யுகபாரதி
களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதைகள் என் கைக்கு எழுத்துப்பிரதியாகக் கிடைத்தபோது சிறுகதைகள் குறித்து நான் என்ன எழுதிவிட முடியும் என்றுதான் பட்டது. மேலும், கவிதை எழுத முயற்சி செய்கிறவனாக அறியப்பட்ட, சினிமாப் பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கும் என்னிடம் களந்தை அறிய விரும்புவது என்ன என்ற கேள்வியே எழுந்தது.
நாகூர் ரூமி மூலம் களந்தையை ஏதோ ஒரு இலக்கிய விழாவில்தான் முதலில் சந்தித்தேன். சிநேகமான அவருடைய புன்னகை, வாஞ்சையான விசாரிப்பு என்ற அளவில் நிகழ்ந்த பழக்கம் அவருடைய சிறுகதைகளைப் படிக்க நேர்கையில் பழக்கம் பிரியத்தை அதிகப்படுத்திவிட்டது. ‘கணையாழி’யில் அவருடைய கதைகளை தேர்வு செய்திருக்கிறேன். ‘படித்துறை’யிலும் அவருடைய படைப்பை வாங்கி பிரசுரிப்பதை கௌரவமாக நினைத்திருக்கிறேன். ஆனால், அதனால் எல்லாம் அவர் சிறுகதைகள் குறித்து நான் எழுத வேண்டும் என விரும்பியிருப்பார் என நம்ப முடியாது. ஒவ்வொரு சந்திப்பிலும் அவ்வப்போது அவர் எழுதும் சிறுகதைகள் குறித்து உங்கள் (சிறுபத்திரிகைகளில் பிரசுரமாகும் சமயங்களில்) கதையை வாசித்தேன் என்பதோடு நிறுத்திக் கொள்வேன்.
சிறுகதைகளை நான் வாசிப்பேன் என்ற ஒற்றைத் தகவலை முன்னிட்டு அவர் எனக்கு வழங்கி இருக்கும் அணிந்துரைப் பணியை மிகத் தாமதமாக எழுதியும் முடித்துவிட்டேன் என்று சொன்னபோது என்ன எழுதியிருக்கிறீர்கள் என்றார். வாழ்த்துரை போல என்று முதல் படிவத்தைக் கையில் வைத்துக்கொண்டு சொன்னேன். உடனே அவர் உங்களிடமிருந்து நான் வாழ்த்துரை எதிர்பார்க்கவில்லை. கூடுதலாகக் கதைகளைப் பற்றி எழுதுங்கள் என்று தொலைபேசியைத் துண்டித்து விட்டார்.
மீண்டும் அவர் அன்பினால் இரண்டாவது முறையும் வாசிக்கலானேன். முதல்முறை வாசித்ததைவிட இரண்டாவது முறை வாசிக்கும்போது அவருடைய கதைகள் புதிய தொனியைக் கொடுத்தன. முதல் வாசிப்பில் எனக்கு கதையின் பலஹீனங்களாக நான் கருதிய யாவும் அவருடைய தனித்துவமாகப் பட்டன. குறிப்பாக, இஸ்லாமியர்களின் வழக்கச் சொற்களுக்கான விளக்கங்கள். ஒரு மையமான யூகத்திலேயே வாசித்து பொருள் கொள்ளப்படும் சொற்களுக்கான அர்த்தங்கள் இரண்டாவது வாசிப்பில் எளிதாக புரியலாயின.
பொதுவாக வட்டாரச் சிறுகதைகளில் ஏற்படும் வாசிப்பு சிக்கல் இவற்றிலும் நேர்கின்றன என்றாலும் களந்தை அச்சிக்கலை லாவகமாகச் சமாளித்து விடுகிறார். மேலும், அதுவே கதைகளை புதுமெருகாக்கியும் விடுகிறது. ‘மோகினி’ சிறுகதையில் ஒரு பத்தி முழுக்க களந்தை தன் கதை சொல்லும் பாங்கை விவரித்து விடுகிறார். கதைக்குள் கதாசிரியனின் செயல்பாடு வெறும் சம்பவத்தை அடுக்குவது அல்ல என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது-
கடைசியில் என் கதையை நான் என்னிடமிருந்து துவங்க யாரும் அனுமதிக்கவில்லை. நான் அதற்குப் பிறகும் கதையைச் சொல்ல ஆரம்பித்தபோது கேட்டுக் கொண்டிருந்த எல்லா நூல்களுமே அவரவரும் கேள்விப்பட்டதை இடையிலே புகுந்து சொல்லச் சொல்ல என் குரலுக்கு அங்கே இடமேயில்லாமல் போயிற்று. என் பாத்திரம் கதைக்குள் எங்கே இருக்கிறதுஎன்று நான் தேட வேண்டியதாயிற்று.
களந்தை சொல்லும்படிதான் எனக்கும் நேர்ந்தது- களந்தை எடுத்து சொல்லும் கதைகளில் களந்தையின் பகுதி என்று நான் கருதிக்கொள்வது இம்மாதிரியான கூற்றுகள்தான். தன்னை சொல்ல வந்து கதைக்குள் தொலைந்துபோகும் கதாசிரியன். இக்கதையின் வெகுமதியிலாவது கிடைப்பானா?
