நேற்றின் மாடல் குல மாணிக்கங்கள்

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

எஸ். இராமச்சந்திரன்


இன்றைய நாகரீக உலகில் ஆடை அணிகலன் தயாரிப்போர், ஃபாஷன்ஷோ என்ற பெயரில் ‘துணியல்ல… துணிவே துணை ‘ என உணர்த்தும் ஆரணங்குகளைக் காட்சிப் பொருளாக்குகின்றனர். இந்த பேஷன் ஷோக்களுக்கு ஒரு புறம் கடும் எதிர்ப்பு. மறுபுறமோ இந்த எதிர்ப்புகளை ஏப்பமிட்டு கோடிக்கணக்கான ரூபாய் புழங்கும் தொழிலாக இது விளங்குகிறது.

பேஷன் ஷோக்கள், மாடலிங் ஆகியவை ஏதோ இந்த 21ஆம் நூற்றாண்டில் முளைத்த நவ நாகரீகங்கள் என்று நினைக்க வேண்டாம். 16-17ஆம் நூற்றாண்டிலேயே பேஷன் பரேடுகளின் ஆதி வடிவங்களும், மாடலிங்கும் உருவாகிவிட்டன என்றால் இன்றைய இளைய தலைமுறைக்கு வியப்பாக இருக்கும். உடை, உடை சார்ந்த நாகரீகம், மாடலிங்கின் தோற்றம் போன்றவற்றின் சரித்திரத் தடயங்களைத் தேடிப் போகும்போது எத்தனையோ வியப்புக்குரிய செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. பருத்தி, நூற்புத் தொழில், நூல், ஆடை, ஆடை விற்பனைக்கான விளம்பரம் என அத்தனையுடனும் பெண்களுக்கு உள்ள தொடர்பு, அதன் பின்னணியாக விளங்கும் சமூகவியல் தகவல்கள் ஆகியவை, பெண்ணின் வரலாற்றை எழுதுவோருக்கு மிகப் பயன்படும். மாடல்களும் உடைகளும் இன்று இத்தனை சர்ச்சைகளுக்கு உள்ளாகிறது. முதன் முதலில் வந்த விளம்பர மாடல்கள் யார் தெரியுமா ? 16-17ஆம் நூற்றாண்டுகளிலேயே இந்த மாடல்கள் வந்துவிட்டார்கள் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். ஆம். கோயில்களோடு தமது வாழ்வைப் பிணைத்திருந்த தேவதாசியருள் ஒரு பகுதியினர் அன்று விளம்பர மாடல்களாக இருந்தனர். அவர்கள் விளம்பர மாடல்களாகப் பரிணமித்த வரலாற்றுப் பின்னணியை அறிந்து கொள்வதும் மிக சுவாரஸ்யமானது! இப்படிப்பட்ட பின்னணியை அறியும் முன், தேவதாசிகளின் தோற்றம் எப்படி நிகழ்ந்தது என்ற பின்னணியைச் சற்று சுருக்கமாகப் பார்ப்போம். அதைத் தொடர்ந்து இவர்கள் மாடல் குல மாணிக்கங்களான வரலாற்றையும் பார்க்கலாம்.

வரலாற்றில் பெண்கள் நிலை குறித்து ஆய்வு செய்யும் அறிஞர்கள், பெண்களே சமூகத் தலைமைப் பதவியை வகித்த காலகட்டம் ஒன்று இருந்ததென்று குறிப்பிடுகின்றனர். நீர்ப்பாசனம் சார்ந்த விவசாய முயற்சிகள் தொடங்கும் முன்பு வேட்டையும், உணவு சேகரிப்புமே வாழ்க்கைத் தேட்டமாக இருந்த காலகட்டத்தில் மக்கள் ‘குழுச் சமூகங்களாக ‘ இயங்கினர். குடும்பம் என்ற அமைப்பு தோன்றுவதற்கு முற்பட்ட அந்தக் காலகட்டத்தில் கணம் எனப்பட்ட ரத்த உறவுக் குழுக்களாகச் சமூகம் இயங்கி வந்தது.

