சந்திரவதனா
கிணற்றுக்குள் வீழ்ந்த மயிர்க்கொட்டிப் புழுப் போல் துளசியின் மனசுக்குள் நினைவுகள் அருவருப்பாய் நெளிந்து கொண்டே இருந்தன. வெளியிலே கொட்டி விடத் துடித்தாலும் முடியாத படி எதுவோ தடுத்தது.
வெளியில் பனியை வெயில் மெதுமெதுவாகக் கரைத்துக் கொண்டிருந்த மதியப் பொழுதில் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தவள் – காலையில் பெரியம்மா வேலைக்குப் போக முன்னம் சமைத்து வைத்து விட்டுப் போனதை எடுத்து சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சியைப் பார்க்கத் தொடங்கினாள்.
தொலைக்காட்சியில் பருந்து ஒன்று வட்ட மிட்டுக் கொண்டு கீழே எதையோ குறிவைத்து வந்து கொண்டிருந்தது. திக்கென்ற மனதுடன் அவள் பார்த்துக் கொண்டிருக்கவே பருந்தின் வருகையை உணர்ந்த மான்குட்டியொன்று எங்கே ஓடுவது என்று தெரியாது காதை உயர்த்தி விரித்துத் தடமடித்து தாயைத் தேடி.. ஓட விளைந்து…. இப்போ அவளுக்கு தானே மான்குட்டியானது போன்றதொரு பிரமை. பச்சாபத்தாபமான உணர்வு… பயம்… நடுக்கம்… ஒடுங்கி ஒடுங்கி நடுங்கினாள்.
இப்போதெல்லாம் இப்படியானதொரு அவஸ்தை அவளை வாட்டிக் கொண்டே இருக்கிறது. எதைப் பார்த்தாலும் எந்த அவலமானாலும் அதை தனதாக்கி தானே அதுவாகிய கற்பனையில் துடிப்பதும் துவளுவதுமாய்….
மான்குட்டி தன் உயிர் காக்க பாய்ந்து பாய்ந்து தாவித் தாவி ஓடத் தொடங்கியிருந்தது. துளசி இறைவனை மன்றாடினாள். காப்பாற்று.. காப்பாற்று.. மன்றாட்டம் அவன் காதில் விழவில்லையோ… ? அல்லது விழுவதற்கு முன் பருந்து முந்தி விட்டதோ…! அவக்கென மான்குட்டியின் மேல் விழுந்து கவ்விக் கொண்டு மேலெழுந்தது.
இப்போது துளசியின் பிரார்த்தனை – பருந்து தவறி வாயைத் திறக்கோணும்..! மான் குட்டி கீழே விழுந்து தப்பி விடோணும்..! என்றிருந்தது. ஆனால் பருந்து இது விடயத்தில் வலு கவனம். வைத்த குறியை தப்ப விட்டோ
எடுத்த இரையை சுவைக்காமல் விட்டோ அதற்குப் பழக்கமில்லை.
அது இன்னும் இன்னும் மான்குட்டியை தனக்குள் இறுக்கிக் கொண்டது.
அவளுக்கு அழுகையாய் வந்து விட்டது. விக்கி விக்கி அழத் தொடங்கினாள்: மான்குட்டிக்காக அழுகிறாளா.. ? அல்லது தனக்காக அழுகிறாளா.. ? அவளுக்கே தெரியவில்லை.
இன்று காலை அவளது அப்பா ரெலிபோனில் அவளை அழைத்து ‘துளசி எப்படியம்மா இருக்கிறாய்.. ? ‘ என்று நெகிழ்ந்து நாத்தழுதழுக்கப் கேட்ட போது எல்லாவற்றையும் சொல்லி விடலாமா என்றுதான் யோசித்தாள். எப்படிச் சொல்வது என்று தெரியாத தடுமாற்றமும், அப்பா பாவம்… பருத்தித்துறையிலிருந்து தன்னோடு பேச என்று எவ்வளவு கஸ்டப் பட்டு வவுனியா வரை வந்திருப்பார் என்ற அனுதாபம் கலந்த எண்ணமும் அவளைப் பேச விடாது தடுத்து விட்டன.
துளசி யேர்மனிக்குப் புலம் பெயர்ந்து கிட்டத் தட்ட ஒரு வருடமாகிறது. அவளாக விரும்பி அவள் புலம் பெயரவில்லை.
