பசிபிக் தட்டுக்கடியில் அணைந்துவிட்ட ஒளிவிளக்குகள்

This entry is part [part not set] of 29 in the series 20091225_Issue

த.அரவிந்தன்


‘பூம்புகாரில் ஏற்பட்டிருப்பது சேற்று எரிமலை. நமக்குத்தான் இது புதிது. பல்வேறு நாடுகளில் இதுபோல் அடிக்கடி தோன்றியிருக்கிறது. 1911-ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான டிரினிடாட் அருகே உள்ள ஒரு கடற்கரையில் சேற்று எரிமலை தோன்றி, ஒரு குட்டித் தீவையே உருவாக்கியது. சில காலம் கழித்து தீவு மீண்டும் கரைந்து கடலாகவே மாறிவிட்டது. ஈரான் நாட்டுக்கு வடக்கே காஸ்பியன் கடல் ஓரமாக அமைந்த அஜர்பைஜான் நாட்டில் இதுபோன்று இயற்கையாகவே அமைந்த நூற்றுக்கணக்கான சேற்று எரிமலைகள் உள்ளன. இதனைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவதுடன், மருத்துவக் குணம் உள்ளவை என்று வெளிப்பட்ட சேற்றை எடுத்து பூசிக்கொள்ளவும் செய்கின்றனர். சேற்று எரிமலைகள் தோன்றுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. நிலத்தின் அடி ஆழத்தில் அழுத்தத்தில் எரிவாயு இருக்கும்போது, அதற்கு மேலாக உள்ள நீரும் களிமண்ணும் கரைந்து வெளியே பொங்குவதால் தோன்றுவது ஒன்று. எரிவாயு ஊற்று இருப்பதை அறிவதற்காக நிலத்தில் ஆழமாகத் துளையிட்ட இடங்களில் உருக்குக் குழாய்களை இறக்காமல் விடுதல் போன்ற காரணங்களால் தோன்றுவது இரண்டு. இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவாவில் ஓரிடத்தில் எரிவாயு ஊற்றைக் கண்டுபிடிப்பதற்காக சில ஆயிரம் அடிகள் துளையிட்டனர். அந்த இடத்திலிருந்து எதிர்பாராத விதமாக ஏராளமான சேறு வெளிப்பட்டு எட்டுக் கிராமங்கள் பாதிக்கப்பட்டன. சுமார் இருநூறு தொழிற்சாலைகள் சேற்றில் புதைந்து கூரைகள் மட்டுமே தெரிந்தன. தினமும் 50 ஆயிரம் கன மீட்டர் சேறு வெளிப்பட ஆரம்பித்தது. குழாய்க் கிணறு தோண்டுவதற்காக துளையிட்ட இடத்தில் குழாய்களைப் புதைக்காவிட்டால் சேறு வெளிப்படுவதைப் பார்த்திருக்கிறோம். அதைப்போலத்தான் இதுவும். பூம்புகாரில் ஏற்பட்டதற்கான காரணத்தை இனிமேல்தான் ஆராய வேண்டும்.’

