அவைகளின் எல்லா கொள்கைகளும் குறிக்கோள்களும், தங்கள் மக்களின் நலனிலிருந்து ஆரம்பித்து தங்கள் மக்களின் நலன்களிலேயே முடிவு பெறுகின்றன. (மக்கள் என்றால் அந்தந்த நாட்டின் முதலீட்டாளர்கள் என்பதும் பொருள்.) நம் பத்திரிக்கைகளைப் போல, சீன மக்களின் நலன்களில் ஆரம்பித்து திபெத் மக்களின் அழிவில் முடிபவை அல்ல.
வெளிநாட்டுப் பத்திரிக்கைகளும் பாஜகவுக்கு முழுமையான ஆதரவாக இருக்கப்போவதில்லை என்பது பாஜகவுக்கும் தெரியும். இருப்பினும் என்ன காரணத்திற்காக அது வெளிநாட்டு மூலதனத்தை உள்ளே அனுமதிக்கிறது ? நீண்ட நோக்கில், சீன தேசீயவாத கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் இந்திய ஊடகங்களை மாற்றுவது ஒருவேளை அதன் நோக்கமாக இருக்கலாம். மறு நோக்கில், இந்தியாவுக்குள் அனுமதிக்கப்பட்டதால், ஒரு வேளை இந்த வெளிநாட்டுப் பத்திரிக்கைகளும், இந்தியா பற்றி உருவாகியுள்ள எதிர்மறைப் பார்வைகள் மறைந்து, ஆதரவாக உலகெங்கும் எழுதுவதன் மூலமும், இந்தியாவுக்கு நிறைய வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் வந்தால், அவர்கள் எழுதும் கட்டுரைகள் செய்திகள் மூலம் டூரிஸ்டுகள் இந்தியாவுக்கு அதிகம் வரலாம். அதில்லாமல் பா ஜ க விற்கு இப்போது அயல்நாட்டு இந்தியர்கள் ஆதரவளிப்பதால் அவர்களின் மூலதனத்தைப் பெற்று இந்தியாவின் ஊடகங்களில் தம் பார்வையை நிலைபெறச்செய்யலாம் என்ற நோக்கமும் இருக்கக் கூடும். ஆனால் இது ஒரு பா ஜ க வே எதிர்பாராத ஒரு முடிவிற்குக் கொண்டு சென்றாலும் வியப்பதற்கில்லை. இந்த அயல் நாட்டு இந்தியர்கள், சோனியா ஆட்சிக்கு வர நேரிட்டால் அவர் பின்னால் போகத் தயங்க மாட்டாரகள்.
ஆனால் இதெல்லாம் ஊகங்கள் தான். வெளிநாட்டு முதலீட்டில் பெரும் செயல்கள் இன்னொரு ‘காஸ்மோபாலிடன் ‘ ‘ பிளேபாய் ‘ ஆகத் தான் இருக்கும். சின்னத் திரையில் டிஸ்கவரி சேனல் வந்தாலும் கூட, மெகா சீரியல்களும், ஃபாஷன் டி வியும் தானே மக்களைக் கவர்கிறது ?
