சின்ன கருப்பன்
***
நாவலர் நெடுஞ்செழியன் மறைந்துவிட்டார். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள், தந்தை, கணவன், தாத்தா என்ற முறையில் அவரது இழப்பு அவரது குடும்பத்துக்கு உண்மையிலேயே ஈடு செய்ய இயலாதது.
அவரது மறைவு தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் எந்த விதத்திலும் ஈடு செய்ய இயலாததல்ல. அவரைப்போல தலைவர்களின் அடிவருடிகளாக வாழ தமிழ் நாட்டில் ஏராளமான மனிதர்கள் இருக்கிறார்கள். அறிஞர் அண்ணாவால் அடையாளம் காணப்பட்டு, திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக உயர்ந்த நாவலர் நெடுஞ்செழியன், கலைஞரால் ஒருமுறை முதலமைச்சர் பதவி இழந்த பின்னர் கலைஞர் எந்த இடத்தில் இருந்தாலும் அதற்கு எதிர்முனையில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டது போல அவரது அரசியல் வாழ்க்கை. எம்.ஜி.யார் என்ற நடிகர், கற்பனையும் நிஜமும் பிரிக்க இயலா பிரமிப்பை வியாபாரமாகவும், பின்னர் அரசியலாகவும் மாற்றியபோது, அந்த வியாபார அரசியல், மக்களின் ஏமாளித்தனத்தையும், படிப்பறிவு இல்லாத நிலையையும் அப்பட்டமாக அடித்தளமாக கொண்டு நடந்தது என்பதை வெளியே கூறாமல், எம்.ஜி.யார் கலைஞரை எதிர்க்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக அவரிடம் தஞ்சம் புகுந்தவர் நாவலர் நெடுஞ்செழியன். இதன் மூலம் திராவிட இயக்கத்தின் மூத்த முதுகு குத்துபவராக உயர்ந்தவர் இவர்.
பின்னர் ஜெயலலிதா என்ற கோமாளி நடிகை எம்ஜியார் உருவாக்கிய விசிலடிச்சான் குஞ்சுகளின் ஓட்டில் அரசியல் நடத்தியபோதும் அதற்கு பல்லக்கு தாங்கியவர் இவர். அப்பட்டமான ஜாதி அரசியல், கதவைத்தட்டி வீட்டை அடிமாட்டு விலைக்கு வாங்கிய ஊழல் அராஜகம், இன்னும் பல அசிங்கங்கள் செய்த மாஃபியாக்கும்பலின் தலைவியாக இருந்த ஜெயலலிதாவுக்கு திராவிட இயக்க முத்திரை கொடுத்த முதன்மையாளராக இருந்தவர் நாவலர் நெடுஞ்செழியன். ஒரு முறை ஜெயலலிதாவை விட்டு (எந்த விதமான அரசியல் நெறிக்காகவும் இல்லாமல், ஜெயலலிதாவால் ஓட்டு வாங்க இயலாது என்று தப்புக்கணக்கு போட்டு) வெளியேறிய போது ‘உதிர்ந்த முடி ‘ என்று ஜெயலலிதாவால் வர்ணிக்கப் பட்டவர். பின்னர் அதே ஜெயலலிதாவிடம் சென்று நிதி அமைச்சராக இருந்தவர்.
ஒரு முறை துக்ளக் பத்திரிக்கையில் இவரது இரண்டு வருட அரசாங்க கணக்குத்திட்டங்களுக்கு ஆறு வித்தியாசம் கண்டுபிடித்து இவரது நிதித்துறை நிர்வாகம் கிழிக்கப்பட்டது.
அவர் தன் ஜாதிக்காக, ஜாதிமக்களுக்காகவே எதுவும் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் இன்றைய அரசியலில் அது குற்றமாக கருதப்படுவதில்லை. இதுவும் தமிழ் நாட்டு அரசியல் நாசமாகப் போனதின் இன்னொரு அறிகுறி.
நெடுஞ்செழியன் சுயமரியாதை இயக்கத்தின் தலையாய தலைவராக தோன்றி சுயமரியாதை அற்ற மனிதர் எவ்வாறு இருப்பார் என்பதன் இலக்கணமாக இருந்தவர். அவர் மட்டுமல்ல, பெரும்பாலான சுயமரியாதை இயக்கத்தலைவர்கள் இன்று அதிகாரம், ஜாதி, பணம் என்பவற்றின் முன்னே தங்கள் சுயமரியாதையை விட்டுக் கொடுத்துவிட்டார்கள். சாதியை எதிர்த்த பெரியாரின் சீடராக தன்னை கூறிக் கொள்ளும் ராமதாஸ் வெளிப்படையாக வன்னியர் ஜாதியை முன்னிறுத்தி அரசியல் செய்கிறார். தமிழகம் முழுவதும் பெரியாரின் சீடர்கள் தங்கள் ஜாதிகள் மூலம் இன்னொரு ராமதாஸ் ஆகிவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். இன்னொரு நெடுஞ்செழியனாக மாறுவதற்கு மூப்பனார் முயல்வதுபோல தெரிகிறது. சோனியா சொல்கிறார் என்ற காரணத்துக்காகவும் ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்கிறார். போபர்ஸ் ஊழல், வேட்டி சட்டை ஊழலோடு கைகோத்துக்கொண்டபின்னர் எதற்காக தஞ்சாவூர் ஜமீன்தார் தனிக் கொடி பிடிக்க வேண்டும் ?