சேற்று எரிமலையில் பூம்புகார் கடற்கரையையொட்டிய கிராமங்கள் புதைந்து கிடக்கின்றன. பறிகொடுத்தவர்களின் மரண ஓலங்களுக்கிடையில் கையில் கிடைத்த உடைமைகளையும், குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு அங்குமிங்கும் ஏகப்பட்டோர் பரிதவித்து ஓடிக்கொண்டிருக்
கிறார்கள். மலைபோல் குவிந்துகிடக்கும் அட்டக்கரி நிறச் சேற்றின் பயங்கரத்தைப் பார்க்கிறபோது மிரட்சியாக இருக்கிறது. அதன் வெறி இன்னும் அடங்காததாகத் தோன்றுகிறது. அதி முக்கிய செய்திகளை மட்டும் ஒளிபரப்பும் “இடைஞ்சலில்லாத செய்தி’ தொலைக்காட்சியில் இக்காட்சிகள் பின்னணியில் ஓடிக்கொண்டிருக்க, மண்ணியல் ஆய்வு அதிகாரி ஆல்கின் முதல் பத்தி விளக்கத்தை அளித்துக்கொண்டிருந்ததை தங்கள் கைத்தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், பதற்றத்தில் அவர் திணறித்திணறிச் சொன்னபோது சற்று கூடுதலாகவே பயந்து போயிருப்பார்கள். ஆனால், பேட்டி முடிந்து சட்டையில் சொருகியிருந்த ஒலிவாங்கியைக் கழற்றிக்கொடுத்துவிட்டு ஒளிபரப்பு நிலையத்திலிருந்து காரில் வேகமாக வீட்டிற்கு வந்து ரகசியக் கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைகிறவரை அவரது முகத்தை உற்றவர்களால்தான் அந்தப் பதற்றம் சேற்று எரிமலையால் ஏற்பட்டதில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆப்பிரிக்கப் பாறைத் தட்டுக்கு அடியில் ஓடிய கற்குழம்பில் நில மூழ்கிக் கப்பலில் பயணித்தவாறே உயர் சக்திவாய்ந்த கருவி மூலம் தொடர்புக்கு வந்த நாற்பது வயது நுண்மான், ஆல்கினைக் கசந்தமேனிக்குத் திட்டினார். முதலில் தானே தொடர்புகொண்டு, “மன்னித்து விடுங்கள்’ என்று தொடங்க வேண்டும் என்று வருகிற வழிகளில் யோசித்து வந்ததெல்லாம் மறந்துபோய், கோபத்தின் நியாயத்தை உணர்ந்தவராய் ஆல்கின் சமாளிக்க முயற்சித்தார். நுண்மான் ஆவேசப் பேச்சை வைத்தே கப்பல் பயணிக்கிற வேகத்தை அவர் மன உள்ளுணர்வுகள் யூகித்துக் கொண்டிருந்தன.

“அந்தக் கைத்தொலைக்காட்சி நிறுவனத்தோடு நாம் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின்படி அவர்கள் எப்போது அழைத்தாலும் பேட்டியளித்துத்தானே ஆகவேண்டும்.”

“இந்த இடைப்பட்ட நேரத்தில் எனக்கோ, நில மூழ்கிக் கப்பலுக்கோ ஏதாவது நேர்ந்திருந்தால்…. பால் வீதி பயணமா இது? ஒன்றும் ஆகாது என்று நினைப்பதற்கு… பூமியைத் துளைத்துக் கொண்டு பயணிக்கிறேன். கப்பல் கதவு திறந்துகொண்டு நான் வெளியில் விழுந்துவிட்டால் கிடைப்பேனா… பாறைத்தட்டின் அழுத்தத்தில் நசுங்கி உரு தெரியாமல் பிசுறுபிசுறாய்ப் போய், இரும்புக் குழம்பில் எரிந்து காணாமல் போயிருப்பேன். நம்முடைய கப்பலைப் போல விஹோலிஷியோனனால் ஆனதா என் உடம்பு? அழுத்தத்தைத் தாங்கிக் கொண்டு எதிலும் தீ பற்றி எரியாமல் போக..”

ஓயட்டும் என்பதுபோல சிறிது நேரம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு பிறகு கைத்தொலைக்காட்சியில் பேசுவதுபோன்ற பாவனையிலே ஆல்கின் விளக்கினார்.

