ஒரு நாடகம்

This entry is part [part not set] of 5 in the series 20000124_Issue

அகஸ்ட் ஸ்ட்ரிண்ட்பெர்க்


பலசாலி

கதா பாத்திரங்கள்

திருமதி

செல்வி

உணவு விடுதியின் பணிப்பெண்


காட்சி : பெண்களின் உணவு விடுதியில் ஒரு மூலைப் பகுதி. இரண்டு சிறிய இரும்பு மேஜைகள். ஒரு சிவப்பு நிறவெல்வெட் சோபா.

பல நாற்காலிகள். திருமதி உள்ளே நுழைகிறாள். குளிர்காலத்திற்குத் தக்க உடைகள். ஒரு ஜப்பானிய பாணி கூடை கையில். செல்வி பாதி காலியான பீர் பானப் போத்தலுடன் அமர்ந்து, ஒரு படம் போட்ட செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருக்கிறாள். சிறிது நேரத்தில் வேறு செய்தித் தாளைமாற்றுவாள்.

திருமதி : வணக்கம் அமீலியா. கிருஸ்துமசுக்கு முதல் நாள் இங்கே தனியாக, துணையில்லாதவள் போல் உட்கார்ந்திருக்கிறாயே..

செல்வி : (நிமிர்ந்து பார்த்து தலையை அசைத்தபின் படிப்பைத் தொடர்கிறாள்.)

திருமதி : இப்படி உன்னைத் தனியாக , கிருஸ்துமசுக்கு முதல் நாள் , விடுதியில் பார்க்க எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. ஒரு தடவை இப்படித் தான் பாரிஸ் உணவு விடுதியில், ஒரு கல்யாண விருந்து. மணப்பெண் உட்கார்ந்து காமிக்ஸ் படித்துக் கொண்டிருந்தாள். புதுப் புருஷன் மற்ற விருந்தாளிகளுடன் பில்லியார்ட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தான். ஹும்.. ஆரம்பித்திலேயே இப்படி என்றால், காலம் போகப் போக என்ன ஆகும் ? கடைசியில் என்ன ஆகும் ? கல்யாண நாளில் பில்லியார்ட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தான். (செல்வி பேச வாயெடுக்கிறாள்.) அவள் காமிக்ஸ் படித்துக் கொண்டிருந்தாள்.. அது தானே..இரண்டும் ஒன்று மாதிரி இல்லை.. (ஒரு பணிப் பெண் நுழைந்து , சாக்கலேட் பானம் ஒரு கோப்பையை திருமதி முன்னால் வைத்து விட்டுச் செல்கிறாள்.)

திருமதி: அமீலியா உனக்குத் தெரியுமோ..அவனைத் தக்க வைத்துக் கொண்டிருந்தால், உனக்கு நன்றாய் இருந்திருக்கும்.. உனக்கு ஞாபகம் இருக்கிறதா ? நான் தான்முதலில் சொன்னேன் அவனை மன்னித்து விடு என்று. இப்போது உனக்குக் கல்யாணம் ஆகிக் குடித்தனக் காரியாய் இருந்திருப்பாய். ஞாபகம் இருக்கிறதா அந்த கிருஸ்துமசுக்கு நீ கல்யாணம் செய்துகொள்ளப் போகிற அவன் அம்மா அப்பாவைப் பார்க்க கிராமத்துக்குப் போனாயே.. ? எப்படி நடிப்பையெல்லாம் சுத்தமாய் விட்டு விட்டு, குடும்ப வாழ்க்கையின் சந்தோஷத்தை எதிர்பார்த்துப் பூரித்துப் போனாய் ? ஆமாம், கண்ணே அமீலியா, குடும்ப வாழ்க்கை தான் ரொம்ப சந்தோஷம் – நாடகத்திற்கு அடுத்தபடி – குழந்தைகளைப் பற்றித் தான் உனக்குப் புரிகிறதேயில்லை.

