வே.சபாநாயகம்
மிகப் பழங்காலத்தில் எழுதப்பட்டும், தமிழரின் பெருமை பேசும் ‘சங்க இலக்கியங் கள்’ போன்ற நமது அரிய கருவூலங்களை இன்றும் நம்மால் படிக்க முடிவதால்தான் ‘கன்னித்தமிழ்’ என்று தமிழ்மொழி போற்றப்படுவதற்குக்
காரணம் என்று ரசிகமணி டி.கே,சி ஒரு முறை குறிப்பபிட்டார். 400 ஆண்டுகளே ஆகி இருந்தாலும் ஆங்கில
இலக்கியத்தின் ‘ஷேக்ஸ்பியரி’ன் நாடகங்கள், சமகால வாசிப்பில் பொருள் கொள்வதில் நெருடலாக இருப்பதையும், 2000 ஆண்டுகளுக்கு மேலாகியும் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் அன்று எழுதப்பட்ட அதே பொருளில்,
நயத்தில் ரசிக்க முடிவதையும் குறிப்பிட்டே அவர் இதைச் சொன்னார். ஆனால் சங்க இலக்கியத்தைப் பண்டிதராக இல்லாத சாமான்யரும் படித்து ரசிப்பதில் உள்ள சிரமம் ‘அதன் காலத்தாலும் மொழியாலும் உள்ள தொலைவுதான்’ என்பார் முனைவர் சற்குணம். எனவேதான் தமிழ்நாட்டுக்குள்ளேயே ஒரு வட்டார மொழியை இன்னொரு வட்டாரத்தில் புரிந்து கொள்வதில் சிரமமாய் உள்ளது என்று அவர் சொல்வதை நாம் இன்று அதிகமும் உணர்கிறோம். இதே
பிரச்சினைதான் மிகப் பழைய இலக்கியங்களைப் படித்து ரசிப்பதிலும். எனவேதான் அகராதிகளும் உரைகளும்
அறிஞர்களால் எழுதப்பட்டன.
சங்க இலக்கியத்தில் ‘எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான, ‘நல்ல குறுந்தொகை’ என்று பாராட்டப்பட்டுள்ள ‘குறுந்தொகை’ நூலுக்கு, பேராசிரியர் தொடங்கி ரா.இராகவ அய்யங்கார், டாக்டர் உ.வே.சா போன்ற பெரும் புலவர்கள் உரை எழுதியுள்ளார்கள். இப்போது நம் தலைமுறையில், புதிய கண்ணோட்டத்துடனான வித்தியாசமான உரை ஒன்று ‘கவிஞர் சக்தி’யால் எழுதப் பெற்று வெளியாகி உள்ளது.
தென்னார்க்காடு கலைஞர் பெருமன்றத்தின் தலைவராக உள்ள கவிஞர் சக்தி ஒரு அற்புதமான மரபுக் கவிஞர். புதுக்கவிதை புகுந்து 40 ஆண்டுகளுக்கு மேலாகியும், மரபுக்கவிதை செத்துவிட்டது என்று பலர் பிதற்றியும், இன்னும் அவர் மரபுக்கவிதைக் காதலராகவே நீடிக்கிறார். கவிமணி, பாரதியின் பாடல்களுக்குச் சொன்னதைப் போலவே அவரது கவிதைகள் ‘துள்ளும் மறியைப்போலத் துள்ளும். வீரியமும் விறுவிறுப்பும் மிக்க காத்திரமான சொல்லாட்சியும், கற்பனை வளமும், நயமும் நகாசும் நிறைந்த வருணனைப் பாங்கும், ‘சடசடவென கோடைமழையெனக் கொட்டும் கவித்திறமும் கருதி ‘கவிக்காளமேகம்’ என்று சக கவிஞர்களாலும் கவிதை ரசிகர்களாலும் போற்றப்படுபவர். கவிதைத் தொகுப்பு ஒன்றும். கதைத் தொகுப்பு ஒன்றும், குறுநாவல் தொகுப்பு ஒன்றும் சிறுவர் நூல் இரண்டும், உரைநூல் ஒன்றும் என இவரது இலக்கியப் பங்களிப்பு கணிசமானது. மகாகவி பாரதியின் தீவிர பக்தரான இவர் சங்க இலக்கியங்கள் மீதும்
தீராத காதலுடையவர். அதன் காரணமாகவே சங்க இலக்கியங்களை ரசிக்க புதிய அணுகுமுறைகளைத் தேடி
வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அம்முயற்சிகளில் ஒன்றுதான் இந்த ‘குறுந்தொகை – புதிய உரை’.