கணத்தின் தலைவியாக இருந்த பெண் கணிகா (கணிகை) எனப்பட்டாள். அவள் பாடலிலும் ஆடலிலும் வல்லவள். பாடல் – ஆடல் மூலம் இயற்கைச் சக்திகளை வழிபட்ட பழங்குடித் தலைவியாக அவள் இருந்ததால் அவளே கணத்தின் பூசாரியாகவும் செயல்பட்டாள். சிலப்பதிகாரம் வேட்டுவ வரியில் இத்தகைய பூசாரி, ‘சாலினி ‘ என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறாள். இந்தக் கணிகைக்கு – கணத் தலைவிக்கு – நிரந்தரமான வாழ்க்கைத் துணைவன் என்று யாரும் இருப்பதில்லை. இதே காலகட்டத்தில் ஆடவன் கணத் தலைமைப் பதவியை வகித்த சில குழுச் சமூகங்களும் இருக்கவே செய்தன. அத்தகைய கணங்களின் தலைவன் ‘கணப ‘ (கணவன்) எனப்பட்டான். இவையெல்லாம் உலோகம் கண்டறியப்படுவதற்கு முற்பட்ட கற்காலப் பண்பாட்டு நிலைகளாகும்.

செம்பு, இரும்பு முதலிய உலோகங்கள் கண்டறியப்பட்ட பின்னர் பரிணாம வளர்ச்சியடைந்த சமூக நிலையில் நதி நீர்ப்பாசன வசதியுடன் நிலத்தைப் பயன்படுத்தி ஏர்க்கலப்பை கொண்டு உழுது விவசாயம் செய்யும் வாழ்க்கை முறை உருவாயிற்று. பெண்ணின் கணத்தலைமை பறிக்கப்பட்டு, குடும்பம் என்ற அடிப்படை அலகு உருவான காலகட்டம் இதுவே. இல்லத்தை – குடும்பத்தைக் கட்டியமைப்பவன் (house band) என்று பொருள்படும் (husband) என்ற சொல்லிலிருந்தே விவசாயத்தைக் குறிக்கும் Husbandry என்ற சொல் உருவாயிற்று. தமிழிலும் குடியானவர், குடும்பர் என்ற சொற்கள் விவசாயம் தொடர்பான வழக்காறுகளில் பயன்படுத்தப்படுவது கவனிக்கத்தக்கது.

இச்சமூக அமைப்பில், ஓர் ஆடவனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட துணைவியர் இருக்கலாம். மனையை – இல்லத்தைக் கவனிப்பதே அவர்களின் பணியாக இருந்ததால் மனைவி, இல்லாள் என்ற பெயர்களால் அவர்கள் அழைக்கப்பட்டனர். குழு வாழ்க்கை முறையில் ஆடவனுக்குச் சாதகமாக இருந்த சில அம்சங்கள் இக்கால கட்டத்திலும் நீடித்தமையால் ‘குழுத்தலைவன் ‘ எனப் பொருள்பட்ட ‘கணவன் ‘ என்ற பெயர் குடும்பத் தலைவனுக்கு உரியதாயிற்று. கணத் தலைமைப் பதவியைப் பெண்டிர் இழந்து போக நேரிட்டதால், கணிகை என்ற பெயரின் பொருள், முற்றிலும் மாற்றமடைந்தது. ஆடவரின் தலைமையில் அமைந்த குழுச் சமூகத்தின் – அல்லது குழுச் சமூகத் தலைமைப் பதவியைத் தக்க வைத்துக் கொண்ட ஆடவர்களின் போகத்துக்கு உரியவள் என்ற பொருளும் ஆடல் – பாடலில் வல்லவள் என்ற பொருளும் இச் சொல்லுக்கு உரிய உண்மைப் பொருள்களாகக் கருதப்படலாயின.

