பண்டிட் ஜவஹர்லால் நேருவைப் பழித்த பாரத அரசியல் ஞானி ஒருவர்

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

சி. ஜெயபாரதன், கனடா


கடந்த வாரத் திண்ணைக் கடிதத்தில் பண்டிட் நேருவை ‘இழிவினும் இழிந்த மனிதர் ‘ என்று பழித்துள்ளார், அரசியல் கடலில் மூழ்கி முக்தி பெற்ற பரிமளம் என்ற ஓர் முற்போக்குவாதி! பல கோடி பாரத மக்களைக் கொந்தளிக்கும் சுதந்திர நாட்டில் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் வழி நடத்தி முன்னேற்றிய, தேசீயச்

சீலர், பண்டிட் நேருவைப் பழிக்க பரிமளத்துக்கு என்ன தகுதி உள்ளது என்று சற்று ஆராய்வோம்!

‘பாகிஸ்தான் ‘ என்னும் பெயரை முதலில் படைத்த கவிஞர் இக்பாலிடம் (1877-1938) ஜின்னா, பண்டிட் நேருவைப் பற்றி ஒருவர் கேட்ட போது, ‘ஜின்னா ஓர் அரசியல்வாதி! நேரு ஓர் தேசீயவாதி ‘ என்று பதில் கூறினாராம். பிரிட்டிஷ் இந்தியாவில் சுதந்திரப் போராட்ட காலத்தில் நேரு கைதி செய்யப்பட்டு சிறைவாசம் புகுந்த போது, ஆங்கில நாடக மேதை பெர்னாட்ஷா, ‘நேரு சிறைப்படுத்தப் பட்டார்! ஆங்கில இலக்கியம் பொங்கி வளரட்டும் ‘ என்று புகழ்மொழி புகன்றாராம்! கவியோகி இரவீந்திர நாத் தாகூர் நேருவைப் பற்றி ஒரு சமயம், ‘விடுதலைப் போரில் பாரத தேசத்தின் மீது தளராத பாசமுடன், உறுதியோடு போராடிய உற்சாகத் தீரர் ‘ என்று சொல்லி யிருக்கிறார்.

நேரு பண்டிட் இல்லை என்பதற்கு பரிமளம் ஐந்து குற்றச் சாட்டுகளைக் காட்டி யுள்ளார்:

1. வாரிசு அரசிலைக் கொண்டு வந்தது.

லால் பகதூர் சாஸ்திரி இறந்ததும் இந்திரா காந்தியை டில்லி அரசாங்கத்துக்கு அழைத்துப் பிரதமராக வழி வகுத்தவர் காமராஜ்! ராஜீவ் காந்தி பிரதமராக நேரு எந்த முயற்சியும் எடுத்திருக்க முடியாது! நேரு உயிரோடிருக்கும் போதே, அவர் யாரையும் தன் வாரிசு என்று குறிப்பிட்ட தில்லை! யாரையும் பிரதம மந்திரியாக நேரு தன் வீட்டில் வளர்த்து வரவில்லை! விடுதலை இந்தியாவில் யாரும் சட்ட சபைக்கு நிற்கலாம். நேருவின் வாரிசான இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் பிரதம மந்திரியாக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். சிம்மாசனத்தில் தம் வாரிசுகள் அமர நேரு வழி வகுத்தார் என்று பரிமளா கூறுவது அடி முட்டாள்தனம்!

2. கட்டாயக் கல்வி முறையை நடைமுறைக்குப் படுத்தாதது.

பாரதம் அடிமை நாடாக இருந்த போது பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்தவை, 26 பல்கலைக் கழகங்கள்! நேரு காலத்தில் மட்டும் 36 பல்கலைக் கழகங்கள் தோன்றின. ஆக மொத்தம் பல்கலைக் கழகங்கள் 62 ஆகப் பெருகிய போது, அவற்றுக்கு ஏற்ப இந்தியாவில் இணையாகப் பள்ளிக்கூடங்கள் ஏற்படாமல் எப்படி இருக்க முடியும் ? கட்டாயக் கல்வியைப் பிரதம மந்திரி நேரு கொண்டு வந்தால் என்ன ? காங்கிரஸ் முதல் மந்திரி காமராஜ் கொண்டு வந்தால் என்ன ? இரண்டும் ஒரு கூட்டில் பொரித்த குஞ்சுகள் தானே! கட்டாயக் கல்விக்குப் பள்ளிகளைப் பாரதத்தில் பெருக்கியவர் பண்டிட் நேரு என்று பரிமளத்துக்குத் தெரிந்தால் போதும்! பாரதத்தில் விஞ்ஞானத் தொழில் நுணுக்கத் துறைகளைப் பேரளவில் தோற்றுவித்தார் யார் ? பண்டிட் நேரு!