அப்படியென்ன மற்றவர் இதுவரை செய்திடாத புதுமை இவரது உரையில் என்று கேட்கத் தோன்றும். அதற்கான பதிலை கவிஞர் சக்தியே கூறுகிறார்:
‘கலித்தொகை, ஐங்குறு நூறு போன்று இந்நூல் திணைவழியில் பகுக்கப்படவில்லை. ஒரே கவிஞரின் பாடல்கள் பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. ஒரு திணையைப் பற்றிய பாடல்கள் ஒரே இடத்தில் இருந்தால் கற்க எளிதாக இருக்கும். ஒரு கவிஞரின் பாடல்களை ஒரே இடத்தில் தொகுப்பது, அக்கவிஞரின் நடை அமைதியையும் கவிதைச்
சிறப்பையும் அறியப் பெரிதும் உதவும்.’
– இதனைக் கருத்தில் கொண்டே கவிஞர் சக்தி, திணை அடிப்படையிலும், பாடல் ஆசிரியரது பெயர் அடிப்படையிலும் அப்பாடல்களை மாற்றி அமைத்து இதனைப் பதிப்பித்துள்ளார். மேலும், ‘சங்ககால மொழி தெரிந்த ஒருவர், எந்த உரையுமின்றி, நேரே கவிதைகளை உணர்ந்து திளைக்க முடியும். சங்ககாலத் தமிழுக்கும் இக்காலத்
தமிழுக்கும் உள்ள வேறுபாடுதான் சங்ககாலக் கவிதைளைப் படிக்கத் தடையாய் அமைகிறது. கவிதையின் உயிர்ப்பை உணர வேண்டுமானால், கவிதையை நேரே படித்து உணர்ந்து, அதில் ஒன்ற வேண்டும். அதற்கு உரைகள் உதவி செய்ய வேண்டும். கவிதையின் உயிர்ப்பைக் கூடியவரை வெளிக்காட்டுகிற, எளிய நடையில் அமைந்த உரை எழுத வேண்டும் என்பது என் ஆசை. இலக்கிய ஆர்வம் உள்ள எவரும் அறியவேண்டும் என்ற ஆசையாலும், கவிதைகளின் நேரான
பொருளை எளிய தமிழில் தரவேண்டும் என்ற எண்ணத்தினாலும், சுவைஞர்கள் நேரே கவிதைகளைப் படித்து, உணர்ந்து, சுவைத்து மகிழத்தக்க வகையில்’ இந்த உரையை எழுதியிருப்பதாக ஆசிரியர் சொல்கிறார்.
இப்பதிப்பில், பாடல்கள் திணைவழி பிரிக்கப் பட்டுள்ளதுடன், ஒரே திணையுள்ளும்ஒரே கவிஞர் பாடிய பாடல்கள் ஒன்றாகத் தொகுக்கப் பட்டுள்ளன. ஐங்குறுநூறு, கலித்தொகை போலன்றி பொருள் தொடர்பு கருதி பாடல்களை
குறிஞ்சி,நெய்தல், மருதம், பாலை, முல்லை என்னும் முறையில் தாம் வரிசைப்படுத்தி இருப்பதற்கான காரணங்களைக்
குறிப்பிடுகையில், தலைவனும் தலைவியும் முதலில் சந்திப்பது முதல் பின்னர் இல்வாழ்வில் ஈடுபட்டு நிகழும் பிரச்சினைகள் வரிசையில் – களவின்பம் துய்ப்பது குறிஞ்சி, தலைவன்திருமண ஏற்பாட்டுக்காகப் பிரிதல் நெய்தல், பின்னர் இல்வாழ்கை, பரத்தையரது தொடர்பால் ஊடல் முதலியன மருதம், அரசுப் பணிக்கோ, பொருளீட்டலுக்கோ தலைவன் பிரிதல் பாலை, அதன்பின் அவனது திரும்புதலை எதிர்நோக்கித் தலைவி காத்திருப்பது முல்லை எனவரிசைப்படுத்தி இருப்பதாக
உரையாசிரியர் குறிப்பிடுகிறார்.
இவரது உரை சொல்லும் பாணி – முதலில் பொருள் விளங்காத கடினச் சொற்களுக் குப் பொருள் தருதல்,
பின்னர் பாடலின் நேர் பொருளைத் தருதல், தேவையான பாடல் களுக்கு சிறப்புரை தருதல், குறிப்புகள் எழுதுதல்,
பாடல் பொருளுக்கேற்ப சில இடங்களில் கூற்றுக்களை மாற்றி அமைத்தல் – எனும் வகையில் உள்ளது.