“நில மூழ்கிக் கப்பல் என்ற நமது திட்டத்தை விஞ்ஞானிகள் சபையில் நாம் முதலில் வைத்தபோது நம்மைக் கேலி செய்யாதவர்களே கிடையாது. “அரசே, ஒரு நெம்புகோலையும், அதை அந்தரத்தில் ஊன்றிக்கொள்ள ஓர் இடத்தையும் கொடுங்கள். இந்தப் பூமிப் பந்தையே தூக்கி எறிந்து காட்டுகிறேன்’ என்று சொன்ன ஆர்க்கிமிடிஸின் பெரிய சறுக்கல்போல்தான் இந்தத் திட்டமும் என்று சிரித்தார்கள். பாறைகளைத் துளைத்துக்கொண்டு கப்பல் ஆழத்திற்குப் போகிறது என்றதுமே பூமியைத் துண்டாக்குகிற செயல்; பூமியை அழிக்கப் பார்க்கிறோம்; மண்ணியல் ஆய்வோடு நிற்கட்டும் நம் பணி என்றனர். இதயத்தில் அறுவை சிகிச்சை செய்வது என்பது இதயத்தைத் துண்டாக்குவது ஆகாது. எரிமலை குழம்புகளை அவிந்த எரிமலைகளாக மாற்றுவதுடன், பூமியின் மேற்புறத் தட்டுகள் மோதுகிற விளிம்புகளில் நிலநடுக்கங்கள் ஏற்படாமல் செய்யலாம். செயற்கைக் கோள்களை அனுப்புவதைப்போல ஒவ்வொரு நாடும் தனித்தனியாக முயற்சிக்கத் தொடங்கினால் ஆபத்தாகிவிடும். உலகம் முழுவதும் ஒருங்கிணைந்து ஐந்தாறு கப்பலை அனுப்பி ஆய்வு செய்வோமானால் எண்ணெய் வளம், தொல்பொருள் ஆராய்ச்சி உள்பட எல்லாவற்றையும் கண்டறியலாம் என்று விளக்கினோம். அறிவு மங்கிகளின் பகல்கனவு என்று நமது திட்டத்தை நிராகரித்துவிட்டனர். இன்று நாம் எந்த விஞ்ஞானிகளுடைய ஒத்துழைப்புமின்றி சாதித்திருக்கிறோம் என்றால், அதற்குப் பலரின் மறைமுக உதவி நமக்குக் கைக்கொடுத்திருக்கிறது. அதுவும் நாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே உதவிபுரிந்தவர்கள்தான் எல்லோரும். அந்த வகையில் உதவியர்களுள் ஒருவர்தான் நான் பேட்டியளித்த கைத்தொலைக்காட்சி நிறுவனரும். பாறைகளில் துளைத்துப் போகிற தோண்டுக்கருவியைப் பொருத்துவதற்கு நாம் திண்டாடியபோது அவருடைய பெரும் பணம் உதவியிருக்கிறது. இதைக் கருதியே பேட்டிக் கொடுத்தேன். இன்னும் நம்முடைய கப்பல் இயங்குதலை நம்முள்தான் வைத்திருக்கிறோமே ஒழிய, உலகம் அங்கீகரிக்கிற வகையில் நாம் நிரூபணம் செய்துகாட்டவில்லை. நம்மை அங்கீகரிக்க வேண்டியவர்களாக ஆதிக்க நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மை அங்கீகரிக்க மாட்டார்கள் என்பதை நாம் தெளிவாக அறிவோம். அவர்களுடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஒருவகையில் இவர்கள் துணையெல்லாம் நமக்குப் பெரிதும் உதவும். அதிலும் நாம் எரிகிற அடுப்பினுடைய தணலைக் குறைப்பதுபோல எரிமலையை
அவிந்த எரிமலையாக மாற்றுவதில்தான் இப்போது முழுதாய் வெற்றி பெற்றிருக்கிறோம். நிலநடுக்கத் தடுப்புகளில் இப்போதுதான் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். ”

புரியாதவருக்குச் சொல்வதுபோல விளக்கிக் கொண்டிருக்கிறோமே என்று ஆல்கின் உணர்ந்தவுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

“நான் இல்லை என்கிறேனா? அவசரமாய் பேட்டிக் கொடுக்கிறளவுக்கு அப்படி என்ன அதி
முக்கிய செய்தி?”

“பூம்புகார் கடற்கரையில் சேற்று எரிமலை உருவாகி இருக்கிறது.”

“பேட்டியில் நீ என்ன சொன்னாய்?”

“நமக்குத்தான் இது புதிது என்றும், இயற்கையாகவே ஏற்படுகிற சேற்று எரிமலைகளும் உண்டு, எரிபொருள் ஆராய்ச்சி போன்றவையால் ஏற்படுகிற சேற்று எரிமலைகளும் உண்டு என்று சொன்னேன்.”