செல்வி : (வெறுப்புடன் நிமிர்ந்து பார்க்கிறாள்.)

திருமதி : (ஒரு கரண்டி கோப்பையிலிருந்து குடித்து விட்டு , தன் கூடையைத் திறந்து கிருஸ்துமஸ் பரிசுகளைக் காண்பிக்கிறாள்.) என் குட்டிப் பசங்களுக்கு என்ன வாங்கினேன் பார். (ஒரு பொம்மையை எடுத்து) இதைப் பாரேன். லிசாவுக்கு இது.. ஹா..கண்ணை உருட்டி தலையைத் திருப்பும் இது..பார்த்தாயா ? மாஜாவுக்குத் துப்பாக்கி..(தோட்டாக்கள் போட்டு செல்வியைப் பார்த்து சுடுகிறாள்.)

செல்வி : (அதிர்ந்தவள் போல் ..)

திருமதி : பயமுறுத்தி விட்டேனா ? உன்னைச் சுடுவேன் என்றா நினைக்கிறாய் ? நெஞ்சில் கையை வைத்துச் சொன்னால், நீ தான் என்னைச் சுடுவாய். என்னை நீ சுட இஷ்டப்பட்டால், ஒன்றும் ஆச்சரியம் இல்லை. நான் தானே உன் வழியில் மறித்து நின்றேன் – நீ அதை மறக்க மாட்டாயென்று தெரியும் எனக்கு — எனக்குச் சுத்தமாக ஒன்றும் தெரியாது. இன்னமும் நான் தான் ஏதோ தில்லு முல்லு செய்து ஸ்டோரா தியேட்டரிலிருந்து உன்னைத் துரத்தினேன் என்று நீ நினைக்கிறாய். சத்தியமாய் நான் அப்படிச் செய்யவில்லை. நீ என்ன நினைத்தாலும் சரி, நான் அதைச் செய்யவில்லை. நான் என்ன சொன்னாலும் உனக்கு நம்பிக்கை வராது. நான் தான் பண்ணினேன் என்று நீ நம்புகிறாய்..(எம்ப்ராய்டரி செய்த செருப்புகளை எடுத்துக் கொள்கிறாள்.) இது என் அவருக்கு. நானே எம்பிராய்டரி செய்தேன். டூலிப் மலர்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஆனால், அவருக்கு எல்லாவற்றிலும் டூலிப் தான் வேண்டும்.

செல்வி : ( கிண்டலாக நிமிர்ந்து பார்த்தவள் ஆர்வம் கொள்கிறாள்.)

திருமதி : (ஒவ்வொரு செருப்பிலும் கையை நுழைத்தபடி) பாப்-புக்குப் பாரேன் எவ்வளவு சின்ன கால்கள். ஆனால் நடக்கும் போது நீ பார்க்க வேண்டும் என்னவோ ராஜ நடைதான். அவனைச் செருப்பு போட்டு நீ பார்த்ததே இல்லையே..(செல்வி உரக்கச் சிரிக்கிறாள்.) பார் .(செருப்புகளை மேஜையில் நடக்கச் செய்கிறாள். செல்வி உரக்க மீண்டும் சிரிக்கிறாள். ) கொஞ்சம் எரிச்சலென்றால் காலை இப்படித் தான் மொத் மொத்தென்று வைத்து நடப்பார் .

‘நாசமாய்ப் போன வேலைக் காரர்கள், காபி போடக் கூடத் தெரியாது. ஓ, விளக்குத் திரியை சரியாக வெட்டாமல் விட்டு விட்டார்கள். ‘ . தரை ஜில்லென்று இருக்கிறது. கால் பட்டால் குளிர்கிறது. ‘ஓ. என்ன குளிர். இந்த மட முட்டாள்களுக்கு ஒழுங்காக நெருப்புப் போடக் கூடத் தெரியாது. ‘ (செருப்புகளை ஒன்றுடன் ஒன்று வைத்துத் தேய்க்கிறாள்.)