களந்தை தனக்கென்றொரு கதை சொல்லும் முறைமையைக் கவனமாக எல்லாக் கதையிலும் கைகொண்டுவிடுகிறார். கதைமாந்தராக வரும் பாத்திரம் இறுதியில் ஒரு கலைப் படைப்புக்கான நேர்த்தியை தொட்டு விடுகிறது. அந்த நேர்த்தி வலிந்து செய்யப்படுவதுபோல இல்லாமல் இயல்பாகவே இந்த எல்லையைப் போய் சேர்வதே அவரின் சிறப்பு. ‘பிறைக்கூத்து’ அத்தகைய கதைகளில் ஒன்று. ஹஸீனா பெத்தா கதையில் இறுதியாக விடும் சாபம் ஒட்டுமொத்த குழப்பத்துக்குமான தீர்வாகத் தோன்றினாலும் அதுவே ஹஸீனாவால் இயன்றது என்பதை உணர முடிகிறது. பெருநாள் கொண்டாட்டத்துக்கு வருசம்தோறும் பிறைபார்த்தல் தொடர்பாக எழும் சர்ச்சையை என்னளவில் இம்மாதிரி நாகரீகத்தோடு யார் மனமும் புண்டாதவாறு சொன்னதாகத் தெரியவில்லை. மார்க்கம் குறித்து எழுதப் புகும் முன் அவருக்கு உள்ள தெளிவு மார்க்கம் குறித்து எழுதும் இன்ன பிறராலும் கவனிக்கப்பட வேண்டியது. ஒருவிதத்தில் இதை தப்பித்தல் அல்லது தைரியமற்றத்தனம் என்று சிறுதை மோஸ்தர்கள் விமர்சித்தாலும் இதுவே ஒரு கதாசிரியனின் ஆளுமை என்பேன்.
களந்தையின் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் எல்லோர் விதத்தில் நம்மை நினைவு கொள்ளச் செய்கின்றன. ஒரு விசேஷம், ஒரு குறும்பு, ஒரு அலட்டல், ஒரு பெருமை என்று அவர் தேர்ந்தெடுக்கும் மாந்தர்கள் நம்மில்தான் வாழ்கிறார்களா என யோசிக்க வைக்கிறது. ‘வறட்சி’ கதையில் வரும் ரவூஃபின், மன்சூர், ‘வதம்’ கதையில் வரும் முரளீதர், லெட்சுமணன் என்று கதைக்குக் கதை சொல்லலாம்.
தன்னுள் பதிந்து கிடக்கும் காழ்ப்பை அல்லது அதீத தற்பெருமையை விவரிக்கும் இடங்களில் களந்தை கதையின் தன்மை மாறாது கையாளக் கற்றிருக்கிறார். கதையின் முதல் பத்தியும் இறுதி பத்தியும் அவர் ஏற்கனவே தீர்மானம் செய்திருக்கும் வெளி உலக தகடுகளை கழுவும் பணியை செய்துவிடுகின்றன. கதையின் போக்கை கெடுக்காதவாறு அவருடய சொல்லாடல்கள் அமைந்திருக்கின்றன. பொதுவாக உரையாடல் பாணியை அவர் அதிகம் விரும்புவதில்லைபோல. தேவையான இடங்களில் மாத்திரமே உரையாடல்களைப் பிரயோகிக்கிறார். கதையில் யாரும் கதைக்கு வெளியே பேசுவதில்லை. நிஜத்தில் களந்தையும் அப்படியே என்பதை நானறிவேன்.
‘எல்லை’ சிறுகதையில் ஸபீனாவின் மன உளைச்சலை சொல்லுகையில் களந்தை நெகிழ்ந்து உருக்கும் இடங்கள் கவிஞராகவும் எனக்குக் காட்டின. ‘வார்த்தைகள் தீச்சரங்கள்’ என்று முதலில் போட்டுவிடு அது எப்படி என்று பின்னால் வருகிறார். கதையின் முழு வடிவமும் முன்னமே மனதில் நிகழ்த்திப் பார்க்கப்பட்டு வெள்ள ஆற்றின் மிடுக்குடன் களந்தை வெளிப்படுத்தும் விதம் வியக்க வைக்கிறது.
மன உணர்வுகளின் குதிரைப் பாய்ச்சலால் வெகு சீரான அழகோடு ‘உறவுச்சங்கிலி’யில் களந்தை முடிச்சிடுகிறார். ‘தப்லீக் பயணம்’ புறப்படும் புறப்படும் கணவனை ஆயிரமாயிரம் கனவுகளை உள்ளடக்கிக் கொண்டு வழியனுப்பும் மனைவியின் தவிப்பும் தாகிப்பும் கண நேர கலவரத்துக்கு நம்மை உட்படுத்தி விடுகிறது. இவ்வாறாக, ஒவ்வொரு கதையிலும், களந்தை விஸ்தரிக்கும் உலகம் புதிதாகவும் இது காரும் என்னால் அறியப்படாத உலகமாகவும் இருப்பதால் இத்தொகுப்பு என்னை வெகுவாக ஈர்க்கிறது.