சங்க காலத்தின் சற்றுப் பிற்பட்ட நிலையைச் சேர்ந்த பட்டினப்பாலை (வரி 246), மதுரைக் காஞ்சி (வரி 583), மற்றும் சங்கம் மருவிய காலத்தை – கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த மணிமேகலை (18:108-9) ஆகிய நூல்களில் ‘கொண்டி மகளிர் ‘ என்ற பெயரில் குறிப்பிடப்படுவோர் ஆடல்-பாடலில் வல்ல கணிகையராகத் தெரிகிறது. இவர்கள் போர்களின் போது மாற்றரசர் நாடுகளிலிருந்து கைப்பற்றிக் கொண்டு வரப்பட்ட ஆடல் மகளிர் ஆவர். இவர்கள் கோயில்களில் அல்லது அம்பலம் எனப்பட்ட வழிபாட்டிடங்களில் நடனமாடினர். இவர்களின் பூசாரிப் பதவி நீடிக்கவில்லை. நடனம் என்பது வழிபாட்டின் ஓர் அங்கமாக மட்டும் நீடித்தது.

மாணிக்கத்தாள் மானியங்கள்

கி.பி. 6-7 ஆம் நூற்றாண்டுகளில் பல்லவ அரசர்கள் தொடங்கி வைத்த கோயிற் கட்டுமானப் பணிகள் 9ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தஞ்சைச் சோழர் ஆட்சி தொடங்கிய பின்னர் முழு வீச்சில் விரிவடைந்தன. கோயில்களின் பிரும்மாண்டமான வடிவத்திற்கேற்ப அவற்றில் பணிபுரியும் ஆடல் மகளிரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இவர்கள் ‘தேவரடியார் ‘ என்று அழைக்கப்படலாயினர். இவர்கள் மணம் புரியாமல் வாழ்க்கை நடத்தியதால் நித்ய பிரம்மச்சாரிணி என்ற பொருளில் ‘மாணி ‘ என்ற அடைமொழியுடன் குறிப்பிடப்பட்டனர்.

‘மாண் ‘ என்பது பூசைப் பணியில் பூசாரிக்கு உதவிபுரியும் பரிசாரகர் பொறுப்பைக் குறிக்கும் (கல்வெட்டு வழக்கு) – ‘மாணிக்கம் ‘ என்பது பூசைப் பணியின் ஓர் அங்கமாகக் கும்பஹாரத்தி காண்பிக்கும் பணிபுரியும் தேவரடியார்க்கே உரிய பட்டமாகும். கி.பி. 1145ஆம் ஆண்டைச் சேர்ந்த (புதுக்கோட்டை சமஸ்தானக் கல்வெட்டுகள் எண் 20) ஆடலுக்கு முன் நிகழும் திரு ஆலத்தியின் போது மாணிக்கத்தின் பின்னால் வழிபடுவோர் நிற்க வேண்டும் என்று ஆணை – இம்மரபு திருவாரூர்க் கோயிலில் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பின்பற்றப்பட்டது. முழுமையான தீபாராதனையும் தேவதாசியரால் நிகழ்த்தப்பட்டது. (பக்கம் 168, அடிக்குறிப்பு 94, Nitya Sumangali – Devadasi Tradition in South India – Saskia C. Kersenboom, Motilal Banarasidas Publications Limited, New Delhi, 2002).