“என்னோடு ஏன் நீ ஊன்றிப்போக மாட்டேன் என்கிறாய்? செயற்கையாய் ஏற்படக்கூடிய காரணங்களை நீ விளக்கியது நாம் மாட்டிக் கொள்வதற்கு ஒரு துருப்பாக அமைந்துவிடாதா? அந்தப் பகுதியில் சேற்று எரிமலை உருவாவதற்கு நாம்தான் காரணமாக இருக்க வேண்டும் என்று நீ உணரவில்லையா? நில மூழ்கிக் கப்பலை நாம் பயன்படுத்தத் தொடங்கிய புதிதில் பாறைகளைத் துளைத்து கரும்பாறைக் குழம்புகளில் ஊடுருவி போவதில் மட்டுமே கவனம் செலுத்தியிருந்தோம். மண் சரிவு, சேற்று எரிமலை பற்றியெல்லாம் அப்போது சிந்தித்துப் பார்க்கவே இல்லை. இந்த முறைதானே மண் அடைப்பான் கருவியைப் பொருத்தியிருக்கிறோம். பூம்புகார் கடற்கரையில் இருந்து பூமிக்குள் செல்லுகையில் பாறைத்தட்டு தூரம் குறைவாக இருப்பதுடன் புவிஈர்ப்புவிசை சாதகமாக இருப்பதால்தான் தானே அந்தத் இடத்தைத் தேர்ந்தெடுத்தோம். அடைக்காமல் பல முறை சென்று வந்ததால் சேற்று எரிமலை ஏற்பட்டிருக்கலாம் அல்லவா?”

“இருக்கலாம். அதைப்பற்றி நான் யோசிக்கவில்லை. ஆனால் நாம் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். நாம்தான் செயற்கோள் உள்பட எவற்றாலும் கண்காணிக்க முடியாத, புகைப்படம் எடுக்க முடியாத உயர் தொழில் நுட்பத்தைப் பெற்றிருக்கிறோமே? பின் எப்படி நம்முடைய கப்பல் பூமியைத் துளைத்துப் போனதைக் கண்டுபிடிக்க முடியும்? அப்படி ஒரு வாய்ப்பு இருந்திருந்தால் இந்தக் கப்பலை நாம் கட்டமைத்து இயக்குவதற்கு முன்பே பிடிபட்டிருப்போமே? சேற்று எரிமலை பற்றி நான் தெளிவாக விளக்காவிட்டாலும்
வேறு யாராவது விளக்கியிருப்பார்கள். அப்படி விளக்கியது ஒருவகையில் நமக்கு நல்லதுதான். தரங்கம்பாடியை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் எரிவாயு இருப்பதைக் கண்டறிய சோதனை நடந்தது என்பதெல்லாம் உண்மைதானே… எல்லோரும் அதையே காரணம் காட்டிப் பேசுவதற்கு அது வழிவகுத்துவிடும் அல்லவா…”

“என்னதான் நீ சமாளித்துப் பேசினாலும், உன் மேல் இருக்கிற கோபம் மட்டும் எனக்குக் குறையவே இல்லை. வழக்கத்துக்கு மாறான வேகத்துடன் கப்பலை இயக்கிக் கொண்டிருக்கிறேன். பசிபிக் தட்டு தொடக்க அடியில் வந்துகொண்டிருந்தபோது சக்திமிக்க ஒளிவிளக்குகள் திடீரென அணைந்துவிட்டன. பாறையிருட்டு என்னை மிரட்டத் தொடங்கிவிட்டது. மேற்புறப்பாறைகள் என்னை அழுத்துவது போன்ற பிரமை திடீரென ஏற்பட்டு நடுங்கிவிட்டேன்.”

“தெரிகிறது. உங்களுடைய இதயத்துடிப்பு அதிகரித்திருக்கிற பதிவைக் கட்டுப்பாட்டுத் திரையில் கண்டவுடனே தெரிந்துகொண்டுவிட்டேன். ஏதோ நடந்திருக்கிறது என்று. அவசரத் தேவைக்கான விளக்கை இங்கேயே வைத்துவிட்டுப் போய்விட்டீர்களே..”

“இப்போது சொல். அதை நான் சரி செய்வதற்கு பட்டபாடு இருக்கிறதே… உள்புற இணைப்புகளாகவே இருந்ததால் தப்பித்துக் கொண்டேன். வெளிப்புற இணைப்புகளாக இருந்திருந்தால் என் கதி? முடிவு எடுக்க முடியாத கட்டத்தில் உதவுவதற்கும், உன்னுடைய பேச்சு பெருந்துணையாய் இருக்கும் என்பதற்காகத்தானே உன்னை இந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்.”

