சுகுமாரன்
—-
திருவனந்தபுரம் பத்திரிகையாளர் சங்க அரங்கில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி. நிகழ்ச்சியின்
இன்றியமையாத நிரல்போல இலக்கிய நண்பர்கள் அரங்குக்கு வெளியில் நின்று உரையாடிக்
கொண்டிருந்தார்கள். கால்கள் காற்றில் மிதக்க கைகளால் அந்தரத்தில் துளாவியபடி போதையின்
உச்சத்தில் வந்த ஓர் இளம் கவிஞர் திட்டுத்திட்டாக நிற்கிற எல்லாரையும் பார்த்து உரத்த
குரலில் ‘ ‘ நான் அய்யப்பனாக வேண்டும் ? ‘ ‘ என்று கோரிக்கை விடுத்தார். சில விநாடிகள்
திகைத்து நின்ற இலக்கியவாதிகள் பிறகு தமக்குள் சிரித்துக்கொண்டு கலைந்தார்கள்.இளைஞர்
மட்டும் வேண்டுகோளை திரும்பத்திரும்ப முழங்கிக்கொண்டிருந்தார். பொறுமையிழந்த மூத்த
கவிஞர் ஒருவர் அய்யப்பமோகியை நெருங்கி, ‘ ‘உனக்கு அய்யப்பனாகவேண்டும்.அவ்வளவு
தானே! மிக எளிய வழி. கறுப்புவேட்டி கட்டி சபரிமலைக்கு மாலையணிந்து கொள். அப்புறம்
எல்லாரும் உன்னை அய்யப்பன் என்றே அழைப்பார்கள் ‘ ‘ என்று உபதேசித்தார்.இளைஞருக்கு
அந்த உபதேசம் ஏற்புடையதாக இல்லை. ‘ ‘நான் சாமிஅய்யப்பன் ஆகவேண்டாம். கவி
அய்யப்பனாக வேண்டும் ‘ என்று மூத்த கவியிடம் கர்ஜனை செய்துகொண்டிருந்தார் . மூத்தவர்
நிதானமாகச் சொன்னார்: ‘ ‘அது அவ்வளவு எளிதில்லை, நண்பா, ஆறுமுகத்துக்கும்
முத்தம்மாளுக்கும் பிள்ளையாக நீ இன்னொரு ஜென்மமெடுக்கவேண்டும். சுப்புலட்சுமி என்றொரு
அக்காள் இருந்து உன்னை ரட்சிக்கவேண்டும். வழிகளைஏற்படுத்துவதற்கான ஓயாத கால்கள்
வேண்டும். இன்னொரு அய்யப்பனுக்கு மலையாளக் கவிதையில் இடம் வேண்டும். உனக்கு
அது எதுவும் கிடையாது ‘ ‘.
@
சக ஊழியரும் மலையாளக் கவிஞருமான சி.எஸ்.ஜெயச்சந்திரன் கையிருப்பிலிருந்த மது
காலியாகிப் போன ஒரு விடுமுறை நாளில் கடை நோக்கி இறங்கியபோது அவரை மறித்த
குரல் கவி அய்யப்பனுடையது. மறுநாள் கோழிக்கோட்டில் நடைபெறவிருக்கும் கவியரங்கில்
கலந்து கொள்வதற்கான வழிச் செலவையும் அதற்கு முன்னோடியாக அன்றைய தினத்தைப்
புத்துணர்வுடன் கழிப்பதற்கான மதுச் செலவையும் ஜெயச்சந்திரன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மூத்த கவிஞனை உபசரிப்பது இளைய கவிஞனின் கடமையல்லவா ?இரண்டாவது
நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரு கவிஞர்களும் மதுச்சாலையை நெருங்கியபோது
பெரும்வரவேற்பு காத்திருந்தது. கேரளத்தின் சகல திசைகளிலும் கவிதைச் சிறகாக அலையும்
அய்யப்பன் குடிக்கவருகிறவர்களுக்கும் குடித்துக்கொண்டிருந்தவர்களுக்கும் தெரிந்தவர்.