3. விடுதலைக்குப் பாடுபட்டிருந்தாலும் ஆட்சித் திறன் பற்றிய புரிதல் இல்லாமல் நிர்வாகச் சீர்கேட்டுக்கும் இந்தியா ஊழல் மிகுந்த நாடு என்னும் புகழை அடைந்ததற்கும் வழிகோலியது.

இத்தகைய குண்டை நேருவின் மீது வீசிய நீதிபதி பரிமளா, ஒன்று இந்தியப் பாராளு மன்றத்தில் பணியாற்றி யிருக்க வேண்டும்! அல்லது மாநில அரசாங்கத்தில் பொதுப் பதவிகளில் அரசு புரிந்திருக்க வேண்டும்! இல்லாவிட்டால் நகராட்சியிலாவது பல்லாயிரம் மக்களின் பிரதிநிதியாக நிர்வாகத் திறமை பெற்றிருக்க வேண்டும்! எந்த அரசியல்வாதி பரிமளாவின் பாராட்டைப் பெற்றவர் என்று தெரிந்தால் அவருடன் பண்டிட் நேருவைத் தராசில் வைத்து சீர்தூக்கி எடை பார்க்கலாம்! பல்வேறு ஜாதி, மத, இன, மாநில வேறுபாடுகள் நிறைந்த பாரதத்தில் ஊழல்கள், நேரு காலத்தில் [1947-1963] இருந்ததை விட இப்போது பலமடங்கு பெருத்துள்ளதற்கு யார் காரணம் ?

4. மனித உரிமைகளில் கவனம் செலுத்தாது.

இதற்குச் சான்றாக பரிமளம் எதுவும் எழுதாததால், என்ன பதில் அளிப்பது ? ஆசியாவிலே விடுதலை பெற்ற முதல் தேசம் பாரத நாடு. பாரத மக்களின் விடுதலைக்குப் பண்டிட் நேரு பாடுபட்டிருப்பதாக 3 ஆவது பாராவில் குறிப்பிட்ட பரிமளம், மனித உரிமைகளில் நேரு கவனம் செலுத்தவில்லை என்று 4 ஆவது பாராவில் முரணாகப் பேசுகிறார்! நேருவின் அடிப்படையான, ஆணித்தரமான ஆசியக் கூக்குரல்: “மனித இனத்தின் விடுதலை” [Liberation of Mankind]! பரிமளம் அல்லது பரிமளத்தின் பரம்பரை யாராவது விடுதலைப் போரில் மனித உரிமைகளுக்கு எந்த யுகத்திலாவது தலை நீட்டி யிருக்கிறார்களா ?

5. காஷ்மீரில் ‘கருத்தறியும் வாக்கெடுப்பு ‘ என்று காஷ்மீரிகளுக்கும், ஐ.நாவுக்கும் கொடுத்த உறுதி மொழியைக் காற்றில் பரக்க விட்டது. [சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவர் இழிவினும் இழிந்த மனிதரென்பது மேதாவி பரிமளத்தின் கொள்கை]