“மன்னியுங்கள்… மன்னியுங்கள். இனிமேல் போகமாட்டேன். பசிபிக் தட்டுகளில் குறை புவிஈர்ப்புவிசை உடைய கிழக்குப் பகுதியில் மொத்தம் நூற்று எண்பத்திரண்டு நெருப்பைக் கக்கும் எரிமலைகள் உள்ளன. இதில் அறுபத்தி நான்கை ஏற்கெனவே அவிந்த எரிமலையாக மாற்றிவிட்டோம். மிச்சம் உள்ள நூற்று பதினெட்டின் நிலைமையை ஆராய்ந்தீர்களா?”

“அந்த இடத்தைக் கடந்துவந்துவிட்டேன். எண்பது அவிந்துவிட்டது. மீதமுள்ளவற்றில் ஹலூட்ரிஹானை அதிகம் பரவிவிட்டிருக்கிறேன் . இனி அங்கு எரிமலை தோன்றுவதற்கு வழியே இல்லை. பசிபிக் தட்டு கடைவிளிம்பு பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். புவி ஈர்ப்புவிசை மாற்றம் காரணமாக நான் சுற்றிச் சுற்றிச் செல்லவேண்டியிருக்கிறது. சுற்றி வருகிற வழியில் வடமேற்கு ஆப்பிரிக்கத் தட்டு அடியில் பயணித்தபோது வித்தியாசமான பாறை ஒன்றைக் கண்டேன். அந்தப் பாறையை மேலெழுந்தவாறு வெகுதூரம் துளைத்துக் கொண்டுபோனபோது ஓர் அதிசயம். மாபெரும் கட்டடங்களுடன் கூடிய புதை நகரம்.”

“ஆச்சரியம்… ஆச்சரியம்… அதற்குள் நுழைந்து போனீர்களா?”

“குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் போகவில்லை. பாறைகளைத் துளைக்கிற நம்முடைய கப்பலை அதற்குள் செலுத்துகிறபோது அந்த நகரமே துகள்துகளாகப் போய்விடுகிறது. அதனைத் தோண்டி ஆய்வு மேற்கொண்டோமானால், வரலாற்றைப் புரட்டிப் போடுகிற இடமாக அது அமையும் என்று கருதுகிறேன். குறுக்கு வெட்டாகப் போனபோது ஓரிடத்தில் புதைந்திருந்தவற்றில் கலைப் பொருள் ஒன்றைக் கண்டேன். அது ஓர் அழகிய பெண் சிலை. அசந்து போய்விட்டேன். ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு கதவைத் திறந்துகொண்டு இறங்கி அந்தச் சிலையை எடுத்துவரவேண்டும் என்கிற உணர்ச்சி நிலைக்கு வந்துவிட்டேன். துணை கிடைத்த சந்தோஷமாக இருந்தது. கடைசியில் சுதாரித்து உன்னிடம் பதிவு செய்ய அழைத்தால் நீ இல்லை என்றால் நான் துடிக்காமல் என்ன செய்வேன்?”

“நீங்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு என்னால் இங்கு உட்காரமுடியவில்லை. எங்காவது ஓடிப்போய்விட்டு வந்து உட்கார்ந்தால்தான் சரியாக இருக்கும் போலிருக்கிறது. தொல்பொருள்களை மேலே எடுத்து வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்
கிறோமே ஒழிய, அதில் நாம் இன்னும் முனைப்பு காட்டவில்லை.”

“அந்தப் புதை நகரத்தையும், அழகிய கலைப்பொருளையும் பார்த்தபிறகு நானும் அதைப் பற்றித் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். அந்த நகரைவிட்டு என்னால் நகரவே முடியவில்லை. இயக்கவிசை கதிரை அந்த இடத்தில் உற்பத்திச் செய்துகொள்ள முடியாத நிலையைக் கருத்தில்
கொண்டு விரைந்துவந்துவிட்டேன். சிறிது நேரம் அமைதியாக இரு. பசிபிக் தட்டு விளிம்புக்கு வந்துவிட்டேன். ஹலூட்ரிஹானையும், துமஹோ மொஹால்ட்ரஹையும் இங்கு கலந்து பரவிட்டு வந்தோமே அதில் ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா என்று பார்க்கிறேன்.”

