பதில்களின் சொரூபம்

This entry is part [part not set] of 29 in the series 20091225_Issue

நேசமுடன் வெங்கடேஷ்


===============

“நீங்கள் இன்றைய இளைஞர் பயங்கர பக்திமான்கள் ஆக இருக்கிறார்கள் என்று எழுதுகிறீர்கள். உங்களிடம் ஒரு விஷயம் கேக்கலாமா?” என்றார் நண்பர்.

“கேளுங்கள்”

“நூறாண்டுகளுக்கு முன்பு சென்னையுடைய பாப்புலேஷன் என்ன?”

மனம் கணக்குப் போடத் தொடங்கியது. 2009 கணக்குகள்படி, சென்னையில் மட்டும் 43 லட்சம் பேர் வாழ்வதாகவும், சென்னையைச் சுற்றியுள்ள இடங்களை எல்லாம் சேர்த்து 75 லட்சம் வரை வாழலாம் என்றும் ஆய்வாளார்கள் சொல்லுகிறார்கள். கடந்த இருபது ஆண்டுகளில் சென்னையை நோக்கி வந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். எங்கோ பார்த்த பழைய சென்சஸ் தகவல் ஞாபகம் வந்தது.

“கிட்டத்தட்ட ஐந்து லட்சம்.”

“அப்படியானால் பத்து மடங்கு பாப்புலேஷன் வளர்ந்திருக்கிறது இல்லையா?”

“ஆமாம்.”

“அப்படியானால், கபாலீஸ்வரர் கோவிலிலும் பார்த்தசாரதி கோவிலிலும் கூட்டம் அலைமோத வேண்டாமா? இடமே இருக்கக்கூடாது இல்லையா? இன்னும் கூட்டம் சாதாரணமாகத்தானே இருக்கிறது. அப்படியானால், பக்தி வளரவில்லை என்றுதானே அர்த்தம்?”

ஒரு நிமிடம் தாமதித்தேன். நண்பரை புண்படுத்த விரும்பவில்லை.

“உடலே கோவிலாக, உள்ளமே இறைவனாக வழிபடக் கற்றுக்கொண்டுவிட்டார்கள் இளைஞர்கள்” என்றேன்.

இதுபோன்ற வாதங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. இப்படியெல்லாம் கடவுளின் இருப்பையோ இல்லாமையையோ நிறுவிவிட முடியும் என்று தோன்றவில்லை. இதெல்லாம் சும்மா புத்திசாலித்தனம்.

ஆனால், மிக ஆழமாக நம் இந்திய சமூகத்துக்கு கடவுள் தேவையாக இருக்கிறார். ஒவ்வொரு நாள் காலையும் இரண்டு ஊதுவத்திகளை கொளுத்திவைத்துவிட்டுத்தான் எங்கள் தெருவில் தள்ளுவண்டியில் துணி தைப்பவர் தன் தொழிலைத் தொடங்குகிறார். துணிகளுக்கு இஸ்திரி போடுபவர், தன் சின்ன பெட்டிக் கடையின் ஓரத்தில் காமாட்சி விளக்கை ஏற்றிவிட்டே சலவைப்பெட்டியைத் தொடுகிறார். அந்தோணியாருக்கும் மேரி மாதாவுக்கும் மெழுகுவர்த்தியை ஏற்றிவிட்டே, காய்கறிக் கடைக்காரர், விற்பனையை ஆரம்பிக்கிறார்.

பல ஐடி நிறுவனங்களில் நண்பர்களின் கியூபிக்கிள், கேபின்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு ஓரமாக பிள்ளையார்பட்டி பிள்ளையார் இருப்பார். முருகன் இருப்பார். வெளிநாட்டுக்காரன் இங்கே வந்து தொழிற்சாலை கட்டினாலும் முதலில் அந்தணரைப் பிடித்து, கணபதி ஹோமம் செய்கிறார். இதையெல்லாம் வேண்டாம் என்று யாரும் சொல்வதில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது, கடவுள் பல அடுக்குகளில் நிறைந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

முதலில், நாகரிக சமூகத்தில், அடுத்தவர்களின் மனத்தைப் புண்படுத்திவிடக்கூடாது என்ற எண்ணம் ஆழமாக இருக்கிறது. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, உனக்கு உன் கடவுளிடம் நம்பிக்கை இருக்கிறதா? அப்படியானால், நான் என் கருத்தை வலியுறுத்த விரும்பவில்லை. எல்லோரும் சேர்ந்து வாழ, பணியாற்ற, இதுபோன்ற நம்பிக்கைகள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது என்று ஒரு சாரார் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதை அப்ஜெக்டிவ் அப்ரோச் என்று சொல்லலாம்.

சப்ஜெக்டிவ்வாக, கடவுள் இரண்டு மூன்று தளங்களில் செயல்படுகிறார். எல்லோருக்கும் அநித்தியம் பயங்கரமான ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக இருக்கிறது. என்ன நடக்கும் என்று சொல்ல முடியாமல் இருக்கிறது. இந்தத் த்ரில்தான் வாழ்க்கையின் சுவாரசியம். ஆனால், அதைத் த்ரில்ல்லாக எடுத்துக்கொள்ள முடிவதில்லை. நாம் அதை ஏதேனும் ஒரு வடிவத்துக்குள், நாம் ஏற்றுக்கொள்ளத்தக்க, புரிந்துகொள்ளத்தக்க சூத்திரத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனாலும் முடிவதில்லை. Uncertainity அப்படியே கட்டு குலையாமல் இருக்கிறது.

