படித்தேனா நான் ?

This entry is part [part not set] of 23 in the series 20020602_Issue

சேவியர்.


0

ஒரு அடி ஆழத்துக்கு
கலப்பை பிடித்து உழ
அண்ணனால் ஆகும்,

இன்னும்
அப்பாவுக்கு
தூரத்து பேருந்தின்
தலையெழுத்தைப் படிக்க
கண்சுருக்க நேர்ந்ததில்லை.

அடுப்பில் ஏதோ
தீய்ந்து போகிறதென்று
கொல்லையில்
கொம்பு வெட்டி நிற்கும்
அம்மா மூக்கு
தப்பாமல் சொல்லும்.

பக்கத்து வீட்டு
பாம்படப் பாட்டி சொல்லும்
நல்லதங்காள் கதை
மனதில்
ஓர் திரைப்படமாய் விரியும்.

வெள்ளரி வயலின்
பிஞ்சுகளைப் பார்த்து
வியாதியும், வைத்தியமும்
தப்பாமல் சொல்வார்
பெரியப்பா.

விவசாய நிலங்களும்
பருவத்துக்கான உரங்களும்,
சுருதி சுத்தமாய்
பெரிசுகள் சொல்லும்.

எனக்கு,
இதில் எத்திறமையும் இல்லை.
இருந்தாலும்
அத்தனை உள்ளங்களும்
ஆசையாய் சொல்லும்,
ஊரில இவன் தான்
அதிகமா படிச்ச புள்ள.

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்