செல்வி : (பெருஞ் சிரிப்பில் வெடிக்கிறாள்.)

திருமதி : அப்புறம் வீட்டுக்கு வந்து செருப்பைத் தேடித் தேடினால், மேரி அதை பீரோவுக்குக் கீழே வைத்திருக்கிறாள்.. நான் படு பாவி, புருஷனைப் பற்றி இப்படி கிண்டல் செய்கிறேனே, அவர் அன்பான நல்ல மனுஷர் தான். உனக்கும் அப்படி ஒரு புருஷன் கிடைத்திருக்க வேண்டும். என்ன நீ சிரிக்கிறாய் அமீலியா ? என்ன ? என்ன ? எனக்கு விசுவாசமாய் இருக்கிறார் அவர். ஆமாம், நிச்சயமாய் எனக்குத் தெரியும். அவரே என்னிடம் சொன்னாரே – என்ன நீ சிரிக்கிறாய் ? – நான் நார்வேக்கு டூர் போயிருந்த போது அந்தச் சிறுக்கி ஃப்ரெடரிகா வந்து மினுக்கிக் கொண்டாளாம். என்ன திமிர் பார்த்தாயா ? (இடைவெளி) நான் இருக்கும் போது வந்திருக்க வேண்டும், கண்ணைப் பிடுங்கியிருப்பேன். (இடை வெளி) நல்லவேளை பாப் என்னிடம் அவராகவே சொல்லிவிட்டார். இல்லையென்றால் அரட்டைக் காரிகள் என் காதில் போட்டிருப்பார்கள். (இடைவெளி) நீ நம்ப மாட்டாய், ஃப்ரெடெரிகா ஒருத்தி மட்டுமில்லை. ஏனென்று தெரியவில்லை, இந்தப் பெண்கள் என் புருஷன் மேலே பைத்தியமாய் இருக்கிறார்கள். அரசாங்க உத்தியோகம் என்பதால் ஒருவேளை நாடக வாய்ப்பு வாங்கிக் கொடுப்பார் என்று நினைக்கிறார்களோ என்னவோ . நீயே கூடத் துரத்தினாயோ என்னவோ. எனக்கும் உன் மேல் ரொம்பவும் நம்பிக்கை இல்லை.ஆனால், இப்போது எனக்குத் தெரிகிறது, அவரும் உன்னைப் பற்றி பெரிதாய் நினைக்கவில்லை. என்னவோ அவர் மேல் உனக்கு ஒரு கோபம் போல.

(இடைவெளி. இருவரும் ஒருவரையொருவர் புரிபடாத விதமாய்ப் பார்த்துக் கொள்கிறார்கள்.)

திருமதி : இன்றைக்கு சாயந்தரம் வாயேன் அமீலியா, எங்கள் மேலே உனக்கு ஒன்றும் கோபமில்லை என்று காட்டுகிற மாதிரி , என் மேல் உனக்கு ஒன்றும் இருக்காது. என்னமோ தெரியவில்லை, உன்னை எதிரியாய் நினைத்தாலே எனக்கு ஒரு மாதிரி தர்ம சங்கடமாய் இருக்கிறது. உனக்குக் குறுக்காக நின்றதினாலேயோ என்னவோ – (மெதுவாக) – இல்லையென்றால் வேறே – நிஜமாய் – குறிப்பாய்ச் சொல்லத் தெரியவில்லை.

(இடைவெளி. செல்வி திருமதியை ஆர்வம் மேலிடப் பார்க்கிறாள்.)