அவருடைய ஏதேனும் கவிதையின் ஏதேனும் சிலவரிகளாவது அவர்களுக்குத் தெரியும்.
‘ ‘இன்றைக்கு அய்யப்பண்ணன் என்னுடைய விருந்தாளி. ‘ ‘ என்று ஒவ்வொருவரும் முன்வந்தனர்.
இரு கவிஞர்களின் அன்றைய மதுப் பொழுது அவர்களால் செலவில்லாமல் முழுமையடைந்தது.
அய்யப்பனின் கவிதை வாசிப்பால் மதுச்சாலை இலக்கிய அரங்காயிற்று.
இவ்விரு தகவல்களும் அவற்றின் ருசிகரத்துக்காக அல்ல; மலையாளக் கவிதையில்
ஏ.அய்யப்பனின் இருப்பையும் இடத்தையும் வலியுறுத்துவதற்காகக் குறிப்பிடப்பட்டவை.
@
நவீன மலையாளக் கவிதையில் அவர் தனிவழி அமைத்தவர்; தனித்தே நடப்பவர்.
பேதலிப்பின் தடுமாற்றங்களுக்கும் தெளிவின் பரவசத்துக்கும் இடையில் உருவாகிறவை அவரது
கவி வெளிகள்.கண்ணீர்த் துளியின் விசும்பலிலிருந்தும் குருதியோட்டத்தின் மெளனத்திலிருந்தும்
உயர்கிறது அவரது மொழி. அய்யப்பன் கவிதையையே வாழ்க்கையின் அடையாளமாகவும்
வாழ்க்கையையே கவிதையின் சாரமாகவும் கொண்டவர்.
ஏ.அய்யப்பன் என்ற ஆறுமுகன் அய்யப்பன் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பாலராமபுரத்தில்
பிறந்தவர். பிறந்த ஆண்டு 1949. குழந்தைப் பருவத்திலேயே பெற்றோரை இழந்த அய்யப்பனை
வளர்த்து ஆளாக்கியவர் அவரது சகோதரியான சுப்புலட்சுமியும் அவரது கணவரும்தான்.
பொற்கொல்லரான அய்யப்பனின் தந்தை ஆறுமுகம் சந்தேகத்துக்கிடமான வகையில்
மரணமடைந்தார்.சயனைட் விஷம் மூலம் நேர்ந்த இந்த மரணம் தற்கொலை என்றும் கொலை
என்றும் கருதப்படுகிற அவிழாப் புதிர். தகப்பனின் மறைவைத் தொடர்ந்து குடும்பம் வறுமையில்
சரிந்தது. நோயால் பாதிக்கப்பட்டிருந்த தாயாரும் காலமானார். சகோதரி மற்றும் உறவினர்
ஆதரவில் அய்யப்பன் பள்ளி இறுதிவரை பயின்றார். உயர்நிலைக் கல்வி முடித்து மூன்றாண்டுகள்
தமிழ்நாட்டில் வாசம்.பின்னர் கேரளம் திரும்பி தனிப் பயிற்சிக் கல்லூரியொன்றில் ஆசிரியராகவும்
பத்திரிகைகளில் பிழைதிருத்துநராகவும் உதிரியான பணிகளில் ஈடுபட்டார். இந்திய கம்யூனிஸ்ட்
கட்சித்தலைவர் (சி.பி.ஐ.) ஆர்.சுகதனின் தொடர்பு அய்யப்பனை இலக்கியம், அரசியல்
துறைகளில் ஈடுபடுத்தியது. கட்சிப் பத்திரிகையான ‘நவயுக ‘த்தின் ஆசிரியப் பிரிவில்
பணியாற்றியதுதான் அய்யப்பன் தனது வாழ்நாளில் ஒரு நிறுவனம் சார்ந்து செய்த வேலை.
எழுபதுகளில் ‘அக்ஷரம் ‘ என்ற சிற்றேட்டைத் தொடங்கி சில ஆண்டுகள் நடத்தினார்.குறுகிய
காலமே நீண்ட இதுபோன்ற பத்திரிகைப் பணிகளைத் தவிர்த்தால் அய்யப்பனின் முதன்மையான
அக்கறையும் பிழைப்பும் கவிதையெழுத்து மட்டுமே.
