‘நிலாக்கீற்று ‘ தொகுப்பு-2

This entry is part [part not set] of 34 in the series 20051223_Issue

நாகர்கோவில்-என்.எஸ்.பி


இலக்கியம்

இலக்கியம் ஒரு கலை.

கலையின் நோக்கம் அழகிய அநுபவப் பகிர்வு

சிற்பம் கல்லில் அழகாக அநுபவத்தை வெளியிடுகிறது

ஓவியம் வரை கோடுகளிலும் வண்ணங்களிலும்

நடனம் மெய்ப்பாடுகளில்

இசை ஓசையில்

இலக்கியமோ மொழியில்

அநுபவ வெளியீடு இலக்கியத்தின் உயிர்ப்பு அதுவும் அழகாக

கருத்து-உணர்ச்சி-கற்பனை-வடிவம் என்னும் நான்கும் ஒருங்கியைந்து பின்னிய கூட்டமுதாக அனுபவ வெளியீடு அமையும். மொழிப்பயிற்சி-நன்மதிப்பு-பொழுது போக்கு-இன்ப ஆக்கம்-துன்ப நீக்கம்-சமூக உணர்வு-வரலாற்றுத்துணை-அறநெறிப்போதனை- பண்பாட்டுப் பேழை-வழிகாட்டும் ஒளி விளக்கு என்னும் பன்முகப்பயன்பாடுகளை உடையது இலக்கியம்.

-விவேகவாணி [அக்டோபர்-2000]

இனிய காண்க…

‘இன்னாதம்ம இவ்வுலகு இனிய காண்க

இதன் இயல்புணர்ந்தோரே ‘ – என்கிறது புறநானூறு

ஒரு ஸென் ஞானியிடம் சீடன் மீண்டும் மீண்டும்

உலகின் அவலங்கள் பற்றி வினவிக் கொண்டே

உடன் நடந்தானாம்.

பதில் கூறாது அவனுடன் நடந்த ஞானி

சந்தையில் நுழைந்தாராம்.

சந்தையில் –

மரக்கடையில் சில மரத்துண்டுகளும்,

தோல் விற்கும் இடத்தில் சில நரம்புகளும்

இரும்புக்கடையில் சில ஆணிகளும்

எடுத்து வந்தார் அவர்.

சிறிது நேரத்தில் ஓர் இசைக்கருவி அவர் கரங்களில் தயாரானது.

மீட்டினார்.

மெல்ல மெல்ல

அந்த அழுக்குச் சந்தை

ஓர் அற்புத சொர்க்கம் ஆயிற்று

அனைவரும் அவரை சூழ்ந்தனர்;

மெய்ம்மறந்தனர்.

உலகிலும் நாம் செய்யவேண்டியது இதுதான் என உணர்த்தினார் ஞானி.

திக்-நாட்-ஹான்ஹ் எனும் வியட்நாம் துறவி உவமை தருவார்: தொலைக்காட்சியில் சேனல்கள் பல; நமக்கு வேண்டியதைத் தேர்வு செய்வது நம் கையில்தானே!

-விவேகவாணி [ஏப்ரல்-2000]

[இவை விவேகானந்த கேந்திரத்தின் மாத இதழான ‘விவேகவாணி ‘ யில் கடைசிப்பக்கக் கட்டுரைகளாக வெளிவந்துக்கொண்டிருப்பவை. என்.எஸ்.பி தெ.தி.இந்துக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி துறைத்தலைவராக ஓய்வுபெற்றவர்.]

Series Navigation

நாகர்கோவில் என்.எஸ்.பி

நாகர்கோவில் என்.எஸ்.பி