திருமதி : (யோசனையுடன்) நாம் பழகினதே ஒரு மாதிரி தான். உன்னை முதலில் பார்த்த போது உன் மேல் எனக்கு பயம், உன்னைப் பார்வையிலிருந்து மறைய விடாதபடி பயம். எங்கேயானாலும், எந்த நேரமானாலும், உன் பக்கத்திலேயே இருப்பேன். உன்னை எதிரியாக்கிக் கொள்ளக் கூட பயம். அதனால் சினேகம் பிடித்து விட்டேன். ஆனால் நீ என் வீட்டுக்கு வரும் போதெல்லாம் எல்லாமே சிக்கலான மாதிரி , பற்றாத கவுன் போட்டுக்கொண்டது போல , இருந்தது. உன்னைக் கண்டாலே என் புருஷனுக்குப் பொறுக்கவில்லை. நானும் ஏதேதோ பண்ணிப் பார்த்தேன் – உன்னுடன் சினேகமாய் இருக்கச் சொல்லி. உன் நிச்சயதார்த்தம் நடந்த பின்னால் தான் கொஞ்சம் சரியானது. அப்புறம் ரொம்பத் தீவிரமான நட்பாகி விட்டார்கள். இரண்டு பேரும் பாதுகாப்பாய் இருந்தால் தான் உங்கள் உண்மையான உணர்ச்சிகள் வெளியே வரும் போல. விசித்திரம் – எனக்குப் பொறாமை வரவில்லை. பிள்ளைக்குப் பேர் வைத்த சமயம் உன்னை முத்தமிட வைத்தேன். நீ கூடக் குழம்பிப் போனாய். அப்போது அது எனக்குப் புரியவில்லை, பின்னாலும் புரியவில்லை , இப்போது தான் ! (திடாரென எழுந்து கொள்கிறாள்.) ஏன் நீ பேசாமல் இருக்கிறாய் ? அங்கே உட்கார்ந்திருக்கிறாய் – ஒரு வார்த்தை பேசாமல், உன் கண்களால் , என்னைத் தோண்டி எனக்குள் புதைந்து கிடந்ததையெல்லாம் – சந்தேகத்தையெல்லாம் – வெளியே கொட்ட வைத்து விட்டாய் ? ஏன் நீ நிச்சயம் செய்யப்பட்ட கல்யாணத்தை நிறுத்தினாய் ? ஏன் நீ எங்கள் வீட்டுக்கே வருவதில்லை ? இன்று இரவு நீ ஏன் எங்கள் வீட்டுக்கு வரக் கூடாது ?

(செல்வி பேச முற்படுவளாய்த் தோன்றுகிறாள்.)

திருமதி : உஷ்! நீ பேச வேண்டியதில்லை. எனக்கு எல்லாம் புரிகிறது. ஏனென்றால்- ஏனென்றால் – ஏனென்றால்- ஆமாம், ஆமாம், எல்லாம் தெரிகிறது. விடு, உன்னுடன் ஒரே மேஜையில் உட்கார மாட்டேன். ( தன் பொருட்களை இன்னொரு மேஜைக்கு நகர்த்துகிறாள்.) அது தான் காரணம், டூலிப்களை நான் எம்பிராய்டரி செய்ய வேண்டும், – எனக்கு டூலிப்பே பிடிக்காது – உனக்குப் பிடிக்குமே. அதனால் தான் .(செருப்புகளை தரையில் வீசுகிறாள்.) கோடை காலத்தில் நாங்கள் மலர்ண் ஏரிக்குப் போக வேண்டும், ஏனென்றால் உனக்கு உப்புத் தண்ணீர் பிடிக்காது. என் பையனுக்கு எஸ்கில் என்று பேர், ஏனென்றால் உன் அப்பாவின் பேர் அது. உன் ஆடைகளை நான் போட்டுக் கொள்கிறேன், உன் எழுத்தாளர்களைப் படிக்கிறேன், உன் பிரியமான சாப்பாடைச் சாப்பிடுகிறேன், உன் பானங்களைக் குடிக்கிறேன்- அதனால் தான் சாக்கெலேட் – கடவுளே- நினைத்தாலே பயங்கரம். எல்லாமே உன்னிடமிருந்து தான், உன் உணர்ச்சிகள் கூட. உன்னுடைய ஆத்மாவே எனக்குள் புகுந்து கொண்டு – பழத்திற்குள் நுழைந்த புழுப் போல , தின்று தின்று, கடைசியில் மிஞ்சியது வெறும் கூடு தான்; தூசிதான். உன்னை விட்டு நான் விலகிப் போகத் தான் ஆசைப் பட்டேன் ஆனால் முடிய வில்லை, நீ ஒரு பாம்பு மாதிரி கறுப்பு ஜொலிப்புக் கண்களால் என்னை மயக்கினாய்; நான் பறக்கச் சிறகு விரித்தால் அதுவே என்னை அழுத்திக் கீழே தள்ளியது.; காலைக் கட்டித் தண்ணீரில் தள்ளியது மாதிரி, நான் மேலே வர முயற்சி செய்தால், கீழேதான் தள்ளிக் கொண்டு போய், கீழே நீ பெரிய நண்டு மாதிரி கிடந்து என்னைப் பிடித்துக் கொள்கிற மாதிரி – இப்போது அங்கே தான் கிடக்கிறேன்.