@
வேறுபட்ட கவிதையாக்கம் காரணமாக எழுபதுகளில் இலக்கியக் கவனத்துக்குள்ளான
அய்யப்பன் அதற்கு முன்னரே கவிதைகள் எழுதிப்பார்த்தவர். ஆரம்பக் காலக் கவிதைகள்
அன்று மலையாளத்தில் பிரபலமாக இருந்த மரபு சார்ந்த கவிதைகளின் பாதிப்பிலும் வடிவத்திலும்
எழுதப்பட்டவை. மலையாள கவிதையில் இது தவிர்க்க முடியாத ஒன்று. புதிய உணர்வு
நிலைகளும் புதிய வடிவங்களும் சரளமாகக் கையாளப்படும் இன்றும் கற்பனாவாதத்தின் இழை
அறுபடாமல் தொடர்கிறது என்பது இதன் காரணம். புதுவழிக் கவிஞர்களின் படைப்புக்குக்
கிடைப்பதை விடப் பன்மடங்கு வரவேற்பை கற்பனாவாதச் சார்புள்ள கவிஞர்கள் பெறுவதும்
இந்தக் காரணத்தாலேயே.
எண்பதுகளில் வெளியான ‘பலிக்குறிப்புகள் ‘ அய்யப்பனின் முதல் தொகுப்பு. இந்தத் தொகுப்பின்
கவிதைகளிலேயே அய்யப்பனின் வாழ்க்கைப் பார்வையும் கவிதைப் போக்கும் முன்னறிவிக்கப்
பட்டிருந்தன. ‘நான் பலியாடாகத் தொடர்வேன், யாராவது அப்படி ஆகவேண்டியிருப்பதனால்… ‘
என்று அவர் மேற்சொன்ன தொகுப்பில் எடுத்தாண்டிருக்கும் எட்வர்ட் ஆல்பியின் வாசகம்
அவரது வாழ்க்கை. ‘ ‘சொல்லையும் பொருளையும் தாண்டிய/ கவிஞனின் விரலடையாளம்/
கவிதை ‘ ‘ என்ற வாக்குமூலம் அவரது கவிதையியலின் ஆதாரம். ‘ ‘யாப்பில்லாத கவிதைதான்
என் வாழ்க்கை ‘ ‘ என்பது அவரது வரிகளில் ஒன்று.
புதிய கவிதை வடிவமாற்றம் அல்ல; உணர்வுநிலை மாற்றம் என்பதை திட்பமாக அறிந்த நவீன
கவிஞர்களில் ஒருவர் அய்யப்பன்.கச்சிதமான சொற்களில் முன் நகரும் மொழியில், செறிவான
படிமங்களில் கட்டப்படுபவை அய்யப்பன் கவிதைகள். பெரும்பாலும் படிமங்களின் வரிசையாக
அமைபவை. உடைந்த கண்ணடியின் எல்லாத் துண்டுகளிலும் தென்படும் காட்சிப் பிம்பங்களால்
தொகுக்கப்பட்டவை. இந்தக் காட்சிச் சிதறல்களுக்கிடையிலிருந்தே அய்யப்பனின் குரல்
எழுகிறது. வேட்டையாடப்படும் இரையின் கூக்குரல். தொடர்ந்து தோற்றுப்போக விதிக்கப்பட்ட
வனின் ஆற்றாமை. பாவமன்னிப்பின் இறைஞ்சுதல். ஒப்புக்கொள்ளலின் ஈனஸ்வரம்,
மனச்சிதைவின் ஆங்காரம், தனிமையின் புலம்பல், அந்நியப்பட்டவனின் கழிவிரக்கம்,பித்தனின்
கூச்சல், ஆதிமனிதனின் அழைப்பு – இவற்றில் ஒன்றை அய்யப்பனின் ஒவ்வொரு கவிதையிலும்
கேட்கலாம். தனது கவிதைக்குரலை ‘நிழலற்றவனின் அலறல் ‘ என்று அடையாளப்படுத்துகிறார்
அய்யப்பன்.