நிறைந்த நம்பிக்கையோடும் அவளது எதிர் காலம் பற்றிய கனவுகளோடும்
‘பிள்ளை என்னாலை உன்னை இங்கை வைச்சுக் காப்பாத்தேலாது. ஆமியின்ரை கொலை வெறி ஒரு புறம். காமவெறி மறுபுறம். இதுகளுக்கை பொம்பிளைப் பிள்ளை உன்னை யேர்மனிக்கு அனுப்ப வசதி இருந்தும் அனுப்பாமல் வைச்சிருக்கிறது பிழையெண்டுதான் எனக்குப் படுது. ‘
என்று சொல்லி அப்பாதான் அவளை யேர்மனிக்குப் புலம் பெயர வைத்தார்.
அம்மாவுக்கு அவளைத் தன்னந்தனியாக அனுப்ப துளியும் இஸ்டமில்லை.
அப்பாவோ ‘உம்மடை கண்மூடித் தனமான பாசத்துக்கு அவளை இங்கை வைச்சுப் பலி குடுக்கப் போறீரே…! ‘ என்று கோபமாகக் கத்தி அம்மாவைப் பேசி விட்டார். அப்பாவின் முழு நம்பிக்கையும் பெண்பிள்ளையே இல்லாத யேர்மனியில் வாழும் அவரது அண்ணன் அவளைச் சொந்தப் பிள்ளை போல வைத்துப் பார்ப்பார் என்பதுதான்.
அம்மாவுக்குப் பயம் – கதைகளிலும் படங்களிலும் வருவது போல் பெரியம்மா அவளைக் கொடுமைப் படுத்தி விடுவாவோ என்று. அதற்கு மேலால் அம்மாவுக்கு துளசியைப் பிரிய விருப்பமே இல்லை. பிரிவுத்துயரை தாங்கும் தைரியம் தனக்கில்லை என்றே அம்மா அழுதாள்.
‘பிள்ளையள் எப்பவும் உம்மோடைதான் இருக்குங்கள் என்று நினைக்கிறீரே
அதுகள் ஒருநாளைக்கு எம்மை விட்டுப் போய் தமக்கெண்டொரு வாழ்க்கையை தொடங்கத்தானே வேணும். ‘ அப்பா அம்மாவைச் சமாளிக்க இப்படித்தான் சொன்னார்.
‘அதுக்கு இவ்வளவு வேளைக்கே பிள்ளைக்கு பன்ரண்டு வயசாயிருக்கக்கையே பிரியோணுமோ…! ‘ என்று அம்மா கதறினாள்.
நாட்டு நிலைமைகளைச் சுட்டிக் காட்டி ஏதேதோ கதைத்து அப்பா துளசியை யேர்மனிக்கு அனுப்பி விட்டார். அம்மாவின் சம்மதம் பற்றி அவர் அவ்வளவாக அக்கறை கொள்ளவில்லை. அவரும் தான் சொன்னால் மனைவி அதை ஆமோதிக்க வேண்டும் என்று நினைக்கும் ரகம்தான்.
அவருக்கு தனது அண்ணன் என்றால் உயிர். உலகத்திலேயே அண்ணன் தம்பி பாசம்தான் உயர்ந்தது என்பது போல கண்கள் பனிக்கப் பேசுவார்.
அந்த அப்பாவின் உயிருக்குயிரான அண்ணனான பெரியப்பாவிடம் துளசி யேர்மனிக்கு வந்த போது பெரியப்பா அவளை அன்பிலே குளிப்பாட்டினார். அம்மா, அப்பாவைப் பிரிந்து வந்த பிரிவின் துயரை அவளும் பெரியப்பாவின் அன்பிலும் அணைப்பிலும் மறக்க முயன்றாள்.
பெரியப்பா எப்போ பார்த்தாலும் தமிழரின் கலாச்சாரம் பண்பாடு.. மரபு போன்றன பற்றியே வீட்டில் பெரியம்மாவுடன் பேசிக் கொண்டிருப்பார். வீட்டில் மட்டுமல்ல வெளியிலும் எல்லோருடனும் எல்லா விடயங்களிலும் கலாச்சாரம் சம்பிரதாயம் மரபு போன்ற விடயங்களைச் சொல்லிச் சொல்லியே பழகுவதும் செயற் படுவதுமாய் இருப்பார். மானம் மரியாதை என்று நிறையவே பேசுவார்.