இறந்தவர்களை குற்றம் சொல்வது தமிழ்நாட்டு பண்பல்ல என்கிறார்கள். அதிகாரத்தில் இருந்தவர்களை குறைந்தது இறந்த பின்னராவது விமர்சனம் செய்ய வேண்டும். எம்.ஜி.யார் இருந்த போது அவரை விமர்சனம் செய்தவர்கள் மிரட்டப்பட்டார்கள் அடிக்கப்பட்டார்கள். அவர் இறந்த பின்னரும் அவரைப் பற்றி, அவர் தமிழகத்தை ஆண்ட முறைமை பற்றி, தமிழ் நாட்டிற்கு அவரால் நேர்ந்த அவலம் பற்றி எழுத ஆள் இல்லை. அவரது ரசிகர்கள் இன்னும் ஒரு ஓட்டு வங்கியாக இருக்கிறார்கள். அது இன்னும் அவரை ஒரு தெய்வமாக வைத்திருக்கிறது. இதுவே நாம் ஒரு சரியான ஜனநாயக நாடாக மாறுவதை தடுக்கிறது.
போலீஸ் இன்னும் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஏவலாளாக இருக்கிறது. அது உண்மையான விமர்சனத்தை தடுக்கிறது. உண்மையான விமர்சனத்துக்கான வாய்ப்பில்லையேல் சரியான முன்னேற்றம் அங்கே ஏற்படாது. பொய்மை கோலோச்சும் நாட்டில் கற்பனையே முன்னேற்றம்.
***
அமெரிக்க காங்கிரஸின் முன்னர் அமெரிக்க வெளியுறவு அதிகாரி பேசியிருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் ஜெஃபர்ஸன் கிளிண்டன் இந்தியாவுக்கு விஜயம் செய்வதன் முக்கிய நோக்கம், இந்தியாவின் அணுகுண்டு தயாரிக்கும் திறனை அழிப்பதுதான் என்று புட்டு வைத்திருக்கிறார். இது கேட்டு இந்தியாவின் எந்த அரசியல் வாதியும் இன்னும் ஒரு வார்த்தை பேசவில்லை. ஸீயாட்டிலில் உலக தொழில் மாநாட்டில் கிளிண்டனை கண்டு பேசிய நமது தொழில்துறை மந்திரியான முரசொலி மாறன் வெளிப்படையாகவே கிளிண்டனை இந்தியாவுக்கு வரவேண்டி அழைத்திருக்கிறார்.
சென்ற வாரம் இந்திய அரசாங்கம், சுமார் 2000 அமெரிக்க பொருள்களுக்கு வரி குறைத்திருக்கிறது. இந்த வரிகுறைப்பு இரண்டு மாதங்களுக்கு முன்னமே ஒத்துக் கொள்ளப்பட்டு இப்போது விஷயம் வெளியிடப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. இந்திய பொருள்களுக்கு அதே போல அமெரிக்காவில் ஏதும் வரி குறைத்திருப்பதாக தெரியவில்லை. அமெரிக்கா சீனாவுக்கு ‘மிகவும் நெருங்கிய தேசம் ‘ (Most Favored Nation) என்ற அந்தஸ்தை தந்திருக்கிறது. இந்தியாவுக்கு அந்த அந்தஸ்து கிடையாது. காரணம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ?
இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்கா தனது ராக்கெட் தடுப்பு அமைப்பு (Missle Defence System) பரிசோதித்துப் பார்த்தது. இது அமெரிக்காவை நோக்கி வரும் அணுகுண்டு ராக்கெட்டுகளை நடுஆகாயத்திலேயே சுட்டு வீழ்த்திவிட வழி செய்கிறது. இரண்டாவது பரிசோதனை தோல்வி அடைந்து விட்டது. ஆனால் முதல் பரிசோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவுடன் சீனா இன்னும் நிறைய ராக்கெட்டுகளை தயாரித்து அமெரிக்காவை குறிபார்த்து வைக்கப்போவதாக தெரிவித்து விட்டது.