நடைமுறை மொழியின் விதிகளை மறுப்பது அய்யப்பனின் கவிதை மொழி. சமயங்களில் அது
சமூகத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்ட நாடோடியின் அலையும் மொழி. வேறு சில
சமயங்களில் அது மெளனத்தின் உறைந்த உரையாடல். அமைப்பு முறையிலும் இக் கவிதைகள்
மாமூலான வடிவங்களிலிருந்து வேறுபட்டவை. சிதைந்த படிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கச்சிதமும் அதே சமயத்தில் நாசூக்கற்றதுமான எதிர்மொழி கையாளப்படுகிறது. இந்த செய்திறன்
காரணமாக தன்னிச்சையான அல்லது சுதந்திரமான வடிவங்களை இக்கவிதைகள் வரித்துக்
கொள்கின்றன.
@
அய்யப்பனின் கவிதைகளில் இயங்கும் உலகம் நாம் காணும் உலகத்தின் தோற்றம் கொண்டது.
ஆனால் நாம் அறிந்திருக்கும் உலகமல்ல. அதன் பின்னிலுள்ள உலகம். ‘ ‘காரில் அடிபட்டு
இறந்துபோன வழிப்போக்கனின்/ ரணத்தில் மிதித்து ஆள்கூட்டம் நிற்க/ ‘ ‘ – இது நாம் காணும்
உலகம். ‘ ‘செத்தவனின் சட்டைப்பையிலிருந்து பறந்துபோன/ ஐந்து ரூபாயில்தான் என் கண்
போனது ‘ ‘- இது அய்யப்பன் சித்தரிக்கும் உலகம் (இரவுணவு -அத்தாழம்). எதிர்நிலைச் சித்தரிப்பும்
எதிர்மனநிலைகளும் ஊடாடுகிற ஓர் உலகையே கவிதைகள் முன்னிருத்துகின்றன.
அலைய விதிக்கப்பட்டவனின் வாழ்க்கை எல்லாராலும் நிரப்பப்பட்டது. அய்யப்பனின் கவிதை
இதற்கு மிகப் பொருத்தமான எடுத்துக்காட்டு. ‘காயமுற்றவனிடம் அவனது ரணம் எத்தனை
வேதனை தருகிறது என்று நான் கேட்பதில்லை; நானே காயமடைந்தவனாகிறேன் ‘ என்ற
வால்ட் விட்மனின் ஒப்புதல் அய்யப்பனிடம் எதார்த்தமாகிறது. மனித நெருக்கடிகளின் சகல
குணங்களும் வெவ்வேறு முகச் சாயைகளுடன் கவிதைகளில் இடம்பெறுகின்றன. நடைமுறை
மனிதர்களுடன் இலக்கியப் பாத்திரங்களும் இதிகாச நபர்களும் கலைஞர்களும் நடமாடுகிறார்கள்.
நேற்றின் கனவும் நாளையின் நம்பிக்கையும் (அவநம்பிக்கையும் கூட) ஒன்றிணைகிற இன்றின்
நீண்ட காலம் கவிதையில் விரிகிறது.
சமகால மலையாளி வாழ்க்கையின் சடங்குகளும் விசுவாசங்களும் கவிதையின் ஐதீகங்களாகின்றன.
நீத்தாருக்குச் செய்யும் பலிச் சடங்கு அய்யப்பனின் பல கவிதைகளில் இடம்பெறுகிறது.
சைவ மரபின் அடையாளங்களும் பைபிள் தருணங்களும் பெளத்த சந்தர்ப்பங்களும் கவிதையின்
அடிப்படைக்கூறுகளாகின்றன. சமகால அரசியல் அவலங்கள் பதிவாகின்றன. தனியனின்
கழிவிரக்கமும் பைத்தியக்காரனின் தடுமாற்றமும் தற்கொலைக்குத் துணிந்தவனின் பதற்றமும்
மதுவின் லாகிரியில் புண்களை ஆற்றிக்கொள்பவனின் ஆசுவாசமும் கவிதைவேளைகளாகின்றன.