குடும்பமானத்துக்கு எந்தக் களங்கமும் வந்து விடக் கூடாதெனச் சொல்லி ஆண்கள் எவரும் கண்ட படி வீட்டுக்குள் நுழைவதற்கு அனுமதிக்க மாட்டார். துளசி கலாச்சாரத்திலிருந்து வழுவி விடாதிருக்க வேண்டுமென்று வலியுறுத்தி அதனைச் சாட்டாக வைத்தே அவளை எந்த ஆடவனுடனும் பழக விட மாட்டார்.
ஊரிலிருந்த சுதந்திரம் கூட புலத்தில் மறுக்கப் பட்டதில் துளசி மிகவும் சங்கடப் பட்டாள். பன்னிரண்டு பதின்மூன்று வயதுகளில் உடலில் ஏற்படும் இயல்பான மாற்றங்கள் ஒரு புறமும், அந்த நேரக் கனவுகள் ஆசைகள் குழந்தைத் தனம் கலையாத தன்மைகள் போன்றவற்றால் ஏற்படும் உணர்வின் மாற்றங்கள் இன்னோரு புறமுமாய் துவண்டாள். கலாச்சாரம் என்ற பெயரில் பெரியப்பா போட்ட வேலிக்குள் நண்பிகள் கூட இன்றி தனிமைப் பட்டாள்.
அவளுக்குச் சில வேளைகளில் இது அதீதமான கவனம் என்பது போலவே படும். இருந்தாலும் அவள் அப்பாவின் பிரியத்துக்குரிய பெரியப்பாவின் சொல்லுக்கு எதிர்த்துப் பேசுவதோ மறுத்துப் பேசுவதோ கிடையாது. அவர் வகுத்த கோட்டிலேயே வாழ்ந்தாள். பன்னிரண்டு வயதில்தானே யேர்மனிக்கு வந்தவள் என்பதால் யேர்மனியில் பிறந்து வளர்ந்த தாயகத்துப் பிள்ளைகளிடம் உள்ளது போன்ற தன்மைகள் அவளிடம் இல்லை. யாரிடமும் எந்தப் பிரச்சனையையும் சொல்லுமளவுக்கு துணிவும் இல்லை.
இதுவே பெரியப்பாவுக்கு சாதகமாகி விட்டது. சாதகமானது என்று சொல்வதை விட அவர் அதற்கேற்ற படிதான் அவளை இந்த ஒரு வருடமாய்ச் செப்பனிட்டார். அன்பு காட்டுவது போல நடித்து கலாச்சாரம் என்ற பெயரால் அடக்கி அடக்கி உளரீதியாக அவளைப் பயந்தாங்கொள்ளி ஆக்கி வைத்திருந்தார்.
இதிலிருந்து மீள்வதற்கான எந்த வழியும் துளசிக்குத் தெரியவில்லை. பெரியம்மா காலையில் வேலைக்குப் போனால் மாலைதான் வருவா. துளசி வீட்டில் இருப்பதால் அவளின் உதவியும் அவவுக்கு வீட்டு வேலைகளில் கிடைப்பதால் அவ சந்தோசமாகவே இருந்தா. ஐம்பது வயசு தாண்டி விட்ட பெரியப்பா பற்றி அவ அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. அவருக்கு சமைத்துச் சாப்பாடு கொடுத்து உடைகளை மெசினில் கழுவி அயர்ண் பண்ணிக் கொடுத்து, இரவுகளில் அவர் ஆசைகளைத் தீர்த்துக் கொள்வதுடன் தன் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறா.
மேற்கொண்டு அவர் என்ன செய்கிறார் என்பது அவவுக்குத் தெரியாது. அல்லது தெரிந்தும் தெரியாத மாதிரி பாவனை. அல்லது கலாச்சார சீலராக வாழ்பவர் போல நாடகமாடும் கணவரில் அத்தனை நம்பிக்கை. இப்படித்தான் துளசிக்கு எண்ணத் தோன்றியது.