நான் உன்னை வெறுக்கிறேன், வெறுக்கிறேன், வெறுக்கிறேன். நீ சும்மா பேசாமல், எதுவுமே லட்சியமில்லாத மாதிரி உட்கார்ந்திருக்கிறாய்; அமாவாசையோ, பெளர்ணமியோ, கிருஸ்துமஸோ, புது வருஷமோ, மற்றவர்கள் சந்தோஷமாய் இருந்தாலும், கஷ்டப்பட்டாலும், வெறுப்போ, அன்போ எதுவுமே இல்லாமல், எலிபிடிக்கிற கழுகு மாதிரி , எலியைப் பிடித்துத் தின்னாவிட்டாலும், அதற்காகக் காத்திருக்கிற மாதிரி இருக்கிறாய். விடுதி மூலையில் நீ – இது தான் உனக்கு எலிப் பொறியா – உட்கார்ந்து , யாருக்கு என்ன கேடு காலம் வந்தது என்று செய்தித் தாள் படித்துக் கொண்டு, தியேட்டரில் யார் வேலை போயிற்று என்று பார்த்துக் கொண்டு, வேறு யாரை எப்படிக் கவிழ்க்கலாம் என்று திட்டம் போட்டுக் கொண்டு கிடக்கிறாய். பாவம் நீ அமீலியா, உன்மேல் பரிதாபம் தான் வருகிறது, நீ சந்தோஷமாயில்லை , இல்லவே இல்லை, மனதில் காயப் பட்டிருக்கிறாய், எனக்குத் தெரியும். உன்மேல் என்னால் கோபப் படமுடியாது , என்னதான் உன் மேல் கோபப்பட நான் முயற்சி செய்தாலும் – ஏனென்றால் , நீ தான் ரொம்ப பலவீனமானவள். ஆமாம் , பாப்-பிடம் நீ நடந்து கொண்டது கூட எனக்குப் பெரிய பிரசினை இல்லை. எனக்கென்ன அதைப் பற்றி. நான் உன்னிடமிருந்து சாக்கலேட் குடிக்கக் கற்றுக்கொண்டால் என்ன ? வேறு யாரிடமாவது கற்றுக் கொண்டால் தான் என்ன ? (ஒரு கரண்டி சாக்கலேட்டை கோப்பையிலிருந்து அருந்துகிறாள்.) சாக்கலேட் எப்படியானலும் அழகு தானே ? எனக்கு ஆடை அலங்காரம் செய்ய நீ கற்றுக் கொடுத்தால் தான் என்ன – என் புருஷனை அதனால் இன்னமும் கவர்ந்துவிட்டேனே ? அதிலும் உனக்குத் தோல்வி, நான் ஜெயித்தேன். எனக்குப் புரிகிறது, நீ என் புருஷனையும் ஏற்கனவே இழந்து விட்டாய். நான் அவரை விட்டு விலகிப் போக வேண்டும் என்று நீ நினைத்தாய் – நீ உன் நிச்சயதார்த்தத்திற்குப் பின்னால் அவனை விட்டு விட்டு இப்போது வருத்தப் படுகிறாயே அது போல – ஆனால் பார், நான் புருஷனை விட்டுப் போக வில்லை. அதில்லாமல், எல்லாரும் வேண்டாமென்று தள்ளிய ஆளை நான் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் ?