‘ ‘சரீரம் நிறைய மண்ணும்/ மண் நிறைய இரத்தமும்/இரத்தம் நிறைய கவிதையும்/ கவிதை
நிறைய காலடிதடங்களுமுள்ள ‘ ‘வனாகிறார் இந்தக் கவிஞர்(ஞானஸ்நானம்).
@
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதையின் தனிவழியில் நடந்து கொண்டிருப்பவர்
அய்யப்பன். இளைய தலைமுறைக் கவிஞர்களிடமும் வாசகர்களிடமும் அய்யப்பனின் வலுவான
செல்வாக்கை சமயங்களில் காணமுடிகிறது. அவரது கவிதைகளை விடவும் அவரது வாழ்க்கை
அய்யப்பனை நட்சத்திரமாக்கியிருக்கிறது. அய்யப்பனை மையப்படுத்தியே நான்கோ ஐந்தோ
கதைகளும் பத்துப் பன்னிரண்டு கவிதைகளும் எழுதப்பட்டுள்ளன. கருத்துருவத்தின் பாரம்
சுமக்காமலும் பண்பாட்டின்கவசம் அணியாமலும் பாமரனின் ஞானத்தோடு அலையும் இந்தக்
கவிஞர் அந்த இடத்தை அடைந்திருப்பது தற்செயலானதல்ல.
அய்யப்பனின் சில கவிதைகளை எண்பதுகளின் மத்தியில் மொழிபெயர்த்து ‘பார்வை ‘ என்ற
சிற்றேட்டில் வெளியிட்டிருந்தது நினைவில் புரள்கிறது. நவீன தமிழ்க்கவிதை புதிய மொழிகளும்
புதிய மனத்தளங்களுமாக அனுபவ விரிவுகொண்டு முன் நகரும் சூழலில் அய்யப்பனின்
கவிதைகள் அறிமுகமாவது நம்து கவிதையை செழுமைப்படுத்தத் தோதாக அமையும்.
என்.டி.ராஜ்குமாரின் மொழியாக்கத்தில் கவனத்துக்குரியதாகத் தோன்றிய அம்சம் இருமொழி
விரவிய நடை. ஒரு பரிசோதனையான இந்த எத்தனம் ராஜ்குமாரிடம் அநாயாசமாக நிறைவேறி
யிருக்கிறது. திருவிதாங்கூர் மலையாளமும் நாஞ்சில் நாட்டுத் தமிழும் பகிர்ந்துகொள்ளும்
பொதுத் தன்மை சார்ந்த அநாயாசம். மயில்பீலி,அத்தாழம், காஞ்சிரம்,தோக்கு, வெப்புறாளம்
போன்ற சொற்கள் இருவரின் கவிதைகளிலும் இயல்பாகப் புழங்குபவை. மனக்கொந்தளிப்புகள்
படிமங்களாகும் அய்யப்பனின் உலகமும் மூப்ப மூப்பத்திகளும் பேய்களும் கடந்து வரும்
ராஜ்குமாரின் அதிமானுட உலகமும் ஆதி மனநிலைகளைச் சித்தரிப்பவை என்ற அடிப்படையில்
ஒற்றுமையுள்ளவை. எனவே, ‘பச்சை மிளகாய் அரிந்துபோட்ட கருவாட்டுக் குழம்பின் ருசியும்
காரமுமுள்ள கவிதைகளை ‘ எழுதுபவர் அந்த காரமான ருசியை அய்யப்பனின் வார்த்தைகளுக்குள்
பெயர்த்திருப்பது அசாதாரணமான செயலல்ல.
திருவனந்தபுரம் சுகுமாரன்
1 மார்ச் 2005
@
குறிப்பு: ‘புது எழுத்து ‘ வெளியிடும் ‘அய்யப்பன் கவிதைகள் ‘- மலையாளத்திலிருந்து
தமிழாக்கம் என்.டி.ராஜ்குமார்- தொகுப்புக்கு எழுதிய முன்னுரை.