பெரும்பாலானவர்களால் தங்களை நம்ப முடியவில்லை. எப்போதும் ஒரு பற்றுக்கோடு, ஒரு ரெபரென்ஸ் தேவையாக இருக்கிறது. தங்களை யாரேனும் வழிநடத்த மாட்டார்களா என்று ஏங்குகிறார்கள். நாம் தான் அடியெடுத்து வைத்து எதிர்காலம் என்ற கும்மிருட்டுக்குள் வழிகண்டு முன்னேற வேண்டும் என்னும்போது இயல்பான பயம் இன்னும் அதிகமாகிவிடுகிறது.

பலர் இந்த uncertainityஐ பலவிதங்களை தாண்டிப் போக முயற்சிக்கிறார்கள். முதலில் வீராப்பு. வாழ்க்கையில் எங்கோ ஓரிடத்தில் அடிபடும்போது (அல்லது தாம் விரும்பும்படி ஒரு விஷயம் நடக்காமல், மனம் நோகும்போது), லேசான தயக்கம் ஆரம்பிக்கும். அடுத்து பிடிவாதம். கடவுள் இல்லை என்பதில் பிடிவாதம். உடல் தளரும்போது, மெல்ல அதுவும் தளர ஆரம்பிக்கும்.

ஒவ்வொரு நாளும், தாம் செய்யும் செயல்கள் பற்றிய விமர்சனங்கள் தாக்கிக்கொண்டே இருக்கும். சரியா தவறா என்ற கேள்வி துளைத்துக்கொண்டே இருக்கும். சரி தவறு பற்றி அடிப்படையாக நமக்கு இருக்கும் விதிகள், இந்திய மரபின் தொடர்ச்சியாக வருவது. பாவம் புண்ணியம், நல்வினை தீவினை, முற்பகல் பிற்பகல் எல்லாம் ஆழ வேரூன்றிய கருத்துகள். எதற்கு பயப்படுகிறதோ இல்லையோ, இந்திய மனம் இத்தகைய விமர்சனங்களுக்கு நிச்சயம் பயப்படும். நம்முடைய consciousஐ இதுபோன்ற அளவீடுகளே கட்டமைத்து இருக்கின்றன.

மேலும் தான் செய்யும் செயல்களுக்கு ஒரு affirmation தேவையாக இருக்கிறது. சரியாகத்தான் செய்திருக்கிறோம் என்று பக்கத்தில் இருந்து யாராவது சொல்லவேண்டும். பக்கத்தில் இருப்பவரை எவ்வளவு தூரம் நம்ப முடியும் என்பது இன்னொரு கேள்வி. அவனுடைய நோக்கம் என்னவாகவும் இருக்கலாம். அதனால், அவனை நம்ப முடியாது. என்ன செய்யலாம்?

இன்னொரு பெரிய பிரச்னை, தோல்வி. நினைத்தது நடக்காமல் போவது. எதிர்பார்ப்பு பொய்த்துப் போவது. நம்பிக்கை தகர்ந்து போவது. எப்படி இதைப் புரிந்துகொள்ள வேண்டும்? எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? என்ன பதில் என்னை மீண்டும் உயிர்ப்பிக்கும்? எந்தக் காரணம் என்னை மீண்டும் உற்சாகப்படுத்தும்? என்ன சமாதானம் என்னை மீட்டெடுக்கும்? தெரியவில்லை.

இதுபோன்ற இடங்களில்தான் கடவுள் மிகவும் தேவையாக இருக்கிறார். நாம் விரும்பும் விதங்களில் எல்லாம் நம்மோடு இருப்பவர் அவர். நாம் வைக்கும் கோரிக்கைகள், எடுத்துச் செல்லும் விண்ணப்பங்கள் அனைத்தையும் நிறைவு செய்பவராக அவர் இருக்கிறார். சாய்ந்து அழ ஒரு தோளாக அவர் இருக்கிறார். துன்பங்களில் துணை நிற்கிறார். தேவைப்படும்போது ஆலோசனை வழங்குகிறார். தப்பைச் சுட்டிக் காட்டுகிறார். உங்களுடைய நலனை மட்டுமே நாடுபவராக அவர் இருக்கிறார். உங்களுடைய ஆல்டர் ஈகோவாக கடவுள் நின்றுகொண்டு இருக்கிறார். அது போதாதா?

உணர்வு மட்டத்தில் கடவுளை replace செய்ய ஆளே இல்லை. ஏனெனில், அவர் உங்கள் விருப்பப்படி உருவாகுபவர். உங்கள் வழிகாட்டி, முகம் காட்டி, நெறி காட்டி. மனிதனின் மனத்தில் கேள்விகள் இருக்கும்வரை, கடவுள் இருந்துகொண்டுதான் இருப்பார். ஏனெனில் பதில்களின் சொரூபம் அவர்.

Series Navigation

நேசமுடன் வெங்கடேஷ்

நேசமுடன் வெங்கடேஷ்