பெருநிலக்கிழார்களின் வீடுகளில் முக்கியமான நிகழ்வுகளின் போது அவர்களுக்கு திருஷ்டி கழிக்கின்ற கும்ப ஆலத்தி சடங்கினைச் செய்கின்ற மாணிக்கங்கள் இருந்தனர் – புகழ்பெற்ற வீணை தனம்மாள் முதலியார் ஒருவர் வீட்டில் இத்தகைய மாணிக்கமாக இருந்தார் என்று தெரியவருகிறது. (பக்கம் 85 அடிக்குறிப்பு 306, மேற்கூறிய நூல்.) சான்றோர் சமூகத்தவர்க்கும் கும்ப ஆலத்தி எடுத்து திருஷ்டி கழிக்கின்ற ‘இலங்காபுரி மாணிக்கத்தாள் ‘ என்ற பெயரில் தேவதாசியர் இருந்தனர் என்பது ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைச் சான்றோர் மடம் செப்பேட்டால் (17ஆம் நூற்றாண்டு) தெரியவருகிறது. ( ‘இலங்காபுரி மாணிக்கத்தாள் நரலங்கராயனுக்கு ஆலத்துக்குக் கால் காசும் ‘ – அவல்பூந்துறைச் செப்பேடு, இக் கட்டுரையின் ஆசிரியர் எழுதி 2004-ல் வெளிவந்த ‘வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும் புத்தகத்தில் பக்கம் 106)

மாணிப் பருவத்தை – மாணவப் பருவத்தை – சேர்ந்த அனைத்துக் கலைகளையும் கற்றறிந்த ஒருவருக்கு ‘சோடச கலாபூர்ண ‘ (பதினாறு கலைகளும் நிரம்பிய பூர்ண சந்திரனுக்குச் சமமானவர்) என்று பட்டம் சூட்டுவது மரபு. இந்த அடிப்படையில் கலைவாணிகளாகக் கருதப்பட்ட தேவரடியார் ‘எண்ணெண் கலையோர் ‘ எனப்பட்டனர். கணிகையர், எண்ணெண் கலையோர் எனக் குறிப்பிடப்படுவதன் பொருள், அறுபத்து நான்கு காமக் கலைகளையும் அறிந்தோர் என்பதே. மாணிப் பருவத்தைக் குறிக்கும் அடைமொழிகளான மாணிக்கம், மாணிக்கத்தாள் என்று பட்டம் வழங்கியும் கெளரவிக்கப்பட்டனர். அரசர்களால் இவ்வாறு சிறப்பிக்கப்பட்ட தேவரடியாரைத் தவிர, ஐந்நூற்றுவர் எனப்பட்ட வணிகக் குழுவினரின் நிர்வாகத்திலிருந்த கோயில்களில் ‘ஐந்நூற்றுவ மாணிக்கம் ‘ என்றும் ‘சித்திரமேழிப் பெரிய நாட்டார் ‘ மற்றும் ‘நாற்பத்தெண்ணாயிரவர் ‘ என்றும் பெயர் பெற்றிருந்த வேளாளர் சமூகத்தவரின் நிர்வாகத்திலிருந்த கோயில்களில், சித்திரமேழி மாணிக்கம் என்றும் நாற்பத்தெண்ணாயிர மாணிக்கம் என்றும் பட்டப் பெயர்கள் கொண்ட தேவரடியார் (ஆடல் மகளிர்) இருந்தனர்.

கி.பி. 1208ஆம் ஆண்டைச் சேர்ந்த, மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டொன்றில் (புதுக்கோட்டை சமஸ்தானக் கல்வெட்டுகள் – எண் 162) ஏழு நாள் விழாவிலும் ஒவ்வொரு நாளும் திருப்பாட்டடைவு எனப்படும் தேவாரப் பாடல் ஓதும்போது திருவாலத்தட்டு காண்பித்தல், விளக்குத் தட்டு ஏந்துதல், மெய்காட்டடைவு, திருச்சூலம் ஏந்துதல் ஆகியவற்றிற்கு இந்த இந்த மாணிக்கம் பொறுப்பாவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது: திருவம்பலப் பிரியாதியான சத்ரு கால மாணிக்கம், அம்மையாழ்வியான அற்புதக் கூத்த மாணிக்கம், நாச்சியாழ்வியான வில்லவரய மாணிக்கம், கணவதியான குலோத்துங்க சோழ மாணிக்கம், பொல்லாத பிள்ளையான திருஞான சம்மந்த மாணிக்கம், வள்ளியான ராஜகம்பீர மாணிக்கம், திருச்சிற்றம்பல மாணிக்கம், அம்மையாழ்வியான திருவெண்ணாவல் மாணிக்கம், திருக்களிற்றுப்படி மாணிக்கம், கூத்தாடு நாச்சியாரான திருநடம்புரிந்த மாணிக்கம்.