விடுதலை பெற்றவுடன் பாகிஸ்தான் காஷ்மீரைக் கவரப் படையெடுத்த போது, காஷ்மீர் இந்து அரசர் பாரதத்தின் உதவியை நாடினார். முதல் போரில் பிளவு பட்ட காஷ்மீரில் பெருவாரி முஸ்லீம் உள்ள போது, கருத்தறியும் வாக்கு எடுத்தால் என்ன விளையும் ? சுதந்திரக் காஷ்மீர் தனி நாடு! உடனே தனிக் காஷ்மீரை விழுங்கிக் கொள்ள தயாராகப் பாகிஸ்தான் வாயைப் பிளந்துள்ள போது, பண்டிட் நேரு சொன்ன சொல்லை மாற்றிக் கொண்டது ராஜ தந்திரமே. காஷ்மீர் இந்து ராஜா பாகிஸ்தான் மீண்டும் படையெடுத்துத் தன்னாட்டைக் கைப்பற்றிக் கொள்ள அனுமதிப்பாரா ? தீர்க்க தரிசியான நேரு தான் பிறந்த பூமியான காஷ்மீரைக் காக்கத் தன் வாக்கை மாற்றிக் கொண்டது, ஒரு சிறந்த ராஜ தந்திரம்.

இரண்டாயிரம் ஆண்டுகளாய் பாரதம் முழுவதையும் பதினைந்து ஆண்டுகள் முடிசூடா மன்னனாகச் சீராக ஆட்சி செய்த பண்டிட் நேருக்கு இணையாக வேறு யாரும் வரலாற்றில் ஆண்டதாக அறியப்பட வில்லை! அவர் முதல் பிரதமராக ஆட்சி செய்த காலங்களில் [1947-1963] அவர் எதிர்கொண்டு கையாண்ட பிரச்சசைனகள் மிகவும் சிக்கலானவை! சிரமமானவை! இரண்டாக வெட்டுப்பட்ட இந்தியாவில் இந்து முஸ்லீம் கலகம்! வங்காளத்தில் நவகாளி இந்து முஸ்லீம் படுகொலைகள்! பாகிஸ்தான் காஷ்மீர் முதல் யுத்தம்! தனிப்பட்ட இந்திய ராஜாக்களின் கைகளை முறுக்கி இந்தியாவோடு இணைப்பு! புதிய முதல் அரசில் சட்ட அமைப்பு! மொழிவாரியாக மாநிலங்களின் பிரிப்பு! வடக்கே இமயமலைச் சிகரத்தில் சீனப் படையெடுப்பு! இவற்றை எல்லாம் திறமையாகக் கையாண்ட பண்டிட் நேரு உன்னதத் தேசீயச் சீலர்களுள் [World ‘s Great Statesmen] ஒருவராக உலக மேதைகளால் கருதப்படுகிறார்.

பண்டிட் நேரு ‘இந்தியா கண்டுபிடிப்பு ‘ [Discovery of India], ‘உலக வரலாற்றின் உயர் காட்சிகள் ‘ [Glimpses of World History] போன்ற உலக இலக்கிய நூல்களை ஆக்கியுள்ளார்.

பண்டிட் பரிமளம் வாழ்க்கையில் எவற்றைப் படைத்துள்ளார் ? எதைச் சாதித்துள்ளார் ? பாரிஸுக்குச் சென்ற போது அதன் அழகியக் கலைக் கூடங்களை, ஓவிய மாளிகைகளைப் பற்றி எதுவும் எழுதாது, ஐஃபெல் கோபுரத்தின் அருகில் அடக்க முடியாமல் தான் சிறுநீர் அடித்த பெருமையைச் சொல்லிப் ‘பரிமலம் ‘ என்னும் திண்ணை இலக்கியத்தை எழுதியவர்! பரிமலத்தின் பிரச்சனைகளைக் காட்டி விட்டு, அவற்றை எவ்விதம் தீர்ப்பது என்று சொல்லாமல் நட்ட நடுவே விட்டுவிட்டு நழுவி விட்டவர்! திருமணச் சந்தையில் பெரிய மீனைப் பிடிக்க வரதட்சணை தருவதில் எந்தத் தவறுமில்லை என்று வாதிட்ட பிற்போக்கு முற்போக்குவாதி பரிமளம், பாரதத் தேசீயச் சீலர் பண்டிட் நேருவைப் பற்றிக் குறை சொல்ல எந்தத் தகுதியும், அறிவும், அனுபவமும் அற்றவர்!

********************

jayabar@bmts.com

திண்ணையில் நேரு

  • மார்க்ஸியம் , முதலாளித்துவம், இந்தியாவின் எதிர்காலம்

    Series Navigation

  • சி. ஜெயபாரதன், கனடா

    சி. ஜெயபாரதன், கனடா