உண்மையில் நாம் ஆதரவு தரவேண்டியது, சிறிய பத்திரிகைகளுக்குத் தான். தபால் செலவும், காகிதச் செலவும் சிறு பத்திரிகைகளுக்கு சாதகமாய் இல்லை. ஏற்கனவே பத்திரிகை வெளியீடு என்பது பெரும் மூலதனம் தேவைப்படும் ஒரு துறையாக மாறிப் போயிற்று. சிறிய அளவில் வினியோகிக்கப் படும் பத்திரிகைகளுக்கு மலிவு விலையில் காகிதம் அளிக்க அரசாங்கம் கொள்கை வரையறை செய்ய வேண்டும் என்று நாம் விரும்பினாலும், அது ஒரு மறைமுக அரசாங்க ஆதரவை சிறுபத்திரிக்கைகளிடம் கோரும் விஷயமாக ஆகிவிடும். பொது வாசகர்கள், சிறு பத்திரிக்கைகளின் சுதந்திரத்தை காப்பாற்றுவதும் அதற்கு ஆதரவு அளிப்பதுமே இந்திய சுதந்திரத்தை காப்பாற்றும், இந்திய கலாச்சாரத்தை காப்பாற்றும் ஒரே விஷயம். சிறு பத்திரிக்கைகள் உங்களுக்கு பிடித்த விஷயங்களைக் கொடுக்காமல் இருக்கலாம். அவைகளில் நீங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களுக்கு நேர்மாறான கருத்துக்கள் வரலாம். இருப்பினும் ஆதரவு கொடுங்கள். நிறைய சிறுபத்திரிக்கைகள் வருவதும், அவைகளில் சுதந்திர கருத்தாடல்களும் விவாதங்களும் தொடர்வதுமே, நம் கருத்து சுதந்திரத்துக்கும், கலாச்சாரத்துக்கும் அடித்தளம். அது இப்போது இருப்பது போன்ற பெரும் பத்திரிக்கை நிறுவனங்கள் பெரும் மூலதனத்தோடு அரசாங்க அளவில் மோதும் காலகட்டத்தில் மிக மிக முக்கியமான விஷயமாகிறது.
வெளிநாட்டு மூலதனத்தில் வெளிவரப்போகும் ஏடுகளைக் கண்டு , கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான கம்யூனிஸ்டுகளும், விற்பனை பாதிக்கப் படும் என்று அஞ்சுகிற பெரும் பத்திரிகைகளும் தான் பயப்படவேண்டும். மக்கள் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணத்தக்க பார்வை கொண்டவர்கள் தான் என்பது பல விதங்களில் பல நேரங்களில் நிரூபணமாகியிருக்கிறது. என்வே நாம் இதை வரவேற்போம்.
***
manjulanavaneedhan@yahoo.com
- வானோர் உலகம்
- நகர(ரக) வாழ்க்கை
- தூக்கக் கலக்கத்தில் கம்ப்யூட்டரைத் தொடாதீர்கள் – ஒரு எச்சரிக்கைக் கட்டுரை
- ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை
- பொறுப்பின்மையும் போதையும் (எனக்குப் பிடித்த கதைகள்-17 -பிரேம்சந்த்தின் ‘தோம்புத்துணி ‘)
- மகாராஜாவின் இசை
- பாரதி இலக்கிய சங்கத்தின் மாதந்திர சந்திப்பு
- பருவ மழைக்காலத்து திருமணமும், மீரா நாயரும் – Monsoon Wedding திரைப்படம் பற்றிய ஒரு பார்வை
- கோதுமை தேன் குழல்
- சோயா முட்டை பஜ்ஜி
- அணையாத அணுஉலைத் தீபம் – சூரியன்
- வசந்த மாளிகை
- நிலப்பரப்பு
- இன்னொரு முடிவும் எனக்கு முன்னால்
- கலர் கனவுகள்
- மதிப்பு
- ஊடுருவல்.
- இருத்தல் குறித்த சில கவிதைகள்..
- தெளிந்த நீரோடை
- அமானுஷ்யக் கனவு
- அடையாளம் கடக்கும் வெளி
- கெளரவம் (Respectability)
- பத்திரிகைகளில் வெளிநாட்டு முதலீடு : வரவேற்போம்
- இந்த வாரம் இப்படி – சூன் 30 2002 (முஷாரஃபின் ஜனநாயகம், ஸ்டாலின் பதவி)
- மகாராஜாவின் இசை
- மனுசங்கடா, நாங்க மனுசங்கடா
- தூக்கக் கலக்கத்தில் கம்ப்யூட்டரைத் தொடாதீர்கள் – ஒரு எச்சரிக்கைக் கட்டுரை