கி.பி.14ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தான்களின் படையெடுப்பாலும் நிர்வாகத் தலையீடுகளாலும் இந்தியச் சமூக அமைப்பில் பெரும் மாற்றங்கள் நேர்ந்தன. வட இந்தியாவைப் பொறுத்தவரை கோயில் நடன மரபு முற்றிலும் நின்று போயிற்று. ஆடல்கலை என்பதே அரண்மனையிலும், அந்தப்புரங்களிலும் நிகழ்த்தும் கலையாயிற்று.

‘கதக் ‘ நடன மரபு இவ்வாறு உருவானதே – உருமாற்றம் அடைந்ததே – எனக் கலை வரலாற்று அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை 16ஆம் நூற்றாண்டு வரை விஜயநகர அரசு இவ்வீழ்ச்சியை ஓரளவு தடுத்து நிறுத்தியது. மராட்டிய வீரன் சிவாஜி, கி.பி.1677ஆம் ஆண்டு வேலூர்க் கோட்டையை கோல்கொண்டா சுல்தானின் ஆதிக்கத்திலிருந்து மீட்டபோது, சுல்தான் ஆட்சியினால் பறிக்கப்பட்டிருந்த மாணிக்கத்தாள் மானியம் ஒன்றுக்குப் புத்துயிரூட்டியதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு உண்டு.

மாணிக்கத்திலிருந்து Mannequin வரை

கி.பி. 13ஆம் நூற்றாண்டளவிலேயே வணிகர், விவசாயிகளின் அமைப்புகளால் நிர்வகிக்கப்பட்ட கோயில்களில் ஆடலரசிகளாக இருந்த மாணிக்கங்கள் குறித்துக் கண்டோம். 16-17ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்திய அரசியல், சமூகக் காலங்களில் ஏற்பட்டிருந்த மாற்றங்களின் விளைவாகவும், ஐரோப்பிய வணிகக் கும்பினிகளின் வருகை காரணமாகவும் கோயில் தேவதாசியர் பலர் வணிகர்களையும் பெருந்தனக்காரர்களையுமே சார்ந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.

இத்தகைய காலகட்டத்தில் ஐரோப்பிய வணிகக் கும்பினிகள், தென்னிந்திய மரபுகள் பலவற்றை ஏற்றுத் தமது நாடுகளில் அறிமுகப்படுத்தவும், தமது வணிக வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்தன. இதற்குச் சில எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். சங்க காலத்தில் கணவன் இல்லாத பெண்டிரே நூல் நூற்கும் தொழில் செய்தனர் என்பதையும் அதனால் ‘பருத்திப் பெண்டு ‘ என்ற தொடர் வழங்கலாயிற்று என்பதையும் நற்றிணை 335, புறநானூறு 125 ஆகியவற்றின் பாடல் வரிகளால் அறியலாம். ( ‘ஆளில் பெண்டிர்தாளில் தந்த நுணங்கு நுண் பனுவல் ‘ – நற்றிணை – ‘பருத்திப் பெண்டின் பனுவல் ‘ – புறம்.) கி.பி. 16-17ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியக் கிழக்கிந்தியக் கும்பினிகள் இந்தியாவிலிருந்து தமது நாடுகளுக்கு இறக்குமதி செய்த பொருள்களுள் முதன்மையானது, கொட்டை நீக்கப்பட்ட பஞ்சு ஆகும். பஞ்சுப் பொதி என்பது கி.பி. 12-13ஆம் நூற்றாண்டுத் தமிழ்க் கல்வெட்டுகளில் ‘பஞ்சுப்பீலி ‘ என்று குறிப்பிடப்படுவது வழக்கம்.