எல்லாவற்றையும் வைத்துப் பார்த்தால், இப்போதைக்கு நான் தான் அதிக பலசாலி. என்னிடமிருந்து உனக்கு எதுவுமே கிடைத்ததில்லை, நீ எனக்கு எவ்வளவோ கொடுத்தாய். நீ விழித்துக் கொண்டு பார்த்த போது நீ இழந்ததெல்லாம் என்னிடம் இருக்கிறதென்று என்னைத் திருடி போலப் பார்க்கிறாய். உன் கையில் வருவதெல்லாம் தான் பிரயோஜனமில்லாமல் , கருகிப் போகிறதே , பின்னே இது வேறு எப்படி இருக்க முடியும் ? உன்னுடைய உணர்ச்சிகளாலும், டூலிப் பூக்களாலும் ஒரு ஆளை உன்னால் தக்க வைத்துக் கொள்ள முடியாது, ஆனால் என்னால் அது முடியும். உன் எழுத்தாளர்களிடமிருந்து எப்படி வாழ்வதென்று உன்னால் கற்றுக் கொள்ள முடியாது, அது என்னால் முடியும். உன் அப்பா பேர் எஸ்கிலாய் இருக்கலாம், ஒரு குட்டி எஸ்கில் உனக்குக் கிடைக்கவே மாட்டான். நீ ஏன் எப்பொழுதும் பேசாமல், பேசாமல், பேசாமல்ல்ல் இருக்கிறாய் ? அது தான் பலமென்று நான் நினைத்தேன், ஆனால், உனக்குப் பேச எதுவுமே இல்லை. ஏனென்றால், நீ எது பற்றியும் யோசிப்பதே இல்லை. (எழுந்து செருப்புகளை எடுத்துக் கொள்கிறாள்.) இப்போது நான் வீட்டுக்குப் போகிறேன், டூலிப்-பையும் எடுத்துக் கொண்டு. உன் டூலிப். மற்றவர்களிடமிருந்து நீ கற்றுக் கொள்ளவே மாட்டாய்.; நீ வளைந்து கொடுக்கத் தெரியாதவள், அதனால் தான் காய்ந்த தண்டு போல உடைந்து போகிறாய். ஆனால், நான் உடைய மாட்டேன். அமீலியா, நீ கற்றுக் கொடுத்த நல்ல பாடங்களுக்கு நன்றி. என் புருஷனுக்கு எப்படி காதல் செய்வது என்று கற்றுக் கொடுத்ததற்கு நன்றி. இப்போது நான் வீட்டுக்குப் போய் அவருடன் சந்தோஷமாக இருக்கப் போகிறேன். (போகிறாள்.)

(அகஸ்ட் ஸ்ட்ரிண்ட்பெர்க் -1849-1912; பலசாலி 1889-ல் முதலில் நிகழ்த்தப் பட்டது. ஸ்வீடனின் புகழ் பெற்ற நாடகாசிரியர் ஸ்ட்ரிண்ட்பெர்க். )

மொழிபெயர்ப்பு: ராஜாராம் கோபால்

Thinnai 2000 January 24

திண்ணை

Series Navigation

அகஸ்ட் ஸ்ட்ரிண்ட்பெர்க்

அகஸ்ட் ஸ்ட்ரிண்ட்பெர்க்