@
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-3
- கவிதைகள்
- மனிதச் சுனாமிகள்
- நாவில் கரைந்துகொண்டிருக்கும் கண்ணீர்
- பாவம்
- கவிதை
- அவரால்…
- கூ ற ா த து கூ ற ல் – கவிதைப் பம்பரம்
- கீதாஞ்சலி (16) – குழந்தைக்குப் போடும் கால்கட்டு! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- விரல்கள்
- மழை நனைகிறது….
- சுவாசத்தில் திணறும் காற்று
- கவிதைகள்
- செல்வம் அருளானந்தம் எழுதிய எள்ளிருக்கும் இடமின்றி ஒரு கனதி வாய்ந்த கதை (திண்ணை, 2005-03-10)
- ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம் ‘
- கவிதைகள்
- ஒடுக்கப்பட்ட நுண்தரப்புகளிலிருந்து விடுதலை சாத்தியமா ?
- வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும் – முன்னுரை
- நி ழ ல ற் ற வ னி ன் அ ல ற ல்
- நிதி சால சுகமா ? மம்மத பந்தனயுத நர ஸ்துதி சுகமா ?
- யாழன் ஆதி கவிதைகள் – கண்ணீரும் தனிமையும்
- நி ழ ல ற் ற வ னி ன் அ ல ற ல்
- கவிமாலை (26/02/2005)
- ‘பதிவுகள் ‘/ ‘தமிழர் மத்தியில் ‘ ஆதரவுச் சிறுகதைபோட்டி முடிவுகள் 2004!
- மூன்றாவது மொழிப்போரும் கீறல் விழுந்த கிலுகிலுப்பைகளும்
- ‘சோ ‘ எனும் சந்தனம்
- ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் பரிசு
- கருமையம் அமைப்பின் நாடக விமர்சனக்கூட்டம்
- நீங்கள் தொலைவிலிருந்தபோதும் உங்கள் அருகிலிருக்கும் இணையப் புத்தகக் கடை
- கல்லூரிக் காலம்!
- கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும் : பயங்கரவாதம் விரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! (தொடர்:3)
- யுக யுகங்களாய்ப் பெயர்ந்த கண்டங்கள். மறைந்த விலங்கினங்கள். கண்டங்களை நகர்த்தும் அட்லாண்டிக் கடற்தட்டு. குறுகிச் சுருங்கும் பசிபி
- நூலறிமுகம்! – ‘மிஷியோ ஹகு ‘வின் ‘ஹைபர் ஸ்பேஸ் ‘!
- து ை ண – 7 ( குறுநாவல்)
- அறிவியல் கதை – தக்காளித் தோட்டம் (மூலம் : சார்லஸ் டெக்ஸ்டர் வார்ட்)
- ஒத்தை…
- கதவு திறந்தது
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) – காட்சி நான்கு – அயோத்திய புரியில் ஆரம்பித்த அசுவமேத யாகம்
- பச்சைக்கொலை
- இந்தியப் பெருங்கடல்
- வண்ணத்துப்பூச்சியுடன் வாழ முற்படுதல்
- மாங்கல்யச் ‘சரடு ‘கள்
- தெப்பம் – நாடகம்
- பிறந்தநாள் பரிசு
- மனக்கோலம்
- ராமானுஜனின் இன்னொரு கணக்கு புரிந்தது
- திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி முடிவுகள்
- தென்னகத்தில் இனக்கலப்பா ?
- சீனா – துயிலெழுந்த டிராகன்
- சிந்திக்க ஒரு நொடி- அரசியலும் சராசரி மனிதனும்
- பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை
- பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை
- பெரிய புராணம் – 33 – 19. அரிவாட்டாய நாயனார் புராணம்
- கபீர் நெய்துகொண்டிருக்கிறார்…
- எச்ச மிகுதிகள்
- அன்பின் வெகுமானமாக…
- எனது முதலாவது வார்த்தை..
- நிழல்களைத் தேடி….
- அவரால்…