துளசிக்கு எண்ணத்தான் தெரியுமே தவிர எண்ணியதை எடுத்தியம்பத் தெரியாது. இல்லாவிட்டால் சில வாரங்களுக்கு முன், மதியமே விடுப்பு எடுத்துக் கொண்டு வந்த பெரியப்பாவின் அன்பு போலியாகிப் போனத, அவளாகவே சென்று பெரியம்மாவிடம் சொல்லியிருப்பாள். அல்லது இன்று காலை அவளது அப்பா ரெலிபோனில் அவளை அழைத்துப் பேசிய போது அப்பாவிடமாவது சொல்லியிருப்பாள்.
துளசி அழுது அழுது ஓய்ந்து கதிரைக்குள் சுருண்டபடி தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மீண்டும் மீண்டுமாய் புலி மானைத் துரத்துவதும், ஆட்டுக்குட்டியைத் துரத்துவதும் கடித்துக் குதறுவதுமாய் தொலைக்காட்சியில் காட்சிகள் அவலமாய் ஓடிக் கொண்டிருந்தன.
துளசியின் நினைவுகள் தொலைக்காட்சியில் நிலைப்பதுவும் வெளியில் அலைவதுமாய் அந்தரித்துக் கொண்டிருந்தது. ஏன் உலகம் இப்படி இருக்கிறது. ஒன்றையொன்று விழுங்குவதாய்.. குதறுவதாய்.. ‘என்ரை வகுப்பிலை படிக்கிற மற்றப் பிள்ளையளுக்கும் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமோ.. ? அiயைளின்ரை பெரியப்பாமாரும் இப்பிடித்தான் இருப்பினையோ.. ? ஆரோடை அவை இதையெல்லாம் கதைப்பினம்… ‘ என்று ஏதேதோ பதில் கிடையாத குழப்பமான கேள்விகள்.. அவளைக் குடைந்து கொண்டிருந்தன.
திடாரென்று வீட்டுக்கதவு திறக்கப் பட பெரியப்பா உள்ளே நுழைந்தார். துளசிக்கு நெஞ்சு திக்கென்றது. உடல் நடுங்கிப் படபடத்தது. வழமையில் மாலையில்தான் வேலை முடித்து வீடு திரும்புவார். இன்று மதியத்தோடே விடுப்பு எடுத்துக் கொண்டு வந்து விட்டார். இப்படித்தான் இப்போ அடிக்கடி செய்கிறார். துளசிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எங்காவது ஓடி விடலாமா என்ற யோசனை எப்போதும் போல் வந்தது. எங்கே ஓடுவது ? அதுதான் அவளுக்குத் தெரியாது.
இப்ப கூட எங்காவது ஓடலாமா என நினைக்கிறாளே தவிர எங்கே ஓடுவது ? ஓடிப் போய் என்ன செய்வது ? யாரிடம் உதவி கோருவது ? என்பதெல்லாம் அவளுக்குத் தெரியாது.
பெரியப்பா நேரே அவளிடம் வந்து அவளை அணைத்து ‘என்னம்மா துளசி பள்ளிக்கூடத்தாலை வந்திட்டியே.. பெரியம்மா இன்னும் வரேல்லைத்தானே..! ‘ அணைப்பை இன்னும் இறுக்கினார். யேர்மனிக்கு வந்த காலங்களில் இந்த அணைப்பே அவளுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இப்போ…. உடம்பு கூசியது.
தொலைக்காட்சியில் மீண்டும் மான்குட்டியொன்றை ஓநாயொன்று விட்டுக் கலைத்துக் கொண்டிருந்தது. துளசியினுள் மீண்டும் பிரார்த்தனை.
‘காப்பாற்று…. காப்பாற்று…. ‘ ம்.. கும்.. யார் காதிலும் அவள் பிரார்த்தனை விழவில்லை. அது பெரியப்பாவின் சிகரெட் வாசனை கலந்த அருவருப்பான இறுக்கத்துக்குள் அமிழ்ந்து கரையத் தொடங்கியது.
மான்குட்டி ஓநாயின் வாயில் கிழிபட்டு…. இழுபட்டு….
மான்குட்டியின் கதை இன்றோடு முடிந்து விட்டது.
ஐம்பது வயது தாண்டிய பெரியப்பாவிடம் மான் குட்டியான துளசியின் கதை எங்கே போய் எப்போது முடியப் போகிறது.. ?
சந்திரவதனா
யேர்மனி.