பஞ்சுப்பீலி என்பதனை ஐரோப்பியக் கிழக்கிந்தியக் கும்பினிகள் Cotton Bale எனக் குறிப்பிட்டன. பீலி என்ற சொல் ஹாலந்து நாட்டு டச்சு மொழியில் bale என வழங்கத் தொடங்கிப் பிற ஐரோப்பிய மொழிகளிலும் புகுந்தது. கி.பி. 1650ஆம் ஆண்டளவில் ஹாலந்து நாட்டு ஆம்ஸ்டர்டாம் நகரில் ஒவ்வொரு வீட்டிலும் மணமாகாமலோ, மணமாகி விதவையாகவோ இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் குறிப்பிட்ட bale அளவுள்ள பஞ்சினை நூற்றுத் தர வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. பிற ஐரோப்பிய நாடுகளும் இந்நடைமுறையைப் பின்பற்றியதால் மணமாகாத பெண்டிரைக் குறிப்பிடுவதற்கு நூற்பவர் என்று பொருள்படும் Spinster என்ற சொல் வழக்கு உருவாயிற்று. மேலும், ஆதரிப்பாரின்றி விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்டிர்க்கு மறுவாழ்வளிக்கும் நூற்பு வீடுகளும் (Spinning Houses) உருவாக்கப்பட்டன.

இவ்வாறு இந்தியப் பருத்தியைத் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு சென்று நூற்று நெய்து மீண்டும் இந்தியா உள்ளிட்ட கீழை நாடுகளுக்கு ஐரோப்பியக் கிழக்கிந்தியக் கும்பினிகள் திருப்பிக் கொண்டுவந்தன. இந்திய வியாபாரிகளையும், தரகர்களையும் பயன்படுத்தித் தமது துணிகளையும், ஆடைகளையும், பிற சரக்குகளையும் இந்தியச் சந்தைகளிலும் ‘தர்பார் ஏலம் ‘ எனப்பட்ட பெருஞ்சந்தை முகாம்களிலும் விற்றன. அத்தகைய தருணங்களில், உள்நாட்டு வணிகர்களையும் பெருந்தனக்காரர்களையும் சார்ந்து வாழ்ந்த மாணிக்கத்தார் பலரை விளம்பரத்துக்குக்காக தம்முடைய துணிகளையும், தயாரிப்பு ஆடைகளையும் அணியச் செய்து நடனமாடவும் ஏற்பாடு செய்தனர்.

இதன் விளைவாக, மாணிக்கம் என்ற சொல் Manikin என்ற வடிவில் டச்சு மொழியில் வழங்கத் தொடங்கிற்று. ஆடை உருவாக்கும் நிறுவனத்தார் சார்பாக அவர்களுடைய தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்காக அவற்றுள் சிலவற்றின் மாதிரி வடிவங்களை அணிந்து கொண்டு காட்சியளிக்கும் நபர்களை – குறிப்பாகப் பெண்டிரை – இச் சொல் குறித்தது. காலப்போக்கில் பெண்டிர்க்குப் பதிலாகப் பொம்மைகளை நிறுத்தி அவற்றுக்கு ஆடை உடுத்திக் காட்சி வைக்கும் வழக்கம் உருவானதன் விளைவாக, Mannequin என்ற ஆங்கிலச் சொல் ஜவுளிக் கடை பொம்மைகளைக் குறிப்பதற்கு வழங்கத் தொடங்கிற்று. இதுவே அன்றைய மாடலிங்கின் கதை.

(இந்தக் கட்டுரை சற்றுச் சுருக்கமான வடிவத்தில் தினமணி 2005 தீபாவளி மலரில் பிரசுரமானது)

maanilavan@gmail.com

நெல்லை நெடுமாறன், எஸ். இராமச்சந்திரன் படைப்புகள்

Series Navigation

எஸ். இராமச்சந்திரன்

எஸ். இராமச்சந்திரன்