நிமிடக்கதைகள்

This entry is part [part not set] of 28 in the series 20090319_Issue

கோவை புதியவன்



நிமிடக்கதை:1 சகுனம்

“சே! நேரமே சரியில்லை”

“ஏண்ணா என்னனாச்சு?”

“பின்ன என்னம்மா….முக்கியமான வேலையா வெளியே போகலாம்னு நெனச்சா…பூனை
குறுக்க போச்சு. அப்புறம் வெள்ளைப் புடவையோட ஒரு பொண்ணு. சகுனமே சரியில்ல”

அண்ணன் சொன்னதை கேட்டு கலகலவென்று சிரித்தாள்.

“ஏம்மா சிரிக்கிற?”

“நம்ம வீட்ல நீயே ஒரு பூனை வளக்கற. அது குறுக்கு நெடுக்குமா ஓடுது. நான் வேற
உன் எதிர்ல வந்து போயிட்டு இருக்கேன். நல்லவேளை நீ வீட்டுக்குள்ள சகுனம் பாக்கல.”

விதவை சகோதரியின் வார்த்தை “சுருக்”கென்று தைத்தது அருமை அண்ணணுக்கு.



நிமிடக்கதை:2 கூடிவாழ்ந்தால்…..

1970

நாச்சியப்பன் டீ கடை

“நாச்சியப்பா! ரெண்டு டீ போடு”

“அடடே! வாங்க வாத்தியாரய்யா….காலைங்காத்தால பேரனோட வந்தாச்சு”

தாத்தாவோடு வந்த நான் சுற்றிலும் நோட்டம் விட்டேன். கடைக்கு மேல் கீற்று ஓலை.
கடைக்குள் ரெண்டு நீளமான பெஞ்ச். உள்ளே ஒரு கூட்டம் டீ குடிக்க…வெளியே ஒரு கூட்டம் தேங்காய் கொப்பரையில் டீ குடிக்க எனக்கு ஒன்றும் புரியவில்லை.

2009

பேருந்தை விட்டு இறங்கியதும் மனம் துள்ளிக் குதித்தது. பிறந்த மண்ணை மிதிப்பது
என்றால் தனி அலாதிதான். நிறைய மாற்றங்கள். புழுதி வீசும் சாலைகள் தார் சாலையானது. -2-

-2-

நிறைய கட்டிடங்கள் பூத்துக் கிடந்தன. மெல்ல நடை போட்டேன்.

அதோ….நாச்சியப்பன் டீ கடை

கீற்று ஓலைக்கடை பெரிய டீ கடையாக மாறியிருந்தது. உள்ளே ஒரு கூட்டம்
டீ குடிக்க…வெளியே ஒரு கூட்டம் தனி டம்ளர்களோடு டீ குடித்துக் கொண்டிருக்க…
இப்போது புரிந்தது.

கடைக்குள் இருந்த ஒரு வாசகம் என்னை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.

அந்த வாசகம்

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”


thendral_venkatguru@yahoo.co.in

Series Navigation

கோவை புதியவன்

கோவை புதியவன்