நிறச் சுவாசங்கள்

This entry is part [part not set] of 29 in the series 20070510_Issue

சாமிசுரேஸ், சுவிஸ்


ஒவ்வொரு பரிணாமங்களும்
வௌ;வேறு பரிமானங்களாய் சிதைவுற
வாழ்க்கை நிறக்குழைவினுள் மூழ்கிக்கிடக்கிறது.

அந்தக் கருப்பொருளின் வளர்வில்
மனிதநிறங்களின் ஒவ்வொரு பிரிகைகளும்
வௌ;வேறு ஸ்வரங்களில் கனவுறும்.

கனவுறும் பொழுதில் காற்றிடை முகிழ்ப்பினூடே
ஒரு அரங்காற்றுகை அசைவுகளுடன்
மனம் காமமுறத் தவிக்கும்
தகிக்கின்ற தவிப்புகளால்
உனைக் கொன்ற அக் காமத்தொலியின் நிறமிது.

விலகிப்போகும் முகங்களின் சுவாசங்கள்
வௌ;வேறு நிறங்களால் நிறம்பியிருக்க
கண்மூடித்திறக்கறேன்.
நிறங்களை பகுப்பறிந்து குணமறிய
வர்ணங்களால் வேள்வி செய்கிறேன்.

அவர்களின் பேச்சு மூச்சு சிந்தனையென
பல்வேறு நிறங்களாய் கொப்பளிக்க
எனைச் செதுக்கியபடியே நிறம்மாறிக்கொண்டிருக்கிறேன்.
தனியொருவர் என்றில்லை
முகத்திற்கு முகம்
எனைக் கண்டு சிலிர்க்கிறேன்.

உணர்வுக் கண்கள் படிகவார்ப்புகளை கிழித்தெறிய
கோபமாய் வீரமாய் என் மேனியூடே வழியும்
ஒரு கோடி நிறங்களும்
இன்னுமொரு காற்றிடைக் கலக்கும்.

கனியிடைத் தென்றல் விசுப்பல் கண்டு
நிலவொளி பட்டுத் தெறித்தென் மெய்யுள் பதுங்க
மகிழ்வுடை மேனியை சுமந்தோடியதொரு நிறம்.

முகவரியில்லா மயானங்களின் மேல்
பயவலி நிரம்பியிருக்க
புதியதோரு உந்துதலுக்காய்
ஒரு நிற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது இயற்கை

காதலாகி இருமனத்து ஊனுருகி
வாழ்வாங்கு வாழும் வேதியல் துளிர்ப்புகளுக்கு
பலவகைநிறங்களுண்டு.

இருக்கின்றபோதுள்ள தொலைவுகளைவிட
இல்லாதபோதுள்ள தொலைவுகள்
மரணத்தைவிட கொடிய நிறங்களாய் சுடும்

எனை மூழ்கி நிறச் சலனங்களின் துடிப்பிறுக
நான் என் உணர்வியல் மாற்றங்களை நுகர்ந்தபடி
கொஞ்சம் கொஞ்சமாய் பிறந்துகொண்டிருக்கிறேன்.


sasa59@bluewin.ch

Series Navigation

சாமிசுரேஸ்,சுவிஸ்

சாமிசுரேஸ்,சுவிஸ்