“சீக்கிரம் பாருங்கள்…. என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. இதில் நாம் வெற்றிபெற்றால் முழுமையாக வெற்றிப்பெற்றவர்களாக ஆவோம். நிலநடுக்கத்தைத் தடுக்கிற ஆற்றலையும் நாம் பெற்றவர்களாக ஆகிவிடுவோம். சீக்கிரம்…”

“பொறு… பொறு… எந்த முன்னேற்றமும் தெரியவில்லை.”

“அய்யோ… அவ்வளவு உழைப்பும் வீணாய்ப் போய்விட்டதா?”

“இல்லை…. இல்லை… என்னால் நம்பவே முடியவில்லை… நம்பவே முடியவில்லை…. ஆல்கின் சாதித்துவிட்டோம்… சாதித்துவிட்டோம்…”

“சொல்லுங்கள்… சொல்லுங்கள்… என்ன ஆயிற்று சீக்கிரம் சொல்லுங்கள். அதிர்ச்சியில் செத்துவிடுவேன் போலிருக்கிறது.”

“ஹலூட்ரிஹான் கலவை வேலை செய்திருக்கிறது ஆல்கின். நிலநடுக்கத்தைத் தடுக்கும் ஆற்றலையும் பெற்றுவிட்டோம். இந்தப் பகுதியில் இனி நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை. இந்தப் பகுதியில் இல்லை. இனி எந்தப் பகுதியிலும் நிலநடுக்கம் என்பதே இருக்காது. நாம் முறியடித்துவிடுவோம். சந்தோஷத்தில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்த இடத்தில் நாமே செயற்கையாக நிலநடுக்கத்தை ஏற்படுத்தித் தடுத்துப் பார்க்கலாமா என்று தோன்றுகிறது.”

“சந்தோஷம்… சந்தோஷம்… இருவர் பயணிக்கிற கப்பலாகச் செய்து நானும் உங்களுடன் வந்திருக்கக்கூடாதா என்று இருக்கிறது நுண்மான்.”

“சிறிது நேரம் அமைதியாக இரு. மேற்புற தோண்டுக்கருவி செயலிழந்துவிட்டது.”

“கவனமாக மாற்றுங்கள். தவறிழைத்துவிடப் போகிறீர்கள். மையத் தோண்டுக்கருவியும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்…”

” இரு… இரு… மாற்றிவிட்டேன். மையத் தோண்டுக்கருவி சரியாகத்தான் இருக்கிறது. இப்போது சொல். நில மூழ்கிக் கப்பலின் நுட்பங்களை வெளிப்படையாக உலகிற்கு அறிமுகப்படுத்துகிறபோது, நம்மைப் பார்த்து சிரித்தவர்கள் முகங்கள் எத்தனை கோணலாய்ப் போகும்?”

“எண்ணமுடியாதளவுக்குப் போகலாம். இருப்பினும், இப்போது நாம் அவசரப்படத் தேவையில்லை.”

“ஏன்? நாம்தான் முழுதாய் வெற்றிப்பெற்றுவிட்டோமே. இனிமேல் என்ன?”

“வெற்றிபெற்றுவிட்டோம் என்பது உண்மைதான். நம்மை அங்கீகரிக்க வேண்டியவர்களாக ஆதிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் நாம் சாதித்ததை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பூமியைப் பிளக்கிற குற்றவாளிகள் என்பார்கள். கண்டங்கள் வளர்வது; பருவநிலை
மாற்றம் உட்பட பூமியில் ஏற்படுகிற அனைத்து இயற்கை கோளாறுகளுக்கும் நாம்தான் காரணம் என்று குற்றம்சாட்டி நம்மை அழிக்கப் பார்ப்பார்கள். நம் நாட்டினரும் அவர்கள் சொல்வதைத்தான் வேதியியல் வாக்காக எடுத்துக் கொள்வார்கள். அதனால் அவசரப்பட வேண்டாம்.”