இதுதான் காரணம். அமெரிக்காவை குறிபார்த்து வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான சீன ராக்கெட்டுகள் அமெரிக்காவை சீனாவுக்கு ‘மிகவும் நெருங்கிய தேசம் ‘ (Most Favored Nation) என்ற அந்தஸ்தை தர வைக்கிறது. இந்தியா இன்னொரு சீனாவாக ஆவது அமெரிக்காவுக்கு நல்லதல்ல என்று அமெரிக்க அரசாங்கத்தினர் நினைக்கிறார்கள். அதனாலேயே இந்தியா தன் ராக்கெட் ஆராய்ச்சியை 30 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு வைத்திருந்தது. அதற்கு அமெரிக்காவில் தங்கள் குழந்தைகளை படிக்கவைக்கும் நமது பிரதம மந்திரிகளும், அமைச்சர்களும் இதர அரசியல்வாதிகளும் அமெரிக்கா சொல் கேட்டு நடந்தது என்ன ஆச்சரியம்.
***
ஏன் பாகிஸ்தானை அமெரிக்கா அடக்கி வைக்க மாட்டேன் என்கிறது என்று என் நண்பர் கேட்டார். எனக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் ர்வாண்டா என்ற தேசம் தான் ஞாபகம் வந்தது. ர்வாண்டாவில் 10 லட்சம் மக்கள் இனத் தகராறில் இறந்தார்கள். அமெரிக்காவும் இதர மேற்கு நாடுகளும் ர்வாண்டாவா ? அது எங்கே இருக்கிறது என்று கேட்டு மறந்து போய், 10 லட்சம் மக்கள் இறந்து போன பின்னரும் அது சி.என்.எனிலோ அல்லது டைம் பத்திரிக்கையிலோ பேசப்படவில்லை.
உலகத்திலேயே எய்ட்ஸ் மருந்து மிகஅதிக விலையில் விற்பது, எய்ட்ஸால் மிகவும் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க தேசங்களில்தான். அதேநேரம் எய்ட்ஸ் நோயே அமெரிக்கர்களும் பெல்ஜியர்களும் தயாரித்த போலியோ தடுப்பு மருந்தால்தான் வந்தது என்று பலபேர்களால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் ஏறத்தாழ கைப்பாவையாக செயல்படும் பாகிஸ்தானை அடக்கிவைப்பது அமெரிக்காவுக்கு கடினமான காரியம் அல்ல. இதைவிட குறைந்த அராஜகம் செய்த வடக்கு கொரியா, ஈராக், கோசோவோ போன்றவற்றை மிகச்சீக்கிரமாக அடக்கிய அமெரிக்கா ஏன் பாகிஸ்தானை அடக்க மாட்டேன் என்கிறது ? ஏன் சீனா பாகிஸ்தானை ஆதரிக்கிறது ?
அமெரிக்காவும் மற்ற மேற்கு நாடுகளும் பாகிஸ்தானை அடக்கி வைப்பார்கள் என்று இந்தியா கனவு கண்டு கொண்டு அவர்களிடம் இறைஞ்சிக் கொண்டிருக்கிறது, இந்தியா பாகிஸ்தானுக்கு ‘மிகவும் நெருங்கிய தேசம் ‘ (Most Favored Nation) அந்தஸ்தை அளித்திருக்கிறது. பாகிஸ்தான் இது போல் இந்தியாவுக்கு இந்த அந்தஸ்தை தந்து இந்திய பொருட்களுக்கு வரிகுறைப்பை செய்யவில்லை. செய்ய மறுக்கிறது. ஆனால் இந்தியா உலகநாடுகளிடம் பாகிஸ்தானை வன்முறைவாத தீவிரவாத தேசமாக அறிவிக்கக் கோரி கேட்டிருக்கிறது. தானே செய்யாததை எவ்வாறு மற்ற நாடுகள் செய்யும் என்று எதிர்பார்க்கலாம் ?
மதக்கிறுக்குப்பிடித்த பாகிஸ்தான் இப்போது கையில் அணுகுண்டையும் வைத்துக் கொண்டு இந்தியாவையும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. ஹைஜாக், காஷ்மீரில் தினசரி வெடிகுண்டு, காஷ்மீர இந்துக்கள் தொடர்ந்து படுகொலை என்று பல நடந்தும் இந்தியா அமைதி காத்துக் கொண்டிருக்கிறது.
எப்போதாவது பொறுமை இழந்து இந்தியா போருக்குப் போனால் பாகிஸ்தான் முட்டாள்தனமாக அணுகுண்டை பிரயோகம் செய்தால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் எந்தவிதமான நஷ்டமும் இல்லை. ‘பார், இவர்களின் கையில் அணுகுண்டு இருந்தால் அது ஆபத்தானது ‘ என்று பிரச்சாரம் செய்வதும் அவர்களுக்கு எளியது. இந்திய மக்கள் அழிவும் பாகிஸ்தானிய மக்கள் அழிவும் ர்வாண்டா மக்களின் அழிவைப்போல அமெரிக்காவுக்கும் மற்ற மேலை நாடுகளுக்கும் மாலை 9 மணி செய்திகளுக்குள் ஒன்றாய் மறைந்து போகும்.
திண்ணை
|