மார்ச் – 2003
- உரத்த சிந்தனைகள்- 6
- வீரப்பன் மட்டும்தான் கிரிமினலா ?
- நுால் அறிமுகம் : ‘எ ன் று ம் இ ரு ப் பே ன் ‘ -மகாகவி பாரதியார் வாழ்க்கை -கவிதைநாடகம் :ஆசிரியர் – சேதுபதி
- தமிழின் மறுமலர்ச்சி – 4
- தமிழின் மறுமலர்ச்சி – 5
- அஞ்சலி: இயக்குனர் வான் கோ – நிறைவேற்றப்பட்ட ஃபட்வா
- அ.முத்துலிங்கம் பரம்பரை – 7
- அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்
- மெய்மையின் மயக்கம்-24
- கவிபாரதிகள்
- பெண் தெய்வ வழிபாடுகளின் பின்னணியில்…:அமெரிக்க ஆய்வாளரின் தமிழ்-நூலுக்கு ஒரு அணிந்துரை
- பாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 8
- ‘இஸ்லாம் எளிய அறிமுகம் ‘ பற்றி – பேராசிரியர் ரூமிக்கு பிரியமுடன்
- வெகுஜன இதழ்களின் வியாபாரத் தந்திரங்கள்
- ப. சோழ நாடனின் ‘வீணை அதன் பேர் தனம் ‘ : ஒரு பார்வை
- ஓவியப்பக்கம் – ஐந்து – நளினி மலானி – கருத்தாழம் மிக்க நிர்மாணக் கலை
- கடிதம் நவம்பர் 4,2004 – அன்பின் நாகூர் ரூமி அவர்களுக்கு
- தமிழம் டாட் நெட்
- பி பி ஸி செய்திக் குறிப்பு- தென் ஆப்பிரிக்காவில் இந்தியர் பற்றிய ஆய்வு
- அவசர உதவி வேண்டுகோள்!
- கடிதம் நவம்பர் 4,2004 – இரா.முருகனின் மொழியாக்கம்
- கடிதம் நவம்பர் 4,2004 -இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் பேசிய உரை
- கடிதம் நவம்பர் 4, 2004 – முனை மழுங்கிய ஈட்டிகள்!
- கடிதம் நவம்பர் 4, 2004 – வளமான பாதையில் திருமாவளவன்
- மனுஸ்மிருதியை நிலைநாட்ட பட்டப்பெயர்கள்….
- பாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி முடிவுகள்
- அவளோட ராவுகள் -1
- நீண்ட இரவு தொடர்கிறது…
- ஷேக்ஸ்பியரும் வெங்காயமும்
- கிறுக்குப் பிடித்தாலும் ஆம்பிளைதானே…
- நிலவுக்குப் பயந்து பரதேசம் வந்த மான்குட்டிகள்
- கங்கவரம்
- மனித அறிவியலின் பரிணாமம்
- பாசத்தைத்தேடி
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 44
- சும்மா இருடா
- ஆத்திரக் கும்மி
- நெஞ்சில் மின்னிய கீதம் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- உறவென்றால்…
- மழைப் பயிர்
- குடை பிடிக்கும் நிழல்
- நித்யா
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 1-உன் கூந்தல் தோட்டமும் சில பட்டாம்பூச்சிகளும்
- அம்மாவின் சமையல்
- அருண் கொலட்கரின் ‘ஜெஜூரி ‘ கவிதைகள்
- பெரியபுராணம் – 16 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)
- என் அழகும் மாறும்
- காத்திருப்பு
- பேப்லோ நெருதா கவிதை- 3 : துன்பரசம் பிழிந்து ஒரு கவிதை ( ‘Saddest poem ‘ )
- 21 ஆம் நூற்றாண்டில் எழுந்த இந்திய நீர்வளப் புரட்சி! இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (7)
- நீர்வளம் காக்க போராடும் வெள்ளியூர்
- ஆவிகள் புசிக்குமா ?!
- பொதுச்சிவில் சட்டத்துக்கு ஆதரவாக…
- வாரபலன் நவம்பர் 4,2004 – குஞ்ஞாலுக்குட்டியின் பெண்குட்டி விவகாரம், அமோக விளைச்சல், அந்தத் தெரு, எழுதுங்க , கம்யூனிஸ்ட் கால் பந்த