இவருடைய முந்தைய தொகுப்புகளிலிருந்து ‘பிறைக்கூத்து’ முற்றிலும் மாறுபட்டிருப்பது போலவே தோன்றுகிறது. எதிர்பார்ப்போ அதீத பிரயாசையோ கட்டுசெட்டான வாழ்க்கைக்கு அப்பாலோ இவருடைய கதைகள் நகர்வதில்லை. நமக்குள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நாம் அறியாதது என்கிற மட்டில் இது கவனத்துக்குரியது.
களந்தை என்னிடம் சொன்னது போலவே எல்லோரிடமும் வாழ்த்துக்களை எதிர்பார்க்கவில்லை. தன் படைப்புகள் கொண்டாடப்பட வேண்டும் என்று அபிப்ராயம் கொள்ளவில்லை. அவர் நடக்கும் வழியை நமக்குக் காட்டுகிறார். அந்த வழியில் மோகினியும், மாயக்குதிரையும், பிறைக்கூத்தும் நம் கண்ணில் படுகின்றன. வெறும் பாராட்டை ஒரு நல்ல படைப்பாளி ஏற்பதில்லை. அந்தப் பாராட்டுக்கு அப்பாலுள்ள வெளியை அறியவே முற்படுவான். களந்தை அத்தகைய படைப்பாளிகளில் ஒருவர்.
ஒரே மூச்சில் கதைகளை வாசித்துவிட்டு கருத்து சொல்ல இயலாத கதைகளையே களந்தை சொல்கிறார். ஒரு கதை சில வாரங்களை தின்றுவிடும் பருண்மையோடு இருக்கிறது. நினைவுக் குளத்தில் விழுந்து நீந்தி கரையேற சிலருக்கு வாரங்கள் மாதங்களாகவும் கூடும். சிலருக்கு வருடங்களும் ஆகும். இஸ்லாமியக் கதைக் களனில் தனித்த அடையாளத்தோடு தொடர்ச்சியாக இயங்கி வரும் களந்தையை தமிழ்கூறும் சிறுகதை உலகு போற்றி வளர்த்தெடுக்க வேண்டும். அவருடைய அசாத்திய கதை சொல்லும் திறனை உற்சாகத்தோடு வரவேற்க வேண்டும். இனி களந்தையை விழாக்களில் சந்திக்க நேர்கையில் அவர் புன்முறுவலுக்கு மாற்றாக என் புன்முறுவல் வலிய அன்போடு வெளிப்படும். இத்தொகுப்பை வாசிக்கும் நீங்களும் கதையே சொல்வீர்கள். பிறைக்கூத்து, நிறைக்கூத்தாய் நெஞ்சில் நிழலாடும்.
நிறைய ப்ரியமுடன்,
யுகபாரதி
களந்தை பீர்முகம்மது எழுதிய ‘பிறைக்கூத்து’ நூலுக்கு கவிஞர் யுகபாரதியின் முன்னீடு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10
- சுவர்க்கம்
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றல் படைத்த பூதக் காந்த விண்மீன் புரியும் பாதிப்புகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -4
- “மாற்றம்”
- தமிழ் சேவைக்கு இயல் விருது.
- எழுத்தாளர் “நிலக்கிளி” அ.பாலமனோகரனின் “BLEEDING HEARTS” நூல்
- சங்கச் சுரங்கம் – 16: நெடுநல்வாடை
- விமர்சனக் கடிதம் – 1 ( திரு.பாரதிமணியின் ‘பல நேரங்களில் பலமனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து)
- நிழலாடும் கூத்துகள் : களந்தை பீர்முகம்மது எழுதிய ‘பிறைக்கூத்து’ நூலுக்கு கவிஞர் யுகபாரதியின் முன்னீடு
- மலையாள இலக்கியத்தின் மாபெரும் ஆளுமை: “வைக்கம் முகம்மது பஷீர் -காலம் முழுதும் கலை”
- வயதாகியும் பொடியன்கள்
- மலைகளின் பறத்தல்
- மகாகவியின் ஆறுகாவியங்கள் வெளியீடு
- பேராசிரியர் ஏ.எஸ். முகம்மது ர·பி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
- நாகூர் ரூமியின் இலக்கிய அறிவு
- பேராசிரியர் நாகூர் ரூமிக்கு பதில்கள்
- வைகைச் செல்வியின் ஆவணப்படம் வெளியீட்டுப் படங்கள்
- விருட்ச துரோகம்
- என்றாலும்…
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஐந்தாவது அத்தியாயம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -38 << ஆயிரம் விழிகள் எனக்கு >>
- வேத வனம் விருட்சம் 36
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 3
- ஸெங் ஹெ-யின் பயணங்கள்
- மரமணமில்லாத மனிதர் : பாரதியின் கடிதங்கள்-(தொகுப்பு: ரா.அ.பத்மநாபன்)
- கதைசொல்லி சாதத் ஹசன் மண்டோவின் மறுபக்கம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தேழு
- ஞாபக வெளி
- பட்டறிவு
- திமிர் பிடிச்சவ