“இல்லை … இல்லை.. இனிமேல் என்னால் பொறுமையாக இருக்க முடியாது. உலகிற்குக் கண்டிப்பாக அறிமுகப்படுத்துவேன். தனிப்பட்ட முறையில் தொடர்ந்து நம்மால் இப்படி இயங்கிக்கொண்டிருக்க முடியாது. அரசு உதவி நமக்குப் பெரியளவில் தேவைப்படும்.”

“நீங்கள் சொல்வது சரிதான். இருந்தாலும் இது சரியான தருணம் இல்லை. ஆதிக்க நாட்டை நம் நாடு எல்லாம் வகையிலும் சார்ந்திருக்கிறது. நம்முடைய கண்டுபிடிப்பை அவர்களுடைய அதிகாரத்தால் அழித்து விடுவார்கள்.”

“இல்லை. அறிவித்துவிடுவதுதான் சரி.”

“ஆதிக்க நாடு நம்மை அழிப்பதற்கான முயற்சிகளில் இறங்கும்.”

“ஆதிக்க நாடு… ஆதிக்க நாடு… நம்மை அழிக்கும். நம்மை அழிக்கும்… ஆதிக்க நாட்டை நான் அழிக்கப் போகிறேன்.”

” வேண்டாம்… வேண்டாம்… அந்த முடிவை எடுக்காதீர்கள். நிலநடுக்கத்திலிருந்து, எரிமலைக் குழம்பு பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கவேண்டும் என்கிற நல்ல நோக்கத்திற்காகத்தான் இந்தக் கப்பலையே உருவாக்கியிருக்கிறோம். இப்போது நாமே இந்தக் கப்பலைக் கொண்டு ஒரு நாட்டை அழிக்கிற செயலில் ஈடுபடுவோமானால் நம் நோக்கமே தவறாகிவிடும். ஒரு மணிநேரத்தில் அந்த நாட்டையே நம் கப்பலால் அழித்துவிட முடியும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் யோசித்துப் பாருங்கள். இவ்வளவு நாள் நாம் பட்ட சிரமம் வீணாகிவிடும். ”

“எனக்கு ஒன்றும் தவறாகத் தெரியவில்லை. ஆதிக்க நாடு அழிவதைத்தான் மற்ற எல்லா நாடுகளும் மறைமுகமாக விரும்புகின்றன. அந்த நாடு அழிந்தால்தான் உலகம் அமைதியாக இருக்கும்.”

“அந்த நாடு அழிந்த பிறகு மற்றொரு ஆதிக்க நாடு உருவாகாது என்பது என்ன நிச்சயம்? நம்முடைய கப்பலைக் கொண்டு அந்த நாட்டை அழித்துவிட்டீர்கள் என்றால் நம்முடைய கப்பலை பற்றி எல்லா நாடுகளும் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும். அப்படித் தெரிந்து கொள்கிறபோது நாமே அதனை தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்திய காரணத்தால் பின் கட்டமைக்கிற நில மூழ்கிக் கப்பல்கள் எல்லாம் அவர்களுடைய இராணுவத் தளவாடங்களில் ஒன்றாகத்தான் பயன்படுத்தப்படுமே தவிர, நிலநடுக்கத்தைத் தடுக்கிற கப்பலாக உருவாகாது என்பதைத் தயவு செய்து
புரிந்துகொள்ளுங்கள். இப்போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். பூமியின் மேற்பரப்புக்கு வாருங்கள். பேசி முடிவு செய்வோம்.”

“இந்த விளக்கங்களை விட்டுவிட்டு ஆதிக்க நாட்டு கட்டடங்கள் பொலபொலத்து விழுவதற்கான காரணத்தை ஏதாவதொரு கைத்தொலைக்காட்சியில் விளக்குவதற்குத் தயாராகிக் கொள். கப்பலை ஆதிக்க நாட்டுப் பக்கம் இயக்கிக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டரை மணி நேரத்தில்
தூள்… தூள்..”

“சொல்வதைக் கேளுங்கள்.. மேற்பரப்புக்கு வாருங்கள்… நம்முடைய நோக்கம் வீணாகிவிடும்…. வாருங்கள்.”

” பேட்டி கொடுக்கத் தயாராகு… ”

நன்றி: வார்த்தை

Series Navigation

த.அரவிந்தன்

த.அரவிந்தன்