மற்ற உரை பொருந்தாது என்றோ தன் உரையே சரியானது என்றோ வாதிடாமல், ஆங்காங்கே பிறர் கூறும் உரைகளையும் ஏற்கும் போக்கில் அவற்றைச் சுட்டிச் செல்வது அவரது நேர்மையைக் காட்டுகிறது. தேவையான இடங்களில் நுட்பமாக தன் உரை வேறுபாட்டைச் சுட்டவும் செய்கிறார். சான்றாக ஒரு பாடலில், தலைவி தன் தலைவனோடு கொண்ட நட்பு. ‘நிலத்தினும் பெரிதே, நீரினும் உயர்ந்தன்று – நீரினும் ஆரளவின்றே’ என்கிறாள். ‘நீரினும் ஆரளவின்றே’ என்பதற்கு முந்தைய உரைகாரர்கள். ‘கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழமுடையது’ என்று உரை கூறியுள்ளனர். ஆனால் சக்தி ‘நீரினும் அருமை உடையது’ என்று கூறுவதுடன் சிறப்புரையில், ‘நீர் உணவாவது, நீர்
உயிர் தருவது, நீர் இனிது. எனவே நீரினும் அருமை உடையது என் நட்பு’ என்றும் குறிப்பிடுகிறார்.
‘மடல் ஊர்தல்’ பற்றிய இவ்வுரையாசிரியரின் கருத்து சிந்திக்கத் தக்கது. ‘மனதில் காமம் முற்றினால், குதிரை என எண்ணி மடலும் ஊர்வர். பூ என எண்ணி முகை அவிழும் எருக்கம் கண்ணியையும் சூடுவர். பிறர் தன்னைக் கண்டு கேலி செய்யும்படியும் நடந்தும் கொள்வர். பிறவும் செய்வர்.’ என்று மனம் திரிந்த நிலையாகக் கூறுகிறார்.
நம் எல்லோருக்கும் பரிச்சயமான, புராணக்கதையாகவும் பேசப்படும் ‘பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில்
மணம் உண்டா?’ என்னும் சர்ச்சையைக் கிளறும் ‘கொங்குதேர் வாழ்க்கை…’ என்ற பாடலுக்கு சிறப்புரை எழுதுகையில் பகுத்தறிவு சார்ந்த நோக்குடன், நாம் ஆமோதித்து ஏற்கும் வகையில் சொல்கிறார்: ‘காதல் வயப்பட்டவன்
மனத்தடுமாற்றத்தை இப்பாடல் உணர்த்துகிறது. வண்டு உண்மையைக் கூறுமோ என ஐயம் கொள்கிறான். ‘வண்டே!
நீ அறிந்த மலர்களிலே என் காதலியின் கூந்தலைவிட அதிக மணமுள்ள மலரும் உண்டோ?’ எனக் கேட்கிறான்.
முதல் வினாவில் நம்பிக்கை இன்மை தொனிக்கிறது. இரண்டாவது வினாவில் தன் காதலியின் கூந்தலைக் காட்டிலும் மணமுள்ள மலர்கள் எதுவும் இல்லை என வண்டு கூறவேண்டும் என்ற ஆதங்கம் தொனிக்கிறது. இது காதலர்க்கே
உரிய உளப்பாங்காகும்.’
– இப்படி திணை மற்றும் பாடல்கள் பகுப்பு முறையாலும், யதார்த்தமான சிந்தனையை உள்ளடக்கிய
சிறப்புரையாலும் இவ்வுரையைப் படித்து முடித்ததும் இதனைப் ‘புதிய உரை’ என ஏற்பதில் நமக்குத் தயக்கமிராது என்றே கருதுகிறேன். 0
நூல்: குறுந்தொகை – புதிய உரை
ஆசிரியர்: கவிஞர் சக்தி.
வெளியீடு: மகாகவி பதிப்பகம், பாரதி வீடு, கெடிலம், திருநாவலூர் 607 204.
- நான் மட்டும் இல்லையென்றால்
- கோரமுகம்
- திருப்பூரில் குறும்பட பயிற்சி முகாம்
- மறைந்த கவிஞர் தீட்சண்யனின் (எஸ்.ரி.பிறேமராஜன்) தீட்சண்யம் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா
- கடிதம்
- குரு அரவிந்தனின் நூல், ஒலிவட்டு வெளியீட்டு விழா
- நூல் அறிமுகம்: ‘குறுந்தொகை’க்கு ஒரு புதிய உரை
- என் எழுத்து அனுபவங்கள்
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது (2)
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது
- இந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.
- சந்தர்ப்பவாதிகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 60 << நமது பிரச்சனைகள் நீங்கும் >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -4
- வங்கிக்கு வெளியேயும் உள்ளேயும் பெய்யும் மழை
- இயல்பாய் இருப்பதில்..
- பயணம் சொல்லிப் போனவள்…
- நகரத்துப் புறாவும், நானும்!
- மழையும்…..மறுக்கப்பட்ட நானும்………..
- எனக்காக நீ கட்டுவதாய் சொன்ன சொர்க்கம்
- வார்த்தை நவம்பர் 2009 இதழில்…
- முள்பாதை 5
- வேத வனம் -விருட்சம் 59
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -7
- மீண்டும் துளிர்த்தது
- அம்ரிதா
- நுவல்